செய்திகள்-04.06.15
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. சுற்றுச்சூழல் பற்றிய திருத்தந்தையின் சுற்றுமடல், ஜூன் 18 வெளியாகும்
2. திருத்தந்தை, மூன்று காரணங்களுக்காக சரயேவோ செல்கிறார் - கர்தினால் பரோலின்
3. அமைதி தீபத்தை ஏந்தி வந்த இளையோருக்கு திருத்தந்தை ஆசீர்
4. புனித பவுல் பாப்பிறை கல்லூரியின் ஐம்பதாம் ஆண்டு நிறைவு
5. கீழை வழிபாட்டு முறை கத்தோலிக்க ஆயர்களின் ஆண்டுக் கூட்டம்
6. உலக நாடுகள் காத்துக்கிடப்பது ஏன் - சிரியாவின் பேராயர் வேதனை
7. பட்டினியை ஒழிக்க, உலகினர் இணையவேண்டும் - FAO இயக்குனர்
8. கனடா வரலாற்றிலேயே மிகப்பெரிய அபராத தொகை: நீதிமன்ற தீர்ப்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. சுற்றுச்சூழல் பற்றிய திருத்தந்தையின் சுற்றுமடல், ஜூன் 18 வெளியாகும்
ஜூன்,04,2015 சுற்றுச்சூழலை மையப்படுத்தி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள சுற்றுமடல், ஜூன் 18, வியாழனன்று வெளியாகும் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.
இச்சுற்றுமடலைக் குறித்த ஏனைய விவரங்களை, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அடுத்தவாரம் வெளியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களில் ஊடகங்களில் கூறப்பட்டு வரும் பல்வேறு செய்திகளுக்கு பதிலிறுக்கும் விதமாக, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் இவ்வியாழன் மதியம் இச்செய்தியை வெளியிட்டது.
மேலும், ஜூன் 10, வருகிற புதன், பிற்பகல், இரஷ்ய அரசுத் தலைவர், விளாடிமீர் புடின் அவர்களை, திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் திருப்பீடத்தில் சந்திப்பார் என்று திருப்பீடச்
செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி பெதெரீக்கோ லொம்பார்தி அவர்கள், இவ்வியாழனன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மிலான் நகரில் நடைபெற்றுவரும் கண்காட்சியைக் காண வருகை தரும் இரஷ்ய அரசுத் தலைவர், விளாடிமீர் புடின் அவர்கள், தன் இத்தாலிய வருகையின்போது, இத்தாலிய அரசுத் தலைவர் Sergio Mattarella அவர்களையும், பிரதமர் Matteo Renzi அவர்களையும் சந்திப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2013ம் ஆண்டு, நவம்பர் 25ம் தேதி, இரஷ்ய
அரசுத் தலைவர் புடின் அவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை முதன்
முறையாக வத்திக்கானில் சந்தித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
"நம்மில் மிகவும் நலிந்தோருடன் இறையரசை நோக்கி நடப்பதும், பேறுபெற்றோர் என்று இயேசு காட்டிய ஒளியில் இவ்வுலகைக் கட்டியெழுப்புவதும் இன்றையத் தேவை" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று வழங்கிய Twitter செய்தியாக அமைந்துள்ளது.
ஆதாரம் : / வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை, மூன்று காரணங்களுக்காக சரயேவோ செல்கிறார் - கர்தினால் பரோலின்
ஜூன்,04,2015 Bosnia - Herzegovina நாட்டின் நன்மைத்தனத்தைத் தூண்டியெழுப்புதல், உடன்பிறந்தோர் உணர்வை வளர்த்தல், உரையாடலையும், அமைதியையும் ஊக்குவித்தல் ஆகிய மூன்று காரணங்களுக்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சரயேவோ நகருக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்கிறார் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறினார்.
ஜூன் 6, வருகிற
சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சரயேவோ நகருக்கு
மேற்கொள்ளும் எட்டாவது திருத்தூதுப் பயணத்தைக் குறித்து வத்திக்கான்
தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு பேட்டியில், கர்தினால் பரோலின் அவர்கள் இவ்வாறு கூறினார்.
திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களால் 'ஐரோப்பாவின் எருசலேம்' என்றழைக்கப்பட்ட நகருக்கு, உரையாடல் மற்றும் அமைதியின் ஒரு பயணியாக தான் வருவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளதை, கர்தினால் பரோலின் அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.
"உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்ற விருதுவாக்குடன் நிகழும் இத்திருப்பயணத்தில், மக்களுடன் நிகழ்த்தும் திருப்பலி, ஏனைய மதத்தினரோடு இடம்பெறும் உரையாடல், இளையோரைச் சந்தித்தல் என்ற மூன்று முக்கிய நிகழ்வுகள், ஒரே நாளில் நடைபெறுவதையும் கர்தினால் பரோலின் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
வேறுபட்ட மதங்களையும், கலாச்சாரங்களையும் சார்ந்தவர்கள், உரையாடலை மேற்கொள்ளும்போது, அவர்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளே அவர்கள் சமுதாயத்தை இன்னும் செறிவு மிகுந்த சமுதாயமாக மாற்றும் என்பதை Bosnia - Herzegovina நாடு மற்றவர்களுக்குச் சொல்லித் தரும் என்ற நம்பிக்கை, கர்தினால் பரோலின் அவர்களின் பேட்டியில் வெளிப்பட்டது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. அமைதி தீபத்தை ஏந்தி வந்த இளையோருக்கு திருத்தந்தை ஆசீர்
ஜூன்,04,2015 நிரந்தர நகரான உரோமைக்கு வருகை தந்துள்ள இளையோரை தான் வாழ்த்துவதாகவும், அமைதி, சமுதாய
ஒருங்கிணைப்பு ஆகியவற்றை வளர்க்க இளையோர் இன்னும் ஆர்வமாக தங்களை
அர்ப்பணிக்க வேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
ஜூன் 3, இப்புதனன்று வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் தன் மறைகல்வி உரையை வழங்கியபின், Macerata-Loreto பகுதியிலிருந்து அமைதி தீபத்தை ஏந்தி வந்திருந்த இளையோருக்கு ஆசீர் வழங்கியபோது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.
Marche, Veneto, Lombardy மற்றும் Puglia, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் வத்திக்கானுக்கு சுமந்துவந்த அமைதி தீபம், ஜூன் 6, இச்சனிக்கிழமையன்று Maceretaவில் அமைந்துள்ள Helvia Recina விளையாட்டுத் திடலில் நடைபெறும் திருப்பலிக்கு முன், அங்கு சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதி வேண்டி, விளையாட்டு வீர்கள் மேற்கொள்ளும் இந்த தீப ஓட்டம், இத்தாலிய விளையாட்டு மையமும், இரண்டாம் யோவான் பவுல் மையமும் இணைந்து நடத்தும் ஒரு முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. புனித பவுல் பாப்பிறை கல்லூரியின் ஐம்பதாம் ஆண்டு நிறைவு
ஜூன்,04,2015 திருத்தூதரான புனித பவுல் பன்னாட்டு பாப்பிறை கல்லூரியின் ஐம்பதாம் ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஜூன் 3, இப்புதன் பிற்பகல், நற்செய்தி அறிவிப்பு திருப்பேராயத்தின் தலைவர், கர்தினால் பெர்னாண்டோ பிலோனி அவர்கள் தலைமையில் ஆடம்பரத் திருப்பலி நிகழ்ந்தது.
