செய்திகள்-03.06.15
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திரிகோணமலையின் புதிய ஆயராக அருள்பணி கிறிஸ்டியன்
2. UNESCO கருத்தரங்கில் கர்தினால் பரோலின் துவக்க உரை
3. UNESCOவில் பங்கேற்ற முதல் பிரதிநிதி, புனித 23ம் யோவான்
4. ஈக்குவதோர் நாட்டில் திருத்தந்தையின் திருப்பலி இடமாற்றம்
5. அபுதாபியில் இரண்டாவது கத்தோலிக்க ஆலயம் திறப்பு விழா
6. லெபனான், ஈராக் நாடுகளில், மிலான் பேராயர், கர்தினால் ஸ்கோலா
7. பிலிப்பின்ஸ் நாட்டில் 'சில்சிலா' வெளியிட்டுள்ள இரமதான் செய்தி
8. கடத்தப்பட்ட குருவை விடுவிக்க, இஸ்லாமியத் தலைவர்கள் விண்ணப்பம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திரிகோணமலையின் புதிய ஆயராக அருள்பணி கிறிஸ்டியன்
ஜூன்,03,2015 இலங்கையின், திரிகோணமலை மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருள்பணி நோயெல் எம்மானுவேல் கிறிஸ்டியன் அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று நியமித்துள்ளார்.
திரிகோணமலை ஆயராகப் பணியாற்றிவந்த ஜோசப் கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை அவர்கள், பணி ஓய்வுபெற விரும்பி அனுப்பியிருந்த விண்ணப்பத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டு, புதிய ஆயராக, 55 வயதான அருள்பணி நோயெல் எம்மானுவேல் கிறிஸ்டியன் அவர்களை நியமித்துள்ளார்.
கடந்த 32 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயராகப் பணியாற்றிவந்த ஜோசப் கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை அவர்கள், திரிகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் ஆயராக 1983ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பின்னர், 2012ம் ஆண்டு, திரிகோணமலை, தனி மறைமாவட்டமாக பிரிக்கப்பட்டதும், அதன் ஆயராக கடந்த மூன்று ஆண்டுகள் பணியாற்றி வந்தார்.
78 வயதான ஆயர் சுவாமிப்பிள்ளை அவர்கள் பணி ஒய்வு பெறுவதைத் தொடர்ந்து, அருள்பணி நோயெல் எம்மானுவேல் கிறிஸ்டியன் அவர்கள், ஆயராக நியமனம் பெற்றுள்ளார்.
1960ம் ஆண்டு, திரிகோணமலையில், கிறிஸ்துபிறப்பு நாளான டிசம்பர் 25ம் தேதி பிறந்த நோயெல் எம்மானுவேல் கிறிஸ்டியன் அவர்கள், 1986ம் ஆண்டு அருள்பணியாளராக அருள்பொழிவு பெற்றார்.
மட்டக்களப்பு, இருதயபுரம், அக்கறைப்பட்டு ஆகிய இடங்களில் பங்குத்தந்தையாகப் பணியாற்றிவந்த அருள்பணி கிறிஸ்டியன் அவர்கள், ஈராண்டுகள் உரோம் நகர் உர்பானியா பல்கலைக் கழகத்தில் உயர் கல்விபெற்றபின், தாயகம் திரும்பினார்.
2001ம் ஆண்டு முதல் கண்டி தேசிய குருமடத்தில் பேராசிரியராகப் பணியாற்றிவந்த அருள்பணி கிறிஸ்டியன் அவர்கள், 2011ம் ஆண்டுமுதல் திரிகோணமலை முதன்மை குருவாகவும், 2012ம் ஆண்டுமுதல், அம்மறைமாவட்டத்தின் பொருளாளராகவும் பணியாற்றிவந்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. UNESCO கருத்தரங்கில் கர்தினால் பரோலின் துவக்க உரை
ஜூன்,03,2015 கல்வி மற்றும் கலாச்சாரம் தொடர்பான பணிகளை கத்தோலிக்கத் திருஅவை மேற்கொள்ளும்போது, அவற்றை, நற்செய்தி அறிவிப்புப் பணியாக ஆற்றுவதைக் காட்டிலும், மனித மேம்பாட்டை நிலைநிறுத்தும் பணிகளாகவே திருஅவை மேற்கொண்டு வருகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
பாரிஸ் நகரில் அமைத்துள்ள ஐ.நா. குழந்தைகள் நலவாழ்வு அமைப்பான UNESCO இல்லத்தில் ஜூன் 3, இப்புதனன்று நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் துவக்க உரையாற்றிய, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் இவ்வாறு கூறினார்.
மனித நலத்தை, தன் பணிகளின் மையமாகக் கொண்டு பணியாற்றிவரும் கத்தோலிக்கத் திருஅவை, உலகெங்கும் கல்வி புகட்டப்பட வேண்டியதன் அவசரத்தை நன்கு உணர்ந்து பணியாற்றுகிறது என்று கர்தினால் பரோலின் அவர்கள் எடுத்துரைத்தார்.
அனைத்து மக்களுக்கும் எழுத்தறிவைக் கொணர்தல், பெண் கல்வி, ஆகிய தூண்களின் மீது சமுதாய முன்னேற்றம் என்ற கட்டடம் எழுப்பப்பட வேண்டும் என்பதை, திருஅவை உறுதியாக நம்புகிறது என்று கர்தினால் பரோலின் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.
திருப்பீடத்தின் சார்பில் UNESCOவில் பணியாற்றுவோர் இணைந்து, UNESCOவின் 70வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், 'இன்றும், நாளையும் கல்விப் புகட்டுதல்' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்திருந்த இக்கருத்தரங்கிற்கு, UNESCOவின் தலைமை இயக்குனர், ஐரீனா பொகோவா அவர்கள் தலைமை தாங்கினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. UNESCOவில் பங்கேற்ற முதல் பிரதிநிதி, புனித 23ம் யோவான்
ஜூன்,03,2015 UNESCOவின் கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்ற முதல் பிரதிநிதி, இன்று கத்தோலிக்கத் திருஅவையால் புனிதரென போற்றப்படும் திருத்தந்தை 23ம் யோவான் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
1945ம் ஆண்டு உருவாக்கப்பட்ட UNESCO நிறுவனம் தன் 70ம் ஆண்டு நிறைவை, இவ்வாண்டு கொண்டாடிவருகிறது.
இக்கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஜூன் 3, பாரிஸ் மாநகரில் UNESCO இல்லத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், கத்தோலிக்கக் கல்வி திருப்பேராயத்தின் தலைவர், கர்தினால், Zenon Grocholewski அவர்கள் உரையாற்றுகையில், ஜூன் 3ம் தேதி, புனிதத் திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள் இறையடி சேர்ந்த 52ம் ஆண்டு நிறைவு என்பதையும் தன் உரையில் குறிப்பிட்டார்.
2ம் உலகப் போரினால் குழந்தைகளுக்கு விளைந்த எதிர்மறை பாதிப்புக்களைச் சீரமைக்க, ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான UNESCO உருவானது என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் Grocholewski அவர்கள், கடந்த 70 ஆண்டுகளாக, UNESCO அமைப்பு, குழந்தைகளுக்கு ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டினார்.
புனிதத் திருத்தந்தை 23ம் யோவான், முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 6ம் பவுல் ஆகியோர் உட்பட, திருஅவையின் தலைவர்களாக, கடந்த 50 ஆண்டுகள் பணியாற்றிய அனைத்துத் திருத்தந்தையரும், குழந்தைகள் நலனில், குறிப்பாக, அவர்களது கல்வியில் அதிக ஆர்வம் காட்டிவந்தனர் என்பதை, கர்தினால் Grocholewski அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. ஈக்குவதோர் நாட்டில் திருத்தந்தையின் திருப்பலி இடமாற்றம்
ஜூன்,03,2015 திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈக்குவதோர் நாட்டில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்தின்போது, அவர் திருப்பலி நிறைவேற்றும் இடம், மக்களின் வசதி கருதி, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வருகிற
ஜூலை மாதம் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
ஈக்குவதோர் நாட்டில் மேற்கொள்ளும் பயணத்தின் சிகர நிகழ்வாக, இறை இரக்கத்தின் திருத்தலத்தில் ஆற்றும் திருப்பலி திட்டமிடப்பட்டிருந்தது.
திருத்தந்தையைக் காண, 20 இலட்சத்திற்கும் மேலானோர் திரண்டுவருவர் என்று எதிர்பார்க்கப்படுவதாலும், இறை இரக்கத்தின் திருத்தலத்தில் அத்தனை பக்தர்களும் கூட வசதியில்லை என்பதாலும், அத்திருத்தலத்தில் திருத்தந்தை ஆற்றுவதாக இருந்தத் திருப்பலி, Los Samanes என்ற பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று, ஈக்குவதோர் ஆயர் பேரவை அறிவித்துள்ளது.
