Saturday, 16 March 2013

Catholic News in Tamil - 16/03/13

1. திருத்தந்தை பிரான்சிஸ் : இந்நவீன காலத்துக்கு ஊடகங்களின் பங்களிப்பு முக்கியம்

2. ஊடகவியலாளர் குறித்து திருத்தந்தையிடம் பேராயர் Celli

3. மார்ச் 17-24 வரையுள்ள திருத்தந்தையின் நிகழ்ச்சித் திட்டங்கள்

4. 1054ம் ஆண்டுக்குப் பின்னர் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையின் முதுபெரும் தலைவர், திருத்தந்தையின் பணியேற்புத் திருப்பலியில் முதன்முறையாக கலந்து கொள்ளவுள்ளார்

5. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணியேற்புத் திருப்பலியில் தாய்வான் அரசுத்தலைவர்

6. காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவர் : திருத்தந்தை பிரான்சிஸ், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஓர் ஆசீர்வாதமான தெரிவு

7. கல்தேயமுறை முதுபெரும் தலைவர் : திருத்தந்தை பிரான்சிஸ், உண்மையான அரபு வசந்தத்தின் நம்பிக்கையாக இருக்கிறார்

8. அனைத்துலகத் தலைவர்கள் திருத்தந்தைக்கு வாழ்த்து

9. அர்ஜென்டினா சர்வாதிகாரியோடு புதிய திருத்தந்தைக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை, நொபெல் அமைதி விருதாளர்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : இந்நவீன காலத்துக்கு ஊடகங்களின் பங்களிப்பு முக்கியம்

மார்ச்,16,2013. இந்நவீன காலத்தில் ஊடகங்களின் பங்களிப்பு எவ்வாறு தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்பதையும், இன்றைய சமுதாயத்தின் நிகழ்வுகளை எடுத்துச் சொல்வதற்கு ஊடகங்கள் எவ்வளவு இன்றியமையாதவை என்பதையும் விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட ஊடகவியலாளரை இச்சனிக்கிழமை காலை 11 மணிக்கு வத்திக்கானிலுள்ள திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், இந்நாள்களில் ஊடகவியலாளர் ஆற்றியுள்ள பணிகளுக்கு நன்றியும் தெரிவித்தார்.
திருஅவை, இவ்வுலகின் போக்குக்குப் பதில் சொல்ல முடியாது, ஏனெனில் அதன் இயல்பு அரசியல் சார்ந்தது அல்ல, மாறாக அது ஆன்மீகம் சார்ந்தது என்றும் விளக்கிய திருத்தந்தை, திருஅவையின் மையமாக இருப்பவர் கிறிஸ்துவே, பேதுருவின் வழிவருபவர் அல்ல, கிறிஸ்து இன்றி பேதுருவும் திருஅவையும் வாழ முடியாது என்றும் கூறினார்.
திருஅவையை அதன் புண்ணியங்கள் மற்றும் பலவீனங்களோடு ஏற்க வேண்டுமென்றும், அதன் உண்மை, அழகு, நன்மைத்தனம் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறும் உலக ஊடகவியலாளரைக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
அசிசி நகர் புனித பிரான்சிசின் பெயரைத் தான் தேர்ந்து கொண்டது குறித்தும் விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ், புனித பிரான்சிஸ் ஏழ்மை, அமைதி, படைப்பின்மீது பற்று ஆகியவற்றைக் கொண்டிருந்தார் எனவும் கூறினார் திருத்தந்தை.
ஏழைகளுக்கான ஏழைத் திருஅவையைத் தான் விரும்புவதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.


2. ஊடகவியலாளர் குறித்து திருத்தந்தையிடம் பேராயர் Celli

மார்ச்,16,2013. இச்சனிக்கிழமை வத்திக்கானில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது முதலில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசிய, திருப்பீட சமூகத்தொடர்பு அவைத் தலைவர் பேராயர் Claudio Maria Celli, வத்திக்கானில் இந்நாள்களில் நிகழ்ந்த நிகழ்வுகளை பொது மக்களுக்குக் கொண்டு செல்வதில் ஊடகவியலாளர் மீண்டும் நல்லதொரு பணியைச் செய்துள்ளனர் என்று கூறினார்.
உலகத்தினர் மிகுந்த ஆர்வத்தோடும், நம்பிக்கையோடும், அக்கறையோடும் இந்நாள்களின் நிகழ்வுகளைப் பார்த்தனர் என்றும், ஊடகத் துறையினர் சுதந்திரத்துடனும், தங்களது தொழில் திறமைகளுடனும் இந்நாள்களின் அனைத்து நிகழ்வுகளையும் வெளியிட்டனர் என்றும் பேராயர் Celli எடுத்துச் சொன்னார்.
81 நாடுகளைச் சார்ந்த ஊடகவியலாளர் இங்கு உள்ளனர் என்றுரைத்த பேராயர், இச்சந்திப்பில் திருத்தந்தையின் வார்த்தைகள், ஊடகவியலாளரின் உண்மையிலும் தேடலிலுமான வாழ்க்கையில் சுடர்விடும் என்பதையும் தெரிவித்தார்.    


3. மார்ச் 17-24 வரையுள்ள திருத்தந்தையின் நிகழ்ச்சித் திட்டங்கள்

மார்ச்,16,2013. மார்ச் 13 இப்புதன் இரவு 7.05 மணிக்குத் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ்,
இஞ்ஞாயிறு காலை 10 மணிக்கு வத்திக்கான் புனித அன்னா ஆலயத்தில் திருப்பலி நிகழ்த்துதல்
பகல் 12 மணிக்கு திருத்தந்தையின் அறையிலிருந்து மூவேளை செப உரை வழங்குதல் 
18ம் தேதி திங்களன்று அர்ஜென்டினா அரசுத்தலைவர் Christina Kirchner சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்தல்
19ம் தேதி செவ்வாய் காலை 9.30 மணிக்கு திருத்தந்தையின் பணியேற்பு திருப்பலி நிகழ்த்துதல்
20ம் தேதி புதனன்று பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளையும்,
22ம் தேதி வெள்ளியன்று திருப்பீடத்துக்கான அரசியல் தூதர்களையும்   சந்தித்தல்
23ம் தேதி சனிக்கிழமையன்று ஹெலிகாப்டரில் காஸ்தெல் கந்தோல்ஃபோ சென்று முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைச் சந்தித்தல்
24ம் தேதி ஞாயிறன்று வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் குருத்தோலை ஞாயிறு திருவழிபாட்டை நிகழ்த்துதல்
ஆகியவை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வரும்வார நிகழ்ச்சித் திட்டங்கள் ஆகும். 


4. 1054ம் ஆண்டுக்குப் பின்னர் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையின் முதுபெரும் தலைவர், திருத்தந்தையின் பணியேற்புத் திருப்பலியில் முதன்முறையாக கலந்து கொள்ளவுள்ளார்

மார்ச்,16,2013. கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையின் முதுபெரும் தலைவர் முதலாம் பர்த்தலோமெயோ, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணியேற்புத் திருப்பலியில் கலந்து கொள்வார் என்று கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையின் முதுபெரும் தலைவரின் அலுவலகம் அறிவித்துள்ளது.
ஆர்த்தடாக்ஸ் சபை, கத்தோலிக்கத் திருஅவையிலிருந்து பிரிந்த 1054ம் ஆண்டுக்குப் பின்னர், கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையின் முதுபெரும் தலைவர் ஒருவர், கத்தோலிக்கத் திருஅவையின் தலைவரான திருத்தந்தையின் பணியேற்பு விழாவில் கலந்து கொள்ளவிருப்பது இதுவே முதன் முறையாக இருக்கும் என்றும் அவ்வலுவலகம் தெரிவித்துள்ளது.
உரோமன் கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கிடையேயான உரையாடல் அவையின் துணைத் தலைவர் Ioannis Zizioulas, அர்ஜென்டினா ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவர் Tarassios இத்தாலியின் ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவர் Gennadios உட்பட ஆர்த்தடாக்ஸ் சபையின் பிரதிநிதிகள் குழுவுடன், வத்திக்கானில் இடம்பெறவிருக்கின்ற வருகிற செவ்வாய் நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கிறார் முதுபெரும் தலைவர் முதலாம் பர்த்தலோமெயோ.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் காலத்தில் கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கிடையேயான உரையாடல் முழுவீச்சுடன் இடம்பெறத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


5. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணியேற்புத் திருப்பலியில் தாய்வான் அரசுத்தலைவர்

மார்ச்,16,2013. வருகிற செவ்வாயன்று வத்திக்கானில் இடம்பெறவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணியேற்புத் திருப்பலியில் கலந்து கொள்ளவிருக்கிறார் தாய்வான் அரசுத்தலைவர் Ma Ying-jeou.
இத்தகவலை உறுதி செய்து அறிக்கை வெளியிட்ட தாய்வான் வெளியுறவு அமைச்சகம், தாய்வான் அரசுத்தலைவர் வத்திக்கானுக்கு வருவது இது இரண்டாவது தடவையாக இருக்கும் என்று கூறியுள்ளது.
ஐரோப்பாவில் வத்திக்கான் மட்டுமே தாய்வானுடன் அரசியல் உறவைக் கொண்டிருக்கிறது என்பது  குறிப்பிடத்தக்கது.


6. காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவர் : திருத்தந்தை பிரான்சிஸ், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஓர் ஆசீர்வாதமான தெரிவு

மார்ச்,16,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஓர் ஆசீர்வாதமான தெரிவு என்று சொல்லி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், அவரைத் தேர்ந்தெடுத்துள்ள கர்தினால்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாகக்  கூறியுள்ளார் எகிப்தின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தலைவர் 2ம் Tawadros.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குத் தனது தனிப்பட்ட வாழ்த்தைத் தெரிவிக்கும் தந்திச் செய்தியை அனுப்பியுள்ள முதுபெரும் தலைவர் 2ம் Tawadros, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பணி மூலம், கத்தோலிக்கத் திருஅவை உலகம் முழுவதும் வளர்ந்து, கிறிஸ்துவுக்குச் சான்று பகரட்டும் என வாழ்த்தியுள்ளார்.


7. கல்தேயமுறை முதுபெரும் தலைவர் : திருத்தந்தை பிரான்சிஸ், உண்மையான அரபு வசந்தத்தின் நம்பிக்கையாக இருக்கிறார்

மார்ச்,16,2013. அரபு வசந்தம் என்ற மக்கள் எழுச்சியைச் சந்தித்துள்ள கல்தேயமுறை திருஅவை, மத்திய கிழக்குக் கிறிஸ்தவர்கள் மற்றும் பிற நாடுகளுக்கு திருத்தந்தை பிரான்சிசின் தேர்தல் முக்கியமான நிகழ்வாக இருக்கின்றது என்று ஈராக்கின் கல்தேயமுறை முதுபெரும் தலைவர் பேராயர் லூயிஸ் முதலாம் இரபேல் சாக்கோ கூறினார்.
திருத்தந்தை பிரான்சிசின் சான்று பகரும் வாழ்வு, அரபு நாடுகளில் வாழும் மக்களை குளிர்காலத்திலிருந்து உண்மையான வசந்தத்திற்கு வழிநடத்திச் செல்லும் என்றும் முதுபெரும் தலைவர் முதலாம் இரபேல் கூறினார்.
திருத்தந்தை, தனது தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் கடந்த காலத்தில் இராணுவ சர்வாதிகார வன்முறை ஆட்சி உட்பட, வன்முறையையும் கடின வாழ்வையும் அனுபவித்துள்ளார் என்பதால், மாற்றத்தில் நம்பிக்கை வைப்பதற்கு இவரால் மக்களை ஊக்கப்படுத்த முடியும் என்றும் முதுபெரும் தலைவர் முதலாம் இரபேல் கூறினார்.
அர்ஜென்டினா நாட்டவரான இவரது தேர்தல் முடிவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது என்றும், இக்கட்டான நிலையிலுள்ள திருஅவையை நடத்திச் செல்வதற்குத் தூயஆவி இவரைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்றும் முதுபெரும் தலைவர் முதலாம் இரபேல் தெரிவித்தார்.


8. அனைத்துலகத் தலைவர்கள் திருத்தந்தைக்கு வாழ்த்து

மார்ச்.16,2013. திருத்தந்தை பிரான்சிஸ் கத்தோலிக்க விழுமியங்களுக்கும் ஏழைகள்மீதான கரிசனைக்கும் தன்னை அர்ப்பணித்திருப்ப்தைக் குறிப்பிட்டுத் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர் பல அனைத்துலகத் தலைவர்கள்.
பிரான்சிஸ் என்ற பெயரைத் தெரிவு செய்துள்ள அர்ஜென்டினாவின் Buenos Aires  கர்தினால் Jorge Mario Bergoglio அவர்களுக்கும், அனைத்துக் கத்தோலிக்கருக்கும் தனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ள ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன், ஐக்கிய நாடுகள் நிறுவனத்துக்கும், திருப்பீடத்துக்கும் இடையேயான ஒத்துழைப்பு தொடரும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
பல்சமய உரையாடலை ஊக்குவிப்பதில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் மரபுரிமையை திருத்தந்தை பிரான்சிசும் தொடர்வார் என்று தான் நம்புவதாகவும் ஐ.நா.பொதுச்செயலர் கூறியுள்ளார்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ், துணிச்சலும் வலிமையும் பெற வேண்டுமென்று வாழ்த்தியுள்ள ஐரோப்பிய பாராளுமன்றத் தலைவர் Martin Schulz, உலகின் கோடிக்கணக்கான மக்களுக்கு, வழிகாட்டுதலையும் தூண்டுதலையும் நம்பிக்கையையும் வழங்குகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.


9. அர்ஜென்டினா சர்வாதிகாரியோடு புதிய திருத்தந்தைக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை, நொபெல் அமைதி விருதாளர்

மார்ச்,16,2013. அர்ஜென்டினாவில் 1976ம் ஆண்டு முதல் 1983ம் ஆண்டுவரை இடம்பெற்ற இராணுவ சர்வாதிகாரியோடு புதிய திருத்தந்தை பிரான்சிஸ் எவ்விதத் தொடர்பும் கொண்டிருக்கவில்லை என்று, நொபெல் அமைதி விருதைப் பெற்றுள்ளவரும் மனித உரிமை ஆர்வலருமான Adolfo Perez Esquivel கூறினார்.
அர்ஜென்டினாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்ற கொடுங்கோல் ஆட்சியில் திருத்தந்தை பிரான்சிஸ் குருக்களைக் காப்பாற்றத் தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதை முன்னிட்டு இவ்வாறு கூறினார் மனித உரிமை ஆர்வலர் Adolfo Perez Esquivel.
மேலும், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு நம்பத்தகுந்தவை அல்ல என்றும், புதிய திருத்தந்தைமீது இப்போது இக்குற்றச்சாட்டுகளை வைப்பது அர்த்தமற்றது என்றும், அச்சமயத்தில் கர்தினால் ஹோர்ஹோ மாரியோ பெர்ஹோலியோ, கர்தினாலாக உயர்த்தப்படவில்லை, ஆயராகக்கூட இல்லை என்றும், திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறியுள்ளார்.
அர்ஜென்டினா நிருபர் ஒருவரால் முன்வைக்கப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டு, புதிய திருத்தந்தைக்கு எதிராக அரசியல்ரீதியாக அவரைக் களங்கப்படுத்த முயற்சிக்கும் செயல் என்று, திருப்பீடத்தின் இரண்டாவது பேச்சாளர் அருள்திரு Tom Rosica கூறினார்.
 

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...