1. Canterbury பேராயர் Justin Welby அவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்த்துச் செய்தி
2. ஆங்கலிக்கன் பேராயர் Welbyயின் முயற்சிகள் பெருமளவு அறுவடையை வழங்கவேண்டும் - முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் வாழ்த்துச் செய்தி
3. இலண்டனில் Canterbury பேராயர் Justin Welby அவர்கள் தலைமைப் பொறுப்பேற்கும் விழா
4. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் கொண்டாடப்படும் 28வது உலக இளையோர் நாள்
5. புனித வியாழனன்று இளம் கைதிகள் இல்லத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் "இறுதி இரவுணவுத் திருப்பலி"
6. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வடிவில், இறைவன் நமக்கு நல்லதொரு ஆயரை வழங்கியுள்ளார் - அகில உலக கத்தோலிக்கப் பெண்கள் அமைப்பு
7. திருத்தந்தைக்கு Buenos Aires நகரைச் சேர்ந்த San Lorenzo கால்பந்தாட்டக் குழுவின் சீருடை
8. புனிதபூமி கத்தோலிக்க நீதி, அமைதிப் பணிக்குழு அமெரிக்க அரசுத்தலைவர் ஒபாமாவுக்கு அனுப்பியுள்ள செய்தி
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. Canterbury பேராயர் Justin Welby அவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்த்துச் செய்தி
மார்ச்,21,2013. மேய்ப்புப்பணி என்பது இயேசு கிறிஸ்துவின் நற்செய்திக்குப் பிரமாணிக்கமாக இருப்பது, அத்தகையப் பொறுப்பை ஏற்கும் தங்களுக்கு என் செபங்களை உறுதியளிக்கிறேன் என்ற வார்த்தைகள் அடங்கிய வாழ்த்துச் செய்தியொன்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Canterbury பேராயர் Justin Welby அவர்களுக்கு இவ்வியாழனன்று அனுப்பி வைத்தார்.
மார்ச் 21, இவ்வியாழனன்று Canterbury பேராயராகவும், இங்கிலாந்து கிறிஸ்தவ சபையின் தலைவராகவும் பொறுப்பேற்கும் ஆங்கலிக்கன் பேராயர் Welby அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் தன் வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார்.
மார்ச் 13ம் தேதி தான் திருத்தந்தையாகத் தெரிவு செய்யப்பட்டபோது தனக்கு பேராயர் Welby அனுப்பிய வாழ்த்துக்களுக்கு நன்றிபகர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ், தொடர்ந்து தனக்காகச் செபிக்கும்படியும் இச்செய்தியில் கூறியுள்ளார்.
கத்தோலிக்கத் திருஅவையிலும், ஆங்கலிக்கன் சபையிலும் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் இடையே இதுவரை நிலவி வந்த நல்லுறவு வளர வேண்டும் என்றும், விரைவில் பேராயர் Welby அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பை, தான் எதிர்நோக்கியிருப்பதாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
2. ஆங்கலிக்கன் பேராயர் Welbyயின் முயற்சிகள் பெருமளவு அறுவடையை வழங்கவேண்டும் - முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் வாழ்த்துச் செய்தி
மார்ச்,21,2013. “உங்களுக்காக நாங்கள் வேண்டும் பொழுதெல்லாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம்” (கொலோ. 1:3) என்ற புனித பவுலடியாரின் வார்த்தைகளுடன் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் Canterbury பேராயர் Justin Welby அவர்களுக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.
2013ம்
ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி 16ம் பெனடிக்ட் அவர்கள் திருத்தந்தையாக இருந்த
வேளையிலேயே எழுதப்பட்ட இச்செய்தி இவ்வியாழன்று அனுப்பிவைக்கப்பட்டது.
கத்தோலிக்கர்களுக்கும், ஆங்கலிக்கன் சபையினருக்கும் இடையே அண்மைய ஆண்டுகளில் உருவாகியுள்ள உரையாடல் முயற்சிகளையும், கூட்டு முயற்சிகளையும் தன் செய்தியில் நினைவு கூர்ந்துள்ள முன்னாள் திருத்தந்தை, செறிவுமிகுந்த இந்தப் பாரம்பரியத்தை வளர்க்கும் ஆவலையும் வெளியிட்டுள்ளார்.
மேற்கத்திய கலாச்சாரத்தில் மதங்களுக்கு உள்ள முக்கியத்துவம் குறைந்துவரும் இக்காலக்கட்டத்தில் தன் தலைமைப்பணியை ஏற்கும் பேராயர் Welbyயின் முயற்சிகள் பெருமளவு அறுவடையை வழங்கவேண்டும் என்றும் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வாழ்த்தியுள்ளார்.
3. இலண்டனில் Canterbury பேராயர் Justin Welby அவர்கள் தலைமைப் பொறுப்பேற்கும் விழா
மார்ச்,21,2013. மார்ச் 21, இவ்வியாழன் பிற்பகல் மூன்று மணியளவில் Canterbury பேராயர் Justin Welby அவர்கள் தலைமைப் பொறுப்பேற்கும் விழா இலண்டனில் நடைபெற்ற தென்று ICN கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் கூறியது.
இளவரசர் சார்ல்ஸ், பிரதமர் David Cameron மற்றும் பேராயர் Vincent Nichols ஆகியோருடன் இன்னும் பல தலைவர்களும், ஏனைய மதத் தலைவர்களும் கலந்து கொண்ட இத்தருணத்தையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளனர்.
முன்னாள் ஆங்கலிக்கன் பேராயர் Rowan Williams 2012ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தலைமைப் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, பேராயர் Justin Welby, Canterbury பேராயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
597ம் ஆண்டு புனித அகுஸ்தின் இங்கிலாந்துக்குச் சென்றபோது அவருடன் எடுத்துச்சென்ற விவிலியம் Canterbury பேராலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த விவிலியத்தின் மீது கைகளை வைத்து, ஆங்கலிக்கன் சபையின் தலைமைப் பேராயர்கள் உறுதிமொழி எடுப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
4. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் கொண்டாடப்படும் 28வது உலக இளையோர் நாள்
மார்ச்,21,2013. மார்ச் 24ம் தேதி, குருத்தோலை ஞாயிறன்று கொண்டாடப்படும் 28வது உலக இளையோர் நாள், “நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்” (மத்.28,19) என்ற மையக்கருத்துடன் கொண்டாடப்படும்.
இந்நாளையொட்டி, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் பகல் 9.30 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில், நடைபெறும் குருத்தோலை பவனியிலும், திருப்பலியிலும் இளையோர் பெருமளவில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இப்புதனன்று
காலை திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்த
கிறிஸ்தவரல்லாத பிற மதங்களின் பிரதிநிதிகள் குறித்த பட்டியல் ஒன்று
வெளியிடப்பட்டுள்ளது.
பல்வேறு மதங்களைச் சார்ந்த 24 பிரதிநிதிகள் அல்ஜீரியா, சிரியா, பெல்ஜியம், இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய பல நாடுகளிலிருந்தும் வந்திருந்தனர்.
இஸ்லாமியர் 9 பேர், புத்த மதத்தினர் 10 பேர், சமண மதத்தவர் ஒருவர், சீக்கிய மதத்தினர் இருவர் ஆகியோருடன், பெல்ஜியம் நாட்டில் உள்ள சைவ சித்தாந்த உலக அவையின் தலைவர் சுவாமி ஜீவன்முக்தா கணபதி, இந்து மதத்தின் பிரதிநிதியாக இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
5. புனித வியாழனன்று இளம் கைதிகள் இல்லத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் "இறுதி இரவுணவுத் திருப்பலி"
மார்ச்,21,2013. மார்ச் 28ம் தேதி, புனித
வியாழனன்று மாலை 5 மணியளவில் உரோம் நகரில் உள்ள இளம் கைதிகள் இல்லத்தில்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் "இறுதி இரவுணவுத் திருப்பலியை"
நிறைவேற்றுவார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.
புனித
வியாழன் காலையில் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் புனித எண்ணெய்
அர்ச்சிக்கும் திருப்பலியை நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாலையில் இளம் கைதிகளின் பாதங்களைக் கழுவி, அவர்களுக்குத் திருப்பலி நிகழ்த்துவார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Buenos Airesன் பேராயராகப் பணியாற்றிய ஒவ்வோர் ஆண்டும், புனித வியாழன் திருப்பலிகளை மருத்துவமனைகள், சிறைகள், ஏழைகள் தங்கும் சேரிகள் ஆகிய இடங்களில் ஆற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் 2007ம் ஆண்டு, புனித
யோசேப்பு அவர்களின் திருநாளுக்கு முந்திய நாள் மார்ச் 18ம் தேதி இளம்
கைதிகள் தங்கியிருந்த இதே சிறைக்குச் சென்று அங்குள்ள சிற்றாலயத்தில்
திருப்பலி நிகழ்த்தியுள்ளார்.
6. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வடிவில், இறைவன் நமக்கு நல்லதொரு ஆயரை வழங்கியுள்ளார் - அகில உலக கத்தோலிக்கப் பெண்கள் அமைப்பு
மார்ச்,21,2013. நாம் ஒரு வரலாற்று நிகழ்வுக்குச் சாட்சிகளாய் உள்ளோம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வடிவில், இறைவன் நமக்கு நல்லதொரு ஆயரை வழங்கி நம்மை ஆசீர்வதித்துள்ளார் என்று அகில உலக கத்தோலிக்கப் பெண்கள் அமைப்பு கூறியுள்ளது.
திருத்தந்தை தேர்ந்துள்ள பெயரே அமைதியையும், படைப்பு அனைத்தின் மீது அக்கறையையும் உறுதி செய்கிறது என்று கூறியுள்ள இவ்வமைப்பின் தலைவர்கள், புதிய திருத்தந்தைக்கு தங்கள் முழு ஆதரவும் உண்டு என்று உறுதி அளித்துள்ளனர்.
66 நாடுகளில் பணிபுரியும் 50 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அகில உலக கத்தோலிக்கப் பெண்கள் அமைப்பு, வறுமை ஒழிப்பு, உயிர்களின் பாதுகாப்பு ஆகிய பணிகளில் திருத்தந்தைக்கு முழு ஆதரவு அளிக்கும் என்று உறுதி கூறியுள்ளது.
மனித வர்த்தகம் உட்பட்ட பல்வேறு வன்முறைகளுக்குப் பலியாகும் பெண்களுக்காக திருத்தந்தை பிரான்சிஸ், பேராயராகப் பணியாற்றிய காலத்தில் குரல் கொடுத்துள்ளார் என்று கூறும் இவ்வமைப்பினர், தொடர்ந்து பெண்களின் அனைத்து நலன்களிலும் திருத்தந்தை அக்கறை செலுத்துவார் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளனர்.
7. திருத்தந்தைக்கு Buenos Aires நகரைச் சேர்ந்த San Lorenzo கால்பந்தாட்டக் குழுவின் சீருடை
மார்ச்,21,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அர்ஜென்டினா நாட்டில் பணிபுரிந்த வேளையில் ஆர்வமாய் விரும்பிய San Lorenzo கால்பந்தாட்டக் குழுவினர், திருத்தந்தையின் பெயர் பொறித்த தங்கள் குழுவின் சீருடை ஒன்றை அவருக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளனர் என்று CNA கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
Buenos Aires நகரைச் சேர்ந்த San Lorenzo கால்பந்தாட்டக் குழுவுடன் தன் குருத்துவப் பணி காலத்திலிருந்தே தொடர்பு கொண்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ், 2008ம் ஆண்டு இக்குழு தன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியபோது, பேராயராக அவர்களுக்கு சிறப்புத் திருப்பலி ஒன்றை ஆற்றினார்.
தாங்கள் இலத்தீன் அமெரிக்க நாட்டின் முதல் திருத்தந்தை, இயேசு சபையின் முதல் திருத்தந்தை என்பது மட்டுமல்ல, தாங்கள் முதல் San Lorenzo குழுவின் திருத்தந்தை என்ற செய்தியுடன் இந்தச் சீருடை அவருக்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சீருடையில் பிரான்சிஸ் என்ற பெயர் இஸ்பானிய மொழியில் Francisco என்று பொறிக்கப்படும்.
8. புனிதபூமி கத்தோலிக்க நீதி, அமைதிப் பணிக்குழு அமெரிக்க அரசுத்தலைவர் ஒபாமாவுக்கு அனுப்பியுள்ள செய்தி
மார்ச்,21,2013. 46 ஆண்டுகளாக ஆக்ரமிக்கப்பட்டப் பகுதிகளில் வாழும் பாலஸ்தீன மக்களும், அங்கு வாழும் கிறிஸ்தவர்களும் மிகுந்த துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என்று புனிதபூமி கத்தோலிக்க நீதி, அமைதிப் பணிக்குழு அமெரிக்க அரசுத்தலைவர் ஒபாமாவுக்கு செய்தியொன்றை அனுப்பியுள்ளது என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
மார்ச் 20ம் தேதி, இப்புதனன்று அமெரிக்க அரசுத்தலைவர் ஒபாமா முதல் முறையாக இஸ்ரேல், பாலஸ்தீன நாடுகளுக்கு மேற்கொண்டுள்ள பயணம், பாலஸ்தீன மக்களின் துன்பங்களைத் தீர்க்கும் ஒரு வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் இச்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
இஸ்ரேல், பாலஸ்தீன நாடுகளுக்கிடையே பல ஆண்டுகள் நிலவிவரும் போராட்டங்களால் பிரிக்கப்பட்டிருக்கும் குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணையவும், அப்பகுதியில்
பிறக்கும் குழந்தைகள் எவ்வித அடையாளமும் இன்றி வாழும் அவல நிலை தீரவும்
அரசுத்தலைவர் ஒபாமா முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று இச்செய்தியில்
விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவ
மறையின் ஆணிவேராக விளங்கும் புனிதபூமிப் பகுதியிலிருந்து கிறிஸ்தவர்கள்
பெருமளவு வெளியேறுவது நிறுத்தப்பட வேண்டுமென்றும் இச்செய்தியில்
விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
அரசுத்தலைவர் ஒபாமா இவ்வியாழனன்று எருசலேம் அகில உலக அரங்கில் உரையாற்றினார் என்றும், இவ்வெள்ளியன்று பெத்லகேமில் உள்ள இயேசு பிறப்புக் கோவிலுக்குச் சென்றபின், பாலஸ்தீனத் தலைவர் Mahmoud Abbas அவர்களை Ramallahவில் சந்திக்கிறார் என்றும் MISNA செய்திக்குறிப்பொன்று கூறுகின்றது.
No comments:
Post a Comment