Tuesday, 2 June 2015

செய்திகள்-02.06.15

செய்திகள்-02.06.15
------------------------------------------------------------------------------------------------------

1. அமைதியான நல்லிணக்கத்துக்கு ஆதரவளிக்க சரேயேவோ திருத்தூதுப்பயணம்

2. வெனெசுவேலா-அரசும், எதிர்க்கட்சியும் பேச்சுவார்த்தையைத் தொடங்க அழைப்பு

3. Nebraskaவில் மரண தண்டனை இரத்தானதற்கு ஆயர்கள் வரவேற்பு

4. எல் சால்வதோர் கொலைகள், குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவை

5. சிறார்க்கு எதிரான உரிமை மீறல்களால் ஆண்டுக்கு $282 பில்லியன் இழப்பு

6. இணையதள குற்றங்களிலிருந்து அணு உலகத்தைப் பாதுகாக்க நடவடிக்கை

7. வருங்கால வேலை வாய்ப்புகள் குறித்த உலகளாவிய விவாதங்கள் அவசியம் 

8. மெலானோமா தோல் புற்றுநோய்க்குப் புதிய மருந்து

------------------------------------------------------------------------------------------------------

1. அமைதியான நல்லிணக்கத்துக்கு ஆதரவளிக்க சரேயேவோ திருத்தூதுப்பயணம்

ஜூன்,02,2015.  சரேயேவோவுக்குத் தான் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம் போஸ்னியா-எர்செகொவினா கிறிஸ்தவருக்கும், அந்நாட்டினர் அனைவருக்கும் பயனுள்ளதாக அமைவதற்குச் செபிக்குமாறு கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
போஸ்னியா-எர்செகொவினா குடியரசின் தலைநகர் சரேயேவோவுக்கு, வருகிற சனிக்கிழமையன்று ஒருநாள் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டினருக்கு அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில் இத்திருத்தூதுப் பயணத்தின் நோக்கத்தைத் தெரிவித்துள்ளார்.
போஸ்னியா-எர்செகொவினா கத்தோலிக்கரை விசுவாசத்தில் உறுதிப்படுத்தவும், கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய உரையாடலை ஊக்கவிக்கவும், எல்லாவற்றுக்கும் மேலாக, அந்நாட்டில் அமைதியான நல்லிணக்க வாழ்வை ஊக்கவிக்கவும் இத்திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்ளவிருப்பதாகக் கூறினார் திருத்தந்தை.
அமைதி உங்களோடு இருப்பதாக என்பதே இந்த எனது திருத்தூதுப் பயணத்தின் விருதுவாக்கு என்றும், அமைதியின் ஒரு சகோதரத் தூதுவராக உங்கள் மத்தியில் வருகிறேன் என்றும் அம்மக்களிடம் காணொளிச் செய்தியில் பேசியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உங்கள் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு குடும்பத்துக்கும், ஒவ்வொரு சமூகத்துக்கும் எனது நட்பையும், இறைவனின் இரக்கத்தையும், கனிவையும், அன்பையும் வெளிப்படுத்த வருகிறேன் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், அன்புக் கலாச்சாரத்தின் சேவையில் தங்களை ஈடுபடுத்தும் அனைவரையும் நற்செய்தியின் ஒளி வழி நடத்துகின்றது என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இச்செவ்வாயன்று பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. வெனெசுவேலா-அரசும், எதிர்க்கட்சியும் பேச்சுவார்த்தையைத் தொடங்க அழைப்பு

ஜூன்,02,2015. வெனெசுவேலா நாட்டில் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திவரும் இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேரணிகள் நடைபெற்றுவரும் இவ்வேளையில், அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்கப்படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் அந்நாட்டுத் திருஅவை அதிகாரி ஒருவர்.
அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கு ஆதரவாக, நாட்டின் பல்வேறு நகரங்களில் இலட்சக்கணக்கான மக்கள் பேரணிகளை நடத்திவருவதையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள கரகாஸ் கர்தினால் Jorge Urosa Savino அவர்கள், வெனெசுவேலா அரசுத்தலைவர் Nicolàs Maduro அவர்களின் அரசும், எதிர்க்கட்சியும் உரையாடலில் ஈடுபடுமாறு வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் நிலைமை கவலை தருவதாக உள்ளது என்றும், தற்போதைய பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடியைக் களைவதற்கு உரையாடல் இன்றியமையாதது என்றும் கூறியுள்ளார் கர்தினால் Urosa.
தென் அமெரிக்க நாடான வெனெசுவேலாவில், சிறையிலுள்ள Leopoldo Lopez, Daniel Ceballos ஆகிய இரு எதிர்க்கட்சித் தலைவர்களும் கடந்த மே 23ம் தேதியிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
வெனெசுவேலாவின் தேசிய தேர்தல் ஆணையம் இவ்வாண்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தேதியை அறிவிக்கும் வரைக்கும், அந்நாட்டின் 79 அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படும் வரைக்கும் இப்போராட்டம் தொடரும் என கூறப்படுகின்றது.
இதற்கிடையே, வெனெசுவேலாவில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுமாறு, அமெரிக்கா மற்றும் இஸ்பெயின் நாடுகளின் 27 முன்னாள் அரசுத்தலைவர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. Nebraskaவில் மரண தண்டனை இரத்தானதற்கு ஆயர்கள் வரவேற்பு

ஜூன்,02,2015. அமெரிக்க ஐக்கிய நாட்டின் Nebraska மாநிலத்தில் மரண தண்டனை சட்டம் இரத்து செய்யப்பட்டிருப்பது, அந்நாட்டில் வாழ்வுக் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு மேலும் ஒரு முயற்சியாக உள்ளது என்று, அந்நாட்டு ஆயர் பேரவை அறிவித்துள்ளது.
மரண தண்டனை சட்டத்தை இரத்து செய்வதற்கு ஒரே மனதாக இசைவு அளித்துள்ள Nebraska மாநில சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு தனது வாழ்த்தையும் தெரிவித்துள்ளார் அமெரிக்க ஆயர் பேரவையின் நீதி மற்றும் மனித முன்னேற்ற ஆணைக்குழுத் தலைவரான Miami பேராயர் Thomas Wenski.
அறிவற்ற வன்செயல்களால் மனித வாழ்வு பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் கத்தோலிக்கத் திருஅவை ஒருமைப்பாட்டுணர்வு கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார் பேராயர் Wenski.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் 1976ம் ஆண்டில் மரண தண்டனை சட்டம் மீண்டும் நடைமுறைக்கு வந்தபின்னர், Nebraska மாநிலம், இச்சட்டத்தை இரத்து செய்துள்ள 19வது மாநிலமாக உள்ளது.
சீனா, ஈரான், சவுதி அரேபியா, ஈராக், அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய ஐந்தும் உலகில் மரண தண்டனையை அதிகமாக நிறைவேற்றும் நாடுகளாக உள்ளன.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி

4. எல் சால்வதோர் கொலைகள், குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவை

ஜூன்,02,2015. கும்பல் வன்முறைகளுக்குப் பெயர் போன எல் சால்வதோர் நாட்டில் இடம்பெறும் கொலைகள், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே நடத்தப்படுகின்றன என்று அந்நாட்டுத் தலத்திருஅவை அதிகாரி ஒருவர் குறை கூறினார்.
ஒவ்வொரு ஞாயிறுதோறும் திருப்பலி முடிந்து வழக்கமாக இடம்பெறும் செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்த சான் சால்வதோர் துணை ஆயர் Gregorio Rosa Chavez அவர்கள், நாட்டில் திறமையற்ற நிர்வாகச் சூழலை உருவாக்கும் நோக்கத்தில் பெருமளவில் கொலைகள் நடத்தப்படுகின்றன என்று கூறினார்.
திறமையற்ற நிர்வாகத்தையும், நாட்டில் குழப்பத்தையும் ஏற்படுத்துவதற்கு, மனித வாழ்வுக்கு விலை வைக்கவும் இவ்வன்முறைக் கும்பல்கள் துணிகின்றன என்று குறை கூறினார் ஆயர் Rosa Chavez.
மத்திய அமெரிக்க நாடான எல் சால்வதோரில் 1979ம் ஆண்டு முதல் 1992ம் ஆண்டு வரை நடைபெற்ற உள்நாட்டுச் சண்டையில், ஒரு நாளைக்கு, பத்துப் பேர் வீதம் மரணப் படைகள் கொலை செய்தன.

