Thursday 16 May 2013

Catholic News in Tamil - 14/05/13

1.  திருத்தந்தை பிரான்சிஸ் : அன்பு செய்யக்கூடிய பரந்த இதயம் நமக்குத் தேவை

2.  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தி
3. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பாப்பிறைப் பணிக்காலத்தைப் பாத்திமா அன்னைமரியிடம் அர்ப்பணிப்பு

4. கர்தினால் ஃபிலோனி நற்செய்தி அறிவிப்புப்பணி முறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

5. சிரியாவின் பிரச்சனை, மேற்கின் புவியியல்அரசியல் யுக்தியின் ஓர் அங்கம் : சிரியாவின் முதுபெரும் தலைவர்

6. பாகிஸ்தான் தலத்திருஅவை புதிய பிரதமருடன் உரையாடல்

7. மனித வியாபாரத்தைத் தடைசெய்வதற்கு உலகளாவிய முயற்சிகளுக்கு ஐ.நா.வலியுறுத்தல்

8. உலகில் பசிக் கொடுமையை ஒழிக்க பூச்சி உற்பத்தியைப் பெருக்கலாம், ஐ.நா.


------------------------------------------------------------------------------------------------------

1.  திருத்தந்தை பிரான்சிஸ் : அன்பு செய்யக்கூடிய பரந்த இதயம் நமக்குத் தேவை

மே,14,2013. அன்பு செய்யக்கூடிய பரந்து விரிந்த பெரிய இதயம் நமக்குத் தேவை என்றும், எந்நிலையிலும் தன்னலத்தோடு நடப்பதை நாம் தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தன்னலத்தோடு வாழ்பவர்கள், யூதாஸ் போல, அன்பு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்வதில்லை, அவர்கள் மறுதலிப்பவர்கள், தனித்துவிடப்படுபவர்கள் மற்றும் தனிமையில் வாழ்பவர்களாக மாறுகிறார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்நாளின் நற்செய்திப் பகுதியை மையமாக வைத்து, அன்புப் பாதைக்கும், தன்னலத்துக்கும் இடையேயுள்ள முரண்பாடுகள் குறித்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், நாம் உண்மையிலேயே இயேசுவைப் பின்செல்ல விரும்பினால், வாழ்வை, பிறருக்குக் கொடையாக வழங்கும் விதத்தில் வாழவேண்டும், அதை நமக்குள்ளே வைத்துக்கொள்ளும் புதையலாக வாழக் கூடாது என்றும் கூறினார்.
தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை என்ற இயேசுவின் வார்த்தைகளையும் குறிப்பிட்ட திருத்தந்தை, கொடை என்பதன் பொருளை யூதாஸ் ஒருபோதும் புரிந்து கொள்ளவில்லை என்றும், இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் அளவுக்கு தன்னல எண்ணத்தில் யூதாஸ் வளர்ந்தார் என்றும் கூறினார்.
தன்னலத்தில் மனச்சான்றை தனிமைப்படுத்துபவர்கள் இறுதியில் எல்லாவற்றையும் இழந்துவிடுவார்கள் என்று எச்சரித்த திருத்தந்தை பிரான்சிஸ், பணத்தோடு பற்றுக்கொண்டிருந்த, பணத்தை வணங்கிய யூதாசும் தனது வாழ்வை இழப்பிலே முடித்தார் என்று உரைத்தார்.
இந்நாள்களில் தூய ஆவியின் விழாவுக்காக காத்திருக்கும் நாம், வாரும் ஆவியே, மனத்தாழ்மையுடன் அன்பு செய்யும் பெரிய, பரந்து விரிந்த இதயத்தை எமக்குத் தாரும் எனக் கேட்போம் எனக் கூறி, தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 
இச்செவ்வாய்க்கிழமை காலையில் புனித மார்த்தா இல்லத்தில் திருத்தந்தை நிகழ்த்திய திருப்பலியில், வத்திக்கான் அருங்காட்சியகத்தின் சில பணியாளர்களும், பாப்பிறை போர்த்துக்கீசிய கல்லூரியின் சில மாணவர்களும் கலந்துகொண்டனர். Medellín பேராயர் Ricardo Antonio Tobón Restrepo, திருத்தந்தையோடு சேர்ந்து கூட்டுத்திருப்பலி நிகழ்த்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2.  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தி

மே,14,2013. நான் எனது அன்றாட வாழ்வில் கிறிஸ்துவுக்குப் பிரமாணிக்கமாக இருக்கிறேனா? எனது விசுவாசத்தை மதிப்போடு, அதேநேரம் துணிச்சலுடன் வெளிப்படுத்த என்னால் முடிகின்றதா? என்ற கேள்விகளை தனது டுவிட்டர் பக்கத்தில் எழுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திங்கள் மாலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு எழுதியுள்ளார் திருத்தந்தை.
மேலும், அனைமரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த மே மாதத்தை நிறைவு செய்யும் விதமாக, அம்மாதத்தின் இறுதி நாளான 31ம் தேதியன்று இரவு 8 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் விசுவாசிகளுடன் சேர்ந்து செபமாலை செபிக்கவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பாப்பிறைப் பணிக்காலத்தைப் பாத்திமா அன்னைமரியிடம் அர்ப்பணிப்பு

மே,14,2013. கத்தோலிக்கத் திருஅவையைப் புதுப்பித்து சீரமைப்புச் செய்வதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முயற்சித்துவரும் இவ்வேளையில், அன்னைமரியா அவருக்கு மிகுந்த துணிச்சலையும் சக்தியையும் அளித்தருளுமாறு செபித்தார் போர்த்துக்கல் நாட்டு லிஸ்பன் கர்தினால் Jose da Cruz Policarpo.
பாத்திமா அன்னையின் திருவிழாவான இத்திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பாப்பிறைப் பணிக்காலத்தை பாத்திமா அன்னையிடம் அர்ப்பணித்துச் செபித்த கர்தினால் Policarpo, திருஅவையைப் புதுப்பிக்கும் வழிகளைக் கண்டுபிடிப்பதற்குத் தேர்ந்துதெளியும் கொடையையும், தூயஆவி பரிந்துரைக்கும் வழிகளைத் தயக்கமின்றி பின்செல்வதற்குத் துணிச்சல் எனும் கொடையையும் அவருக்கு வழங்குமாறும் செபித்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த தனது முயற்சிகளில் எதிர்கொள்ளும் துன்பங்களின் கடின நேரங்களில் அன்னைமரி அவருக்கு ஆதரவாக இருக்குமாறும் செபித்த கர்தினால் Policarpo, திருஅவையின் தாயாகிய மரியே உம்மிடம் புதிய திருத்தந்தையின் திருப்பணிக் காலத்தை அர்ப்பணிக்கிறோம் என்றும் செபித்தார்.
பாத்திமாவில் மூன்று சிறாருக்கு அன்னைமரியா காட்சி கொடுத்ததன் 96ம் ஆண்டு நிறைவுத் திருப்பலியின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காகச் செபித்தார் லிஸ்பன் கர்தினால் Policarpo.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது திருப்பணிக் காலத்தை பாத்திமா அன்னையிடம் அர்ப்பணிக்குமாறு ஏற்கனவே கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. கர்தினால் ஃபிலோனி நற்செய்தி அறிவிப்புப்பணி முறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

மே,14,2013. கிறிஸ்தவச் செய்தியை நவீன மனிதருக்கு எப்படி வழங்க வேண்டும் என்பது குறித்துப் பரிசீலனை செய்ய வேண்டும் என்று திருப்பீட நற்செய்தி அறிவிப்புப்பணிப் பேராயத் தலைவர் கர்தினால் Fernando Filoni கூறினார்.
இத்திங்களன்று தொடங்கியுள்ள பாப்பிறை மறைப்பணிக் கழகங்களின்  மாநாட்டில் தொடக்கவுரையாற்றிய கர்தினால் ஃபிலோனி, நமது மறைப்பணிகள் பலனுள்ளவையாகவும், ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் அமைவதற்கு நமது நற்செய்தி அறிவிப்புப்பணி முறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் பல பிரதிநிதிகளின் நாடுகளில் அடக்குமுறைகளும், ஏழ்மையும், வன்முறையும், சண்டைகளும் இடம்பெறுவதைக் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் ஃபிலோனி, இந்தச் சூழல்கள், பாப்பிறை மறைப்பணிக் கழகங்களின் பணிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எனவும் கூறினார்.
வருகிற சனிக்கிழமைவரை நடைபெறும் இந்த ஒரு வார மாநாட்டில் ஏறக்குறைய 150 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

ஆதாரம் : Fides

5. சிரியாவின் பிரச்சனை, மேற்கின் புவியியல்அரசியல் யுக்தியின் ஓர் அங்கம் : சிரியாவின் முதுபெரும் தலைவர்

மே,14,2013. சிரியாவில் தற்போது இடம்பெற்றுவரும் வன்முறைகள், மத்திய கிழக்கில் சிரியாவையும் பிற நாடுகளையும் பிரிக்கும் மேற்கத்திய நாடுகளின் புவியியல்அரசியல் யுக்தியின் விளைவே என்று சிரியாவின் கத்தோலிக்க முதுபெரும் தலைவர் Ignatius Joseph III Younan குறை கூறினார்.
மக்களாட்சியையோ அல்லது பன்மைத்தன்மையையோ ஊக்குவிப்பதாக மேற்கத்திய நாடுகள் எம்மிடம் கூறுகின்றன, ஆனால் இது உண்மையல்ல, இது வெளிவேடம் என்று குறை கூறினார் முதுபெரும் தலைவர் 3ம் Younan.
சிரியாவில் தற்போது இடம்பெற்றுவரும் நிகழ்வுகளுக்கு மேற்கத்திய நாடுகளே பொறுப்பேற்க வேண்டும் என்றுரைத்த முதுபெரும் தலைவர் 3ம் Younan, சிரியாவில் இடம்பெறும் சண்டையில் ஈடுபட்டுள்ள அந்நாட்டைச் சுற்றியுள்ள நாடுகளுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் தாங்கள் எச்சரிக்கை விடுப்பதாகவும் கூறியுள்ளார்.
CNS என்ற கத்தோலிக்க செய்தி நிறுவனத்திடம் இவ்வாறு தெரிவித்த முதுபெரும் தலைவர் 3ம் Younan, சிரியாவில் சண்டை தொடங்கியதிலிருந்து சிரியா அரசுத்தலைவர் Bashar Assadஐ சர்வாதிகாரி என்று சொல்லி அவரது ஆட்சி கவிழ வேண்டுமென்று மேற்கத்திய நாடுகள் சொல்லி வருகின்றன, இப்போது 25 மாதங்கள் ஆகியும் சண்டை முடியவில்லை, நிலைமை இன்னும் மோசமாகிக்கொண்டே போகிறது என்றும் தெரிவித்தார்.
லெபனன் நாட்டில் மட்டும் 10 இலட்சத்துக்கு மேற்பட்ட சிரியா அகதிகள் உள்ளனர். இவர்கள் லெபனன் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியாகும்.

ஆதாரம் : CNS                           

6. பாகிஸ்தான் தலத்திருஅவை புதிய பிரதமருடன் உரையாடல்

மே,14,2013. பாகிஸ்தானில் பொதுத்தேர்தல்கள் முடிந்து புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப் பதவியேற்கவுள்ளவேளை, அந்நாட்டில் சிறுபான்மையினருக்கு நல்லதோர் எதிர்காலம் இருக்கும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி பணிக்குழு இயக்குனர் அருள்பணி இம்மானுவேல் யூசாப்.
நவாஸ் ஷெரீப் முஸ்லீம் அல்லாதவர்களுடன் நல்ல அணுகுமுறையைக் கொண்டிருப்பவர் என்றுரைத்த அருள்பணி இம்மானுவேல், அந்நாட்டில் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்பட்டு, நல்ல எதிர்காலம் அமையும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
பொதுத்தேர்தல்கள் நியாயமாகவும், ஒளிவுமறைவின்றியும் நடந்ததாகவும், தற்போது மக்கள் பயமின்றி இருப்பதாகவும், பாகிஸ்தான் சனநாயகத்துக்கு நல்ல அடையாளம் தெரிவதாகவும் அக்குரு கூறினார். 
இதற்கிடையே, நவாஸ் வெற்றி பெற்றதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்து தெரிவித்து இந்தியாவுக்கு வருகைதரும்படி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்ற நவாஸ் ஷெரீப், தன்னுடைய பதவியேற்பு விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.   