இந்த இடமாற்றத்தை வத்திக்கான் ஏற்றுக்கொண்டுள்ளது என்று கூறிய ஆயர் பேரவையின் அறிக்கை, ஈக்குவதோர் நாட்டின் Guayaquil என்ற இடத்தில் அமைந்துள்ள இறை இரக்கத்தின் திருத்தலத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சென்று செபித்தபின், Los Samanes பூங்காவில் திருப்பலியாற்றுவார் என்று அறிவித்துள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜூலை 5ம் தேதி முதல் 13ம் தேதி முடிய மேற்கொள்ளும் 9வது திருத்தூதுப் பயணத்தில், ஈக்குவதோர், பொலிவியா, மற்றும் பாரகுவே ஆகிய இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்குச் செல்வார்.
ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி
5. அபுதாபியில் இரண்டாவது கத்தோலிக்க ஆலயம் திறப்பு விழா
ஜூன்,03,2015 ஐக்கிய அரபு எமிரேட்ஸின், அபுதாபியில், ஜூன் 11, வருகிற விழாயனன்று, இரண்டாவது கத்தோலிக்க ஆலயம் ஒன்றின் திறப்பு விழாவில், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கலந்துகொள்வார் என்று மேற்கு அரேபிய அப்போஸ்தலிக்க நிர்வாகியின் அலுவலகம் அறிவித்துள்ளது.
1965ம் ஆண்டு, அபுதாபியில் புனித யோசேப்பு ஆலயம், அப்பகுதியின் முதல் கத்தோலிக்க ஆலயமாக நிறுவப்பட்டது. அந்நிகழ்வின் 50ம் ஆண்டு நிறைவில், இரண்டாவது கத்தோலிக்க ஆலயம், திருத்தூதர் புனித பவுல் அடியாரின் பெயரால் நிறுவப்பட்டுள்ளது.
அபுதாபியின் தொழிற்சாலைகள் பல அமைத்துள்ள Musaffah மாவட்டத்தில் அமைக்கப்பட்டுவரும் புனித பவுல் ஆலயம், தொழிற்சாலைகளில்
பணிபுரிய வேற்று நாடுகளிலிருந்து வந்துள்ள கத்தோலிக்கர்களை மனதில் கொண்டு
அமைக்கப்பட்டுள்ளது என்று அரேபிய அப்போஸ்தலிக்க நிர்வாகியின் அலுவலகத்தின்
செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
அரேபிய நாடுகளில் காலடி பதித்ததாகக் கருதப்படும் புனித பவுல் அடியாரின் பெயரால் நிறுவப்பட்டுள்ள இவ்வாலயம், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இளையோர் பணித்துறை அமைச்சர், Sheikh Nayhan அவர்களால் ஜூன் 11ம் தேதி திறந்து வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. லெபனான், ஈராக் நாடுகளில், மிலான் பேராயர், கர்தினால் ஸ்கோலா
ஜூன்,03,2015 மிலான் பேராயர், கர்தினால் ஆஞ்சலோ ஸ்கோலா அவர்கள், ஜூன் 16ம் தேதி முதல், 20ம் தேதி முடிய லெபனான் மற்றும் ஈராக் நாடுகளில் பயணம் மேற்கொண்டு, அந்நாடுகளில் துன்புறும் மக்களுக்கு நிதி உதவிகள் செய்வார் என்று மிலான் உயர் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.
லெபனான் மற்றும் ஈராக் நாடுகளின் மக்கள் அடைந்துவரும் துன்பங்களைத் துடைக்கும் நோக்கத்துடன், மிலான் உயர் மறைமாவட்டத்தில் திரட்டப்பட்ட நிதி உதவியை, கர்தினால் ஸ்கோலா அவர்கள், அந்நாடுகளின் மக்களுக்கு வழங்க இப்பயணத்தை மேற்கொள்வார்.