ஆதாரம் : Fides/ வத்திக்கான் வானொலி

5. சிறார்க்கு எதிரான உரிமை மீறல்களால் ஆண்டுக்கு $282 பில்லியன் இழப்பு

ஜூன்,02,2015. சிறார்க்கு எதிரான உரிமை மீறல்கள் மற்றும் சிறார் புறக்கணிப்படுவதால் கிழக்கு ஆசியாவிலும், பசிபிக் பகுதியிலும் ஆண்டுக்கு 20 ஆயிரத்து 900 கோடி டாலர் இழப்பு ஏற்படுகின்றது என்று பொருளாதார ஆய்வாளர்கள் இச்செவ்வாயன்று தெரிவித்தனர்.
சிறார்க்கு எதிரான உரிமை மீறல்களால் கிழக்கு ஆசியாவிலும், பசிபிக் பகுதியிலும் ஏற்படும் பொருளாதார இழப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இவ்விழப்பு, அப்பகுதியின் உள்நாட்டு உற்பத்தியில் 2 விழுக்காட்டுக்குச் சமமாகும் என்று கூறப்பட்டுள்ளது.
கிழக்கு ஆசியாவிலும், பசிபிக் பகுதியிலும் இடம்பெறும் சிறார்க்கு எதிரான உரிமை மீறல்களால், சிறாரின் கல்வி, நீண்டகால உடல் மற்றும் மன நலம், வேலை செய்யும் திறமை போன்றவை பாதிக்கப்படுகின்றன, மேலும், வயது வந்தபிறகு வன்முறையிலும், குற்றங்களிலும் ஈடுபட வைக்கின்றன எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சரியான தடுப்பு நடவடிக்கைகள் மூலம், சிறார் தவறாக நடத்தப்படுவதிலிருந்து 50 விழுக்காடு குறைக்க முடியும் என்று கூறும் யூனிசெப் நிறுவன அதிகாரி Daniel Toole அவர்கள், சிறார்க்கு எதிரான உரிமை மீறல்களைத் தடுப்பதற்கு அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார்.
சிறார்க்கு எதிரான உரிமை மீறல்களால் உலகில் நலவாழ்வு அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் ஒன்றாக கிழக்கு ஆசியா உள்ளது.  

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

6. இணையதள குற்றங்களிலிருந்து அணு உலகத்தைப் பாதுகாக்க நடவடிக்கை

ஜூன்,02,2015. இணையதளம் சார்ந்த குற்றங்கள் உலகில் அதிகரித்துவரும் இவ்வேளையில், உலகை அணு அச்சுறுத்தலின்றி பாதுகாப்பதற்கு அனைத்துலக சமுதாயம் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டார்.
ஆஸ்ட்ரியாவின் வியன்னாவிலுள்ள அனைத்துலக அணு சக்தி நிறுவனம், இணையதளம் சார்ந்த குற்றங்கள் குறித்து முதல்முறையாக நடத்தும் பன்னாட்டு கருத்தரங்கில் இவ்வாறு கேட்டுக்கொண்டார் அந்நிறுவனத் தலைவர் Yukiya Amano.
இணையதளம் சார்ந்த குற்றங்களும், தாக்குதல்களும் அண்மை ஆண்டுகளில், உலகில், குறிப்பாக, வளரும் நாடுகளில் அதிகரித்து வருகின்றன என்றும், அணு உலகமும் இந்த இணையதளக் குற்றங்களால் பாதிக்கப்படும் ஆபத்தை எதிர் நோக்குகின்றது என்றும் எச்சரித்தார் Amano.
அணு உலகில் கணனி பாதுகாப்பு என்ற தலைப்பில் இத்திங்களன்று தொடங்கிய இக்கருத்தரங்கில் 92 உறுப்பு நாடுகளின் 650க்கும் மேற்பட்ட வல்லுனர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