ஆதாரம் : Fides

7. மனித வியாபாரத்தைத் தடைசெய்வதற்கு உலகளாவிய முயற்சிகளுக்கு ஐ.நா.வலியுறுத்தல்
மே,14,2013. உலகில் கட்டாயவேலை, வீடுகளில் கொத்தடிமை, பாலியல் அடிமை, சிறார் படைவீரர் போன்றவைகளில் ஏறக்குறைய 24 இலட்சம் பேர் உட்படுத்தப்பட்டுள்ளவேளை, மனித வியாபாரத்தைத் தடைசெய்யும் அனைத்துலக ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்படுமாறு 193 உறுப்பு நாடுகளை வலியுறுத்தியுள்ளது ஐக்கிய நாடுகள் நிறுவனம்.
இம்மனித வியாபாரம் ஆண்டுக்கு 3,200 கோடி டாலர் வருமானத்தைப் பெற்றுத் தருகின்றது என்றுரைத்த ஐ.நா.பொது அவைத் தலைவர் Vuk Jeremic, இவ்வியாபாரத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தங்கள் வாழ்வை மீண்டும் அமைப்பதற்கு உதவிகள் வழங்கப்பட்டுவரும்வேளை, இவ்வியாபாரத்தைத் தடைசெய்வதற்கு தீவிர முயற்சிகள் எடுக்கப்படுமாறு கேட்டுக்கொண்டார்.
மனித வியாபாரத்தைத் தடைசெய்வது குறித்த இரண்டுநாள் உயர்மட்டக் கூட்டத்தில் பேசிய ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன், நீதியை எட்டுவதற்கு, சட்டத்தில் உறுதியான அடித்தளம் தேவை என்றும் தெரிவித்தார்.

ஆதாரம் : UN

8. உலகில் பசிக் கொடுமையை ஒழிக்க பூச்சி உற்பத்தியைப் பெருக்கலாம், ஐ.நா.

மே,14,2013. உலகளவில் பசிக்கொடுமையை ஒழிப்பதில் மனிதர்கள் சாப்பிடக்கூடிய பூச்சிகள் எதிர்காலத்தில் ஆற்றக்கூடிய பங்களிப்பு குறித்து FAO எனும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய நூல் விளக்கியுள்ளது.
ஏற்கனவே 200 கோடி மக்கள் தங்களது உணவில் வெட்டுக்கிளி, வண்டு, எறும்பு உட்பட பல பூச்சிகளைச் சேர்த்துக் கொள்வதாகக் கூறும் இப்புதிய நூல், பெரிய அளவில் பண்ணைகள் வைத்து பூச்சிகளை உற்பத்தி செய்வது வருங்காலத்தில் உணவுப் பாதுகாப்புக்கு உத்தரவாதத்தை அளிக்கும் என்றும் கூறுகிறது.
வேகமாக இனப்பெருக்கம் செய்யும் தன்மை கொண்ட பூச்சிகளிடம், புரதச்சத்து அதிகம் காணப்படுகிறது. மீன் மற்றும் கால்நடைகளின் உணவாகவும் இவை பயன்படும் வாய்ப்புள்ளது என்றும் அந்நூல் தெரிவிக்கிறது.
சீனா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்காவின் பல பகுதிகளில் பூச்சிகள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. மேற்கத்திய நாடுகளில் சில உணவு விடுதிகளில் இவை அபூர்வப் பொருளாக பரிமாறப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : FAO
 

No comments:

Post a Comment