மாரனைட் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, கர்தினால், Bechara Boutros Rai அவர்களும், கல்தேய வழிபாட்டு முறை, முதுபெரும் தந்தை, பேராயர் லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்களும் விடுத்த அழைப்பின்பேரில், கர்தினால் ஸ்கோலா அவர்கள் இப்பயணத்தை மேற்கொள்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ISIS அடிப்படைவாத இஸ்லாமிய அரசின் வன்முறைகளால், கடந்த ஆண்டில் மட்டும், ஈராக் நாட்டில், 1,25,000 கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளையும், உடைமைகள் அனைத்தையும் இழந்து, அடுத்தவரின் உதவிகளை எதிர்நோக்கி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று ஈராக் காரித்தாஸ் அமைப்பு கூறியுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. பிலிப்பின்ஸ் நாட்டில் 'சில்சிலா' வெளியிட்டுள்ள இரமதான் செய்தி
ஜூன்,03,2015 ஒரு மதத்தைச் சார்ந்தவர் என்ற காரணத்தால், மக்கள் கொல்லப்படும் இக்காலக் கட்டத்தில், நாம் அனைவரும் ஒரே கடவுளின் படைப்புக்கள், எனவே, நம் உயிர்கள் அனைத்தும் ஒரே அளவில் மதிக்கப்பட வேண்டும் என்ற செய்தியை, பிலிப்பின்ஸ் நாட்டின் இஸ்லாமிய-கிறிஸ்தவ உரையாடல் அமைப்பான 'சில்சிலா' (Silsilah) வெளியிட்டுள்ளது.
ஜூன் 18ம் தேதி முதல், ஜூலை 18ம் தேதி முடிய கொண்டாடப்படும் இரமதான் மாதத்தையொட்டி, 'சில்சிலா' அமைப்பு வெளியிட்டுள்ள இச்செய்தி, மதத்தின் அடிப்படையில் வளர்ந்துவரும் வன்முறைகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
பிலிப்பின்ஸ் நாட்டில், குறிப்பாக, மிந்தனாவோ (Mindanao) பகுதியில், அடிப்படைவாதக் குழுக்களால் வளர்ந்துவரும் வன்முறைகள், உலகின் பிற பகுதிகளில் நிகழும் வன்முறைகளின் எதிரொலி என்று சில்சிலா அமைப்பு கூறியுள்ளது.
உண்மையான இஸ்லாமிய மதத்தின் அடிப்படை பண்புகளை கேள்விக்குள்ளாக்கும் இவ்வன்முறைகளைக் களைய, உலக அரசுகளும், இஸ்லாமிய அமைப்புக்களும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென 'சில்சிலா' வெளியிட்டுள்ள இரமதான் விண்ணப்பம், Fides செய்தியில் வெளியாகியுள்ளது.
வன்முறைகளிலிருந்து இவ்வுலகைத் தூய்மைப்படுத்தும் புனிதப் போரை இஸ்லாமியர் அனைவரும் மேற்கொள்ள இரமதான் மாதம் தகுந்ததொரு தருணம் என்று, பிலிப்பின்ஸ் நாட்டு உரையாடல் அமைப்பான 'சில்சிலா' வலியுறுத்தியுள்ளது.
ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி
8. கடத்தப்பட்ட குருவை விடுவிக்க, இஸ்லாமியத் தலைவர்கள் விண்ணப்பம்
ஜூன்,03,2015 சிரியா நாட்டில், மே 21ம் தேதி கடத்தப்பட்ட அருள்பணியாளர் Jaques Murad அவர்களை விடுவிக்கக் கோரி, சிரியாவின் இஸ்லாமியத் தலைவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
புனித எலியாஸ் துறவு மடத்தில் வாழ்ந்துவந்த அருள்பணி Murad அவர்கள், இஸ்லாமிய-கிறிஸ்தவ மதங்களிடையே உரையாடலையும் ஒப்புரவையும் வளர்க்க அரும்பாடு பட்டவர் என்பதைக் குறிப்பிடும் இஸ்லாமியத் தலைவர்கள், அவரது விடுதலைக்காக விண்ணப்பித்துள்ளனர் என்று ZENIT கத்தோலிக்க செய்தி குறிப்பிட்டுள்ளது.
2013ம் ஆண்டு, ஜூலை 29ம் தேதியன்று கடத்தப்பட்ட அருள்பணி Paolo Dall'Oglio அவர்கள் இணைந்திருந்த அதே துறவு மட அமைப்பைச் சேர்ந்தவர், அருள்பணி Murad என்பதும், கடந்த 10 ஆண்டுகளாக அவர் உரையாடல், ஒப்புரவு, செபம் ஆகிய பணிகளில் மட்டுமே ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத் தக்கவை.
அருள்பணி Murad அவர்களின் கடத்தல் ISIS தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையது என்று கருதப்பட்டாலும், அவரது விடுதலைக் குறித்த நம்பிக்கை இன்னும் குறையவில்லை என்று இஸ்லாமிய மதத் தலைவர்கள் கூறிவருகின்றனர்.
No comments:
Post a Comment