Wednesday 22 May 2013

Catholic News in Tamil - 21/05/13


1. திருத்தந்தை பிரான்சிஸ் : திருஅவையிலும்கூட உண்மையான அதிகாரம் என்பது பிறருக்குச் சேவை செய்வதாகும்

2. Oklahomaவில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் திருத்தந்தை செபம்

3. கர்தினால் Tauran : அரசியல், தூய வாழ்வுக்குப் பாதையாக அமைய முடியும்

4. முதுபெரும் தலைவர் Rahi : லெபனன் அரசியல்வாதிகள் ஆள்வதற்குத் தகுதியற்றவர்கள்

5. புரட்சியாளர்களை ஒடுக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் நல்ல பலனைத் தரும், நைஜீரிய ஆயர்கள் நம்பிக்கை

6. வெனெசுவேலாத் திருஅவையில் கருக்கலைப்புக்கு எதிரான ஓராண்டு நடவடிக்கை

7. 66வது உலக நலவாழ்வு மாநாடு

8. இலங்கையில் கடந்த நான்காண்டுகளில் அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும் குறைந்துள்ளன


          ------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : திருஅவையிலும்கூட உண்மையான அதிகாரம் என்பது பிறருக்குச் சேவை செய்வதாகும்

மே,21,2013. இயேசு செய்ததைப் போல, கிறிஸ்தவருக்கு உண்மையான முன்னேற்றம் தன்னையே தாழ்த்திக் கொள்வதில் அமைந்துள்ளது என்று இச்செவ்வாய் காலை புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உண்மையான அதிகாரம் என்பது பணி செய்வதாகும் என்றும், திருஅவையில் அதிகாரப் போராட்டத்துக்கு இடமே கிடையாது என்றும் கூறிய திருத்தந்தை, இயேசு தமது பாடுகளைப் பற்றிப் பேசினார், ஆனால் அவரின் சீடர்களோ தங்களில் யார் பெரியவர் என்பது குறித்து விவாதிக்கத் தொடங்கினர் என இந்நாளின் நற்செய்திப் பகுதியை மையமாக வைத்து தனது மறையுரையை வழங்கினார்.
திருஅவையில் அதிகாரப் போராட்டம் புதிது அல்ல, உண்மையில் அது இயேசுவோடு தொடங்கியது என்றும், திருஅவையில் அதிகாரப் போராட்டம் இருக்கவே கூடாது, ஏனெனில் இயேசு தமது எடுத்துக்காட்டுமூலம் நமக்குப் போதித்துள்ளது போல, உண்மையான அதிகாரம், பணிசெய்யும் அதிகாரம் என்றும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒரு மனிதருக்கு ஒரு வேலை கொடுக்கப்படும்போது அது பதவி உயர்வு என்று பேசுவது உலக மரபு, ஆனால் திருஅவையில் அந்த உயர்வு குறித்து நாம் பேசக் கூடாது, ஏனெனில் இயேசு சிலுவையில் உயர்த்தப்பட்டார், அவர் தாழ்த்தப்படுவதற்கு உயர்த்தப்பட்டார், இதுதான் உண்மையான உயர்வு என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவையில் உண்மையான அதிகாரம் என்பது பணி செய்வதாகும் என்பது புரிந்து கொள்ளப்படவேண்டும் என்பதற்காக இன்று நம் அனைவருக்காகவும் தான் செபிக்க விரும்புவதாகவும் மறையுரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்செவ்வாய்க்கிழமை காலைத் திருப்பலியில், இந்தியப் பணிக்குழுவினர் உட்பட சீனம், ஜப்பானியம், வியட்நாம், இத்தாலியம் போன்ற மொழிகளின் வத்திக்கான் வானொலியின் பணியாளர்கள் கலந்துகொண்டனர். மேலும், Focolare பக்த இயக்கத்தின் தலைவர், துணைத்தலைவர், வத்திக்கான் நிர்வாக அலுவலகத்தின் பணியாளர்கள், Civiltà Cattolica இதழின் இயக்குனர் இயேசு சபை அருள்பணி Antonio Spadaro போன்றோரும் இத்திருப்பலியில் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. Oklahomaவில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் திருத்தந்தை செபம்

மே,21,2013. அமெரிக்க ஐக்கிய நாட்டின் Oklahomaவை இத்திங்களன்று தாக்கிய கடும் புயலில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடனான தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ், இந்தக் கடும் புயலில் இறந்தவர்களின் குடும்பங்கள், குறிப்பாக, இளம் சிறாரை இழந்துள்ள குடும்பங்களுக்குத் தனது ஆறுதலைத் தெரிவித்திருப்பதோடு, இம்மக்களுக்காக அனைவரும் தன்னோடு சேர்ந்து செபிக்குமாறும் கேட்டுள்ளார். 
மேலும், இச்செவ்வாய் காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிகழ்த்திய திருப்பலியிலும் Oklahomaவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காகச் சிறப்பாகச் செபித்தார்.
இத்திங்களன்று மணிக்கு 200 மைல் வேகத்தில் வீசிய கடும் புயலில் ஓர் ஆரம்பப் பள்ளி அழிக்கப்பட்டுள்ளது. 20 சிறார் உட்பட குறைந்தது 50 பேர் இறந்துள்ளனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து இடம்பெற்றுவரும்வேளை, இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. கர்தினால் Tauran : அரசியல், தூய வாழ்வுக்குப் பாதையாக அமைய முடியும்

மே,21,2013. அரசியல், தூய வாழ்வுக்குப் பாதையாக இருக்க முடியும், ஆனால், கைம்மாறு கருதாமல் ஒருவர் பொதுநலத் தொண்டில் நுழைய வேண்டுமென்று திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran கூறியுள்ளார்.
EU என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் தந்தை எனக் கருதப்படும் Robert Schuman குறித்த நூலின் ப்ரெஞ்ச் மொழிப் பதிப்புக்கு முன்னுரை எழுதியுள்ள கர்தினால் Tauran, அரசியல் பொறுப்புக்களில் இருந்துகொண்டு ஒருவர் புனித வாழ்வு வாழ முடியுமா என்ற கேள்விக்குப் பதில் சொல்லியுள்ளார்.
Robert Schuman, நற்செய்தி அறிவிக்கும் விழுமிய வாழ்வுக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்தார் என்றும், அவரது செயல்களும் முயற்சிகளும் தியானத்தால் உந்துதல் பெற்றன என்றும் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் Tauran.
Robert Schumanஐ புனிதராக உயர்த்துவதற்கு உதவியாக அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த விபரங்கள் ஏற்கனவே திருப்பீடத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Zenit                          

4. முதுபெரும் தலைவர் Rahi : லெபனன் அரசியல்வாதிகள் ஆள்வதற்குத் தகுதியற்றவர்கள்

மே,21,2013. லெபனனில் தேர்தல் குறித்த சட்டத்தைக் கொண்டுவருவதற்கு ஆறு ஆண்டுகளாக விவாதித்துவரும் அந்நாட்டின் அரசியல்வாதிகள் இன்னும் ஒரு பொதுவான தீர்மானத்துக்கு வராமல் இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று குறை கூறியுள்ளார் லெபனன் மாரனைட் வழிபாட்டுமுறையின் முதுபெரும் தலைவர் Mar Bisharah Al Rahi.
இலத்தீன் அமெரிக்க நாடுகளில் வாழும் மாரனைட் வழிபாட்டுமுறையின் மக்களைச் சந்தித்துவரும் முதுபெரும் தலைவர் Rahi கொலம்பியாவில் பேசியபோது லெபனன் அரசியல்வாதிகள் நேரத்தை வீணாக்கி வருகிறார்கள் என்று சொல்லி, அந்த அரசியல்வாதிகளைச் சாடினார்.
லெபனன் நாட்டின் வறுமைநிலை பற்றியும் குறிப்பிட்டு, வெளிநாடுகளில் வாழும் அம்மக்களின் உறவினர்கள் ஆண்டுதோறும் அனுப்புகின்ற 800 கோடி டாலர் நிதியுதவியால் அந்நாட்டின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் வாழ்கிறார்கள் என்றும் கூறினார் முதுபெரும் தலைவர் Rahi.
கிறிஸ்தவரும் முஸ்லீம்களும் சமூக மற்றும் அரசியல்ரீதியாக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருவதற்கு லெபனன் நாடு எப்போதும் எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்து வந்தது. ஆயினும், 1975ம் ஆண்டுக்கும் 1990ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அந்நாட்டில் இடம்பெற்ற இரத்தம் சிந்திய உள்நாட்டுக் கலவரத்தால் அந்நாட்டின் நல்லிணக்க வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிரியா, இஸ்ரேல் ஆகிய இரண்டு வெளிநாட்டுச் சக்திகளே காரணம் என்று சொல்லப்படுகின்றது.

ஆதாரம் : Fides                        

5. புரட்சியாளர்களை ஒடுக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் நல்ல பலனைத் தரும், நைஜீரிய ஆயர்கள் நம்பிக்கை

மே,21,2013. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் அவசரகாலநிலை அறிவிக்கப்பட்டிருப்பது  நாட்டில் சுமுகமான சூழலை உருவாக்க உதவும் என்ற தங்கள் நம்பிக்கையைத் தெரிவித்துள்ளனர் அந்நாட்டுக் கத்தோலிக்க ஆயர்கள்.
நைஜீரியாவில் புரட்சியாளர்களை ஒடுக்குவதற்கு அரசு எடுத்துள்ள இம்முயற்சிகள் நல்ல பலனைத் தரும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ள ஆயர்கள், நைஜீரிய அரசுத்தலைவர் Goodluck Jonathan, அரசியல் அமைப்பு சார்ந்த தனது கடமைகளைச் செய்கிறார் என்றும் கூறியுள்ளனர்.
அரசின் நடவடிக்கைகள், நாட்டில் நிலைத்த அமைதியைக் கொண்டுவரும்  என்ற நம்பிக்கையோடு மக்கள் செபிக்கின்றனர் என்று நைஜீரியாவின் Borno மாநிலத் தலைநகரான Maiduguri ஆயர் Oliver Dashe Doeme, CNS செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
நைஜீரியாவில், Boko Haram இசுலாமியத் தீவிரவாதக் குழு 2009ம் ஆண்டில் தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து குறைந்தது 2,000 பேர் இறந்துள்ளனர்.

ஆதாரம் : CNS                           

6. வெனெசுவேலாத் திருஅவையில் கருக்கலைப்புக்கு எதிரான ஓராண்டு நடவடிக்கை

மே,21,2013. தென் அமெரிக்க நாடான வெனெசுவேலாவின் மனித வாழ்வை ஆதரிக்கும் 13வது ஆண்டு நிகழ்வு, இவ்வாண்டு முழுவதும் நடத்தப்படும் என்று அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறினார்.
நலிந்த மற்றும் ஆதரவற்ற மனித உயிர்களைக் கொல்வதே கருக்கலைப்பு என்று சொல்லி அதைப் புறக்கணிக்குமாறும், மனித வாழ்வைப் பாதுகாக்குமாறும் வலியுறுத்தி இவ்வாண்டு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது வெனெசுவேலாத் திருஅவை.
கருக்கலைப்பை ஆதரிக்கும் அனைத்துலக நிறுவனங்கள் திருஅவையின் இம்முயற்சியை விரும்புவதில்லை என்றுரைத்த, வெனெசுவேலா ஆயர் பேரவையின் குடும்பநலப் பணிக்குழுத் தலைவர் ஆயர் Rafael Conde Alfonzo, திருஅவையின் வாழ்வுக்கு ஆதரவான நடவடிக்கைகள் இயேசுவின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டவை என்று கூறினார்.

ஆதாரம் : CNA                          

7. 66வது உலக நலவாழ்வு மாநாடு

மே,21,2013. 66வது உலக நலவாழ்வு மாநாடு, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் இத்திங்களன்று தொடங்கியுள்ளது.
WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனத்தின் 194 உறுப்பு நாடுகளின் ஏறக்குறைய மூவாயிரம் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் இம்மாநாடு இம்மாதம் 28ம் தேதியன்று நிறைவடையும்.
சர்க்கரை நோய், புற்றுநோய்கள், நீண்டகால நுரையீரல் நோய்கள் போன்ற தொற்றாத நோய்களைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்தும், மில்லென்யம் வளர்ச்சித்திட்ட இலக்குகளை நோக்கி நாடுகள் செயல்படும்விதம் குறித்தும் இம்மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று WHO நிறுவனப் பேச்சாளர் Glenn Thomas கூறினார்.   

ஆதாரம் : UN                          

8. இலங்கையில் கடந்த நான்காண்டுகளில் அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும் குறைந்துள்ளன

மே,21,2013. இலங்கையில் போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளவேளை, அந்நாட்டில் அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும் மதிக்கப்படுவது குறைந்துள்ளது என்று ஓர் அனைத்துலக மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
போர்க்காலக் குற்றங்களை விசாரணை செய்வதாக இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் நிறுவனத்துக்கு அளித்த வாக்குறுதிகள் இன்னும் பின்பற்றப்படாமலே இருக்கின்றன என்று Human Rights Watch என்ற மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு குற்றம் சாட்டியுள்ளது.
மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டுள்ள பல இலங்கை மக்கள் நீதிக்காகக் காத்திருக்கின்றனர், ஆனால் அதற்கு மாறாக, இலங்கை அரசு  புலன்விசாரணைகளைப் புறக்கணித்துள்ளது, ஊடகத்துறையினர்மீது கடுமையாக நடந்து கொள்கிறது, சித்ரவதை போன்ற போர்க்கால மீறல்களைத் தொடர்ந்து செய்கின்றது என்று, அம்மனித உரிமைகள் குழுவின் ஆசிய இயக்குனர் Brad Adams குறை கூறியுள்ளார்.
மேலும், இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் கடைசி மாதங்களில் ஏறக்குறைய 40 ஆயிரம் அப்பாவி மக்களை இராணுவம் கொலை செய்திருக்கக்கூடும் என ஐ.நா. விசாரணைக் குழு குறிப்பிட்டுள்ளது.

ஆதாரம் : AP

No comments:

Post a Comment