ஈழப் பிரச்சினையால் சோவியத் போன்று இந்தியா துண்டு துண்டாக உடையும்! வைகோ எச்சரிக்கை
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி கடந்த 16ம் திகதி பொள்ளாச்சியில் இருந்து ஈரோடு வரை நடைபயணத்தை மதிமுக., பொது செயலாளர் வைகோ துவங்கினார்.
13 நாட்களாக நடைபெற்ற இந்த நடைபயண நிறைவு நிகழ்ச்சியையட்டி ஈரோடு சம்பத் நகரில் மதிமுக., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பொது செயலாளர் வைகோ பேசினார்.
அவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்த விடயங்கள் வருமாறு,
ஈழப்போரில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், மனித உரிமை மீறல்கள் உலகில் வேறு எந்த நாட்டிலும் பார்த்திருக்க முடியாது. பழுக்க காய்ச்சிய இரும்பை உறுப்பில் செலுத்தியது, 16,18 வயது பெண்களை பாலியல் சித்ரவதை செய்தது போன்றவை குறித்து உலக மனித உரிமை ஆணையத்திடம் புகார் கொடுத்தேன்.
இது தொடர்பான விசாரணைக்கு என்னை அழைத்த போது 1 மணி நேரம் உலக மனித உரிமை ஆணை யத்திடம் வாக்குமூலம் கொடுத்தேன். உலக மனித உரிமை ஆணையத்தின் விசாரணை அறிக்கையின் தொடர்ச்சியாகவே கனடா போன்ற நாடுகள் தற்போது இலங்கைக்கு எதிராக குரல் கொடுக்க துவங்கி யுள்ளது.
வரும் நவம்பர் 17, 18 ஆகிய திகதி இலங்கையில் பொதுநலவாய மாநாடு கொழும்பில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டை இலங்கையில் நடத்த எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஈழத்தமிழர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கூட இலங்கை பொதுநலவாய மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கும், மனித உரிமை மீறலுக்கும் கனடா கூட எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் தொப்புள் கொடி உறவான தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய அரசு ஏன் இன்னும் பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்த எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? காரணம் இந்திய அரசும் இலங்கையுடன் கூட்டுக்கொலையாளியாக செயல்பட்டது தான்.
முன்பு இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக பலாலி விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தியது. அப்போது வெளியுறவு அமைச்சராக இருந்தவர் தான் தற்போதைய இந்திய ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி. முன்பும் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தார்கள்.
இப்போதும், தமிழர்களுக்கு எதிராகவே இந்திய அரசு செயல்படுகிறது. இனியும் இது தொடர்ந்தால் வரும் தலைமுறையினர் பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள். நேரடியாக களம் இறங்கினால் சோவியத் ரஷ்யா போன்று இந்தியா துண்டு, துண்டாகத்தான் உடைந்து போகும். எனவே தமிழர்களின் உணர்வுகளை இந்திய அரசு புரிந்து கொண்டு பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்று அறிவியுங்கள் அல்லது பொதுநலவாய அமைப்பிலேயே இலங்கை இடம் பெறக்கூடாது என்று அறிவியுங்கள்’’ என்று பேசினார்.
No comments:
Post a Comment