1. திருத்தந்தை பிரான்சிஸ் : துன்பங்களைப் பொறுமையோடு தாங்கி அடக்குமுறைகளை அன்பினால் வெல்ல வேண்டும்
2. திருத்தந்தை பிரான்சிஸ் : குடியேற்றதாரர் மனிதர்கள் என்பதை அரசுகள் மறக்கக் கூடாது
3. திருத்தந்தை பிரான்சிஸ் : சீனாவுக்காகச் செபம்
4. திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலிய ஆயர்களிடம் : இயேசு மீதான முழுமையான அன்பே கடவுளின் மனிதரை அளப்பதாகும்
5. சீனாவில் திருஅவையின் ஒற்றுமைக்காகச் செபம்
6. உலகம், அகதிகளுக்கும் குடியேற்றதாரருக்கும் ஆபத்தான இடமாக மாறி வருகிறது
7. உலகப் பொருளாதாரம் முன்னேறினாலும் சந்திக்கப்பட வேண்டிய சவால்கள் இன்னும் உள்ளன, ஐ.நா. அறிக்கை
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : துன்பங்களைப் பொறுமையோடு தாங்கி அடக்குமுறைகளை அன்பினால் வெல்ல வேண்டும்
மே,24,2013.
துன்பங்களையும் சோதனைகளையும் பொறுமையோடு தாங்கி அவற்றை அன்பினால் வெல்வதே
கிறிஸ்தவருக்குரிய அருள்நிலையாகும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சகாய
அன்னைத் திருவிழாவாகிய இவ்வெள்ளிக்கிழமை காலையில் புனித மார்த்தா
இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலியில் இவ்வாறு மறையுரையாற்றிய திருத்தந்தை, துன்பங்களைப் பொறுமையோடு தாங்கிக் கொள்வது எளிது அல்ல என்றும் கூறினார்.
இன்னல்கள்
வெளியேயிருந்து வரும்போது அல்லது இதயத்தில் பிரச்சனைகள் இருக்கும்போது
அவைகளைத் தாங்கிக் கொள்வது சுலபமல்ல என்றும் திருத்தந்தை கூறினார்.
ஒருவர் தனது துன்பங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்லும்போது அவற்றைச் சுமந்து செல்ல வேண்டும் என்பதல்ல, ஆனால், அத்துன்பங்களைக் கட்டாயமாக ஏற்க வேண்டும், அதன்மூலம் அவற்றால் நாம் வீழ்த்தப்பட மாட்டோம், அவற்றைப் பலத்தோடு ஏற்பது கிறிஸ்தவப் புண்ணியமாகும் என்றும் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
துன்பங்களைத் தாங்கிக் கொள்வது ஓர் அருள், நமது துன்பவேளைகளில் இவ்வருளைக் கேட்க வேண்டுமென்றும் கூறிய திருத்தந்தை, அன்பினால் சோதனைகளை வெல்வதும் ஓர் அருள் என்று கூறினார்.
நம்மைத் துன்புறுத்தியோருக்காக, பகைவர்களுக்காகச் செபிப்பது எளிது அல்ல, நாம் நம் பகைவர்களை மன்னிக்காவிடில், அவர்களுக்காகச் செபிக்காவிடில் நாம் தோற்கடிக்கப்பட்ட கிறிஸ்தவர்களாக இருப்போம், எனவே
துன்பங்களைப் பொறுமையோடு தாங்கி அவற்றை அன்பினால் வெல்வதற்கு நம்
அன்னைமரியிடம் வரம் கேட்போம் எனத் தனது மறையுரையை நிறைவு செய்தார்
திருத்தந்தை பிரான்சிஸ்.
நற்செய்தி அறிவிப்புப் பேராயச் செயலர் பேரருள்திரு Savio Hon Tai-Fai, இன்னும், சீனக் குருக்கள், துறவிகள், குருத்துவ மாணவர்கள் மற்றும் பொதுநிலையினர் இத்திருப்பலியில் கலந்து கொண்டனர். இன்னும், திருப்பீடத்தின் சமூகத்தொடர்பு அவையின் தலைவர் பேராயர் Claudio Maria Celliம், அவ்வவையின்
பணியாளர்களும் இத்திருப்பலியில் கலந்து கொண்டனர். இத்திருப்பலியின்
இறுதியில் சகாய அன்னைமரிக்கு சீன மொழியில் ஒரு பாடல் பாடப்பட்டது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ் : குடியேற்றதாரர் மனிதர்கள் என்பதை அரசுகள் மறக்கக் கூடாது
மே,24,2013.
கட்டாயத்தின்பேரில் தங்கள் சொந்த இடங்களைவிட்டு வெளியேறும் மக்களின்
மாண்பும் வாழ்க்கைத்தரமும் முன்னேறுவதற்கு அரசுகளும் சட்ட அமைப்பாளர்களும்
அனைத்துலகச் சமுதாயமும் புதிய அணுகுமுறைகளைக் கையாளுமாறு கேட்டுக்கொண்டார்
திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீடக்
குடியேற்றதாரர் அவை நடத்திய மூன்று நாள் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்ட
ஏறக்குறைய 70 பிரதிநிதிகளை இவ்வெள்ளிக்கிழமையன்று சந்தித்த திருத்தந்தை, அகதிகளும் கட்டாயமாகப் புலம்பெயரும் மக்களும், அடக்குமுறைகள், துன்புறுத்தல்கள், அடிமைத்தனம் ஆகியவற்றின் நவீன முறைகளை எதிர்நோக்கியவர்கள் என்று கூறினார்.
பணம் ஆட்சி செய்யும் ஓர் உலகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம், உரிமைகளைப் பற்றி அதிகம் பேசும் உலகில் பணத்தைக் கொண்டிருப்பதுவே பெரிதாக இருப்பதுபோல் தெரிகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
“அகதிகள் மற்றும் கட்டாயமாகப் புலம்பெயரும் மக்களில் கிறிஸ்துவை வரவேற்றல்” என்ற தலைப்பில் இடம்பெற்ற இக்கூட்டத்தினருக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், அகதிகள் மற்றும் குடியேற்றதாரர் மத்தியில் பணி செய்கிறவர்கள், தங்களது பணியை, நம்பிக்கையின் பணியாக நோக்குமாறு வலியுறுத்தினார்.
எதிர்காலத்துக்கான எதிர்பார்ப்புக்களில் வெளிப்படும் கூறுகளில் ஒன்றாக இந்நம்பிக்கை தன்னிலே இருக்கின்றது என்று கூறிய திருத்தந்தை, வேரோடு
பிடுங்கி எறியப்பட்டு பல கஷ்டங்களை அனுபவித்த பின்னர் இம்மக்கள் தங்களின்
வாழ்வை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு உழைப்பது வியப்பைத் தருகின்றது
என்றும் உரைத்தார்.
கிறிஸ்தவ வாழ்விலும் பணியிலும் அந்நியரை வரவேற்க வேண்டிய கடமை இருப்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, ஒரு மனிதரை மோசமாக நடத்துவது வெட்கத்துக்குரியது என்றும் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை பிரான்சிஸ் : சீனாவுக்காகச் செபம்
மே,24,2013. புதுமைகள் நிகழ்கின்றன. ஆயினும் செபம் தேவைப்படுகின்றது. அச்செபம், துணிச்சல், போராட்டம்
மற்றும் இடைவிடாதச் செபமாக இருக்க வேண்டும். அச்செபம் வெறும் சடங்காக
இருக்கக்கூடாது என்று இவ்வெள்ளிக்கிழமையன்று தனது டுவிட்டர் பக்கத்தில்
எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
@Pontifex என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் ஒன்பது மொழிகளில் இவ்வாறு எழுதியுள்ள திருத்தந்தை, மே
24ம் தேதியான இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட சகாய அன்னை விழாவை
முன்னிட்டு மற்றுமொரு செய்தியையும் தனது டுவிட்டரில் எழுதியுள்ளார்.
Sheshan அன்னைமரியின் பாதுகாவலில் நம்பிக்கை வைத்துள்ள சீனாவிலுள்ள கத்தோலிக்கருடன் தானும் இணைந்து, கிறிஸ்தவர்களுக்கு உதவும் மரியின் விழா நாளில் அம்மக்களுக்காகச் செபிப்பதாக டுவிட்டரில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இவ்வெள்ளி காலை திருப்பலியின் மன்றாட்டிலும் சீன மக்களுக்காகச் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சீன மக்களுக்காகச் செபிக்கும் செபநாளை 2007ம் ஆண்டில் ஏற்படுத்தினார் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலிய ஆயர்களிடம் : இயேசு மீதான முழுமையான அன்பே கடவுளின் மனிதரை அளப்பதாகும்
மே,24,2013. ஓர் ஆயர் அல்லது ஓர் அருள்பணியாளர் இயேசு மீது கொண்டிருக்கும் ஆழமான அன்பும், கடவுளுக்காக அனைத்தையும் வழங்குவதற்கு அவரிடமுள்ள மனவிருப்பமுமே, மேய்ப்பர் தனது அருள்பணியை எவ்வளவு நன்றாகச் செய்கிறார் என்பதற்கான துல்லியமான அளவுகோள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
இவ்வியாழன்
மாலை வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நடைபெற்ற
திருவழிபாட்டின் இறுதியில் ஏறக்குறைய 300 இத்தாலிய ஆயர்களுடன் சேர்ந்து
விசுவாசத்தை அறிக்கையிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், இந்த ஆயர்கள் குழுவில் தானும் ஓர் ஆயராக இருப்பதாகத் தெரிவித்தார்.
நம்பிக்கை ஆண்டின் ஓர் அங்கமாக இடம்பெற்ற இத்திருவழிபாட்டில் தனது எண்ணங்களை ஆயர்களுடன் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், இத்தாலியில் கலாச்சார, அரசியல் மற்றும் சமூக நிறுவனங்களுடன் உரையாடல் நடத்தி ஆயர்கள் ஆற்றிவரும் பணிகளைத் தொடர்ந்து செய்யுமாறு ஊக்கப்படுத்தினார்.
ஆயர்களாகிய
நாம் ஒரு நிறுவனத்தின் முகமல்ல அல்லது நிறுவனமாக வாழ வேண்டியவர்கள் அல்ல
என்று இத்தாலிய ஆயர்களிடம் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், சகோதரத்துவ
அன்பில் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு உயிர்த்த ஆண்டவரின் பிரசன்னம்
மற்றும் அவரின் செயலின் அடையாளமாக வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும்
கூறினார்.
தன்மீதும், தனது மந்தையின்மீது எப்போதும் விழிப்புடன் இருப்பது, ஆர்வமற்ற மேய்ப்பராக மாறுவதைத் தவிர்ப்பதற்கு அவசியமானது என்றும் கூறிய திருத்தந்தை, மேய்ப்பரில் விழிப்புணர்வு குறைவுபடுவது, மறதியையும், கவனச்சிதறலையும், ஏன் துன்பத்தையும்கூட கொண்டுவரும், பணத்தில் ஆர்வத்தை அல்லது உலகின் உணர்வுகளோடு ஒத்துப்போகச் செய்யும் என்றும் கூறினார்.
உரோம்
நகரில் இத்தாலிய ஆயர் பேரவையின் 65வது பொதுக் கூட்டம் இடம்பெற்று வருவதால்
நாட்டின் அனைத்து ஆயர்களும் தற்போது உரோமையில் உள்ளனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. சீனாவில் திருஅவையின் ஒற்றுமைக்காகச் செபம்
மே,24,2013. சீனக் கத்தோலிக்கர் Sheshan அன்னையாகிய சகாய அன்னையின் திருவிழாவை இவ்வெள்ளிக்கிழமையன்று சிறப்பித்தவேளை, Shanghaiல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அந்நகர் துணை ஆயர் Ma Daqin அந்நாட்டில் திருஅவையின் ஒற்றுமைக்காகச் செபித்துள்ளார்.
தனது சமூக வலைத்தளத்தில் சீனக் கத்தோலிக்கருடன் தொடர்பு கொண்ட ஆயர் Ma, ஆண்டவருக்கு அஞ்சுவது இதயத்துக்கு மகிழ்ச்சி கொடுக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஆயர் Ma Daqin இதற்கு முன்னர் 2012ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி தனது சமூக வலைத்தளத்தின் மூலம் மக்களோடு தொடர்பு கொண்டார்.
இவ்விழா நாளில் சீனாவிலுள்ள கத்தோலிக்கர் நாடெங்கும் பிறரன்புச் செயல்களையும் செப வழிபாடுகளையும் நடத்தியுள்ளனர்.
Shanghaiயிலுள்ள Sheshan அன்னைமரித் திருத்தலம் தேசியத் திருத்தலமாகும். ஆண்டுதோறும் மே 24ம் தேதியன்று இத்திருத்தல விழாச் சிறப்பிக்கப்படுகின்றது.
ஆதாரம் : AsiaNews
6. உலகம், அகதிகளுக்கும் குடியேற்றதாரருக்கும் ஆபத்தான இடமாக மாறி வருகிறது
மே,24,2013. மனித உரிமை மீறல்களைக் களைவதில் உலகில் காணப்படும் திறனற்ற போக்கு, அகதிகளுக்கும் குடியேற்றதாரருக்கும் ஆபத்துக்களை அதிகரித்து வருகின்றது என்று Amnesty International என்ற பன்னாட்டு மனித உரிமைகள் கழகம் குறை கூறியுள்ளது.
“உலகின் மனித உரிமைகள் 2013” என்ற தலைப்பில் இவ்வியாழனன்று அறிக்கை வெளியிட்டுள்ள Amnesty International, நெருக்கடிகள்
நிறைந்த இடங்களில் வாழும் அகதிகளும் குடியேற்றதாரரும் மனித உரிமை மீறல்களை
அதிகமாக எதிர்நோக்குகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு கோடியே 20 இலட்சம் பேர் நாடுகளின்றி இருந்தவேளை, தற்போது உலகில் ஒரு கோடியே 50 இலட்சம் பேர் அகதிகளாகத் தங்களைப் பதிவு செய்துள்ளனர் என்று கூறும் அவ்வறிக்கை, 21
கோடியே 40 இலட்சம் பேர் தங்களின் சொந்த நாடுகளில் அல்லது குடியேறியுள்ள
நாடுகளில் பாதுகாப்பின்றி வாழ்கின்றனர் என்றும் கூறியுள்ளது.
அகதிகள், குடியேற்றதாரர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்கள் போர் அல்லது அடக்குமுறையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் என்றும் Amnesty International கழகத்தின் அறிக்கை கூறியுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. உலகப் பொருளாதாரம் முன்னேறினாலும் சந்திக்கப்பட வேண்டிய சவால்கள் இன்னும் உள்ளன, ஐ.நா. அறிக்கை
மே,24,2013.
உலகப் பொருளாதாரம் முன்னேறினாலும் சந்திக்கப்பட வேண்டிய சவால்கள் இன்னும்
உள்ளன என்று ஐ.நா.வின் உலகப் பொருளாதார நிலை குறித்த அறிக்கை
தெரிவிக்கின்றது.
உலகப் பொருளாதார நிலை குறித்து இவ்வியாழனன்று நிருபர் கூட்டத்தில் விளக்கிய உலகப் பொருளாதாரத்திற்கான WESP நிறுவனத்தின் உதவிப் பொதுச் செயலர் Shamshad Akhtar, பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் கடந்த ஆண்டின் இறுதியில் எடுத்த புதிய கொள்கைகள் ஆபத்துக்களைக் குறைத்துள்ளன என்று கூறினார்.
இந்தப் புதிய கொள்கைகள், வணிகம் மற்றும் முதலீடுகளுக்கு உதவியுள்ளன, ஆயினும் பொருளாதார வளர்ச்சியில் மிகக் குறைவான முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது என்றும் Akhtar விளக்கினார்.
No comments:
Post a Comment