7. வருங்கால வேலை வாய்ப்புகள் குறித்த உலகளாவிய விவாதங்கள் அவசியம் 

ஜூன்,02,2015. வருங்கால வேலை வாய்ப்புகள் குறித்து உலக அளவில் விவாதங்கள் நடைபெற வேண்டும் என்று, ILO உலக தொழில் நிறுவனத்தின் 104வது அனைத்துலக கருத்தரங்கில் இத்திங்களன்று கூறினார் ILO இயக்குனர் Guy Ryder.
வேலை வாய்ப்பு, மனிதப் பாதுகாப்பு, சமூக உரையாடல், நிரந்தரமான வேலை, வேலையில் நீதி போன்ற விவகாரங்கள், வருங்கால வேலை குறித்த விவாதங்களில் இடம்பெறுமாறு கேட்டுக்கொண்டார் Ryder.
உலக வேலைவாய்ப்பு குறித்த அறிக்கையின்படி, 2014ம் ஆண்டில் உலகில் 20 கோடியே 10 இலட்சம் பேருக்கு வேலை தேவைப்பட்டது என்று தெரியவந்துள்ளது.
உலகில் ஆண்டுதோறும் மேலும் நான்கு கோடிப் பேருக்கு வேலை வழங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.
இம்மாதம் 13ம் தேதி வரை நடைபெறும் ILO நிறுவனத்தின் 104வது அனைத்துலக கருத்தரங்கில் அரசுகள், தொழிலாளர், வேலை வழங்குவோர் என ஏறக்குறைய நான்காயிரம் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

8. மெலானோமா தோல் புற்றுநோய்க்குப் புதிய மருந்து

ஜூன்,02,2015. புற்றுநோய்க்குக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய மருந்து, முற்றிய தோல் புற்றுநோயைக் குணமாக்கும் என்ற நம்பிக்கையை அளித்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
புற்றுநோயைக் குணப்படுத்த கொடுக்கப்படும் இரண்டு வெவ்வேறான மருந்துகளை ஒன்றாக சேர்த்துக் கொடுத்தபோது, Melanoma எனப்படும் முற்றிய தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 60 விழுக்காட்டினரின் புற்றுநோய்க் கட்டிகள் சுருங்கிவிட்டதாக ஆய்வாளர்கள் மேலும் கூறுகின்றனர்.
பன்னாட்டு அளவில் 945 நோயாளிகளிடம் பிரிசோதனை முறையில் நடத்தப்பட்ட இந்த சிகிச்சை முறையில்(ipilimumab, nivolumab மருந்துகள்) ஏறக்குறைய ஓராண்டில் 58 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர்.
அமெரிக்க புற்றுநோய்க் கழகத்தில் பிரித்தானிய ஆய்வாளர்கள் தங்களின் இந்தக் கண்டுபிடிப்பைச் சமர்ப்பித்துள்ளனர்.   
immunotherapy எனப்படும் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தி மூலம் புற்றுநோயை எதிர்க்கும் சிகிச்சை முறைக்கு இந்த மருந்துகள் உதவுகின்றன. அதாவது, ஒருவரின் உடலில் இயல்பிலேயே இருக்கும் நோய் எதிர்ப்புக் கட்டமைப்பு சொந்த உடலிலுள்ள திசுக்களையே தாக்குவதை தடுப்பதற்கு இந்த மருந்துகள் பயன்படுகின்றன.
Melanoma எனப்படும் முற்றிய தோல் புற்றுநோயால் பிரிட்டனில் ஓராண்டில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் இறக்கின்றனர்.

ஆதாரம் : BBC / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment