1. திருத்தந்தை: செபத்தின் வழி புதுமைகள் இடம்பெறும்
2. சிங்கப்பூர் புதிய பேராயர் நியமனம்
3. புதியவைகளை தாங்கி வரும் தூய ஆவியே மறைப்பணிகளின் ஆன்மா
4. திருத்தந்தை : வெளிஉலகில் சென்று பணிபுரியும் ஒரு திருஅவை இன்று தேவைப்படுகிறது
5. தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் இலங்கை அரசு பாராமுகம்!- என்கிறார் சொல்ஹெய்ம்
6. காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு படையினரால் தொடரும் அச்சுறுத்தல்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை: செபத்தின் வழி புதுமைகள் இடம்பெறும்
மே 20, 2013. விசுவாசத்துடன் நாம் தொடர்ந்து செபிக்கவேண்டும், அவ்வாறு செபிப்பதன் மூலம் புதுமைகள் இடம்பெறும் என்பதை உறுதியாக நம்பவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திங்களன்று காலை மார்த்தா இல்லத்தில் வத்திக்கான் வானொலியின் ஒரு குழு உட்பட, திருப்பீடப்பணியாளர்களுக்கு திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை, செபத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தன் மனைவியின் உடல் நலத்திற்காக செபிக்க கோவிலுக்கு இரவில் வந்த ஒருவர், கோவில் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு இரவு முழுவதும் வெளியிலேயே நின்று செபித்துவிட்டு, காலையில் மருத்துவமனைக்குச் சென்றபோது, அவர் மனைவி, மருத்துவர்களுக்கும்
விளக்கம் சொல்லத் தெரியாத வகையில் அற்புதவிதமாகக் குணமாகியிருந்தார் என்ற
நிகழ்வைப்பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, செபங்கள் மூலம் இத்தகையப் புதுமைகள் இடம்பெறுகின்றன என்றார்.
நம் ஒவ்வொருவருடைய செபங்களும் உறுதியுடையதாகவும், நம்பிக்கை நிறைந்ததாகவும் இருக்கவேண்டும் என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், நகரைக் காப்பதற்காக இறைவனை நோக்கி விண்ணப்பித்துப் போராடிய ஆபிரகாம், மற்றும் சோர்வுற்று இருந்தாலும் கைகளை வானோக்கி உயர்த்தி செபித்த மோசே போன்றோரை உதாரணமாக எடுத்துரைத்தார்.
'இறைவா நான் உம்மை நம்புகிறேன். என் நம்பிக்கையின்மையை அகற்ற உதவியருளும்' என இறைவனை நோக்கி வேண்டும் நாம், போரால் துன்புறுவோர், அகதிகள் போன்ற எண்ணற்ற துன்புறும் மக்களுக்காக செபிப்போம் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.
இதற்கிடையே, இத்திங்களன்று தன் டுவிட்டர் பக்கத்தில், ‘தூய ஆவியானவர் நம்மை மாற்றி புதுப்பிப்பதோடு, இணக்க வாழ்வையும் ஒன்றிப்பையும் உருவாக்கி, நம் மறைப்பணிகளுக்கு ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறார்' என எழுதியுள்ளார் திருத்தந்தை.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. சிங்கப்பூர் புதிய பேராயர் நியமனம்
மே 20, 2013. சிங்கப்பூர் பெருமறைமாவட்டத்தின் முன்னாள் பேராயரின் பணிஓய்வை ஏற்றுக்கொண்டு, புதிய பேராயராக அவ்வுயர்மறைமாவட்ட வாரிசுரிமைப் பேராயர் William Goh Seng Chyeஐ நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1938ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் தேதி பிறந்த முன்னாள் பேராயர் Nicholas Chia Yeck Joo, தன் 75ம் வயதில் பதவி ஓய்வு பெற்றுள்ளதை முன்னிட்டு இப்புதிய நியமனம் இடம்பெற்றுள்ளது.
