1. உரோமை ஆயராக தன் பணியை திருத்தந்தை துவங்கும் வைபவம்
2. அர்ஜென்டினா அரசுத்தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு
3. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கேடய அடையாளமும் விருதுவாக்கும்
4. திருஅவையில் ஆசிய, ஆப்ரிக்க நாடுகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் முக்கியத்துவம் வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு - டில்லி பேராயர் Anil Couto
5. இந்தோனேசிய குருவுக்கு தென்கொரிய நீதி மற்றும் அமைதி அமைப்பின் விருது
6. மகப்பேறு இறப்பு அதிகரிக்க தாய்மையுறும் வயதே காரணம்
7. குடும்ப வன்முறை புகார் : சென்னைக்கு முதலிடம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. உரோமை ஆயராக தன் பணியை திருத்தந்தை துவங்கும் வைபவம்
மார்ச்,18,2013. உரோமை ஆயராக திருத்தந்தை பிரான்சிஸ் தன் பணியைத் துவங்கும் வைபவம் இச்செவ்வாய்க்கிழமை காலை உரோம் நேரம் காலை 9.30 மணிக்கு, அதாவது இந்திய நேரம் பிற்பகல் 2 மணிக்கு திருப்பலியுடன் இடம்பெறும்.
திருப்பலிக்கு முன்னர் திறந்த வாகனம் ஒன்றில் தூய பேதுரு வளாகத்தை வலம்வரும் திருத்தந்தை பிரான்சிஸ், பின்னர்
தூய பேதுரு ஆலயத்தினுள் சென்று திருப்பலிக்கான உடைகளை அணிந்து முதலில் தூய
பேதுரு கல்லறையை தரிசித்தபின்னர் அங்கிருந்தே ஊர்வலமாக பசிலிக்காப் பேராலய
முகப்பிற்கு வருவார்.
‘திருத்தந்தையாக முடிசூட்டும் விழா’ என அழைக்கப்பட்டு வந்த இந்த வைபவம், தற்போது 'உரோமை ஆயர் பணியை துவக்கி வைக்கும் திருப்பலி விழா’ என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இத்திருப்பலியில் திருத்தந்தையின் அதிகாரத்தைக் குறிக்கும் பாலியம் எனும் கழுத்துப்பட்டையை கர்தினால் ஜான் லூயி தவுரான் அளிக்க, அதே வேளை கர்தினால் அவைத்தலைவர் கர்தினால் சொதானோ,
திருத்தந்தை பிரான்சிஸிடம் திருத்தந்தை அணியும் மோதிரத்தை வழங்குவார்.
ரிக்கோ மன்ஃபிரினி என்ற புகழ்பெற்ற இத்தாலிய கலைஞரால் இந்த வெள்ளி மோதிரம்
தங்கமுலாம் பூசப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. தூய பேதுருவின் மோதிரம் என்ற
பொருளுடன் இது மீனவரின் மோதிரம் என அழைக்கப்படுகிறது.
உரோம் நகரில் தற்போது தங்கியிருக்கும் அனைத்து கர்தினால்களும், முதுபெரும் தலைவர்களும் திருத்தந்தையுடன் இணைந்து இத்திருப்பலியை நிறைவேற்றுவர். இது தவிர, பிரான்சிஸ்கன்
துறவு சபையின் தலைவரும் இயேசு சபை அதிபரும் திருத்தந்தையுடன் இணைந்து
திருப்பலியை நிறைவேற்றுவர். பெரும்பான்மை எண்ணிக்கையில் உறுப்பினர்களைக்
கொண்ட துறவு சபைகள் கூட்டமைப்பின் தலைவராக பிரான்சிஸ்கன் துறவுசபை தலைவரும்
துணைத்தலைவராக இயேசு சபை தலைவரும் தற்போது பணியாற்றி வருவதே இதற்கு
காரணமாகும்.
இச்செவ்வாய்க்கிழமை வைபவத்தில் கர்தினால்-ஆயர்கள் சார்பில் இருவர், கர்தினால்-குருக்கள் சார்பில் இருவர் மற்றும் கர்தினால்-தியாக்கோன்கள் சார்பில் இருவர் என 6 கர்தினால்கள், அனைத்து கர்தினால்களின் பிரதிநிதிகளாக திருத்தந்தைக்கு தங்கள் கீழ்ப்படிதலை அறிவிப்பர்.
இத்திருப்பலியில் பங்குபெறும் விசுவாசிகளுக்கு என 500 தியாக்கோன்கள் திருநற்கருணை வழங்குவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பலிக்குப்பின் தூய பேதுரு பேராலயத்தினுள் பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளை திருத்தந்தை பிரான்சிஸ் சந்திப்பார்.
2. அர்ஜென்டினா அரசுத்தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு
மார்ச்,18,2013. இத்திங்களன்று அர்ஜென்டினா அரசுத்தலைவர் வத்திக்கான் வந்து, புதிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்து உரையாடினார்.
அர்ஜென்டினா நாட்டு தலைநகர் Buenos Airesன் பேராயராக இருந்தபோது தேர்ந்தெடுக்கபட்ட புதிய திருத்தந்தையைச் சந்திக்க வந்த அந்நாட்டு அரசுத்தலைவர் Cristina Fernandes de Kirchnerடன் ஏறத்தாழ 20 நிமிடங்கள் உரையாடியபின், அவரோடு இணைந்து மதிய உணவை அருந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திங்கள்
காலை உள்ளூர் நேரம் 10 மணியளவில் திருப்பீடச்செயலர் கர்தினால் தர்ச்சீசியோ
பெர்த்தோனே அவர்களையும் சந்தித்து உரையாடினார் பாப்பிறை.
இதற்கிடையே, ஞாயிறன்று மாலை இயேசுசபை அதிபர் Adolfo Nicolas அவர்களையும் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
3. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கேடய அடையாளமும் விருதுவாக்கும்
மார்ச்,18,2013. இயேசுசபையினர் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வமான அடையாளத்தையும், "எளியவராயினும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்" என்ற விருதுவாக்கையும், திருத்தந்தை பிரான்சிஸ் தன் கேடய அடையாளமாகப் (Coat of Arms) பயன்படுத்துகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Argentinaவில் Buenos Aires பேராயராகப் பணியேற்றபோது பயன்படுத்திய அடையாளத்தையும், வார்த்தைகளையும் திருத்தந்தை பிரான்சிஸ் தொடர்ந்து பயன்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
IHS என்ற மூன்று எழுத்துக்களும், அவற்றை சுற்றி அமைந்துள்ள கதிர்போன்ற அடையாளங்களும் இயேசு சபையினரின் அதிகாரப்பூர்வமான அடையாளம். அதற்குக் கீழ் ஒரு விண்மீனும், ஒரு மலரும் பொறிக்கப்பட்டுள்ளன. இவை, அன்னை மரியாவையும், புனித யோசேப்பையும் குறிப்பன.
வரிதண்டும் பணியில் இருந்த புனித மத்தேயுவை அன்புடன் பார்த்து, அவரைத் தன்பின்னே வரும்படி இயேசு அழைத்த நிகழ்வைப் பின்னணியாகக் கொண்டு, "எளியவராயினும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்"
என்ற வார்த்தைகளை தன் பேராயர் பணிக்கென திருத்தந்தை தேர்ந்திருந்தார்
என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசுசபை அருள்தந்தை Federico Lombardi செய்தியாளர்களிடம் விளக்கினார்.
1953ம் ஆண்டு புனித மத்தேயு திருநாளன்று, அப்போது 17 வயது நிரம்பியவரான தற்போதையத் திருத்தந்தை, தன் துறவற அழைப்பை உணர்ந்ததால், அந்த நிகழ்வைக் குறிக்கும் வார்த்தைகளைத் தன் பணிவாழ்வின் விருதுவாக்காக மேற்கொண்டார் என்றும் அருள்தந்தை Lombardi விளக்கிக் கூறினார்.
