Tuesday, 29 January 2013

Cathic News in Tamil - 28/01/13

1. ஞாயிற்றுக்கிழமையை எவ்வாறு வாழ்கிறோம் என்பது குறித்து சிந்திக்க அழைக்கின்றார் திருத்தந்தை

2. யூத இனஅழிப்பு நினைவு நாள் - மனித மாண்பு மதிக்கப்பட திருத்தந்தை வேண்டுகோள்

3. பிரேசில் நாட்டிற்கு திருத்த‌ந்தையின் இரங்க‌ல் த‌ந்தி

4. உலக நோயாளர் தின பரிபூரணப் பலன்

5. சென்னை மயிலை உயர்மறை மாவட்டத்தின் நிர்வாகப் பொறுப்பை பேராயர் ஜார்ஜ் அன்டனிசாமி ஏற்பு

6. மும்பை உயர்மறைமாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த ஒளிச்சுடர் ஊர்வலம்

7. உலகில் 547 தொழுநோயாளர் மையங்களைக்கொண்டுள்ளது திருஅவை

8. கடந்த ஆண்டில் இந்தியாவில் கிறிஸ்தவர்களூக்கு எதிரான தாக்குதல்கள் 135

9. ஆப்ரிக்காவில் ஏழ்மையும் வன்முறையும் அகற்றப்பட ஐ.நா. பொதுச்செயலர் வேண்டுகோள்

------------------------------------------------------------------------------------------------------

1. ஞாயிற்றுக்கிழமையை எவ்வாறு வாழ்கிறோம் என்பது குறித்து சிந்திக்க அழைக்கின்றார் திருத்தந்தை

சன.28,2013. ஓய்வு மற்றும் குடும்பத்தின் நாளான, அனைத்துக்கும் மேலாக, நம் ஆண்டவரின் நாளாக இருக்கும் ஞாயிற்றுக்கிழமையை நாம் எவ்வாறு வாழ்கிறோம் என்பது குறித்து சிந்திப்பதற்கு இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் நம்மை அழைக்கின்றது என்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
வத்திக்கான் புனித பேதுரு சதுக்கத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த ஏறத்தாழ முப்பதாயிரம் மக்களுக்கு மூவேளை செபஉரை வழங்கிய திருத்தந்தை, இயேசு தொழுகைக்கூடத்தில் எழுந்து சென்று இறைவாக்கினர் எசாயா சுருளேட்டிலிருந்து வாசித்த பின்னர், நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று என்று கூறி அமர்ந்ததைக் குறிப்பிட்டார்.
இந்நற்செய்தி வாசகம் நமக்கும் "இன்று" சவால் விடுக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை, நம் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமையை நாம் எவ்வாறு வாழ்கிறோம் என்பது குறித்து முதலில், இந்த வாசகம் நம்மைச் சிந்திக்க வைக்கின்றது என்று கூறினார்.
ஆண்டவரின் திருவுடல், திருஇரத்தத்தினால் நாம் ஊட்டம்பெறும்  திருநற்கருணையில் பங்கு கொண்டு வாழவேண்டிய நம் ஆண்டவரின் நாள் மற்றும் இது குடும்பத்தின் நாள் என்றும் கூறினார் திருத்தந்தை.
கவனச்சிதறல்கள் நிறைந்த இக்காலத்தில் நமது செவிமடுக்கும் சக்தி குறித்து நம்மையே நாம் கேள்வி கேட்கவும் இந்நாள் அழைக்கின்றது என்ற திருத்தந்தை, கடவுளைப் பற்றிப் பேசுவதற்கு முன்னர் நம்மிடம் நம் ஆண்டவர் பேசுவதற்குச் செவிசாய்க்க வேண்டும், ஒவ்வொரு தருணமும் நமது மனமாற்றத்திற்கான நேரம் என அவர் சொல்கிறார் என்றுரைத்தார்.