புதியப் பேராயராக நியமிக்கப்பட்டுள்ள சிங்கப்பூரின் வாரிசுரிமைப்பேராயர் William Goh, 1957ம்
ஆண்டு பிறந்து 1985ல் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 22ம் தேதி ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டு, சிங்கப்பூரின் வாரிசுரிமைப் பேராயராக பணியாற்றிவந்துள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. புதியவைகளை தாங்கி வரும் தூய ஆவியே மறைப்பணிகளின் ஆன்மா
மே 20, 2013. புதியவைகளைத் தாங்கி வருபவராக இருக்கும் தூய ஆவியே மறைப்பணிகளின் ஆன்மாவாக இருப்பதோடு, நற்செய்தியை
எடுத்துச்செல்லும் நம் வழிகளில் ஊக்கத்தையும் தருகிறார் என தூய
ஆவியானவரின் பெந்தக்கோஸ்து திருவிழாவான இஞ்ஞாயிறன்று காலை தூய பேதுரு
பேராலய வளாகத்தில் கூடிய ஏறத்தாழ இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட
விசுவாசிகளுக்கு திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை கூறினார்.
நம்பிக்கை
ஆண்டில் இடம்பெற்ற இவ்விழாவில் பங்குகொள்ள உலகின் பல பகுதிகளிலிருந்து
பல்வேறு அமைப்புகளின் அங்கத்தினர்கள் குழுமியிருந்த இத்திருப்பலியில், தூயஆவி குறித்து மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், பெந்தக்கோஸ்து
நிகழ்வு பல ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற ஒன்றாக இருப்பினும் அது நம்
இதயங்களை இன்றும் ஆழமாகத் தொடும் வகையில் அருகாமையில் உள்ளது என்றார்.
திருத்தூதர் பணிகள் நூல் உரைக்கும் இப்பகுதி, நமக்கு மூன்று முக்கிய கருத்துக்களை நினைவுறுத்தி நிற்கின்றன என்ற திருத்தந்தை, புதியன, இணக்கம், மறைப்பணி என்பவைகளாக அவைகளைக் குறிப்பிட்டு, அவைகள் குறித்த விளக்கங்களையும் அளித்தார்.
இத்திருப்பலியின்
இறுதியில் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களோடு இணைந்து அல்லேலூயா
வாழ்த்து செபத்தை செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. திருத்தந்தை : வெளிஉலகில் சென்று பணிபுரியும் ஒரு திருஅவை இன்று தேவைப்படுகிறது
மே 20, 2013. மனிதகுலம் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துவரும் இக்காலக்கட்டத்தில் தன்னையே மறைத்து வாழும் ஒரு திருஅவை அல்ல, வெளிஉலகில் சென்று பணிபுரியும் ஒரு திருஅவை இன்று தேவைப்படுகிறது என்றார் திருத்தந்தை.
தூயஆவியாரின் பெருவிழாவுக்கு முன், சனிக்கிழமை
மாலை திருவிழிப்புச்சடங்கில் கலந்துகொண்ட இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட
விசுவாசிகளுக்கு உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், இன்றைய உலகம் பொருளாதாரத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மக்கள் நலனுக்குக் கொடுப்பதில்லை என்றார்.
பொருளாதாரச் சரிவும், வீழ்ச்சியும் பெரும் செய்திகளாக முக்கியத்துவம் கொடுக்கப்படும்வேளை, ஒரு தொழிலாளியின் சாவோ, குழந்தையின் பசியோ முக்கியத்துவம் பெறுவதில்லை என்ற கவலையை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்றைய உலகில் மதநம்பிக்கைகளுக்காகச் சித்ரவதைகளை அனுபவிக்கும் மக்களுக்காக செபிக்கவேண்டும் என அழைப்புவிடுத்த பாப்பிறை பிரான்சிஸ், மதசுதந்திரத்திற்காக ஒவ்வொருவரும் உழைக்கவேண்டியதன் கடமையையும் வலியுறுத்தினார்.
