Wednesday 20 March 2013

மரணதண்டனை

 
மரணதண்டனை

மரணதண்டனை என்பது,  ஓர் அதிகார நிர்வாகம் தனக்கு உட்பட்ட மனிதர் ஒருவரின் வாழ்வைப் பறிக்கும் தண்டனை ஆகும். மிகப் பழைய காலம் முதலே கடுமையான குற்றங்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு வந்துள்ளது. எல்லா நாடுகளிலும் கொலைக்கு மரணதண்டனை விதிக்கப்படுதல் ஏதேனும் ஒரு காலப்பகுதியில் நிலவி வந்துள்ளது. இத்தண்டனை நிறைவேற்றப்படும் முறையும் நாட்டுக்கு நாடும், காலத்துக்குக் காலமும் வேறுபாடாக இருந்து வந்துள்ளன. தலையை வாளினால் அல்லது வேறு முறைகள் மூலம் துண்டித்தல், கழுவில் ஏற்றுதல், கல்லால் எறிந்து கொல்லுதல், கல்லில் கட்டிக் கடலில் எறிதல், மின்கம்பத்தில் கட்டிவைத்துச் சுடுதல், கழுத்துவரை நிலத்தில் புதைத்து யானையால் மிதிக்கச் செய்தல், காட்டு விலங்குகளுக்கு இரையாக்குதல், தூக்கிலிடுதல், உயிருடன் புதைத்தல், நஞ்சூட்டுதல், துப்பாக்கியால் சுடுதல், மின்னதிர்ச்சி கொடுத்தல் போன்ற பல முறைகள் கையாளப்பட்டு வந்துள்ளன.
இன்று உலகில் 140 நாடுகள் மரணதண்டனை சட்டத்தை நீக்கியுள்ளன அல்லது அச்சட்டம் இருந்தும் அதனைப் பயன்படுத்தாமல் உள்ளன. இது உலக நாடுகளின் எண்ணிக்கையில் 70 விழுக்காட்டிற்கும் மேலாகும். அண்மைக்கால புள்ளிவிவரங்களை நோக்கும்போது சீனா, ஈரான், வடகொரியா, ஏமன் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலேயே அதிக அளவில் மரணதண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன. 2007ம் ஆண்டுக்கும் 2011க்கும் இடைப்பட்டக் காலத்தில் உலகில் 5,541 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது, 17,951 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மரணதண்டனை நிறைவேற்றல்களில் ஈரானின் 1663,  சவுதி அரேபியாவின் 423, ஈராக்கின் 256, அமெரிக்க ஐக்கிய நாட்டின் 220, பாகிஸ்தானின் 171, ஏமனின் 152 ஆகியவையும் அடங்கும்.
மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு (World Coalition Against the Death Penalty) 2002ம் ஆண்டு மே 13ல் உரோம் நகரில் உருவாக்கப்பட்டது. இக்கூட்டமைப்பில் 121க்கும் மேற்பட்ட உலக அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன.


No comments:

Post a Comment