பல்வேறு
நாடுகளிலிருந்து உரோம் நகரில் அருள் பணியாளர் பயிற்சியில் ஈடுபடும்
மாணவர்கள் தங்கி பயிலும் வண்ணம் உருவாக்கப்பட்ட திருத்தூதர் புனித பவுல்
கல்லூரி, 1965ம் ஆண்டு, டிசம்பர் 3ம் தேதி, மறைபரப்புப் பணியாளர்களின் பாதுகாவலாரான இயேசு சபை, புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் திருநாளன்று, திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற 6ம் பவுல் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
50 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் அதிகமான குரு மாணவர்கள், திருத்தூதர் புனித பவுல் கல்லூரி வழியே, இறையியல், மறைபரப்புப் பணியியல், திருஅவை வரலாறு, திருஅவைச் சட்டங்கள் ஆகிய துறைகளில் மேல்படிப்பு பயின்று வருகின்றனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
நற்செய்தி அறிவிப்பு திருப்பேராயத்தின் மேற்பார்வையில் இயங்கிவரும் இக்கல்லூரி, இந்தியா, இலங்கை, மற்றும், ஆப்ரிக்காவின் பல்வேறு நாடுகளிலிருந்து வரும் குரு மாணவர்களுக்கு பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி
5. கீழை வழிபாட்டு முறை கத்தோலிக்க ஆயர்களின் ஆண்டுக் கூட்டம்
ஜூன்,04,2015 குடும்பத்தை மையப்படுத்தி, வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஆயர்கள் பொது மன்றத்தையொட்டி, ஜூன் 4, இவ்வியாழன் முதல் 7, இஞ்ஞாயிறு முடிய, செக் குடியரசின் தலைநகர், Pragueல், கீழை வழிபாட்டு முறை கத்தோலிக்க ஆயர்களின் ஆண்டுக் கூட்டம், குடும்பம் என்ற தலைப்பில் நடைபெறுகிறது.
இன்றைய ஐரோப்பாவில் குடும்பம், குடும்பம் ஒரு அருள்சாதன சக்தி என்ற இரு தலைப்புக்களில் இந்த ஆண்டு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Prague உயர் மறைமாவட்ட பேராயர், கர்தினால் Dominik Duka அவர்கள் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், வத்திக்கான் சார்பில், கீழைவழிபாட்டு முறை திருப்பேராயத்தின் செயலர், பேராயர் Cyril Vasil அவர்கள் கலந்துகொள்கிறார்.
ஐரோப்பிய ஆயர்கள் பேரவைகளின் உயர் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆண்டுக் கூட்டத்தில், கீழை வழிபாட்டு முறையைச் சேர்ந்த 14 மறைமாவட்டங்களின் ஆயர்களும், ஏனைய மறைமாவட்ட அதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. உலக நாடுகள் காத்துக்கிடப்பது ஏன் - சிரியாவின் பேராயர் வேதனை
ஜூன்,04,2015 சிரியாவிலும், ஈராக்கிலும் கட்டுப்பாடின்றி நடைபெற்றுவரும் கொடுமைகளை முடிவுக்குக் கொணராமல், உலக நாடுகள் எதற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன என்ற வேதனை நிறைந்த கேள்வியை, அலெப்போவின் பேராயர் ஒருவர் எழுப்பியுள்ளார்.
அலெப்போவின் கிரேக்க மேல்கத்திய கத்தோலிக்க பேராயர், Jean-Clement Jeanbart அவர்கள், Aid to the Church in Need என்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பிற்கு அளித்த பேட்டியில், இத்தனை ஆயிரம் கொலைகள் நிகழ்ந்தும், உலக நாடுகள், இக்கொடுமைகளை நிறுத்த இன்னும் எவ்வித முயற்சியும் எடுக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
Maloula, Mosul, Idleb, Palmyra என்று ஒவ்வொரு நகராக ISIS தீவிரவாதக் குழுவின் பிடியில் வீழ்ந்து வருவதைக் கண்டும், மேற்கத்திய நாடுகள் பார்வையாளராக இருப்பது மிகுந்த வேதனை தருகிறது என்று, பேராயர் Jeanbart அவர்கள் கூறினார்.