திருஅவை என்பது ஒரு அரசு சாரா சமூக அமைப்பு அல்ல, மாறாக
நற்செய்தியை வாழ்வதே அது இவ்வுலகிற்கு வழங்கும் பங்களிப்பாகும் எனவும்
கூறினார் திருத்தந்தை. உரோம் நகரின் தூய பேதுரு வளாகத்தில் இடம்பெற்ற
இத்திருவிழிப்பில் கலந்து கொண்ட விசுவாசிகளுள் பெரும்பான்மையினோர் 'திருத்தந்தை பிரான்சிஸ் வாழ்க' என்ற அட்டைகளைத் தாங்கியவர்களாக, திருத்தந்தை பிரான்சிஸ் என சப்தமிட்டுக்கொண்டிருக்க, அவர்களை
நோக்கி புதியதொரு விண்ணப்பத்தையும் முன்வைத்தார் திருத்தந்தை. திருத்தந்தை
வாழ்க என கூறுவதற்கு பதிலாக இயேசுகிறிஸ்து வாழ்க என இனிமேல் கூறுமாறுக்
கேட்டுக்க்கொண்டார்.
திருத்தந்தையுடன் மக்கள் கலந்துகொண்ட இத்திருவிழிப்பு வழிபாட்டில் அயர்லாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவரும், பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சரும், ஷப்பாஸ்
பாட்டியின் சகோதரரும் ஆன பால் பாட்டியும் தங்கள் விசுவாச அனுபவங்களை அங்கு
குழுமியிருந்தோருடன் பகிர்ந்துகொண்டனர். அதன்பின் இளையோருள் நான்குபேர்
திருத்தந்தைக்கு கேள்விகளை முன்வைக்க அவர்களுக்கு பதிலுரை வழங்கினார்
திருத்தந்தை.
தன் பாட்டியிடமிருந்தும், தாயிடமிருந்தும் ஆழமான சுவாசத்தைக் கற்றுக்கொண்டதாக உரைத்த திருத்தந்தை, நம் விசுவாசத்தை மற்றவர்களுக்கு எடுத்துரைப்பதற்கான சிறந்த வழி சாட்சிய வாழ்வே எனக் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் இலங்கை அரசு பாராமுகம்!- என்கிறார் சொல்ஹெய்ம்
மே 20, 2013. போரில் கண்ட வெற்றியைக் கொண்டாடும் இலங்கை அரசு, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் பராமுகமாய் உள்ளதால், சர்வதேச
அழுத்தங்கள் இலங்கை மீது மேலும் வலுவாக்கப்பட வேண்டுமென்று இலங்கைக்கான
நார்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
இலங்கை போரில் கண்ட வெற்றி தொடர்பாக, தனது டுவிட்டர் தளத்தில் தகவல் வெளியிட்ட எரிக்சொல்ஹெய்ம், இலங்கை அரசு புலிகளுக்கு எதிரான போரில் அடைந்த வெற்றியின் 4வது ஆண்டை, தேசிய போர் வெற்றி விழா என்று மிகவும் விமரிசையாக கொண்டாடிய நிலையில், இலங்கையின்
உள்நாட்டுப் போருக்குக் காரணமாக இருந்த தமிழ் மக்களின் அரசியல்
பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்ற கவலையை வெளியிட்டுள்ளார்.
ஆதாரம் : TamilWin
6. காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு படையினரால் தொடரும் அச்சுறுத்தல்
மே 20, 2013. இலங்கை இறுதிக்கட்ட போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து, பின்னர்
காணாமற் போனவர்கள் தொடர்பில் வவுனியா உயர் நீதிமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவைத் திரும்பப் பெறுமாறு மனுதாரர்களுக்கு
இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள், 2009ம் ஆண்டு மே 18ம் தேதி இராணுவத்தினரின் அறிவித்தலுக்கு ஏற்ப சரணடைந்தவர், மற்றும், இதன் பின்னர் சரணடைந்தவர்கள் நிலை என்னவென்று தெரியா நிலையில், அவர்களது உறவினர்கள் ஆட்கொணர்வு மனுக்களை கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி வவுனியா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதைத் தொடர்ந்து, வழக்கைத் திரும்பப் பெறுமாறு அதனைத் தாக்கல் செய்தவர்களுக்கு, அச்சுறுத்தல்கள் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : TamilWin
No comments:
Post a Comment