4. திருஅவையில் ஆசிய, ஆப்ரிக்க நாடுகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் முக்கியத்துவம் வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு - டில்லி பேராயர் Anil Couto
மார்ச்,18,2013. எளிமையானதோர் பின்னணியிலிருந்து வந்திருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ், திருஅவையில் ஆசிய, ஆப்ரிக்க நாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்குவார் என தான் எதிர்பார்ப்பதாக டில்லி பேராயர் Anil Couto கூறினார்.
இந்தியத் திருஅவை திருத்தந்தையை இந்திய நாட்டுக்கு வருகை தருமாறு அழைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று கூறிய பேராயர் Couto, தற்போது நிகழ்ந்த 'கான்கிளேவ்' அவையில்தான் முதன்முறையாக ஐந்து இந்திய கர்தினால்கள் கலந்துகொண்டனர் என்பதையும் மகிழ்வுடன் எடுத்துரைத்தார்.
வருகிற ஜூன் மாதம் 29ம் தேதி திருத்தூதர்கள் புனித பேதுரு, பவுல் பெருவிழாவன்று புதிதாக நியமனம் பெற்றுள்ள பேராயர் Couto, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் 'Pallium' எனப்படும் தலைமைப்பணி பட்டையைப் பெறுவார்.
மேலும், மதங்களுக்கு இடையே உரையாடலை வளர்ப்பதிலும், பிறரன்பு சேவைகளிலும் சிறந்த ஒரு திருத்தந்தையை நாம் பெற்றுள்ளோம், புதியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்பதில் அனைத்து இந்தியர்களும் பெருமகிழ்வு கொண்டுள்ளனர் என்று Vasai ஆயர் Felix Machado கூறினார்.
புதியத் திருத்தந்தையின் அறிவிப்பைத் தொடர்ந்து தன்னை அழைத்து பாராட்டியது ஒரு இந்தமதத் தலைவர் என்பதைச் சுட்டிக்காட்டிய ஆயர் Machado, நல்லதொரு
திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படவேண்டுமென இந்துக்களும் வேண்டி வந்துள்ளனர்
என்பதை அத்தலைவர் கூறியபோது தான் மகிழ்வடைந்ததாக எடுத்துரைத்தார்.
5. இந்தோனேசிய குருவுக்கு தென்கொரிய நீதி மற்றும் அமைதி அமைப்பின் விருது
மார்ச்,18,2013.
இந்தோனேசிய அரசுக்கும் பாப்புவா பகுதியின் சுதந்திர போராட்ட
நடவடிக்கையாளர்களுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தைகளை ஊக்குவித்து
வருவதற்கென இவ்வாண்டிற்கான அமைதி விருதை அருட்தந்தை Neles Tebay அவர்களுக்கு வழங்கியுள்ளது தென்கொரிய தலைநகரிலிருந்து இயங்கும் நீதி மற்றும் அமைதி அமைப்பு.
ஜெயபுரா உயர்மறைமாவட்டத்திலிருந்து பணியாற்றும் இந்தோனேசிய அருட்தந்தை Tebay, இவ்விருது குறித்துப் பேசுகையில், கடந்த
50 ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் வன்முறை மற்றும் மோதலகளில் அதிக
அளவில் பாதிக்கப்பட்டுள்ளது அப்பாவி பொதுமக்களே என்ற நிலையில்
அவர்களுக்கு நியாயம் கிடைக்கும்வரையில் தன் முயற்சிகள்
ஓயப்போவதில்லை என்றார்.
1969ம் ஆண்டு பாப்புவா பகுதியை தன் கீழ் வலுக்கட்டாயமாகக் கொண்டுவந்த இந்தோனேசியா, 2001ம் ஆண்டு அப்பகுதிக்கு மேம்பட்ட சுயஆட்சி உரிமையை வழங்கியுள்ள போதிலும், பாப்புவா பகுதியின் பூர்வீகக் குடிமக்கள் இன்னும் அரசின் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக அருட்தந்தை Tebay மேலும் கூறினார்.
