Monday, 21 January 2013

Catholic news in Tamil -19/01/13

1. திருத்தந்தை : திருஅவையின் பிறரன்புப் பணியாளர்கள், மனித மாண்பையும் திருமணத்தையும் ஊக்குவிக்க அழைப்பு

2. காப்டிக் கிறிஸ்தவர்களின் புதிய தலைவருக்குத் திருத்தந்தை வாழ்த்து

3. சிரியாவில் அழிவை உண்டாக்கக்கூடிய வன்முறைக்கு வெளிநாடுகளின் ஆதரவே காரணம், முதுபெரும் தலைவர் குற்றச்சாட்டு

4. புனிதபூமியின் அமைதிக்காக 3,000 நகரங்களில் செபங்கள்

5. திருப்பீடப் பேச்சாளர் ஆயுதப் பயன்பாட்டுக்கு எதிராகக் குரல்

6. ஐ.நா.பொதுச்செயலர் : ஆயுதக்களைவு நடவடிக்கையில் இனியும் காலம் தாழ்த்த வேண்டாம்

7. சமத்துவமின்மையைப் போக்குவதற்குப் புதிய யுக்திகளைக் காணுமாறு உலகத் தலைவர்களுக்கு அழைப்பு

8. பாதரசக் கனிமம் குறித்த சட்டரீதியான கட்டுப்பாட்டுக்கு நாடுகள் இசைவு

9. புதுடெல்லியில் ஒரு நாளில் 2 பாலியல் வன்கொடுமைகள் 
                       ............................................................................

1. திருத்தந்தை : திருஅவையின் பிறரன்புப் பணியாளர்கள், மனித மாண்பையும் திருமணத்தையும் ஊக்குவிக்க அழைப்பு

சன.19,2013. மனிதரின் ஒருங்கிணைந்த ஆளுமைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் கடும் கருத்துக்கோட்பாடுகளுக்குத் திருஅவையின் பிறரன்புப் பணியாளர்கள் பாராமுகமாய் இருப்பதை எச்சரித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அத்தகைய கோட்பாடுகளுடன் செயல்படும் நிறுவனங்களுடன் திருஅவையின் பிறரன்புப் பணியாளர்கள் ஒத்துழைப்பதற்கு எதிராகவும் பேசினார் திருத்தந்தை.
“Cor Unum” என்ற திருப்பீடப் பிறரன்புப் பணிகளுக்கான அவை நடத்திய ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஏறத்தாழ ஐம்பது பிரதிநிதிகளை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, பிறரன்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள கிறிஸ்தவர்களின் கடமை குறித்து எடுத்துரைத்தார்.
மனிதர் குறித்த உலகாயுதக் கண்ணோட்டத்துக்கும், மாபெரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் இடையேயுள்ள ஒன்றிப்பை மனிதயியலாக நோக்குவது வளர்ந்து வருகிறது என்ற திருத்தந்தை, இந்நிலை, மனிதர் கடவுளோடு கொள்ளும் உறவிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்று எச்சரித்தார்.
திருஅவையின் பிறரன்புப் பணியாளர்கள், மனித மாண்பையும் திருமணத்தையும் ஊக்குவிக்கவும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார். 

2. காப்டிக் கிறிஸ்தவர்களின் புதிய தலைவருக்குத் திருத்தந்தை வாழ்த்து

சன.19,2013. எகிப்தின் காப்டிக்ரீதி கத்தோலிக்கத் திருஅவையின் புதிய தலைவரான  முதுபெரும் தலைவர் Ibrahim Isaac Sidrak அவர்களுக்குத் தனது நல்வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். 
தொன்மைகால ஆன்மீக மற்றும் திருவழிபாட்டு மரபுகளைக் கொண்டிருக்கும் காப்டிக் திருஅவையின் விசுவாசிகளை வழிநடத்திச் செல்வதற்கும், அவர்களுக்கு இறைவார்த்தையை அறிவிப்பதற்கும் நம் ஆண்டவர் உதவுவாராக என்றும் திருத்தந்தை தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அலெக்சாந்திரியாவின் முதுபெரும் தலைவரும், காப்டிக் திருஅவையின் முதுபெரும் தலைவருமான Ibrahim Isaac Sidrak அவர்களும் திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்து செய்தி அனுப்பியுள்ளார்.
எகிப்தின் கெய்ரோவில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் காப்டிக்ரீதி கத்தோலிக்கத் திருஅவையின் உறுப்பினர்கள், ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் உள்ளனர்.
மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேறியதைத் தொடர்ந்து, எகிப்தில் 2005ம் ஆண்டில் 2,50,000மாக இருந்த காப்டிக் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை தற்போது ஏறக்குறைய 1,50,000மாகக் குறைந்துள்ளது.
எகிப்தின் காப்டிக்ரீதி கத்தோலிக்கத் திருஅவை, காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையிலிருந்து பிரிந்ததாகும்.

3. சிரியாவில் அழிவை உண்டாக்கக்கூடிய வன்முறைக்கு வெளிநாடுகளின் ஆதரவே காரணம், முதுபெரும் தலைவர் குற்றச்சாட்டு

சன.19,2013. சிரியாவில் அமைதியான முறையில் தொடங்கிய அரபு வசந்தம் என்ற சனநாயகத்திற்கான எழுச்சி, தற்போது அந்நாட்டில் கடும் சண்டையாக உருவெடுத்திருப்பதற்கு, அமெரிக்க ஐக்கிய நாடும், ஐரோப்பிய சமுதாய அவையும், வளைகுடா நாடுகளும் பெரிய அளவில் காரணமாக இருக்கின்றன என, அந்தியோக்கியாவின் கத்தோலிக்க முதுபெரும் தலைவர் Ignatius III Younan குறை கூறினார்.
சிரியாவில் சண்டையிடும் புரட்சிக் குழுக்கள் தங்களுக்குள் ஒற்றுமையின்றியும், சிரியாவின் Assad ஆட்சிக்கு மாற்றான உறுதியான ஆட்சியை அமைப்பதற்கு இயலாதவர்களாயும் இருக்கின்றபோதிலும், இந்த வெளிநாடுகள், புரட்சிக் குழுக்களுக்கு ஆதரவு வழங்கி அவைகளின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கின்றன எனவும் முதுபெரும் தலைவர் Ignatius குற்றம் சாட்டினார்.
சிரியாவில் பல மாதங்களாக இடம்பெற்றுவரும் சண்டை குறித்துப் பேசிய முதுபெரும் தலைவர் Ignatius, வன்முறை மற்றும் காழ்ப்புணர்வால் நிறைந்துள்ள சிரியாவில் தற்போது, சிறுபான்மை Alawi பிரிவு இசுலாமியருக்கும், பெரும்பான்மை சுன்னிப் பிரிவு இசுலாமியருக்கும் இடையே கடும் சண்டை இடம் பெற்று வருகிறது என்று கூறினார்.
சிரியாவின் எதிர்கால அமைதிக்கு சிறந்த நம்பிக்கையாக கிறிஸ்தவர்கள் இருக்கின்றார்கள் என்பதால், கிறிஸ்தவர்கள் சிரியாவில் தொடர்ந்து இருக்குமாறு கேட்டுக்கொண்டார் முதுபெரும் தலைவர் Ignatius.

4. புனிதபூமியின் அமைதிக்காக 3,000 நகரங்களில் செபங்கள்

சன.19,2013. இம்மாதம் 27ம் தேதியன்று உலகின் மூவாயிரத்துக்கு மேற்பட்ட நகரங்களில் புனித பூமியின் அமைதிக்காகச் செபங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புனித பூமியின் அமைதிக்காக 24 மணி நேரங்கள் இடம்பெறவிருக்கும் செப வழிபாடுகளில் 2012ம் ஆண்டைவிட இவ்வாண்டில் மேலும் 500 நகரங்கள் இணைந்துள்ளன.
போலந்தின் நாத்சி Auschwitz-Birkenau வதைப்போர் முகாம் விடுதலை அடைந்த 1945ம் ஆண்டு சனவரி 27ம் நாளே, புனித பூமியின் அமைதிக்காகச் செபிக்கும் நாளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 

5. திருப்பீடப் பேச்சாளர் ஆயுதப் பயன்பாட்டுக்கு எதிராகக் குரல்
சன.19,2013. அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஆயுதங்கள் பரவியிருப்பதையும் அவற்றைப் பயன்படுத்துவதையும் கட்டுப்படுத்துவதற்கு அந்நாட்டு அரசு எடுத்துவரும் முயற்சிகள் சரியான திசையில் எடுக்கப்படும் ஒரு நல்ல நடவடிக்கை என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
தற்போது அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்களிடம் ஏறக்குறைய முப்பது கோடி துப்பாக்கிகள் இருக்கின்றன என்றுரைத்த அருள்தந்தை லொம்பார்தி, இவற்றின் எண்ணிக்கையையும், இவற்றைப் பயன்படுத்துவதையும் குறைப்பதால் மட்டும், நியுடவுனில் இடம்பெற்றதைப் போன்று, எதிர்காலத்தில் படுகொலைகளைத் தடை செய்ய முடியாது என்றும் கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் துப்பாக்கிகள் கட்டுப்பாடு குறித்து அந்நாட்டின் பல்வேறு மதங்களைச் சேர்ந்த 47 தலைவர்கள் அந்நாட்டு அரசியல்வாதிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கைகளுக்குத் தான் ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்த அருள்தந்தை லொம்பார்தி, உலக அளவில் ஆயுதக் கட்டுப்பாட்டுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

6. ஐ.நா.பொதுச்செயலர் : ஆயுதக்களைவு நடவடிக்கையில் இனியும் காலம் தாழ்த்த வேண்டாம்

சன.19,2013. அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிஃபோர்னியாவிலுள்ள பன்னாட்டுப் படிப்புக்களுக்கான Monterey நிறுவனத்தில் உரையாற்றிய ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன், ஆயுதக்களைவு நடவடிக்கையில் உலக நாடுகள் காலம் தாழ்த்தாமல் செயல்படுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அணு, உயிரிய மற்றும் வேதிய ஆயுதங்கள், சட்டத்துக்குப் புறம்பேயான ஆயுதங்கள் உட்பட அனைத்துவிதமான ஆயுதங்கள் களையப்படவும், அவை விநியோகிக்கப்படாமல் இருக்கவும் உடனடியாகச் செயலில் இறங்குமாறு கேட்டுள்ளார்  பான் கி மூன்.
இதில் காலம் தாழ்த்தத் தாழ்த்த, பயங்கரவாதிகளால் அந்த ஆயுதங்கள் வாங்கப்பட்டு பயன்படுத்தப்படும் ஆபத்து பெரியதாக இருக்கும் என்றும் எச்சரித்த பான் கி மூன், ஆயுதக்களைவு விடயத்தில் ஒவ்வொரு நாடும் முந்திக் கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.

7. சமத்துவமின்மையைப் போக்குவதற்குப் புதிய யுக்திகளைக் காணுமாறு உலகத் தலைவர்களுக்கு அழைப்பு

சன.19,2013. இப்பூமியில் மிக வறிய மக்களின் ஏழ்மையைக் குறைப்பதற்குப் போதுமான அளவுக்கு நான்கு மடங்குக்கு மேலாகவே  உலகின் நூறு கோடீஸ்வரர்கள் கடந்த ஆண்டில் சம்பாதித்துள்ளார்கள் என்று ஆக்ஸ்ஃபாம் என்ற அனைத்துலக பிறரன்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
வரும் வாரத்தில் சுவிட்சர்லாந்தில் நடைபெறவிருக்கும் உலகப் பொருளாதார மாநாட்டையொட்டி இவ்வாறு அறிவித்துள்ள ஆக்ஸ்ஃபாம் நிறுவனம், உலகில் நிலவும் சமத்துவமின்மையைக் களைவதற்கு உலகத் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதிகப்படியான செல்வம், பொருளாதார ரீதியாகத் திறனற்றது, அரசியல்ரீதியாக ஆபத்தானது, சமூகரீதியாகப் பிளவுகளை ஏற்படுத்தக் கூடியது என்றும் ஆக்ஸ்ஃபாம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
உலகின் நூறு கோடீஸ்வரர்கள், 2012ம் ஆண்டில், 24,000 கோடி டாலரை அனுபவித்தவேளை, மிக வறிய மக்கள், ஒரு நாளைக்கு 1.25 டாலருக்கும் குறைவான வருவாயில் வாழ்ந்தார்கள் என்றும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
Oxfam என்பது, ஏறக்குறைய 90 நாடுகளில் செயல்படும் 17 பிறரன்பு நிறுவனங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பாகும். உலகில் பசி மற்றும் அநீதி தொடர்புடைய விடயங்களுக்குத் தீர்வு காணும் முயற்சிகளில் இந்நிறுவனம் இறங்கியுள்ளது. இது முதலில் 1942ம் ஆண்டில் பிரிட்டனில் தொடங்கப்பட்டது.  

8. பாதரசக் கனிமம் குறித்த சட்டரீதியான கட்டுப்பாட்டுக்கு நாடுகள் இசைவு

சன.19,2013. பாதரசக் கனிமத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுகேட்டை குறைப்பதற்கான சட்டரீதியான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு 140க்கும் மேற்பட்ட நாடுகள் இசைவு தெரிவித்துள்ளன.
மனிதரின் நலவாழ்வுக்குப் பெரும் அச்சுறுத்தலை முன்வைக்கும் பாதரசக் கனிமத்தால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கடும் விளைவுகள் குறித்து விவாதித்த நாடுகளின் பிரதிநிதிகள், சட்டரீதியான விதிமுறைகளுக்கு இசைவு தெரிவித்தனர்.
ஜெனீவாவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் குறித்த ஐ.நா. மாநாட்டில் கலந்து கொண்ட இப்பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.
உலகில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதையொட்டி சிறிய அளவிலானத் தங்கச் சுரங்கங்களும் அதிகரித்து வருகின்றன. அதிக அளவில் நச்சுதன்மை கொண்ட பாதரசம், தங்கத்தைப் பிரித்து எடுப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
260 டன்கள் பாதரசம் ஆறுகளிலும் ஏரிகளிலும் கொட்டப்பட்டுள்ளன என்றும், உலகப் பெருங்கடல்களின் மேற்பரப்பில் காணப்படும் பாதரசத்தின் அளவு கடந்த நூற்றாண்டில் 100 மீட்டராக உயர்ந்துள்ளது என்றும் ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட நிறுவனம் கூறியுள்ளது.

9. புதுடெல்லியில் ஒரு நாளில் 2 பாலியல் வன்கொடுமைகள்

சன.19,2013. இந்தியத் தலைநகர் புதுடில்லியில் ஒவ்வொரு நாளும் 2 பாலியல் வன்கொடுமைகள் சார்ந்த வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன என்றும், 2012ம் ஆண்டில் இவ்வழக்குகள் 23 விழுக்காடு அதிகரித்துள்ளன எனவும் டில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மிகவும் அதிகரித்துள்ளதாகவும், 2012ம் ஆண்டில் டில்லியில் 706 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியதாகவும், இது 2011ம் ஆண்டின் அளவான 572 பாலியல் பலாத்கார வழக்குகளைவிட 23.43 விழுக்காடு அதிகம் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி 23 வயது மருத்துவக் கல்லூரி மாணவி  ஒருவர் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டு இறந்த பின்னரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் டில்லியில் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது எனவும் காவல்துறை கூறியது.
 

No comments:

Post a Comment

Pope prays for global peace and for all victims of religious persecution

  Pope prays for global peace and for all victims of religious persecution Pope Francis calls for peace in conflict zones, solidarity with t...