தேநீர்
உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் விரும்பி அருந்தப்படும் ஒரு பானம் தேநீர். இது, கமெலியா சினென்சிஸ்(Camellia sinensis) எனப்படும் தாவரஇனச் செடியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. பொதுவாக, பச்சைத் தேநீர், ஊலூங் தேநீர், கருப்புத் தேநீர், வெண்மைத் தேநீர், புவார்த் தேநீர் என ஐந்து வகையான தேநீர்கள் உள்ளன. இவை எல்லாமே ஓரே செடியைச் சேர்ந்தவை என்றாலும்,
அந்தச் செடியிலிருந்து குருத்து இலைகளைப் பறித்த பின்னர் அவற்றைப்
பதப்படுத்தும் முறைகளில் இவை மாறுபடுகின்றன. தேநீர் வரலாற்றோடு தொடர்புடைய
புகழ்பெற்ற சீனக் கதை ஒன்று உள்ளது. இது கி.மு. 2,737ல் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. வேளாண்மையையும், சீன மருத்துவ முறையையும் கண்டுபிடித்ததாகச் சொல்லப்படும் Shandong என்னும் சீனப் பேரரசர், ஒரு நாள் வெண்ணீர் குடித்துக்கொண்டு இருந்தபோது, காற்று வீச, அருகிலிருந்த
ஒரு மரத்திலிருந்து சில இலைகள் அவர் அருந்திக்கொண்டு இருந்த வெண்ணீரில்
விழுந்தனவாம். அப்போது நீரின் நிறம் மாறுவதை அவர் கவனித்தார். புதிய
விடயங்களை அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டிருந்த பேரரசர் Shandong, அந்த நீரில் ஒரு முடக்கு அருந்தி அதன் வாசனையையும், உற்சாகம் தரும் இயல்பையும் அறிந்து வியந்தாராம். தென்மேற்கு சீனா, வடகிழக்கு இந்தியா, வடக்கு பர்மா, திபெத்து
ஆகிய பகுதிகளிலே முதலில் தேயிலை பயிரிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. 16ம்
நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்கள் தேயிலையை ஐரோப்பாவுக்கு எடுத்துச்
சென்றனர். அச்சமயம் தேநீர், Chá என்ற பெயரில் புழக்கத்திலிருந்தது. உலகில் அதிகமாகத் தேநீர் அருந்தும் நாடான இந்தியா தவிர, சீனா, கென்யா, இலங்கை
துருக்கி ஆகிய நாடுகளே உலகில் அதிகமாகத் தேயிலையை உற்பத்தி செய்கின்றன.
2010ம் ஆண்டில் உலகில் 45 இலட்சத்து 20 ஆயிரம் டன்களுக்கு மேலாக, தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது. உலகில் அதிகமாகத் தேயிலையை இறக்குமதி செய்யும் நாடு இரஷ்யா.
No comments:
Post a Comment