6. மகப்பேறு இறப்பு அதிகரிக்க தாய்மையுறும் வயதே காரணம்
மார்ச்,18,2013.
தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் அதிகமாவதற்கு தாய்மையுறும் பெண்களின்
வயதும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விறப்பு விகிதம், குறிப்பாக கிருஷ்ணகிரி, தேனி பகுதிகளில் அதிகமாக உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மகப்பேறு இறப்பு விகிதம், சிசுக்கள் இறப்பு விகிதத்தைப் பொறுத்தே நாட்டின் வளர்ச்சியைக் கணக்கிடும் சூழலில், ஆப்பிரிக்க நாடுகளில் மகப்பேறு இறப்பு ஒரு லட்சத்திற்கு 820 ஆகவும், வளர்ந்த
நாடுகளில் 9 ஆகவும் உள்ளன. இந்தியாவில் ஆண்டிற்கு ஒரு லட்சம் பெண்கள்
மகப்பேறின்போது இறப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மகப்பேறு இறப்பு விகிதம்
அதிகமாவதற்கு, தாய்மையுறும் பெண்களின் வயதும் ஒரு முக்கிய காரணமாகும் என கண்டறியப்பட்டுள்ளது. திருமண வயது சட்டப்படி 18 எனினும்,
மகப்பேறு இறப்பு விகிதத்தில் 4 விழுக்காட்டினர் மிகவும் இளம் பருவ பெண்கள்
தான் என தெரியவந்துள்ளது. இதில் 10 விழுக்காட்டினருக்கும் அதிகமான இறப்பு
கிருஷ்ணகிரி மற்றும் தேனி மாவட்டங்களில்தான் என, கண்டறியப்பட்டுள்ளது. 35 வயதிற்கு மேல் தாய்மையுறும் பெண்களிடையே இறப்பு விகிதம் அதிகமுள்ள மாவட்டங்கள் திருநெல்வேலி, தஞ்சாவூர் மற்றும் சென்னை எனவும், மகப்பேறு இறப்பு விகித்த்தில் 80 விழுக்காட்டிற்கு பொருளாதார பின்னடைவே காரணம், எனவும் மருத்துவ அதிகாரி ஒருவர் கூறினார்.
7. குடும்ப வன்முறை புகார் : சென்னைக்கு முதலிடம்
மார்ச்,18,2013. மாநில அளவில், குடும்ப வன்முறை தொடர்பான புகார் பதிவில், சென்னை முதலிடத்திலும், ஈரோடு மாவட்டம், இரண்டாவது இடத்திலும் உள்ளன என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மாநிலம் முழுவதும் 5 ஆண்டுகளில், சமூகநல பாதுகாப்பு அலுவலர்களிடம் கொடுக்கப்பட்ட புகாரில், சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. குடும்ப வன்முறை, கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார், வரதட்சணை கொடுமை ஆகியவை தொடர்பாக, 2300 புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில், 2050 புகார்கள் தீர்வு காணப்பட்டு, தம்பதிகளுக்கு ஆலோசனை வழங்கி, சமரசத் தீர்வு காணப்பட்டுள்ளது.
குடும்ப வன்முறை புகார் பதிவில், ஈரோடு மாவட்டம், இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில், 1158 புகார்கள் பெறப்பட்டு, 730 புகார்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. இதுகுறித்து, சமூகநல அலுவலர் ஒருவர் கூறுகையில், பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளால், பாதிக்கப்படும் பெண்கள் சட்ட உதவிகளை பெறமுடியும் எனவும், பாதிக்கப்படும் பெண்களுக்கு, மனநல அலுவலர், சமூக ஆர்வலர்கள் முறையான ஆலோசனைகளைக் கொடுத்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment