1. திருத்தந்தை பிரான்சிஸ் : ஏழ்மையை ஒழிப்பதற்கு மேலும் முயற்சிகள் எடுக்கப்படுமாறு உலகத் தலைவர்களுக்கு அழைப்பு
2. திருத்தந்தை பிரான்சிஸ், ஈராக்குக்குத் திருப்பயணம் மேற்கொள்ள முதுபெரும் தலைவர் முதலாம் இரபேல் அழைப்பு
3. Pérezடம் திருத்தந்தை பிரான்சிஸ் : சர்வாதிகாரிகளால் ஏற்படுத்தப்பட்ட அழிவைச் சீர்செய்ய வேண்டும்
4. முதுபெரும் தலைவர் Sabbah : பெரிய தலைவர்களின் வருகை புனிதபூமியின் நிலைமையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை
5. உயிர்ப்புப் பெருவிழா, விடுமுறையாகக் கடைப்பிடிக்கப்படுமாறு இந்திய ஆயர்கள் வேண்டுகோள்
6. Zimbabwe ஆயர் பேரவை : குடிமக்களுக்கு அமைதியும் சகிப்புத்தன்மையும் தேவை
7. இயேசுவில் நம்பிக்கை இழப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து ஆங்லிக்கன் பேராயர் Welby எச்சரிக்கை
8. உலகின் காடுகள் பாதுகாக்கப்படுமாறு ஐ.நா. பொதுச்செயலர் அழைப்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : ஏழ்மையை ஒழிப்பதற்கு மேலும் முயற்சிகள் எடுக்கப்படுமாறு உலகத் தலைவர்களுக்கு அழைப்பு
மார்ச்,22,2013. உண்மையின்றி, உண்மையான அமைதி கிடையாது, ஒவ்வொருவரும் பிறரின் நலனில் அக்கறை காட்டாமல், தங்களது சொந்தக் கோட்பாட்டின்படியும், தங்களது உரிமைகளையே எப்பொழுதும் கேட்டும் வாழ்ந்தால் உண்மையான அமைதியை அடைய முடியாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
திருப்பீடத்துடன் அரசியல் உறவு வைத்துள்ள 180 நாடுகளின் தூதர்களை இவ்வெள்ளி காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், உரோம் ஆயருக்குரிய சிறப்புப் பெயர்களில் திருத்தந்தையும் ஒன்று எனச் சொல்லி, திருத்தந்தை என்பவர், கடவுளுக்கும் மக்களுக்கும் இடையே பாலங்களைக் கட்டுபவராக இருக்கிறார் எனக் கூறினார்.
நமக்கிடையேயான உரையாடல், அனைத்து மக்களையும் இணைக்கும் பாலங்களைக் கட்டுவதற்கு உதவ வேண்டுமென்ற திருத்தந்தை, கடவுளை மறந்து மக்களுக்கு இடையே பாலங்களைக் கட்ட இயலாது என்றும் கூறினார்.
பொருளாதார மற்றும் ஆன்மீக வறுமையை ஒழிக்கவும், அமைதியைக் கட்டியெழுப்பவும், உறவுப்பாலங்களை உருவாக்கவும் இங்குள்ள நாடுகள் முயற்சிக்க வேண்டுமெனத் தான் விரும்புவதாக, அரசியல் தூதர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
முஸ்லீம்களுடன் உரையாடலை ஆழப்படுத்தவும், வறுமையை அகற்றவும் நாடுகள் உழைக்குமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், தான் பிரான்சிஸ் என்ற பெயரைத் தெரிந்துகொண்டதன் பொருளையும் விரிவாக விளக்கினார்.
2. திருத்தந்தை பிரான்சிஸ், ஈராக்குக்குத் திருப்பயணம் மேற்கொள்ள முதுபெரும் தலைவர் முதலாம் இரபேல் அழைப்பு
மார்ச்,22,2013. அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களும் ஈராக்குக்குத் திருப்பயணம் மேற்கொள்ள வேண்டுமென்ற
தனது ஆவலைத் தெரிவித்துள்ளார் கல்தேய வழிபாட்டுமுறையின் முதுபெரும் தலைவர்
முதலாம் இரபேல்.
புனித பிரான்சிஸ், கீழை நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு சுல்தான் Malik al-Kamil என்பவரைச் சந்தித்தது போல, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும்,
ஈராக்குக்குத் திருப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள சிறுபான்மை கிறிஸ்தவ
சமூகத்தை விசுவாசத்தில் உறுதிப்படுத்த வேண்டுமென்று கூறினார் முதுபெரும்
தலைவர் முதலாம் இரபேல்
இவ்வியாழனன்று
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் திருப்பீடத்தில் தனியே சந்தித்துப்
பேசியபோது இந்தத் தனது ஆவலைத் திருத்தந்தையிடம் முன்வைத்ததாகவும், அவரும் மகிழ்ச்சியோடு அதை ஏற்றதாகவும் நிருபர்களிடம் கூறினார் முதுபெரும் தலைவர் முதலாம் இரபேல்
3. Pérezடம் திருத்தந்தை பிரான்சிஸ் : சர்வாதிகாரிகளால் ஏற்படுத்தப்பட்ட அழிவைச் சீர்செய்ய வேண்டும்
மார்ச்,22,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனக்காகவும், தனது திருத்தந்தை பணிக்காகவும் செபிக்குமாறு கேட்டுக்கொண்டதாக, அர்ஜென்டினா நாட்டு மனித உரிமை ஆர்வலரும், நொபெல் அமைதி விருது பெற்றவருமான Adolfo Pérez Esquivel கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் தனியே சந்தித்துப் பேசிய பின்னர் நிருபர்களுக்குப் பேட்டியளித்த Pérez,
சர்வாதிகாரிகளால் ஏற்படுத்தப்பட்ட அழிவைச் சீர்செய்ய வேண்டும் மற்றும்
உண்மையிலும் நீதியிலும் முன்னோக்கி நடக்க வேண்டும் என்று திருத்தந்தை
தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார்.
நற்செய்திக்காக உயிரை அளித்த மறைசாட்சிகளின் வாழ்வு எவ்வளவு அழகானது என்று திருத்தந்தை பிரான்சிஸ் தன்னிடம் கூறியதாகவும் Pérez கூறினார்.
மேலும், 1970களில் அர்ஜென்டினாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்றபோது அருள்தந்தையாக இருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, சர்வாதிகாரி Rafael Videlaவுடன் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் Pérez தெரிவித்தார்.
இதற்கிடையே, அர்ஜென்டினாவின் சர்வாதிகார ஆட்சியின்போது தான் கடத்தப்பட்டதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எவ்விதத்திலும் பொறுப்பில்லை என்று அருள்திரு Francisco Jalics கூறியுள்ளார்.
4. முதுபெரும் தலைவர் Sabbah : பெரிய தலைவர்களின் வருகை புனிதபூமியின் நிலைமையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை
மார்ச்,22,2013. உலகின் அனைத்துப் பெரிய தலைவர்களும் புனிதபூமிக்கு வருகை தந்து மக்களைப் பார்வையிடுகிறார்கள், ஆனால் அவர்களின் வருகை புனிதபூமியின் நிலைமையில் எவ்வித மாற்றத்தையும் கொண்டுவரவில்லை என்று எருசலேமின் முன்னாள் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தலைவர் Michel Sabbah குறை கூறினார்.
இந்நாள்களில் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் பராக் ஒபாமா, இஸ்ரேல், பாலஸ்தீனம், ஜோர்டன் ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருவது குறித்து Fides செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த முதுபெரும் தலைவர் Sabbah இவ்வாறு கூறினார்.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனாவுக்கும் இடையே இடம்பெற்றுவரும் சண்டையைப் பொருத்தவரை, வெளிச்சக்திகளால் எவ்வித மாற்றத்தையும் கொண்டுவர இயலாது என்று முதுபெரும் தலைவர் Sabbah தெரிவித்தார்.
பனித வாரம் தொடங்கவிருப்பது குறித்தும் பேசிய அவர், எருசலேமிலுள்ள புனித இடங்களுக்கு, பாலஸ்தீனக் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் எளிதாகச் செல்ல இயலாத நிலை இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
5. உயிர்ப்புப் பெருவிழா, விடுமுறையாகக் கடைப்பிடிக்கப்படுமாறு இந்திய ஆயர்கள் வேண்டுகோள்
மார்ச்,22,2013. மார்ச் 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா விடுமுறையாகக் கடைப்பிடிக்கப்படுமாறு இந்திய ஆயர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வரிசெலுத்துவோருக்கு மார்ச் 31ம் தேதியை கடைசி கெடு நாளாக மத்திய அரசு அறிவித்திருப்பதை முன்னிட்டு, அரசுக்கு இவ்வேண்டுகோளை முன்வைத்துள்ளார் இந்திய ஆயர் பேரவையின் பொதுச்செயலர் பேராயர் ஆல்பர்ட் டி சூசா.
கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா, கிறிஸ்தவ மதத்துக்கு மிக முக்கியமான மற்றும் மைய விழா என்று கூறி, இந்தியாவிலுள்ள கிறிஸ்தவ சமூகத்தைப் புண்படுத்தாத வகையில் அரசு நடந்து கொள்ளுமாறு கேட்டுள்ளார் பேராயர் டி சூசா.
6. Zimbabwe ஆயர் பேரவை : குடிமக்களுக்கு அமைதியும் சகிப்புத்தன்மையும் தேவை
மார்ச்,22,2013. Zimbabwe நாட்டில் இவ்வாண்டின் பாதியில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தல், அந்நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த 1980ம் ஆண்டின் தேர்தலைப் போன்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று Zimbabwe கத்தோலிக்க ஆயர் பேரவை கூறியுள்ளது.
Zimbabwe நாடு பொதுத்தேர்தலுக்குத் தயாரித்துவரும் இவ்வேளையில் அறிக்கை வெளியிட்டுள்ள அந்நாட்டு ஆயர் பேரவை, Zimbabweல் அமைதியும், அரசியல் சகிப்புத்தன்மையும் தேவை என்று கூறியுள்ளது.
இதற்கிடையே, Zimbabweவில் இவ்வாண்டில் இடம்பெறவிருக்கும் தேர்தல்கள், சுதந்திரமாகவும் நீதியுடனும் நடைபெற்றால், அந்நாடு இழந்துள்ள பன்னாட்டுச் சமூகத்தின் நன்மதிப்பை மீண்டும் பெறமுடியும் என்று பல அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
Zimbabweவின்
அரசியல் அமைப்பின்படி அரசுத்தலைவரின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள்.
அப்பதவிக்காலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம். ஆயினும், 1980ம் ஆண்டிலிருந்து ஆட்சியிலிருக்கும் 89 வயதாகும் முகாபே, மீண்டும் இப்பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார் என ஊடகங்கள் கூறுகின்றன.
7. இயேசுவில் நம்பிக்கை இழப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து ஆங்லிக்கன் பேராயர் Welby எச்சரிக்கை
மார்ச்,22,2013.
மக்களனைவரும் ஒருவர் ஒருவருக்குப் பாதுகாவலர்களாக இருக்குமாறு
அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளால்
ஈர்க்கப்பட்டு, கான்டர்பரியின் புதிய ஆங்லிக்கன் பேராயர் Justin Welby அவர்களும், இப்பூமியில் இறைமக்கள் சமுதாயத்தைக் கட்டியெழுப்புமாறு தனது சபையினரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இங்கிலாந்தின் கான்டர்பரியின் பேராயராக இவ்வியாழனன்று பொறுப்பேற்றுள்ள பேராயர் Justin Welby, தனது பணியேற்பு திருவழிபாட்டு நிகழ்வில் ஆற்றிய உரையில், கடவுளின் அதிகாரத்தின்கீழ் மட்டுமே, நாம் அனைவரும் கனவு காணும், முழுவதும் மனிதம் நிறைந்த ஒரு சமுதாயமாக நாம் மாற முடியும் என்று கூறினார்.
இயேசுவில் நம்பிக்கை இழப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்தும் எச்சரித்தார் பேராயர் Welby.
உலகின் ஏறக்குறைய 7 கோடியே 70 இலட்சம் ஆங்லிக்கன் கிறிஸ்தவர்களின் தலைவராகப் பொறுப்பேற்ற இந்நிகழ்வில் பிரிட்டன் பிரதமர் David Cameron, இளவரசர் சார்லஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும், ஆங்லிக்கன் பேராயர் Justin Welby அவர்களின் இப்பணியேற்பு நிகழ்வையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
8. உலகின் காடுகள் பாதுகாக்கப்படுமாறு ஐ.நா. பொதுச்செயலர் அழைப்பு
மார்ச்,22,2013. காடுகள் அழிக்கப்படுவதையும், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதையும் நிறுத்தி, சுற்றுச்சூழலைச் சார்ந்து வாழும் மக்களின் வாழ்வுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுமாறு அரசுகள், வணிகர்கள், மற்றும் பொதுமக்கள் சமுதாயத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.
மார்ச்,21, இவ்வியாழனன்று
முதல் அனைத்துலக காடுகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு
வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ள பான் கி மூன், உலகின் மூன்றில் ஒரு பகுதியாக இருக்கும் காடுகள் நமது சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழலுக்கு விலைமதிப்பில்லாத நன்மைகளை வழங்குகின்றன என்று கூறியுள்ளார்.
இவ்வுலகின் விலங்கினங்கள், தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்களில் பாதிக்கும் மேற்பட்டவைகளுக்கு காடுகள் வாழ்விடமாக இருக்கின்றன எனவும், இரண்டாயிரத்துக்கு
மேற்பட்ட பழங்குடி இனக் கலாச்சாரங்கள் உட்பட ஏறக்குறைய 160 கோடி மக்கள்
தங்களது வாழ்வுக்குக் காடுகளையேச் சார்ந்துள்ளனர் எனவும் பான் கி மூன்
கூறியுள்ளார்.
உலகில்
கிடைக்கும் சுத்தமான தண்ணீரில் நான்கில் ஒரு பகுதி காடுகளில் கிடைக்கின்றன
என்று தனது செய்தியில் குறிப்பிட்டுள்ள பான் கி மூன், நில அரிப்பு, நிலச்சரிவு, சுனாமி, புயல் ஆகியவற்றினின்று காடுகள் மக்களைக் காப்பாற்றுகின்றன என்றும், ஆண்டுதோறும் ஏறக்குறைய ஒரு கோடியே 30 இலட்சம் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment