1. திருத்தந்தை பிரான்சிஸ் : முதுமையின் ஞானத்தை இளையோருக்கு வழங்க வேண்டும்
2. திருத்தந்தை பிரான்சிஸ் : சிலுவையில் அறையுண்ட கிறிஸ்து இல்லாத திருஅவை வருந்ததக்க
நிறுவனமாக இருக்கும்
3. உரோம் யூதமத ராபிக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் கடிதம்
4. திருத்தந்தை பிரான்சிஸ் இன்னும் தனது எளிய பழைய வாழ்வுமுறையே பின்பற்றுகிறார்
5. கர்தினால் Vallini : திருத்தந்தை பிரான்சிஸ் வரவிருக்கும் ஆண்டுகளில் நற்செய்தியின்
வழிகளில் நம்மை வழிநடத்துவார்
6. கர்தினால் ஃபிலோனி : நற்செய்தி அறிவிப்புப்பணியை அப்போஸ்தலிக்க ஆர்வத்தோடு செய்ய
வேண்டுமென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்
7. அனைத்துலக கிறிஸ்தவ சபைகள் மன்றம் திருத்தந்தை பிரான்சிஸ்க்காகச் செபம்
8. அனைத்துலக நுகர்வோர் உரிமை தினம்
9. 10 கோடி மக்கள் பேசப்படும் மொழிகள்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : முதுமையின் ஞானத்தை இளையோருக்கு வழங்க வேண்டும்
மார்ச்,15,2013.
தனது பணியையும் கர்தினால்கள் அனைவரையும் திருஅவையின் அன்னையாகிய மரியாவின்
பாதுகாவலில் அர்ப்பணிக்கின்றேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
இவ்வெள்ளியன்று
காலை 11 மணிக்கு அனைத்துக் கர்தினால்களையும் வத்திக்கானின் கிளமெந்தினா
அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், திருஅவையின் அன்னையாகிய மரியாவின் பரிந்துரை மூலம் உயிர்த்த கிறிஸ்துவின் முகத்தைத் தியானிப்போம் என்று கூறினார்.
நாம் அனைவரும் செபத்தில் நிலைத்திருந்து, அன்னைமரியாவின் மகனின் குரலுக்குச் செவிசாய்த்து, நம் ஆண்டவரின் பிரசன்னத்துக்குச் சாட்சிகளாக இருப்போம் என்றும் கர்தினால்களிடம் கூறினார் திருத்தந்தை.
இங்குள்ள நம்மில் பாதிப்பேர் வயதானவர்கள், முதுமை வாழ்வு ஞானத்தின் இருப்பிடம் என்று சொல்வது எனக்குப் பிடிக்கும், எருசலேம் ஆலயத்தில் இயேசுவைச் சந்தித்த வயதான சிமியோன், அன்னா போன்று, வயதானவர்கள், வாழ்வில் தாங்கள் நடந்துவந்த பாதையில் ஞானத்தைப் பெற்றுள்ளனர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஞானம், வயதோடு பக்குவம் அடையும் நல்ல திராட்சை இரசத்தைப் போன்றது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், ஒரு ஜெர்மானியக் கவிஞர் சொன்னது போன்று, வயதான காலம், அமைதி மற்றும் செபத்தின் காலம், முதியவர்கள் தாங்கள் பெற்ற ஞானத்தை இளையோருக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இச்சந்திப்பின் முடிவில் ஒவ்வொரு கர்தினாலும் தனித்தனியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை முத்தமிட்டு வாழ்த்தினர்.
2. திருத்தந்தை பிரான்சிஸ் : சிலுவையில் அறையுண்ட கிறிஸ்து இல்லாத திருஅவை வருந்ததக்க நிறுவனமாக இருக்கும்
மார்ச்,15,2013.
கான்கிளேவ் அவையில் தன்னுடன் கலந்து கொண்ட 114 கர்தினால்களுடன் சேர்ந்து
சிஸ்டின் சிற்றாலயத்தில் இவ்வியாழன் மாலை 5 மணிக்குத் திருப்பலி நிகழ்த்தி
மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆயர்கள், குருக்கள், கர்தினால்கள், திருத்தந்தையர்
உட்பட ஒவ்வொரு விசுவாசியும் உண்மையான கிறிஸ்தவராக இருப்பதற்கு சிலுவையில்
அறையுண்ட கிறிஸ்துவை அறிவிக்க வேண்டுமென்று இம்மறையுரையில்
கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஆற்றிய இந்த முதல் மறையுரையில், திருச்சிலுவையின்றி நம் ஆண்டவரின் சீடர்களாக நாம் ஒருபோதும் இருக்க முடியாது என்பதை வலியுறுத்திக் கூறினார்.
நாம் விரும்பும் அளவுக்கு நடக்கலாம், பலவற்றைக் கட்டியெழுப்பலாம், ஆனால் நாம் இயேசு கிறிஸ்துவை அறிவிக்காவிட்டால், நாம் வருந்ததக்க, அரசு-சாரா பிறரன்பு நிறுவனமாக இருப்போம், கிறிஸ்துவின் மணமகளான திருஅவையாக இருக்கமாட்டோம் என்றும் திருத்தந்தை கூறினார்.
ஆண்டவரிடம் யார் செபிக்கவில்லையோ அவர் சாத்தானிடம் செபிக்கிறார் என்று Léon Bloy என்பவர் கூறியது எனது நினைவுக்கு வருகின்றது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், நாம் இயேசு கிறிஸ்துவை அறிவிக்கவில்லையென்றால், கடவுளற்ற உலகப்போக்கான, சாத்தானின் உலகை அறிக்கையிடுகிறோம் என்று கூறினார்.
3. உரோம் யூதமத ராபிக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் கடிதம்
மார்ச்,15,2013.
யூதர்களுக்கும் கத்தோலிக்கருக்கும் இடையேயான உறவுகள் மேம்படுவதற்கு
நிறையச் செய்ய முடியும் என்ற தனது நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ்.
கர்தினால் Jorge Mario Bergoglio திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி வாழ்த்துச் செய்தி அனுப்பிய உரோம் யூதமதத் தலைமை ராபி Riccardo Di Segni அவர்களுக்குப் பதில் அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், மார்ச் 19ம் தேதி திருத்தந்தையாகத் தான் பொறுப்பேற்கும் திருப்பலி இடம்பெறும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம்வல்ல
இறைவனின் பாதுகாவலில் நம்பிக்கை வைத்து இந்தப் பணியைச் செய்ய இயலும் என்று
தான் நம்புவதாகவும் திருத்தந்தை அதில் தெரிவித்துள்ளார்.
4. திருத்தந்தை பிரான்சிஸ் இன்னும் தனது எளிய பழைய வாழ்வுமுறையே பின்பற்றுகிறார்
மார்ச்,15,2013. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், உலகின் 120 கோடிக் கத்தோலிக்கரின் தலைவராக இருந்தாலும், தாழ்மையும்
எளிமையும் நிறைந்த தனது வழிகளையே தொடர்ந்து பின்பற்றி வருகிறார் என்று
திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி
இவ்வெள்ளியன்று நிருபர் கூட்டத்தில் கூறினார்.
தற்போது சாந்தா மார்த்தா இல்லத்தில் தங்கியிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ், சாப்பாட்டு மேஜைக்கு வந்தவுடன் மற்ற கர்தினால்கள் அமர்ந்திருக்கும் மேஜையில் காலியான இடத்தில் அமரவே விரும்புகிறார் என்றும், அவருக்கென ஒதுக்கப்ப்ட்டுள்ள இடத்திற்குச் செல்வதில் விருப்பம் காட்டவில்லை என்றும், அவ்வில்லத்தின் இயக்குனர் கூறியதாக, அருள்தந்தை லொம்பார்தி தெரிவித்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ், திருத்தந்தை தேர்தலுக்கு முன்னர் தங்கியிருந்த இல்லத்தில் தனது பொருள்களை எடுத்துவருவதற்கு இவ்வியாழன் காலையில் சென்றபோது, அங்குப்
பணி செய்கிறவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் குறித்து நலம்
விசாரித்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது எனவும் அருள்தந்தை
லொம்பார்தி கூறினார்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ், தான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அன்று இரவில் அர்ஜென்டினா திருப்பீடத் தூதர் பேராயர் Emil Paul Tscherrigயைத் தொலைபேசியில் அழைத்து, அர்ஜென்டினா விசுவாசிகள் தன்னை வாழ்த்துவதற்காக உரோமைக்குப் பயணம் செய்துவரவேண்டாம், மாறாக அப்பணத்தை ஏழைகளுக்கும், தேவையில் இருப்போருக்கும் கொடுக்குமாறு அனைத்து ஆயர்களிடமும் கூறுமாறுச் சொன்னார் எனவும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
5. கர்தினால் Vallini : திருத்தந்தை பிரான்சிஸ் வரவிருக்கும் ஆண்டுகளில் நற்செய்தியின் வழிகளில் நம்மை வழிநடத்துவார்
மார்ச்,15,2013. உலகின் 120 கோடிக் கத்தோலிக்கரின் தலைவராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து திருஅவைத் தலைவர்களும், பல அனைத்துலக நிறுவனங்களும், அமைப்புகளும், அரசுகளின் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
உரோம் மறைமாவட்ட ஆயராகிய திருத்தந்தையின் பதிலாளர் கர்தினால் Agostino Vallini வெளியிட்டுள்ள செய்தியில், உரோம் தலத்திருஅவை தனது ஆயரைப் பெறுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றது, வரவிருக்கும் ஆண்டுகளில் நற்செய்தியின் வழிகளில் நம்மை அவர் வழிநடத்துவார் என்று குறிப்பிட்டுள்ளார்.
திருத்தந்தை, அசிசியின் ஏழையான பிரான்சிஸின் பெயரைத் தெரிவுசெய்திருப்பது, ஒரு வலுவான செய்தியையும், அவரின் திருத்தந்தைப் பணியின் பாங்கையும் எடுத்துரைக்கின்றது என்றும் கூறியுள்ளார் கர்தினால் Vallini.
மேலும், கர்தினால் Giovanni Battista Re வெளியிட்டுள்ள செய்தியில், புதிய திருத்தந்தை, மக்களுக்கு மிக நெருக்கமாக இருப்பவர், சமூகப் பிரச்சனைகளை அதிகம் தெரிந்தவர் மற்றும் ஏழைகள்மீது மிகுந்த அக்கறை கொண்டவர் என்று கூறியுள்ளார்.
6. கர்தினால் ஃபிலோனி : நற்செய்தி அறிவிப்புப்பணியை அப்போஸ்தலிக்க ஆர்வத்தோடு செய்ய வேண்டுமென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்
மார்ச்,15,2013. நற்செய்தி அறிவிப்புப்பணியை அப்போஸ்தலிக்க ஆர்வத்தோடு செய்ய வேண்டுமென திருத்தந்தை பிரான்சிஸ் கூறியதாக, திருப்பீட நற்செய்தி அறிவிப்புப்பணிப் பேராயத் தலைவர் கர்தினால் Fernando Filoni கூறினார்.
சில நேரங்களில் நாம் களைப்படைந்திருந்தாலும் எப்போதும் ஆர்வத்தோடும் அன்போடும் நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்றும், தன்னலத்துக்கு இடம் கொடுக்கக் கூடாதென்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டதாக, கர்தினால் Filoni கூறினார்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் குறித்து கருத்து தெரிவித்த தென்னாப்ரிக்காவில் மறைப்பணியாற்றும் ஆயர் José Luis Gerardo Ponce de Leon, திருத்தந்தை பிரான்சிஸ் அந்த முதல் நாளில் மக்களிடம் தனக்காகச் செபிக்கச் சொன்னதும், அவரது மின்னஞ்சலில் அவ்வாறு கூறியிருப்பதும் அவரது தனிப்பண்பைக் காட்டுகின்றது என்று தெரிவித்தார்.
7. அனைத்துலக கிறிஸ்தவ சபைகள் மன்றம் திருத்தந்தை பிரான்சிஸ்க்காகச் செபம்
மார்ச்,15,2013. திருத்தந்தை பிரான்சிஸ், நீதி
மற்றும் அமைதியின் திருப்பணியை ஏற்கும் இவ்வேளையில் அவரது நல்ல உடல்நலம்
மற்றும் வலிமைக்காக அனைத்துக் கிறிஸ்தவ சபையினரும் செபிப்பதாகத்
தெரிவித்துள்ளார் WCC என்ற அனைத்துலக கிறிஸ்தவ சபைகள் மன்றத்தின் பொதுச் செயலர் பாஸ்டர் Olav Fykse Tveit.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தேர்தலையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள பாஸ்டர் Tveit, கத்தோலிக்கத் திருஅவையின் வாழ்வில் இத்தேர்தல் திருப்புமுனையாக இருந்தாலும், பிற கிறிஸ்தவ சபைகள் மற்றும் பிற மதத்தவர்மீதும் தாக்கத்தைக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
எளிமையான
வாழ்க்கைமுறையை வாழ்ந்து சமூகநீதி மற்றும் ஏழைகளை முன்னேற்றுவதில் தாகம்
கொண்டிருக்கும் திருஅவையின் இந்தத் தாழ்மையான பயணியோடு சேர்ந்து, தாங்களும் நீதி மற்றும் அமைதியைத் தேடும் வழியில் தங்களை அர்ப்பணிப்பதாகவும் WCC மன்றத்தின் பொதுச் செயலர் கூறியுள்ளார்.
கத்தோலிக்கத் திருஅவையோடு தாங்கள் தொடர்ந்து ஒத்துழைக்கவிருப்பதாகவும், வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொரியக் குடியரசின் Busanல் இடம்பெறவிருக்கும் WCCன் பொதுப்பேரவையில் கத்தோலிக்கத் திருஅவையின் பிரசன்னத்தைத் தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவ்வறிக்கை கூறுகிறது.
8. அனைத்துலக நுகர்வோர் உரிமை தினம்
மார்ச்,15,2013. நுகர்வோரின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 15ம் தேதி, அனைத்துலக நுகர்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
நுகர்வோரின் அடிப்படை உரிமைகளை விளக்குவது; அவற்றின்மீது நடவடிக்கை எடுப்பது; சந்தைக் குற்றங்களுக்கு எதிராகப் போராடுவது ஆகியவை இத்தினத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.
"தற்போது நுகர்வோர் நீதி' என்ற தலைப்பில் இவ்வாண்டின் இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
நுகர்வோர் என்பவர் ஒரு பொருளைப் பயன்படுத்துபவர். வாடிக்கையாளர் என்பவர், உற்பத்தியாளரிடம் பொருளை வாங்கி, அதைப் பயன்படுத்தாமல் மற்றொருவருக்குக் கொடுப்பவர்.
9. 10 கோடி மக்கள் பேசப்படும் மொழிகள்
மார்ச்,15,2013. உலக அளவில் 6,500க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் ஏற்க்குறைய 2,000 மொழிகள் ஆயிரத்துக்கும் குறைவான மக்களால் மட்டுமே பேசப்படுகின்றன.
உலகில் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படும் மொழிகள் 13 மட்டுமே. அவை, மண்டேரியன் சீனம், ஆங்கிலம், இந்தி, இஸ்பானியம், இரஷ்யம், அராபியம், பெங்காளி, போர்த்துகீசியம், மலாய், இந்தோனேசியம், பிரெஞ்ச், ஜப்பானியம், ஜெர்மானியம், உருது ஆகியனவாகும்.
உலகில் அதிக மக்களால் பேசப்படுகின்ற மண்டேரியன் சீன மொழியானது 6,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். உலகில், தமிழ், அராபியம், சீனம், சமஸ்கிருதம், கிரேக்கம், இலத்தீன் ஆகிய 6 மொழிகளே பழமையான மொழிகள்.
பசிபிக் பெருங்கடலின் தென் மேற்கே அமைந்துள்ள பாப்வுவா நியூ கினி, உலகில் அதிக மொழிகள் பேசப்படுகின்ற நாடு ஆகும். இந்நாட்டில் 850க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன.
ஆப்ரிக்காவில் 2,000க்கும்
மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் 80 விழுக்காட்டு மொழிகளுக்கு
எழுத்து வடிவம் இல்லை. உலகில் பேசப்படுகின்ற மொழிகளில் பாதிக்கும் மேற்பட்ட
மொழிகள் ஆசியாவிலும், பசிபிக் தீவுகளிலும் பேசப்படுகின்றன என ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
No comments:
Post a Comment