1. திருத்தந்தை பிரான்சிஸ் : உலகின் உப்பாக இருங்கள்
2. திருத்தந்தை பிரான்சிஸ், எல் சால்வதோர் அரசுத்தலைவர் சந்திப்பு
3. வருகிற அக்டோபர் 4ல் அசிசியில் திருத்தந்தை பிரான்சிஸ்
4. தமிழ் மக்கள் ஏனைய மக்களைப் போல சம உரிமையுடன் வாழ வேண்டும் - மன்னார் ஆயர்
5. சிரியக் கிறிஸ்தவர்களூக்கான மனிதாபிமான உதவிகளில் கேரளக் கிறிஸ்தவர்கள்
6. தண்ணீரைப் பாதுகாக்கும் உலகம் அவசியம், ஐ.நா.
7. அயோடின் குறைபாடு மன வளர்ச்சியைப் பாதிக்கும் - ஆய்வு முடிவுகள்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : உலகின் உப்பாக இருங்கள்
மே,23,2013. விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பின் ஆன்மீக உப்பைப் பரப்புவர்களாக கிறிஸ்தவர்கள் இருக்க
வேண்டுமென இவ்வியாழன் காலை புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய
திருப்பலியில் பங்கு கொண்ட விசுவாசிகளிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை
பிரான்சிஸ்.
இயேசு நமக்குக் கொடுக்கும் ஆன்மீக உப்பு சேமித்து வைக்கப்படக் கூடாது, அது பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும், அதாவது இந்த உப்பின் செய்தியையும், அதன் அரும்பெரும் செல்வத்தையும் பிறரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும், இல்லாவிடில் கிறிஸ்தவர்கள் ஓர் அருங்காட்சியகப் பொருளாக மாறிவிடும் ஆபத்தை எதிர்நோக்குவர் என்று கூறினார் திருத்தந்தை.
கிறிஸ்தவர்களின் வாழ்வில் உப்பு என்பது என்ன, இயேசு நமக்கு வழங்கிய உப்பு எது என்ற கேள்வியை தனது மறையுரையில் எழுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ், கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்வைப் பிறருக்காக வழங்குவதற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.
இயேசு நமக்கு வழங்கும் உப்பு, விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பின் ஆன்மீக உப்பு என்றும், நம்மை மீட்பதற்காக இறந்து உயிர்த்த இயேசு வழங்கிய இந்த உப்பு ருசியின்றி மாறிவிடக் கூடாது, அது தனது சாரத்தை இழந்துவிடக் கூடாது என்றும், இது சேமித்து வைக்கப்படக் கூடாது, பாட்டிலில் இதைப் பாதுகாத்து வைத்தால் இது பயனற்றுப் போகும் என்றும் எச்சரித்தார் திருத்தந்தை.
பொருள்களோடு உப்பைச் சேர்க்கும்போது அவை ருசி பெறுகின்றன எனவும், நாம் பெற்றுள்ள உப்பு ருசி பெறுவதற்கு அது பிறரோடு பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இந்த உப்பை உணவு நேரங்கள், பிறருக்குப் பணி செய்வது ஆகிய வேளைகளில் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனத் தனது மறையுரையில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், இந்த உப்பை போதிப்பதன் மூலம் மட்டும் சேமித்து வைக்க முடியாது, மாறாக, இதற்குத் தியானம், செபம், வழிபாடு ஆகியவையும் அவசியம் என்றும் கூறினார்.
இந்த உப்பை, திருமுழுக்கிலும், உறுதிபூசுதலிலும், மறைக்கல்வியிலும் தான் பெற்றுக் கொண்டதாக இவ்வியாழன் காலை மறையுரையின் இறுதியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ், எல் சால்வதோர் அரசுத்தலைவர் சந்திப்பு
மே,23,2013. மத்திய அமெரிக்க நாடான எல் சால்வதோர் அரசுத்தலைவர் Carlos Mauricio Funes Cartagena அவர்களை இவ்வியாழனன்று காலை 11 மணிக்குத் திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் எல் சால்வதோர் அரசுத்தலைவர் Mauricio Funes.
ஏறத்தாழ
அரைமணி நேரம் இடம்பெற்ற இச்சந்திப்புக்களில் எல் சால்வதோர் நாட்டுக்கும்
திருப்பீடத்துக்குமிடையே நிலவும் சுமுகமான உறவுகள் குறித்து இருதரப்பினரும்
தங்களது திருப்தியை வெளிப்படுத்தினர் என்றுரைத்த திருப்பீட பத்திரிகை
அலுவலகம், அந்நாட்டின் இறையடியாரான சான் சால்வதோர் முன்னாள் பேராயர் Oscar Arnulfo Romero y Galdámez குறித்தும், அவரின் சாட்சிய வாழ்வு அந்நாட்டினருக்கு அவசியம் என்பது குறித்தும் வலியிறுத்தப்பட்டதாகத் தெரிவித்தது.
எல் சால்வதோர் நாட்டின் ஒப்புரவு, அமைதி, கல்வி, பிறரன்புப்பணிகள், வறுமை ஒழிப்பு, திட்டமிட்டக் குற்றக் கும்பல்கள் ஒழிப்பு ஆகியவற்றுக்குக் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் சேவைகளை அரசுத்தலைவர் Mauricio Funes இச்சந்திப்புக்களில் பாராட்டியதாகவும் திருப்பீட பத்திரிகை அலுவலகம் கூறியது.
அத்துடன் மனித உரிமைகள், திருமணம் மற்றும் குடும்பவாழ்வைப் பாதுகாத்தல் குறித்தும் வலியுறுத்தப்பட்டதாக அவ்வலுவலகம் மேலும் கூறியது.
மேலும், இறையடியார் பேராயர் Romeroவின் குருதியை எல் சால்வதோர் அரசுத்தலைவர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் வழங்கியதாகத் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறியுள்ளார்.
எல் சால்வதோர் நாட்டின் மனித உரிமை மீறல்களை வெளிப்படையாய்க் கண்டித்துப் பேசிய பேராயர் Romero, மருத்துவமனை
ஆலயத்தில் திருப்பலி நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது 1980ம் ஆண்டு
சுட்டுக் கொல்லப்பட்டார். எல் சால்வதோரின் உள்நாட்டுச் சண்டையில் ஏறக்குறைய
75 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. வருகிற அக்டோபர் 4ல் அசிசியில் திருத்தந்தை பிரான்சிஸ்
மே,23,2013. ஒப்புரவு மற்றும் அன்பின் நற்செய்தியை நாம் வாழ்கின்ற மற்றும் வேலை செய்யும் இடங்களுக்கு எடுத்துச் செல்கின்றோமா? என்ற கேள்வியை இவ்வியாழனன்று @Pontifex என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், புனித
பிரான்சிஸ் அசிசியாரின் திருவிழாவான அக்டோபர் 4ம் தேதியன்று திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் அசிசி நகருக்குத் திருப்பயணம் மேற்கொள்வார் என்று அசிசி
ஆயர் Domenico Sorrentino இவ்வியாழனன்று அறிவித்தார்.
திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களின் அசிசி திருப்பயணத்தை உறுதி செய்யும் கடிதம் ஒன்று
திருப்பீடச் செயலகத்தின் நேரடிப் பொதுச் செயலர் பேரருள்திரு Angelo Becciuவின் கையொப்பத்துடன் தனக்கு வந்துள்ளதாக ஆயர் Sorrentino கூறினார்.
இத்தாலியின் பாதுகாவலரான புனித பிரான்சிஸின் உணர்வில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை மகிழ்ச்சியோடு தாங்கள் வரவேற்பதாகவும் ஆயர் Sorrentino நிருபர்களிடம் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. தமிழ் மக்கள் ஏனைய மக்களைப் போல சம உரிமையுடன் வாழ வேண்டும் - மன்னார் ஆயர்
மே,23,2013. பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையைக் குழப்புவதற்கும், நாட்டுக்குத்
தீமை செய்யவும் முளைத்துள்ள பொதுபலசேனா என்ற இனவாத அமைப்பை நாட்டு மக்கள்
முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்
அழைப்புவிடுத்துள்ளார்.
வடமாகாண
சபைத் தேர்தல் என்பது தனி ஈழத்திற்கான முதற்படியாகும் என்பதால் இந்தத்
தேர்தலை அரசு நடத்தக்கூடாது என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர்
கலகொட அத்தே ஞானசார தேரர் அழைப்பு விடுத்துள்ளதைப்பற்றிக் குறிப்பிட்ட
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப், இனவாதிகளின் கருத்துகளுக்குச் செவிசாய்க்காமல் வடக்கில் மாகாணசபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்தியே ஆகவேண்டும், அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும், அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று விண்ணப்பித்தார்.
தமிழ் மக்கள் ஏனைய மக்களைப் போல சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம் என மேலும் கூறினார் ஆயர் இராயப்பு ஜோசப்.
ஆதாரம் : TamilWin
5. சிரியக் கிறிஸ்தவர்களூக்கான மனிதாபிமான உதவிகளில் கேரளக் கிறிஸ்தவர்கள்
மே,23,2013.
சிரியாவின் உள்நாட்டுப் போரால் சாவுகளும் அகதிகளின் எண்ணிக்கையும்
அதிகரித்துவரும் நிலையில் அம்மக்களுக்கு உதவும் நோக்குடன் நிதி திரட்டலில்
ஈடுபட்டுள்ளனர் கேரளாவின் கிறிஸ்தவர்கள்.
இதுவரை
சிரியாவின் உள்நாட்டுப்போரால் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்
அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாகக் கூறும் கேரளாவின் ஜேகோபைட்
கிறிஸ்தவ அவை, சிரியக் கிறிஸ்தவர்களுக்கான மனிதாபிமான உதவிகள் திரட்டப்பட்டு வருவதாகத் தெரிவித்தது.
சிரியக்
கிறிஸ்தவர்களுடன் ஆன ஒருமைப்பாட்டுடன் திரட்டப்படும் இந்த நிதி சிரியா
கிறிஸ்தவர்களுக்கு இந்தியக் கிறிஸ்தவக்குழு ஒன்றால் நேரடியாகச் சென்று
வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஜோர்தானில் உள்ள சிரிய அகதிகளுக்கு என 98 இலட்சம் டாலர்களை அவசரகால உதவியாக வழங்கியுள்ளது ஐ.நா. அமைப்பு.
கோடைகாலம் நெருங்கிவரும் வேளையில், ஜோர்தானில்
வாழும் சிரிய அகதிகளுக்கு குடிநீரும் முகாம்களும் வழங்க இந்நிதி உதவி
செலவழிக்கப்படும் என்றார் ஐ.நா. அதிகாரி ஆன்ட்ரூ ஹார்ப்பர்.
ஆதாரம் : Fides
6. தண்ணீரைப் பாதுகாக்கும் உலகம் அவசியம், ஐ.நா.
மே,23,2013. இயற்கை நீர் வளங்களைப் பாதுகாப்பதற்கும், அவை குறித்த புரிதல் ஏற்படுவதற்கும் அறிவியல்ரீதியான கூட்டுமுயற்சி இன்றியமையாதது என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் கூறியுள்ளது.
இப்புதனன்று கடைப்பிடிக்கப்பட்ட அனைத்துலக உயிரினப் பன்மைத்தன்மை நாளையொட்டி செய்தி வெளியிட்ட ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன், தண்ணீருக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை அதிகரித்துவரும் ஓர் உலகத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம், தற்போதைய நிலை நீடித்தால், தண்ணீருக்கான வருங்காலத் தேவைகள் நிறைவேற்றப்படாமல் விடப்படும் என்று எச்சரித்துள்ளார்.
தண்ணீர்ப் பற்றாக்குறை ஏறக்குறைய ஒவ்வொரு கண்டத்தையும் பாதித்துள்ளது மற்றும் இப்பூமியில் 40 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட மக்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர் என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் கூறியுள்ளது.
தண்ணீரும் உயிரினப் பன்மைத்தன்மையும் என்ற தலைப்பில் இவ்வாண்டின் இவ்வுலக தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
இப்பூமியிலுள்ள மொத்தத் தண்ணீரின் அளவில், 2.5 விழுக்காடு சுத்தத் தண்ணீர் என்று ஐ.நா. சுற்றுச்சூழல் நிறுவனம் கூறியுள்ளது.
ஆதாரம் : UN
7. அயோடின் குறைபாடு மன வளர்ச்சியைப் பாதிக்கும் - ஆய்வு முடிவுகள்
மே,23,2013. கர்ப்பகாலத்தில் அயோடின் குறைபாடு இருந்தால், அது பிறக்கப்போகும் குழந்தையின் மன வளர்ச்சியைப் பாதிக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கர்ப்பகாலத்தில்
தாய்மார்கள் அயோடின் சத்து நிறைந்த மீன் மற்றும் பால் தொடர்புடைய
உணவுகளைப் போதுமான அளவில் உட்கொள்ளாவிட்டால் பிறக்கப் போகும் குழந்தையின்
அறிவுத்திறன், வாசிப்புத்திறன் ஆகியவை ஒப்பீட்டளவில் மற்ற குழந்தைகளைவிட குறைவாக இருந்ததாக பிரிட்டனில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆரம்பப் பள்ளி சிறார்களிடையே நடத்தப்பட்ட ஆய்விலேயே இந்த முடிவுகள் தெரிய வந்ததாகவும் இதில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அயோடின் சத்து மிக அதிக அளவில் உள்ள கடற்பாசி சார்ந்த உணவுகளைக் கர்ப்பிணிகள் உட்கொள்ளும்போது, தேவையான அளவுக்கு கூடுதலாக அது உடலில் சேரும் போது அதுவும் நல்லதல்ல என்று அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகளவில்
தவிர்க்கப்படக்கூடிய மூளைப் பாதிப்புக்கள் ஏற்படுவதற்குக் கடுமையான
அயோடின் பற்றாக்குறை ஒரு முக்கிய காரணமாக உள்ளது என்று கருதப்படுகிறது.
ஆதாரம் : BBC
No comments:
Post a Comment