Monday, 1 June 2015

செய்திகள்-01.06.15

செய்திகள்-01.06.15
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : இயேசுவை நம் வாழ்விலிருந்து தூக்கி எறிந்துள்ளோம்

2. திருத்தந்தை : மண்ணகப் பயணத்தின் இறுதி முடிவு, இறைவனில் கலப்பதே

3. திருத்தந்தை நடத்தும் திரு நற்கருணை பவனி

4. வாரணாசி மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்

5. நம் கடவுள், தனக்குள் தானே புதைந்திருக்கும் கடவுள் அல்ல

6. லெபனான் நாட்டில் திருஅவையின் உச்சநீதிமன்றத் தலைவர்

7. அமெரிக்க ஐக்கிய நாட்டில் சுதந்திரத்தின் இருவாரக் கொண்டாட்டம்

8. "ஆசிய கிறிஸ்தவக் கருத்தரங்கு" நிறைவேற்றிய தீர்மானம்

9. பிறப்பு வீதம் குறைந்த நாடாக ஜெர்மனி
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : இயேசுவை நம் வாழ்விலிருந்து தூக்கி எறிந்துள்ளோம்

ஜூன்,01,2015 கடவுளுக்கும், மனிதருக்கும் இடையே உருவாகும் காதல் கதை, தோல்வியின் கதைபோலத் தோன்றினாலும், மனிதர்களின் வலுவின்மையைக் கொண்டே இறைவன் கட்டியெழுப்புகிறார் என்பதே உண்மை என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
ஜூன் 1, இத்திங்களன்று காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஆற்றியத் திருப்பலியின்போது, மாற்கு நற்செய்தியில் இடம்பெறும் 'கொடிய குத்தகைக்காரர் உவமை'யை மையப்படுத்தி மறையுரை வழங்கினார், திருத்தந்தை.
அழகியத் திராட்சைத் தோட்டத்தை உருவாக்கி வழங்கும் உரிமையாளருக்கு எதிராக, குத்தகைக்காரர்கள் கொலை செய்யத் துணிந்தாலும், அந்த மரணங்களே மீட்பைக் கொணரும் வழிகளாக அமைந்தன என்று திருத்தந்தை தன் மறையுரையில் விளக்கினார்.
நமது வாழ்வையும் திருப்பிப் பார்க்கையில், நம்மைச் சந்திக்க வந்த இறை வாக்கினர்களையும், இறுதியில் இயேசுவையும் நாம் பல முறை நம் வாழ்விலிருந்து தூக்கி எறிந்துள்ளோம் என்பதை உணரலாம் என்று திருத்தந்தை சுட்டிக் காட்டினார்.
நமது மீட்பின் பாதை, பல தோல்விகளால் நிறைந்தது என்றும், இத்தோல்விகளின் சிகரமாக சிலுவை என்ற பெரும் இடறல் இருந்தாலும், இறுதியில் வென்றது அன்பே என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை : மண்ணகப் பயணத்தின் இறுதி முடிவு, இறைவனில் கலப்பதே

ஜூன்,01,2015 இறைவனோடும், ஒருவர் ஒருவரோடும் நாம் கொள்ளும் உறவை, மூவொரு இறைவன் என்ற முன் உதாரணத்தைக் கொண்டு மேற்கொள்ளவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
மே 31, இஞ்ஞாயிறன்று கொண்டாடப்பட்ட மூவொரு இறைவன் திருவிழாவை மையப்படுத்தி, நண்பகல் மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை, நமது மண்ணகப் பயணத்தின் இறுதி முடிவு, மூவொரு இறைவனில் இரண்டறக் கலப்பதே என்று எடுத்துரைத்தார்.
புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மூவேளை செப உரையில், நாம் ஒவ்வொருவரும் தனித்திருக்கவோ, ஒருவருக்கொருவர் எதிராளியாக இருக்கவோ அழைக்கப்படவில்லை, மாறாக, ஒருவர் ஒருவருக்காக வாழவே அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறினார்.
மரியன்னைக்கென அர்ப்பணிக்கப்பட்ட மே மாதத்தின் இறுதி நாளன்று, மூவொரு இறைவன் என்ற பேருண்மையை ஆழமாகப் புரிந்து, அதை வாழ்வாக்கிய மரியன்னை நமக்கு உதவி புரியட்டும் என்று கூறி,  'தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே' என்ற செபத்துடன், கூடியிருந்த அனைவரையும், சிலுவை அடையாளம் வரையும்படி திருத்தந்தை தூண்டினார்.
மூவேளை செப உரையின் இறுதியில், இவ்வாரம் வியாழனன்று கொண்டாடப்படும் இயேசுவின் திரு உடல், திரு இரத்தப் பெருவிழா குறித்து மக்களிடம் கூறியத் திருத்தந்தை, இவ்விழாவில் பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை நடத்தும் திரு நற்கருணை பவனி

ஜூன்,01,2015 ஜூன் 4, வருகிற வியாழனன்று கொண்டாடப்படும் கிறிஸ்துவின் திரு உடல், திரு இரத்தத் திருவிழாவையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித ஜான் லாத்தரன் பசிலிக்காப் பேராலய வளாகத்தில் மாலை 7 மணிக்கு திருப்பலியாற்றுவார் என்று உரோம் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.
இத்திருப்பலியைத் தொடர்ந்து, புனித ஜான் லாத்தரன் பசிலிக்காவிலிருந்து புறப்படும் திரு நற்கருணை பவனி, புனித மேரி மேஜர் பசிலிக்காப் பேராயலத்தை அடையும் என்றும், இப்பவனியை முன்னின்று நடத்தும் திருத்தந்தை, பவனியின் இறுதியில் திரு நற்கருணை ஆசீர் வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் முதன்முறையாக திரு நற்கருணையை பெற்ற சிறுவர், சிறுமியர், திருத்தந்தை நிகழ்த்தும் விழாத் திருப்பலியில் கலந்துகொள்வதற்கு ஏதுவாக, அவர்களுக்குச் சிறப்பான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், அதேபோல், நோயுற்றவர்களுக்கென தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், உரோம் மறைமாவட்டம், இத்திங்களன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு கூறுகிறது.
மேலும், குடிபெயர்ந்தோரும், அகதிகளும் தாங்கள் சென்றடையும் நாடுகளில் வரவேற்பையும், மதிப்பையும் பெறுவதற்கு செபிப்போம் என்ற கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் மாதத்தின் பொது செபக் கருத்தாக வெளியிட்டுள்ளார்.
மேலும், இளையோர் இயேசுவுடன் மேற்கொள்ளும் தனிப்பட்டச் சந்திப்பின் விளைவாக, அவர்கள் அருள்பணியாளர்களாகவும், அர்ப்பணிக்கப்பட்டோராகவும் வாழ்வதற்கு முன்வர செபிப்போம் என்ற கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தி அறிவிப்புப் பணியின் செபக் கருத்தாக வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. வாரணாசி மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்

ஜூன்,01,2015 வாரணாசி மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி யூஜின் ஜோசப் அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளார்.
1958ம் ஆண்டு தமிழ்நாட்டில் பிறந்த அருள்பணி யூஜின் ஜோசப் அவர்கள், வாரணாசி மறைமாவட்டத்தில் இணைந்து, 1985ம் ஆண்டு அருள்பணியாளராக அருள் பொழிவு பெற்றார்.
ஆங்கில இலக்கியத்திலும், மேலாண்மைத் துறையிலும் பட்டங்கள் பெற்ற யூஜின் ஜோசப் அவர்கள், 2013ம் ஆண்டு முதல், வாரணாசி மறைமாவட்டத்தின் பொறுப்பாளராகப் பணியாற்றி வந்தார்.
வாரணாசி மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிய Raphy Manjaly அவர்கள், அலகாபாத் மறைமாவட்ட ஆயராக 2013ம் ஆண்டு, அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டதையடுத்து, வாரணாசி மறைமாவட்டம் கடந்த ஈராண்டுகளாக ஆயரின்றி இருந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. நம் கடவுள், தனக்குள் தானே புதைந்திருக்கும் கடவுள் அல்ல

ஜூன்,01,2015 தனக்குள் தானே நித்தியத்திற்கும் புதைந்திருக்கும் கடவுள் நம் கடவுள் அல்ல, மாறாக, தந்தை, மகன், தூய ஆவியார் என்ற மூவரின் உறவில் வெளிப்படுபவர் நம் கடவுள் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மே 31, இஞ்ஞாயிறன்று கொண்டாடப்பட்ட மூவொரு இறைவன் பெருவிழாவையொட்டி பாரிஸ் மாநகரில் உள்ள நோத்ரு தாம் (Notre Dame) பேராலயத்தில் திருப்பலியாற்றிய கீழை வழிபாட்டுமுறை திருப்பேராயத்தின் தலைவர், கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி அவர்கள் தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
நாம் ஒவ்வொருவரும் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டுள்ள பரிசு என்றும், இந்தப் பரிசின் முழு மதிப்பும் மற்றவரோடு நாம் கொள்ளும் உறவில் வெளிப்படுகிறது என்பதை, உறவின் இலக்கணமாகத் திகழும் மூவொரு இறைவன் திருவிழா நமக்கு நினைவுபடுத்துகிறது என்றும் கர்தினால் சாந்த்ரி அவர்கள் எடுத்துரைத்தார்.
மத்தியக் கிழக்கு நாடுகளில் வாழும் வறியோரின் கல்வி, நலவாழ்வு ஆகிய பணிகளுக்கு கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக நிதி உதவியும், பிற உதவிகளும் செய்துவரும் Oeuvre d'Orient என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பின் ஆண்டுவிழாவையொட்டி கர்தினால் சாந்த்ரி அவர்கள் நிறைவேற்றிய இத்திருப்பலியில், இவ்வமைப்பினர் ஆற்றிவரும் அரியப் பணிகளை பாராட்டினார்.
1856ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தப் பிறரன்பு அமைப்பின் 159வது ஆண்டு நிறைவையொட்டி நிகழ்ந்த இத்திருப்பலியில், பாரிஸ் உயர் மறைமாவட்டத்தின் பேராயர், கர்தினால் André Vingt-Trois அவர்களும் கலந்துகொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. லெபனான் நாட்டில் திருஅவையின் உச்சநீதிமன்றத் தலைவர்

ஜூன்,01,2015 லெபனான் நாட்டிலும், மத்தியக் கிழக்குப் பகுதியிலும் நடைபெறும் அத்தனை நிகழ்வுகளையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மிகுந்த கவனத்துடன் தொடர்ந்து வருகிறார் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மே 30, கடந்த சனிக்கிழமை முதல், லெபனான் நாட்டில் ஒருவார மேய்ப்புப்பணி பயணத்தை மேற்கொண்டுள்ள கத்தோலிக்கத் திருஅவையின் உச்சநீதிமன்றத்தின் தலைவர், கர்தினால் தோமினிக் மம்பெர்த்தி அவர்கள் இவ்வாறு கூறினார்.
1996ம் ஆண்டு முதல், 1999ம் ஆண்டு முடிய லெபனான் நாட்டில் திருப்பீடத்தின் தூதராக தான் பணியாற்றிய காலத்தை, கர்தினால் மம்பெர்த்தி அவர்கள் எடுத்துரைத்தார்.
பெய்ரூட்டில் பணியாற்றும் மாரனைட் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை கர்தினால் Bechara Boutros al-Rahi அவர்களின் அழைப்பை ஏற்று அந்நாடு சென்றிருக்கும் கர்தினால் மம்பெர்த்தி அவர்கள், லெபனான் நாட்டின் அரசு அதிகாரிகளையும், மதத் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவார் என்று கூறப்படுகிறது.
லெபனான் நாடு தன் அடுத்த அரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நிலையில் இருப்பதால், கர்தினால் மம்பெர்த்தி அவர்களின் பயணம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்று ஆசிய செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

7. அமெரிக்க ஐக்கிய நாட்டில் சுதந்திரத்தின் இருவாரக் கொண்டாட்டம்

ஜூன்,01,2015 ஜூன் 21, ஞாயிறு முதல் அமெரிக்க ஐக்கிய நாட்டில் சுதந்திரத்தின் இருவாரங்கள் கொண்டாடப்படும் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை அறிவித்துள்ளது.
நான்காவது ஆண்டாக நடைபெறவிருக்கும் இந்த இருவாரக் கொண்டாட்டங்கள் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய பால்டிமோர் பேராயர் வில்லியம் லோரி அவர்கள், மதச் சுதந்திரம், ஒவ்வோர் ஆண்டும் பாதிக்கப்பட்டு வருவதை மக்கள் புரிந்துகொள்ள இது நல்லதொரு வாய்ப்பு என்று கூறினார்.
மதச் சுதந்திரம் என்பது சட்ட வழிமுறையில் எழும் விவாதம் அல்ல, மாறாக, புதியவழி நற்செய்தியை அறிவிக்கும் பணியின் ஒரு முக்கியக் கூறு என்று பேராயர் லோரி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
அடிப்படைவாதக் குழுக்களாலும், அரசுகளின் அடக்குமுறைகளாலும் சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்கள், குறிப்பாக, கிறிஸ்தவர்கள், சுதந்திரத்தை இழந்து, பெருமளவு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என்று பேராயர் லோரி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
பால்டிமோரில் அமைந்துள்ள, விண்ணேற்பு மரியா பசிலிக்காவில், ஜூன் 21, ஞாயிறன்று காலை திருப்பலியுடன் துவங்கும் சுதந்திரத்தின் இருவாரக் கொண்டாட்டங்கள், ஜூலை 4, அமெரிக்கச் சுதந்திர நாளன்று, வாஷிங்க்டனில் அமைந்துள்ள அமல அன்னை பசிலிக்காவில் நடைபெறும் திருப்பலியோடு நிறைவடையும் என்று CNS செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி

8. "ஆசிய கிறிஸ்தவக் கருத்தரங்கு" நிறைவேற்றிய தீர்மானம்

ஜூன்,01,2015 இறையன்பை இவ்வுலகிற்கு பறைசாற்றும் சாட்சிகளாக, ஒருமித்த மனதோடு வாழ்வதற்கு ஆசியாவின் அனைத்து நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்ற தீர்மானம் இந்தோனேசியாவில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.
"ஆசிய கிறிஸ்தவக் கருத்தரங்கு" என்ற பெயருடன் இயங்கிவரும் கிறிஸ்தவ ஒன்றிப்பு அமைப்பு ஒன்று, மே மாத இறுதி வாரத்தில், இந்தோனேசியாவின் தலைநகர், ஜகார்த்தாவில் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தின் இறுதியில், இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
28 நாடுகளைச் சேர்ந்த 440க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்தக் கிறிஸ்தவக் கருத்தரங்கில், உரையாடல் கலாச்சாரம் வளர்க்கப்பட வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டதென கூறப்படுகிறது.
இந்த அவையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச் செயலர் ஜார்ஜ் மேத்யூஸ் அவர்கள், இன்று உலகின் பல பகுதிகளில் நிலவும் பகைமைச் சூழல்களைத் தீர்க்கும் ஒரேவழி உரையாடல் மட்டுமே என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

9. பிறப்பு வீதம் குறைந்த நாடாக ஜெர்மனி

ஜூன்,01,2015 மக்கள் தொகை பெருக்கத்தால் கடுமையான நெருக்கடிகளை பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் எதிர்கொண்டுவரும் நிலையில், பிறப்பு வீதம் வீழ்ச்சியடைவது வளர்ச்சியடைந்த நாடுகளை பாதிப்பதாக உள்ளதென ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
பல ஆண்டுகளாக பிறப்பு வீதம் குறைந்து வரும் ஜப்பானைப் பின்தள்ளிவிட்டு உலகிலேயே குறைந்த அளவுக்கு குழந்தைகள் பிறக்கும் நாடாக ஜெர்மனி தற்போது மாறி இருக்கிறதென Hamburg Institute of International Economics என்ற நிறுவனம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
ஜெர்மனியில் ஆயிரம் பேருக்கு 8.2 குழந்தைகள் என்ற வீதத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பிறப்பு வீதம் இருந்துள்ளது என்றும், ஐப்பானில் பிறப்பு வீதம் 8.4 என்ற அளவில் இருந்துள்ளது என்றும் இவ்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
ஏனைய ஐரோப்பிய நாடுகளில், போர்த்துக்கல்லில் பிறப்பு வீதம் 9 ஆகவும், இத்தாலியில் இது 9.3 ஆகவும், பிரான்ஸ் மற்றும் பிரிட்டனில் பிறப்பு வீதம் 13 என்ற அளவிலும் உள்ளது.
ஜெர்மனியில் பிறப்பு வீதம் குறைவதால், உழைக்கும் வயதில் இருப்போர் அதாவது 20 முதல் 65 வயதுக்குட்பட்டோரின் தொகை மொத்த மக்கள் தொகையில் தற்போது 61 விழுக்காடாக உள்ளது என்றும், வரும் 2030ம் ஆண்டளவில் இது 54 விழுக்காடாக குறைந்துவிடும் என்றும் Hamburg Institute of International Economics எச்சரித்துள்ளது.
பிறப்பு வீதம் குறைவதால், நாட்டில் வயதானவர்களின் வீதம் அதிகரித்துவி டும் என்று அஞ்சப்படுகின்றது.
தொழிலாளர் பற்றாக்குறையைத் தீர்க்க திறன்படைத்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தேவை என்றும் அதிக அளவு பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட வேண்டுமென்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
ஜெர்மானிய அரசுத் தலைவர், ஆஞ்ஜெலா மெர்கலின் அரசு, குழந்தைகளையுடைய குடும்பங்களுக்கு அதிக அளவு ஆதரவுகளை அளித்து வந்தாலூம், அந்நாட்டின் மக்கள் தொகை குறைந்து கொண்டு வருகிறது. அதே நேரம், ஆப்பிரிக்காவின் நைஜரில் ஆயிரம் பேருக்கு 50 குழந்தைகள் புதிதாக பிறக்கின்றன.

ஆதாரம் : BBC / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...