1. திருத்தந்தை : நம்பிக்கையின்மை, திருமணத்தின் நம்பகத்தன்மையைப் பாதிக்கக்கூடும்
2. திருத்தந்தை : கிறிஸ்தவ ஒன்றிப்பு, விசுவாசத்தை அறிக்கையிடுவதற்கு மிகச் சிறந்த வழி
3. ஐரோப்பிய மதத் தலைவர்கள் : ஐரோப்பாவில் அடிப்படையான பொருளாதார மாற்றம் தேவை
4. பொருளாதார நெருக்கடியினால் போர்த்துக்கீசியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர்
5. பாஸ்டன் கர்தினால் : வாழ்வுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்போர் விசுவாசத்தில் வளர வேண்டும்
6. பதட்டநிலையில் இருக்கின்ற இரு கொரிய நாடுகளும் தங்களது போக்குகளை மாற்றுமாறு சமயத் தலைவர்கள் வேண்டுகோள்
7. மாலி நாட்டின் நிலைமை மிக மோசமாக உள்ளது, ஆயர்கள் கவலை
8. பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பது குறித்த இந்தியாவின் செயலுக்கு ஐ.நா.பாராட்டு
9. 2013ம் ஆண்டில் துன்புறும் சிறார்க்கென 140 கோடி டாலர் தேவைப்படுகின்றது, யுனிசெப்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : நம்பிக்கையின்மை, திருமணத்தின் நம்பகத்தன்மையைப் பாதிக்கக்கூடும்
சன.26,2013. குழந்தை பிறப்பு, திருமணப்பந்தம், திருமணத்தின் நம்பகத்தன்மை போன்ற திருமணத்தின் நன்மைகளை, நம்பிக்கையின்மைப் பாதிக்கக்கூடும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ரோமன்
ரோட்டா என்ற கத்தோலிக்கத் திருஅவையின் திருமண விவகாரங்கள் குறித்த
உச்சநீதிமன்றத்தின் புதிய ஆண்டு தொடக்கத்தையொட்டி அந்நீதிமன்றத்தின்
அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில்
சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இந்த நம்பிக்கை ஆண்டில், நம்பிக்கைக்கும் திருமணத்திற்கும் இடையேயுள்ள உறவு குறித்த சில கூறுகளை எடுத்துரைக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
நம்பிக்கையின்மையில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனை, திருமணப்பந்தத்திலும் நெருக்கடியைக் கொண்டு வந்துள்ளது என்றுரைத்த திருத்தந்தை, இறைவனைப் புறக்கணித்து வாழ்வது, அனைத்து மனித உறவுகளிலும் ஆழமான தடுமாற்றத்திற்கு இட்டுச் செல்கின்றது என்றும் கூறினார்.
இக்காலத்திய பொருளிய, அறநெறிவாழ்விய மற்றும் மதம் குறித்த எண்ணங்களினால் தற்போதைய கலாச்சாரம், குடும்பங்களைக் கடும் சவால்களைச் சந்திக்க வைக்கின்றது, குறிப்பாக, தனிமனித சுதந்திரம் குறித்த வலுவான எண்ணங்களோடு போராடுபவர்கள், வாழ்வு முழுவதும் ஒன்றுசேர்ந்து வாழும் பிணைப்பு என்ற சவாலை எதிர்கொள்கின்றனர் என்றும் திருத்தந்தை கூறினார்.
மனிதர்கள் தனித்து வாழக்கூடியவர்களாக மாறி வருகின்றனர் மற்றும் எந்நேரத்திலும் முறிவுபடக்கூடும் என்ற உறவுகளால், மனிதர்கள் ஒருவர் மற்றவரோடு தொடர்பு கொள்கின்றனர் என்றும் உரைத்த திருத்தந்தை, கடவுளின் உண்மைக்குத் திறந்தவர்களாய் வாழும்போது மட்டுமே, திருமணம் மற்றும் குடும்பம் உட்பட, வாழ்வின் உண்மைத்தன்மையைப் புரிந்து அறியக் கூடியவர்களாய் வாழ இயலும் என்றும் ரோமன் ரோட்டா உறுப்பினர்களிடம் கூறினார்.
2. திருத்தந்தை : கிறிஸ்தவ ஒன்றிப்பு, விசுவாசத்தை அறிக்கையிடுவதற்கு மிகச் சிறந்த வழி
சன.26.2013. கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒப்புரவு, உரையாடல் மற்றும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
புனித
பவுல் மனந்திரும்பிய விழாவான இவ்வெள்ளி மாலை உரோம் புனித பவுல்
பசிலிக்காவில் திருப்புகழ்மாலை திருவழிபாடு நடத்தி மறையுரையாற்றிய
திருத்தந்தை, மறைப்பணிகளைப் பாதிக்கும் கிறிஸ்தவர்கள் மத்தியில் காணப்படும் பிரிவினைகளின் துர்மாதிரிகையே, கிறிஸ்தவ ஒன்றிப்பு வார நடவடிக்கைக்குக் காரணம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம் என்று கூறினார்.
கான்ஸ்டான்டிநோபிள்
கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தலைவரின் திருஆட்சிப்பீடப் பிரதிநிதிகள்
மற்றும் ஆங்லிக்கன் சபைப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இவ்வழிபாட்டில்
உரையாற்றிய திருத்தந்தை, கிறிஸ்தவர்கள் மத்தியில் முழு ஒன்றிப்பை ஏற்படுத்துவது சக்திமிக்க சான்றாக இருக்கும், அத்துடன், நற்செய்தி அறிவிப்புப்பணிக்கும் தூண்டுகோலாக அமையும் என்று தெரிவித்தார்.
ஆன்மீகரீதியான கிறிஸ்தவ ஒன்றிப்பு மட்டும் போதாது, மாறாக, முழுமையான கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு, கடந்தகாலக் காயங்களினின்று குணமாகுவதற்கு உதவும் தனிமனித மனமாற்றம் தேவை என்பதையும் திருத்தந்தை வலியுறுத்தினார்.
3. ஐரோப்பிய மதத் தலைவர்கள் : ஐரோப்பாவில் அடிப்படையான பொருளாதார மாற்றம் தேவை
சன.26,2013. உலகில் மிகவும் கடன்பட்டுள்ள நாடுகளின் நியாயமற்ற கடன்கள் இரத்து செய்யப்பட வேண்டும், இன்னும், மிகப்பெரிய அளவில் கடன்கள் குவிந்துவிடுவதைத் தடுப்பதற்கு, நிதி அமைப்பைக் கட்டுக்குள் வைப்பது அவசியம் என்று பிரிட்டனின் பல்சமயத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஐரோப்பாவின் கடன் நெருக்கடிக்குத் தீர்வு வழங்கும் நோக்கத்தில், பிரிட்டனின் கத்தோலிக்க, ஆங்லிக்கன், மெத்தோடிஸ்ட் கிறிஸ்தவ சபையினர் உட்பட பிரிட்டனிலுள்ள இசுலாம், யூதம், இந்து, சீக், சொராஸ்ட்ரியம் ஆகிய மதங்களின் தலைவர்கள் என 300க்கும் அதிகமானப் பிரதிநிதிகள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐரோப்பாவில் கடன் குறித்த தணிக்கை நடத்தப்படுமாறும் கேட்டுள்ளனர்.
அநீதியான நிதி அமைப்பினால், பிரிட்டனிலும் உலகெங்கிலுமிருக்கின்ற மிகவும் வறிய மக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள் என்று இவ்வறிக்கை கூறுகிறது.
வருகிற பிப்ரவரி 5ம் தேதி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஜூபிலி கடன் என்ற நிகழ்வு இடம்பெற்ற பின்னர் இவ்வறிக்கை பிரிட்டன் பிரதமர் David Cameronடம் சமர்ப்பிக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.
4. பொருளாதார நெருக்கடியினால் போர்த்துக்கீசியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர்
சன.26,2013. கடந்த பல ஆண்டுகளுக்குப் பின்னர் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிவரும் போர்த்துக்கல்
நாட்டிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் 2 இலட்சத்து 40 ஆயிரம் பேர் வரை
அந்நாட்டைவிட்டு வெளியேறி இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இவர்களில் பலர் உயர்கல்வி படித்த இளையோர் என்றும், இவர்கள் எண்ணெய் வளமிக்க முன்னாள் போர்த்துக்கீசிய காலனி நாடான அங்கோலாவுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் சென்றுள்ளனர் என்றும், போர்த்துக்கல் நாட்டின் குடியேற்றதாரர் அவையின் செயலர் ஜோசே செசாரியோ கூறினார்.
1960களில் பிரான்சுக்குச் சென்ற போர்த்துக்கீசியக் குடியேற்றதாரர் தற்போது ஆப்ரிக்காவின் அங்கோலா, மொசாம்பிக் மற்றும் சுவிட்சர்லாந்துக்குச் செல்கின்றனர் என்றும் செசாரியோ கூறினார்.
5. பாஸ்டன் கர்தினால் : வாழ்வுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்போர் விசுவாசத்தில் வளர வேண்டும் .
சன.26,2013. வாழ்வுக் கலாச்சாரம், ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையின் மாற்றத்தின்மீது அமைக்கப்பட்டதாய் இருக்க வேண்டும் என்று சொல்லி, அமெரிக்க
ஐக்கிய நாட்டில் வாழ்வுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்போர் தங்களது
விசுவாசத்தை ஆழப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார் பாஸ்டன் கர்தினால் Seán P. O'Malley.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் இடம்பெற்ற வாழ்வுக்கு ஆதரவான மாபெரும் பேரணியில் பங்கு கொண்ட திருப்பயணிகளிடம் இவ்வாறு உரைத்த கர்தினால் O'Malley, நமது விசுவாசத்தை உறுதியுடன் வாழும்போது அது வாழ்வுக் கலாச்சாரத்தை உண்டுபண்ணும் என்றும், நமது விசுவாசத்தை ஆழப்படுத்த வேண்டியது நமது கடமை என்றும் கூறினார்.
அமெரிக்க
ஐக்கிய நாட்டில் வாழ்வுக்கு ஆதரவாகத் தொடங்கிய தேசிய செப வழிபாட்டின்
முதல் கட்டமாக இடம்பெற்ற திருப்பலியை வாஷிங்டன் தேசிய அமலமரி பசிலிக்காவில்
இவ்வியாழன் மாலை நிகழ்த்தி மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் கர்தினால்
O'Malley.
6 கர்தினால்கள், 41
ஆயர்கள் மற்றும் 324 அருள்பணியாளர்கள் சேர்ந்து நிகழ்த்திய
இத்திருப்பலியில் 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசுவாசிகள் கலந்து கொண்டனர்.
மேலும்,
அமெரிக்க ஐக்கிய நாட்டினரின் வாழ்வுக்கு ஆதரவான இந்நடவடிக்கைக்குத்
திருத்தந்தையும் டிவிட்டர் மூலம் தனது ஆதரவுச் செய்தியை அனுப்பியிருந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.
6. பதட்டநிலையில் இருக்கின்ற இரு கொரிய நாடுகளும் தங்களது போக்குகளை மாற்றுமாறு சமயத் தலைவர்கள் வேண்டுகோள்
சன.26,2013. வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே உச்சகட்டப் பதட்டநிலைகள் உருவாகியுள்ளவேளை, இவ்விரு
நாடுகளும் தங்களது போக்குகளை மாற்றி ஒத்துழைப்பின் ஒரு புதிய சகாப்தத்தைத்
தொடங்குமாறு தென் கொரிய தலத்திருஅவை அதிகாரி ஒருவர் வலியுறுத்தினார்.
வட கொரியாவுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொருளாதாரத் தடைகளில் தென் கொரியா பங்குபெற்றால், தென்
கொரியாவுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாக வட கொரியா
அச்சுறுத்தியுள்ளதைத் தொடர்ந்து இவ்வாறு கேட்டுக் கொண்டார், பாப்பிறை மறைப்பணிக் கழகங்களின் தென் கொரிய தேசிய இயக்குனர் அருள்பணி John Bosco Byeon.
இரு கொரிய நாடுகளுக்கிடையேயான உறவுகள் உண்மையிலேயே பதட்டநிலையில் இருக்கின்றன என்றுரைத்த அருள்பணி John Bosco, தென் கொரிய புதிய அரசுத்தலைவர் இந்தப் பதட்டநிலைகளை அகற்றுவதற்குத் தகுந்த நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.
இதற்கிடையே, வட கொரியாவுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தடைகள் கடுமையாக்கப்பட்டதற்குப் பதில் நடவடிக்கையாக, மூன்றாவது அணுச் சோதனையையும், மேலும் ஏவுகணைச் சோதனைகளையும் நடத்தப்போவதாக வடகொரியா எச்சரித்துள்ளது.
7. மாலி நாட்டின் நிலைமை மிக மோசமாக உள்ளது, ஆயர்கள் கவலை
சன.26,2013. மாலி நாட்டின் இடைக்கால அரசுத்தலைவர் Dioncounda Traore அந்நாட்டை ஒன்றிணைத்து வைப்பதற்கு எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டியுள்ள அதேவேளை, இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான அரசின் முயற்சிகளுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர் ஆயர்கள்.
மாலியின் இன்றைய கடுமையான நிலைமை குறித்து அரசுத்தலைவருக்குக் கடிதம் அனுப்பியுள்ள ஆயர்கள், அந்நாட்டின் வருங்காலப் பாதுகாப்புக்கு உதவும் நோக்கத்தில்,
தவக்காலம் தொடங்கும் வருகின்ற பிப்ரவரி 13ம் தேதியன்று கிறிஸ்தவ
சமூகத்தின் உதவியையும் கேட்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.
மாலியில்
தீவிரவாதிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே இடம்பெற்றுவரும் சண்டையில்
பாதிக்கப்பட்டவர்களுக்கு காரித்தாஸ் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டு
ஆயர்களின் பிறரன்பு நிறுவனமும் உதவி செய்து வருகின்றன.
மாலியின்
வடக்குப் பகுதி நகரங்களிலும் கிராமங்களிலும் கடுமையான இசுலாமிய ஷாரியா
சட்டத்தைப் புகுத்தி அந்நாட்டின் பெரும்பகுதியை கைப்பற்றுவதற்கு
முயற்சித்துவரும் இசுலாமியத் தீவிரவாதிகளை அடக்குவதற்கு இம்மாதம் 11ம் தேதி
பிரான்ஸ் நாடு தலையிட்டு மாலியின் இராணுவத்துக்கு உதவி செய்து வருகிறது.
மாலியின் ஒரு கோடியே 55 இலட்சம் மக்களில் 1.3 விழுக்காட்டினர் கத்தோலிக்கர். மற்றும் 90 விழுக்காட்டினர் முஸ்லீம்கள்.
இதற்கிடையே, மாலியில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் நெருக்கடி நிலைகள், மேற்கு ஆப்ரிக்கா மற்றும் சாஹெல் வரை பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக ஐ.நா.அதிகாரிகள் கூறுகின்றனர்.
8. பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பது குறித்த இந்தியாவின் செயலுக்கு ஐ.நா.பாராட்டு
சன.26,2013. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறையை அகற்றுவதற்கென ஒரு புதிய அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள வழிகள், செயல்திட்டத்துக்கான அடித்தளமாக இருக்கின்றன எனப் பாராட்டியுள்ளார் ஐ.நா.மனித உரிமைகள் நிறுவனத் தலைவர் நவிபிள்ளை.
முன்னாள் தலைமை நீதிபதி ஜெகதீஷ் ஷரண் வர்மா பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள வர்மா அறிக்கையும், அதன் பரிந்துரைகளும் ஐந்து வாரங்களுக்கு முன்னர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 23 வயது இளைஞிக்கு மட்டும் இல்லாமல், இந்தியாவில் பாலியல் வன்கொடுமைக்குப் பலியாகும் அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதாக இருக்கின்றது என்று நவிபிள்ளை கூறியுள்ளார்.
‘Enough is Enough’ என்று சொன்ன இந்தியாவின் இளைஞர் மற்றும் இளைஞிகளின் சக்திக்கும், பரந்துபட்ட சமூகத்தின் வல்லமைக்கும் இவ்வறிக்கை சாட்சியாக இருக்கின்றது என்றும் நவிபிள்ளை பாராட்டியுள்ளார்.
மேலும், கல்வி, நலவாழ்வு
உட்பட தங்களது அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி ஏறக்குறைய பத்தாயிரம் சிறார்
வருகிற பிப்ரவரி 2ம் தேதி புதுடெல்லியில் மாபெரும் ஊர்வலத்தில் கலந்து
கொள்ளவிருக்கின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
9. 2013ம் ஆண்டில் துன்புறும் சிறார்க்கென 140 கோடி டாலர் தேவைப்படுகின்றது, யுனிசெப்
சன.26,2013. உலகின் 45 நாடுகள் மற்றும் பகுதிகளில் இவ்வாண்டில் போர்கள்,
இயற்கைப் பேரிடர்கள் மற்றும்பிற நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள
சிறாரின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்கு ஏறத்தாழ 140 கோடி டாலர்
தேவைப்படுகின்றது என, ஐ.நா.வின் யூனிசெப் நிறுவனம் கூறியுள்ளது.
2013ம் ஆண்டின் தொடக்கத்தில்தான் இருக்கின்றோம், இப்போதே
சிரியாவில் இலட்சக்கணக்கான சிறார் கடும் துன்பங்களை எதிர்கொள்கின்றனர்
மற்றும் அண்டை நாடுகளுக்கும் அகதிகளாகச் சென்றுள்ளனர் என்று யூனிசெப்பின்
அவசரகாலத் திட்ட அலுவலக இயக்குனர் Ted Chaiban கூறினார்.
24
இலட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ள காங்கோ குடியரசில் பத்து இலட்சம் சிறார்
கடும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர் எனவும் அவர்
கூறினார்.
சூடானின் Blue Nile மற்றும் South Kordofan மாநிலங்களில் புலம் பெயர்ந்துள்ள 2,10,000 மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சிறார் எனவும் Ted Chaiban கூறினார்
No comments:
Post a Comment