2. யூத இனஅழிப்பு நினைவு நாள் - மனித மாண்பு மதிக்கப்பட திருத்தந்தை வேண்டுகோள்

சன.28,2013. கடந்தகாலக் கொடுமைகள் ஒருபோதும் மீண்டும் இடம்பெறாமல் இருக்கவும், அனைத்து விதமான வெறுப்புணர்வும் இனப்பாகுபாடும் களையப்படவும், மனித மாண்பு ஊக்குவிக்கப்படவும் அனைத்துலக யூத இனஅழிப்பு நினைவு நாள், உலகினர் அனைவருக்கும் தொடர்ந்து நினைவுபடுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்று, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இஞ்ஞாயிறன்று அனைத்துலக யூத இனஅழிப்பு நினைவு நாள் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, யூதமக்களை மிகக் கொடூரமாய்ப் பாதித்த நாசிசத்துக்குப் பலியானவர்கள் மற்றும் அதன் கொடூர விளைவுகள் குறித்தும் நினைவு கூர்ந்தார்.
அதோடு, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்ட 60வது அனைத்துலக தொழுநோயாளர் தினம், புனித பூமியில் அமைதிக்கான செப நாள்   ஆகியவற்றையும் நினைவுகூர்ந்தார் திருத்தந்தை.
இஞ்ஞாயிறன்று 60வது அனைத்துலக தொழுநோயாளர் தினம் கடைப்பிடிக்கப்படும்வேளை, இந்நோயால் துன்புறுவோருடன் தான் மிகுந்த நெருக்கமாக இருப்பதாகவும், இந்நோய்க் குறித்து ஆய்வு செய்வோர், நலவாழ்வு மற்றும் தன்னார்வப் பணியாளர்கள், சிறப்பாக, கத்தோலிக்க நிறுவனங்கள், Raoul Follereau நண்பர்கள் அமைப்பினர் என தொழுநோயாளர் மத்தியில் பணி செய்யும் அனைவரையும் தான் ஊக்குவிப்பதாகவும் கூறினார்.  தொழுநோயாளர்களுக்கெனத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த புனிதர்கள் Damien de Veuster, Marianna Cope ஆகியோரின் பரிந்துரைகளையும் இறைஞ்சினார் திருத்தந்தை.
புனித பூமியில் அமைதி இடம்பெற சிறப்பாகச் செபிப்பதற்கு இஞ்ஞாயிறு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, இங்கு அமைதி இடம்பெற உழைக்கும் அனைவரையும் தான் உற்சாகப்படுத்துவதாகத் தெரிவித்தார் அவர்.
உரோம் கத்தோலிக்க கழகத்தைச் சேர்ந்த இரண்டு சிறார் திருத்தந்தையின் இரு பக்கங்களிலும் நின்று அமைதிக்கான செய்தியை வாசித்தனர். பின்னர், திருத்தந்தை இரண்டு வெண்புறாக்களைப் பறக்கவிட்டார்.   


3. பிரேசில் நாட்டிற்கு திருத்த‌ந்தையின் இரங்க‌ல் த‌ந்தி

சன.28,2013. பிரேசில் நாட்டின் தென் நகரமான சாந்தா மரியாவின் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 231 இளையோர் உயிரிழந்தையொட்டி திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கற்தந்தி அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
சாந்தா மரியா நகரின் பேராயர் DOM HÉLIO ADELAR RUBERTக்கு திருத்த‌ந்தையின் பெய‌ரால் திருப்பீட‌ச்செய‌ல‌ர் க‌ர்தினால் த‌ர்ச்சீசியோ பெர்த்தோனே அனுப்பியுள்ள‌ செய்தி, இற‌ந்தோரின் ஆன்ம‌சாந்திக்காக‌த் திருத்த‌ந்தையின் செப‌த்திற்கு உறுதி கூறுவ‌தோடு, த‌ங்க‌ள் உற‌வின‌ர்க‌ளைத் தீ விப‌த்தில் இழ‌ந்து துய‌ருறும் ம‌க்க‌ளுக்குத் திருத்த‌ந்தையின் ஆறுத‌லையும் அனுதாப‌ங்க‌ளையும் தெரிவித்கின்ற‌து.
இத்தீவிப‌த்தில் 231பேர் ப‌லியான‌தைத்தொட‌ர்ந்து பிரேசில் அர‌சு மூன்று நாட்க‌ளை தேசிய‌ துக்க‌ நாட்களாக அறிவித்துள்ள‌து.


4. உலக நோயாளர் தின பரிபூரணப் பலன்

சன.28,2013. பிப்ரவரி மாதம் 7 முதல் 11 வரை 21வது உலக தொழுநோயாளர் தினம் சிறப்பிக்கப்படுவதையொட்டி அதற்கென பரிபூரணப் பலனை அறிவித்துள்ளது திருப்பீட பாவமன்னிப்புச்சலுகைத் துறை.
இந்த 5 நாட்களில்  வழங்கப்படும்  பரிபூரணப் பலன் மூலம் பாவங்களுக்கானத் தற்காலிகத் தண்டனைகளிலிருந்து  மன்னிப்புப் பெறமுடியும். நோயாளிகளுக்கானப் பணிகளில் ஈடுபடுவோர், அவர்களுக்கானப் பிறரன்புச் சேவைகளை ஆற்றுவோர், இறைவன் கற்பித்த செபத்தைச் செபித்து, விசுவாசப்பிரமாணத்தை அறிக்கையிட்டு, பாவத்திலிருந்து விடுதலைபெறும் உணர்வுடன் அன்னைமரியை வேண்டும்போது, இந்தப் பரிபூரணப் பலன் கிட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாவத்திலிருந்து தங்களை விலக்கிக்கொண்டு வாழும் நோயாளிகளுக்கும் இந்த பரிபூரணப் பலன்கள் கிட்டும் எனவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பரிபூரணப் பலனுக்கு இன்னும் சில செயல்முறைகளையும் கொடுத்துள்ளது திருப்பீட பாவமன்னிப்புச்சலுகைத் துறை.


5. சென்னை மயிலை உயர்மறை மாவட்டத்தின் நிர்வாகப் பொறுப்பை பேராயர் ஜார்ஜ் அன்டனிசாமி ஏற்பு

சன.28,2013. சென்னை மயிலை உயர்மறை மாவட்டத்தின் நிர்வாகப் பொறுப்பை பேராயர் ஜார்ஜ் அன்டனிசாமி இஞ்ஞாயிறு மாலை ஏற்றார்.
புனித தோமா பசிலிக்கா ஆலயத்திற்கு அருகே உள்ள புனித Bede பள்ளியின் திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில், 20க்கும் அதிகமான ஆயர்களும், நூற்றுக்கணக்கான திருப்பணியாளர்களும், இருபால் துறவியரும், பல்லாயிரக்கணக்கான மக்களும் கலந்துகொண்டனர்.
சீரோ மலபார், சீரோ மலங்கரா ரீதித் திருஅவைகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்ட இந்த விழாவினை, இந்தியாவுக்கான திருப்பீடத் தூதர் Salvatore Pennacchio  முன்னின்று நடத்தினார்.
புனித தோமா பசிலிக்காவிலிருந்து ஆயர்களும், குருக்களும் மேற்கொண்ட பவனி, பள்ளித் திடலை அடைந்தபின், பேராயர் Pennacchio திருத்தந்தையின் நியமன கடிதத்தை வாசித்தார். 
அதன்பின் நடைபெற்ற திருப்பலியில், புதிதாகப் பொறுப்பேற்ற பேராயர் ஜார்ஜ் அன்டனிசாமி தமிழிலும், ஆங்கிலத்திலும் மறையுரை நிகழ்த்தினார்.
திருப்பலிக்குப் பின் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் ஓய்வுபெற்றுச் செல்லும் பேராயர் மலையப்பன் சின்னப்பா அவர்களுக்குப் பிரியாவிடையும், புதியப் பேராயர் ஜார்ஜ் அன்டனிசாமி அவர்களுக்கு வரவேற்பும் வழங்கப்பட்டது.
1952ம் ஆண்டு திருச்சியில் பிறந்த பேராயர் ஜார்ஜ் அன்டனிசாமி அவர்கள், உரோம் நகரில் தன் உயர்கல்வியை முடித்தபின், 2005ம் ஆண்டு பேராயராகத் திருநிலைப் படுத்தப்பட்டு, Gambia, Liberia, Guinea, Sieraa Leone ஆகிய நாடுகளில் திருப்பீடத்தின் தூதராகப் பணிபுரிந்துள்ளார்.


6. மும்பை உயர்மறைமாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த ஒளிச்சுடர் ஊர்வலம்

சன.28,2013. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் விதமாக மும்பை உயர்மறைமாவட்டத்தின் அனைத்துப் பங்குத் தளங்களிலும் ஞாயிறன்று 3 கோடியே 70 இலட்சம் ஒளிச்சுடர்களைத் தாங்கி ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டனர் கிறிஸ்தவர்கள்.
பாலின அடிப்படையிலான கருக்கலைத்தல்கள், பெண் சிசுக்கொலை, வ‌ரதட்சணை தொடர்புடைய மரணங்கள், கற்பழிப்புகள், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் இறப்பு போன்றவை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதாக இவ்வூர்வலம் அமைந்தது.
இந்தியாவின் 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள்தொகையில் ஆண்களைவிட 3 கோடியே 70 இலட்சம் பெண்கள் குறைவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இவ்வெண்ணிக்கையுடைய ஒளிச்சுடர்களைத் தாங்கி மும்பை உயர்மறைமாவட்டத்தில் ஊர்வலம் நடத்தப்பட்டது.


7. உலகில் 547 தொழுநோயாளர் மையங்களைக்கொண்டுள்ளது திருஅவை

சன.28,2013. உலகம் முழுவதும் 547 தொழுநோயாளர் மையங்கள் வழியாக, திருஅவை தொழுநோயாளர்களிடையே சேவையாற்றி வருவதாக திருஅவையின் புள்ளிவிவர ஆண்டு புத்தகம் தெரிவிக்கிறது.
ஆசியக்கண்டத்தில்தான் அதிக எண்ணிக்கையில், அதாவது 285 தொழுநோயாளர் மையங்களை திருஅவை நடத்திவருகிறது எனக்கூறும் இப்புள்ளிவிவர புத்தகம், ஆப்ரிக்காவில் 198, அமெரிக்கக்கண்டத்தில் 56, ஐரோப்பாவில் 5 ஓசியானியாவில் 3 மையங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கிறது.
நாடுகள் அளவில் நோக்கும்போது, இந்தியாவிலேயே அதிக அளவில் தொழுநோயாளர் மையங்களை திருஅவை நடத்தி வருகின்றது. இந்தியாவில் 220 மையங்கள் வழியாக தொழுநோயாளர்களீடையே பசேவையாற்றிவரும் திருஅவை, அடுத்து பெருமெண்ணிக்கையில் தொழுநோயாளர் மையங்களை கொண்டிருப்பது காங்கோ குடியரசிலேயே, அதாவது 32 மையங்களைக் கொண்டுள்ளது. அதற்கடுத்த எண்ணிக்கையில், மடகாஸ்கரில் 29, தென்னாப்ரிக்காவில் 23 மையங்களைக் கொண்டுள்ளது திருஅவை.


8. கடந்த ஆண்டில் இந்தியாவில் கிறிஸ்தவர்களூக்கு எதிரான தாக்குதல்கள் 135

சன.28,2013. கடந்த ஆண்டில் இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான 135 தாக்குதல்கள் இடம்பெற்றதாக அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
14 ஆண்டுகளுக்கு முன்னர் சனவரி மாதம் 23ம் தேதி ஒடிஸ்ஸாவில் தன் இரு மகன்களோடு எரித்துக்கொல்லப்பட்ட கிறிஸ்தவ மறைபோதகர் கிரஹாம் ஸ்டெயின்ஸின் மரண நினைவு நாளையொட்டி வெளியிடப்பட்ட இவ்வறிக்கை, கிறிஸ்தவர்களுக்கு எதிராக கடந்த ஆண்டு இடம்பெற்ற தாக்குதல்களில் பெரும்பான்மையானவை பி.ஜே.பி. க்ட்சி ஆட்சி புரியும் மாநிலங்களில் இடம்பெற்றன எனவும் தெரிவிக்கிறது.
2012ம் ஆண்டில், கர்நாடகாவில் 41, ஒடிஸ்ஸாவில் 16, தமிழ்நாட்டில் 15, மத்தியபிரதேசத்தில் 14, சட்டீஸ்கரில் 7, கேரளம் மற்றும் காஷ்மீரில் 5 என்ற எண்ணிக்கையில், கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.


9. ஆப்ரிக்காவில் ஏழ்மையும் வன்முறையும் அகற்றப்பட ஐ.நா. பொதுச்செயலர் வேண்டுகோள்

சன.28,2013. ஆப்ரிக்காவில் வளர்ச்சி இடம்பெறவும் வன்முறை எனும் சக்கரச்சுழற்சி இடம்பெறாமல் இருக்கவும், பல இலட்சக்கணக்கான மக்களின் வறுமை நிலைகள் அகற்றப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என அழைப்புவிடுத்தார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்.
எத்தியோப்பியாவில் இடம்பெற்ற ஆபரிக்க ஒன்றிப்பு அவைக்கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா. பொதுச்செயலர், ஆப்ரிக்கக் கண்டம் தனக்குள்ளேயே இருக்கும் சவால்களுக்கு தீர்வு காண முயல்வதன் மூலம் வளர்ச்சி, சமூக நீதி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவைகளில் உலக குறிக்கோள்களுக்கு உதவ முடியும் என்றார்.
ஆப்ரிக்கக் கண்டத்தின் பல நாடுகள், ஏழ்மை அகற்றல், கல்வி, தாய்-சேய் நல ஆதரவு, பாலின சரிநிகர்தன்மை, சுற்றுச்சூழல் நிலையான தன்மை, எயிட்ஸ் நோய் குறைப்பு போன்றவைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டு வருவது குறித்த மகிழ்ச்சியையும் வெளியிட்டார் பொதுச்செயலர் பான் கி மூன்.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...