Saturday, 18 May 2013

Catholic News in Tamil - 18/05/13


1. திருத்தந்தை பிரான்சிஸ் : பிறரது வாழ்வில் தலையிடும் சோதனையைக் கிறிஸ்தவர்கள் மேற்கொள்ள வேண்டும்

2. திருத்தந்தை பிரான்சிஸ், ஜெர்மன் சான்சிலர் சந்திப்பு

3. திருத்தந்தை பிரான்சிஸ் : அன்னைமரியிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்

4. ஆயர் இம்மானுவேல் : இலங்கையின் வடக்கில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தேவை

5. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் இசுலாமியத் தீவிரவாதிகள் கிறிஸ்தவர்களை அச்சுறுத்துகின்றனர்

6. பங்களாதேஷின் தொழிலாளர் குறித்த ஒப்பந்தத்திற்கு ஐ.நா. வரவேற்பு

7. மியான்மாரில் இருபதுக்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் விடுதலை

8. உலக வங்கி : இந்தியாவும், சீனாவும் 2030ம் ஆண்டுக்குள் பெரிய முதலீட்டாளர்களாக மாறும்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : பிறரது வாழ்வில் தலையிடும் சோதனையைக் கிறிஸ்தவர்கள் மேற்கொள்ள வேண்டும் 

மே,18,2013. திருஅவையில் எவ்வளவு வீண்பேச்சுக்கள் பேசப்படுகின்றன, கிறிஸ்தவர்களாகிய நாம் பயனில்லாதப் பேச்சுக்களை எப்படி பேசுகிறோம், தவறான தகவல், பெயரைக் கெடுத்தல், அவதூறு ஆகிய மூன்று கூறுகளை இந்த நடத்தைக் கொண்டுள்ளது, இவை மூன்றுமே பாவங்கள் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
யோவானைக் கண்டதும் பேதுரு இயேசுவிடம், இவருக்கு என்ன ஆகும் என்று கேட்டதற்கு இயேசு, அது பற்றி உனக்கு என்ன எனப் பேதுருவிடம் கேட்கும் இந்நாளின் நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், இந்நிகழ்வை வைத்து இக்காலக் கிறிஸ்தவர்களுக்கு ஓர் எச்சரிப்பையும் முன்வைத்தார்.   
இயேசுவோடு அன்பு உரையாடலை மேற்கொண்ட பேதுருவின் உரையாடல் திசை மாறுகிறது, பிறரது வாழ்வில் தலையிடும் சோதனையால் அவர் துன்புறுகிறார் என்றுரைத்த திருத்தந்தை, பேதுரு உட்பட்ட இரு சோதனைகள் குறித்து விளக்கினார்.
ஒருவரைப் பிறரோடு ஒப்பிட்டுப் பேசுதல், புறணி பேசுதல் ஆகிய இரு சோதனைகள் குறித்து இச்சனிக்கிழமை காலையில் புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் விளக்கிய திருத்தந்தை, ஒருவரைப் பிறரோடு ஒப்பிட்டுப் பேசும்போது அது கசப்புணர்விலும், பொறாமையிலும்கூடக் கொண்டுபோய் விடுகின்றது, பொறாமை கிறிஸ்தவச் சமூகத்தை அரித்து விடுகின்றது என்று கூறினார்.
அடுத்து,  புறணி பேசுதல். இது முதலில் அறிவார்ந்த வழியில் தொடங்கி பின்னர் மோசமாக உணரும் நிலையில் விட்டுவிடுகின்றது, திருஅவையில் நாம் அனைவரும் புறணி பேசுகிறோம், இது ஒருவர் ஒருவரைப் புண்படுத்துகின்றது, இது ஒருவர் மற்றவரை வீழ்த்த விரும்புவதுபோல் உள்ளது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மீட்பு என்பது பிறரோடு ஒப்பிடுவதிலோ, வீண்பேச்சுப் பேசுவதிலோ இல்லை, மாறாக, இயேசுவைப் பின்செல்லுவதில் இருக்கின்றது, எனவே நாம் பிறரின் வாழ்வில் தலையிடாதிருக்கும் வரத்தை இயேசுவிடம் கேட்போம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ், ஜெர்மன் சான்சிலர் சந்திப்பு

மே,18,2013. ஜெர்மன் சான்சிலர் Angela Merkel அவர்களை இச்சனிக்கிழமை காலை 11 மணிக்குத் திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் ஜெர்மன் சான்சிலர் Merkel.
இச்சந்திப்புக்களில் ஜெர்மனிக்கும் திருப்பீடத்துக்குமிடையேயான நீண்டகால உறவுகள் நினைவுகூரப்பட்டதாகத் தெரிவித்த திருப்பீட பத்திரிகை அலுவலகம், ஐரோப்பாவிலும், உலகிலும் சமூக, அரசியல், பொருளாதார மற்றும் சமய விவகாரங்கள் குறித்தும், சிறப்பாக, மனித உரிமைகள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள், சமய சுதந்திரம், அமைதியை ஊக்குவிப்பதில் உலக அளவிலான ஒத்துழைப்பு ஆகியவையும் பேசப்பட்டதாகக் கூறியது.
ஐரோப்பிய சமுதாயம் உலகிற்கு ஆற்றவேண்டிய கடமைகள் குறித்தும், மனித மாண்பு மற்றும் ஒருமைப்பாட்டு உணர்வில் அமைக்கப்பட்ட வளர்ச்சிக்கு ஆதரவாக ஐரோப்பிய அரசு மற்றும் சமயங்கள்  நிறுவனங்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டியது குறித்தும் இச்சந்திப்புக்களில் பேசப்பட்டதாகத் திருப்பீட பத்திரிகை அலுவலகம் மேலும் கூறியது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாப்பிறைப் பணியை ஏற்ற திருப்பலியில் கடந்த மார்ச் 19ம் தேதியன்று ஜெர்மன் சான்சிலர் Angela Merkel கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி


3. திருத்தந்தை பிரான்சிஸ் : அன்னைமரியிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்

மே,18,2013. நாம் அன்னைமரியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும், கிறிஸ்துவை தமது வாழ்வில் ஏற்பதற்கு வரையறையின்றித் தயாராக இருந்த அன்னைமரியாவை நாம் பின்பற்ற வேண்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் @Pontifex என்ற டுவிட்டர் பக்கத்தில் இச்செய்தி இலத்தீன், அரபு உட்பட 9 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இச்சனிக்கிழமை மாலை 6 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெறும் தூய ஆவிப் பெருவிழாவின் திருவிழிப்புச் செபவழிபாட்டில் பாகிஸ்தான் அமைச்சர் Paul Bhatti தனது சகோதரர் Shahbaz Bhattiயின் சாட்சிய வாழ்வு குறித்துப் பகிர்ந்து கொள்கிறார்.
ஒரு இலட்சத்து 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசுவாசிகள் கலந்து கொள்ளும் இவ்வழிபாட்டில் பாகிஸ்தானில் சிறுபான்மையினராக இருக்கும் கிறிஸ்தவர்கள் குறித்தும் பகிர்ந்து கொள்கிறார்.
பாகிஸ்தானின் சிறுபான்மைத்துறை அமைச்சராகவும், அந்நாட்டின் அமைச்சரவையில் ஒரே கிறிஸ்தவராகவும் பணியாற்றிய Shahbaz Bhatti, 2011ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி தனது 43வது வயதில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் அந்நாட்டின் தெய்வநிந்தனைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமென்று வலியுறுத்தி வந்தவர்.  
மேலும், தூய ஆவிப் பெருவிழாவான இஞ்ஞாயிறு காலையில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருப்பலி நிகழ்த்துவார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பலியில் திருஅவையின் பல்வேறு பொதுநிலை பக்த இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. ஆயர் இம்மானுவேல் : இலங்கையின் வடக்கில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தேவை

மே,18,2013. இலங்கையில் சண்டை முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகியிருக்கும் இவ்வேளையில், சண்டை மற்றும் பேரச்சமின்றி மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்று கொழும்புவின் துணை ஆயர் இம்மானுவேல் ஃபெர்னான்டோ கூறினார்.
இலங்கையின் அந்தக் கொடூரமானச் சண்டையின் புண்கள் ஆறுவதற்கு ஆரம்பித்துள்ளதா? என்ற வத்திக்கான் வானொலியின் கேள்விக்குப் பதிலளித்த ஆயர் இம்மானுவேல் இவ்வாறு கூறினார்.
25 ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்ற சண்டையின் குணமாகாத காயங்கள் பற்றிச் சொல்லவேண்டுமெனில், இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் இன்னும் பலர் தங்களது சொந்த இடங்களுக்குப் போக முடியாமல் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
சிலவேளைகளில் இராணுவம் அவர்களின் நிலங்களைக் கைப்பற்றி வைத்திருப்பதும், இன்னும் பிற காரணங்களும் பலர் தங்களது சொந்த இடங்களுக்குப் போக முடியாமல் இருப்பதற்குக் காரணம் என்று ஆயர் இம்மானுவேல் தெரிவித்தார்.  
இறுதிக்கட்டப் போர் நடந்த பகுதியில் ஒரு கிராமத்தை அண்மையில் சில ஆயர்களுடன் தான் பார்வையிட்டது குறித்துப் பேசிய ஆயர் இம்மானுவேல், அங்கு ஒரு கத்தோலிக்க ஆலயம் தரை மட்டமாகியுள்ளது, பல வீடுகள் பெருமளவில் சேதமாகியுள்ளன என்று கூறினார்.
வடக்கில் இராணுவம் நிர்வாகம் செய்வதைவிட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மிகவும் தேவைப்படுகின்றது என்றும் கொழும்புவின் துணை ஆயர் இம்மானுவேல் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் இசுலாமியத் தீவிரவாதிகள் கிறிஸ்தவர்களை அச்சுறுத்துகின்றனர்

மே,18,2013. மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் ஆதரவு பெற்ற உப இராணுவக் குழுக்கள், ஆலயங்களையும், மறைப்பணித்தளங்களையும் சூறையாடி, கொள்ளையிட்டு அழிக்கின்றன என அந்நாட்டின் நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 
Aid to the Church in Need என்ற பிறரன்பு நிறுவனத்திடம் இத்தகவலைத் தெரிவித்துள்ளன அவ்வட்டாரங்கள்.
கடந்த மார்ச் மாதத்தில் மத்திய ஆப்ரிக்கக் குடியரசை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த Séléka என்ற இசுலாமிய புரட்சிக்குழுவால் எண்ணற்ற கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. 
கடந்த மார்ச் 25ம் தேதி இரவில் Bangui உயர்மறைமாவட்ட சான்சிலர் அருள்பணியாளர் Dieu-Béni Bangaவும், கடந்த ஏப்ரல் 27ம் தேதி பேராலய அதிபர் அருள்பணியாளர் Francis Sikiம் கடத்தப்பட்டதையும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆதாரம் : ICN                            

6. பங்களாதேஷின் தொழிலாளர் குறித்த ஒப்பந்தத்திற்கு ஐ.நா. வரவேற்பு

மே,18,2013. பங்களாதேஷில் Rana Plaza என்ற 8 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்துக்குப் பின்னர் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் ஒப்பந்தம் ஒன்றில் பல பன்னாட்டு நிறுவனங்கள் கையெழுத்திட்டிருப்பது குறித்த தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார் ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன்.
Inditex, Carrefour, H&M போன்ற பெரிய ஐரோப்பிய அனைத்துலக நிறுவனங்கள் உட்பட 37 நிறுவனங்கள், பங்களாதேஷில் தொழிற்சாலைக் கட்டிடங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இவ்வொப்பந்தத்தால் பங்களாதேஷில் கட்டிட விபத்து, தீ விபத்து மற்றும் பிற விபத்துக்களுக்குத் தொழிலாளர்கள் பயப்படத் தேவையில்லை என்று ILO அனைத்துலக தொழில் நிறுவனம் கூறியது.
கடந்த மாதத்தில் Rana Plaza என்ற 8 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 1,100க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

ஆதாரம் : UN

7. மியான்மாரில் இருபதுக்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் விடுதலை

மே,18,2013. மியான்மார் அரசுத்தலைவர் தெய்ன் செயின் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்குச் சுற்றுப்பயணத்தைத் தொடங்குவதற்குச் சிலமணி நேரங்களுக்கு முன்னர் மியான்மாரில் இருபதுக்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
மியான்மார் அரசின் இந்நடவடிக்கையை வரவேற்றுப் பேசியுள்ள முன்னாள் அரசியல் கைதியான Ye Aung, அந்நாட்டிலுள்ள அனைத்து மனச்சான்றின் கைதிகளும் விடுதலை செய்யப்படுமாறு வலியுறுத்தினார்.
மியான்மாரில் இன்னும் 200க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் உள்ளனர் என்று Ye Aung கூறினார். 

ஆதாரம் : UCAN                       

8. உலக வங்கி : இந்தியாவும், சீனாவும் 2030ம் ஆண்டுக்குள் பெரிய முதலீட்டாளர்களாக மாறும்

மே,18,2013. உலக அளவில் முதலீடு செய்யப்படும் மொத்த நிதியில் வளரும் நாடுகளுக்குச் செல்லும் தொகை, அடுத்த இருபது ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரிக்கக்கூடும் என்று உலக வங்கி தனது புதிய அறிக்கையில் கணித்துள்ளது.
வளரும் நாடுகளும், அவற்றின் இளைய மற்றும் பெருமளவான மக்கள்தொகையும் முதலீடுகளுக்கு மிகப்பெரிய வளங்களாக அமையும் என்றுரைக்கும் உலக வங்கி, இந்தியாவும், சீனாவும் 2030ம் ஆண்டுக்குள் உலகின் இரண்டு பெரிய முதலீட்டாளர்களாக மாறும் என்றும் கூறியுள்ளது.
2030ம் ஆண்டுக்குள் உலகில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு டாலரின் 60 சென்ட்டுகள், வளரும் நாடுகளுக்குச் செல்லும், ஆனால், 2000மாம் ஆண்டில் ஒவ்வொரு டாலரின் 20 சென்ட்டுகளே இந்நாடுகளில் முதலீடு செய்யப்பட்டன என்றும் அவ்வறிக்கையில் உலக வங்கி கூறியுள்ளது.

ஆதாரம் : Reuters

No comments:

Post a Comment

Pope prays for global peace and for all victims of religious persecution

  Pope prays for global peace and for all victims of religious persecution Pope Francis calls for peace in conflict zones, solidarity with t...