அலெப்போ நகரில் 2,50,000மாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1,00,000மாகக் குறைந்திருக்கும் அவலத்தைச் சுட்டிக்காட்டி, அலெப்போவின் கல்தேய வழிபாட்டு முறை ஆயர், Antoine Audo அவர்கள், "என் மக்களோடு சேர்ந்து கதறி அழுவதைத் தவிர எனக்கு வேறுவழி தெரியவில்லை" என்று ஒரு மடலை அண்மையில் வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையே, இச்செவ்வாயன்று, அலெப்போ நகரை ISIL தீவிரவாதிகள் மீண்டும் கைப்பற்றியுள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி
7. பட்டினியை ஒழிக்க, உலகினர் இணையவேண்டும் - FAO இயக்குனர்
ஜூன்,04,2015 பட்டினியையும், உணவுப் பற்றாக்குறையையும் இவ்வுலகிலிருந்து ஒட்டுமொத்தமாக நீக்கும் உலகளாவிய இயக்கத்தில், உலகினர் அனைவரும் இணையவேண்டும் என்று ஐ.நா.வின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஐ.நா.வின் உணவு, வேளாண்மை நிறுவனமான FAOவின் தலைமை இயக்குனர், Jose Graziano da Silva அவர்கள், உலகின் 50க்கும் மேற்பட்ட நாடுகளின் வேளாண்துறை அமைச்சர்களுக்கும் இன்னும் உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிகளுக்கும், இவ்வியாழனன்று, மிலான் நகரில் வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.
உலகின் பட்டினியைப் போக்குதல், உணவு பாதுகாப்பை உறுதி செய்தல், குழந்தைகளுக்கு
வழங்கப்படும் உணவு அளவைச் சீரமைத்தல் ஆகிய இலக்குகளை இவ்வுலகம்
குறிப்பிட்ட காலத்திற்குள் அடைவதற்கு அனைவருமே இணைந்து உழைக்கவேண்டும்
என்று FAO இயக்குனர் da Silva எடுத்துரைத்தார்.
உலகின் பட்டினிக்கு ஆணிவேராக இருப்பது, உணவு இல்லா நிலையல்ல, மாறாக, மனித சமுதாயத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளும், பகிர்ந்துகொள்ள முடியாத மனநிலையுமே என்று da Silva அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.
மிலான் நகரில் கூடியிருக்கும் பன்னாட்டு அமைச்சர்களும், ஏனைய அரசு அதிகாரிகளும் இணைந்து, உலகின் பட்டினியை நீக்கும் வழிகளை தெளிவாக்கும் 'மிலான் அறிக்கை'யொன்றை இவ்வெள்ளியன்று வெளியிடுவர் என்று மிலான் உலகக் கண்காட்சி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
8. கனடா வரலாற்றிலேயே மிகப்பெரிய அபராத தொகை: நீதிமன்ற தீர்ப்பு
ஜூன்,04,2015 புகைப்பிடித்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 12.4 பில்லியன், அதாவது, 1240 கோடி டாலர்களை இழப்பீடாக புகையிலை நிறுவனங்கள் கொடுக்க வேண்டும் என கனடா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புகைப்பிடிப்பதால் வரும் உடல்நலக் கேடுகள் பற்றி கியூபெக் மாநிலத்தில், 1998-ம் ஆண்டு, விளம்பர
வாசகம் மூலம் தனது தயாரிப்புகளில் சொல்லாத நிறுவனங்கள்
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வழக்கு
தொடுக்கப்பட்டது.
கியூபெக் பகுதியில் சிகரெட் பிடிப்பதால் 10 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் காசநோய், தொண்டை மற்றும் நுரையீரல் புற்றுநோயால், பாதிக்கப்பட்டுள்ளனர் என புகார் கூறப்பட்டிருந்தது.
பல ஆண்டுகளுக்கு பிறகு, அண்மையில் அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், 1240 கோடி டாலர்களை இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Imperial Tobacco Canada, Rothmans Benson & Hedges, JTI-MacDonald ஆகிய சிகரெட் நிறுவனங்கள் மீது இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பினை ஏற்காத புகையிலை நிறுவனங்கள், மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளன.
கனடா
நாட்டு வரலாற்றிலேயே ஒரு வழக்கில் இந்த அளவுக்கு பெரிய அபராத தொகை
தண்டனையாக விதிக்கப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment