1. நம்பிக்கை இழந்து நாடு விட்டு நாடு செல்லும் கட்டாயத்திற்கு இன்று மக்கள் உட்படுத்தப்படுகின்றனர் - கர்தினால் Veglio
2. எருசலேம் நகரில் வத்திக்கானுக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் நல்லுறவு வளர்க்கும் கூட்டம்
3. பிலிப்பின்ஸ் அரசு வாரிசு அரசியலை உடனடியாக நிறுத்தவேண்டும் - பிலிப்பின்ஸ் ஆயர்கள் பேரவை
4. மகாராஷ்டிரா மாநிலக் கிறிஸ்தவர்களுக்கு அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்கவேண்டும் - மதசார்பற்ற கத்தோலிக்க அமைப்பு வேண்டுகோள்
5. தேவநிந்தனை சட்டத்தின் கீழ் 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த Barkat Masih விடுதலை
6. நைஜீரியாவில் Boko Haram குழுவின் ஒரு பகுதியினர் ஆயுதங்களைக் களைய முன்வந்துள்ளனர்
7. பறவைக் காய்ச்சல் மீண்டும் பரவும் ஆபத்து உள்ளது - FAO எச்சரிக்கை
8. இந்திய வீட்டுத்திட்டத்தில் தமிழர்களுக்குப் பாரபட்சம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. நம்பிக்கை இழந்து நாடு விட்டு நாடு செல்லும் கட்டாயத்திற்கு இன்று மக்கள் உட்படுத்தப்படுகின்றனர் - கர்தினால் Veglio
சன.30,2013. உலகமயமாக்கல் என்ற எதார்த்தத்தில் வளர்ந்துவரும் இவ்வுலகில், புலம்பெயர்தல் என்பது நாளுக்கு நாள் சவால்கள் நிறைந்த ஒரு போக்காக மாறிவருகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
உரோம் நகரின் Sant'Egidio தலைமையகத்தில், ருமேனிய அரசின் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில் இச்செவ்வாய் மாலை, புலம்பெயர்ந்தோர் மற்றும் பயணம் செய்வோர் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Antonio Maria Veglio உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
முன்னொரு காலத்தில், நம்பிக்கையை வளர்ப்பதற்கு நாடுவிட்டு நாடு செல்லும் திருப்பயணங்களை மக்கள் மேற்கொண்ட நிலை மாறி, நம்பிக்கை இழந்து நாடு விட்டு நாடு செல்லும் கட்டாயத்திற்கு இன்று மக்கள் உட்படுத்தப்படுகின்றனர் என்பதை கர்தினால் Veglio வருத்தத்துடன் நினைவு கூர்ந்தார்.
நடைபெற்றுவரும் நம்பிக்கை ஆண்டில் 'புலம்பெயர்தலும் நம்பிக்கையில் இணைதலும்' என்ற தலைப்பில் ருமேனிய அரசு நடத்தும் இக்கூட்டம் மகிழ்வைத் தருவதாகவும் கர்தினால் Veglio எடுத்துரைத்தார்.
இக்கூட்டத்தில், புலம்பெயர்ந்தோர் மற்றும் பயணம் செய்வோர் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Veglio அவர்களுக்கு 'ருமேனியாவின் விண்மீன்' என்ற விருது வழங்கப்பட்டது.
2. எருசலேம் நகரில் வத்திக்கானுக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் நல்லுறவு வளர்க்கும் கூட்டம்
சன.30,2013. திருப்பீடத்திற்கும் இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே உறவுகளை வளர்க்கும் ஒரு முயற்சியாக, இவ்விரு தரப்பின் பிரதிநிதிகள் இச்செவ்வாயன்று எருசலேம் நகரில் சந்தித்தனர்.
திருப்பீட நாடுகளுடனான உறவுகளின் நேரடிப் பொதுச்செயலர் பேரருள்திரு Ettore Balestrero தலைமையில் சென்றிருந்த வத்திக்கான் பிரதிநிதிகளுக்கும், இஸ்ரேல் அரசின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் Daniel Ayalon தலைமையில் வந்திருந்த இஸ்ரேல் அரசின் பிரதிநிதிகளுக்கும் இடையே இக்கூட்டம் நடைபெற்றது.
வத்திக்கானுக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே நிலவி வரும் நல்லுறவு இன்னும் வலுப்பெறுவதற்கான வழிமுறைகள் இக்கூட்டத்தில் பேசப்பட்டன.
இவ்விரு தரப்பினருக்கும் இடையே இவ்வாண்டு ஜூன் மாதம் வத்திக்கானில் அடுத்த கூட்டம் நடைபெறும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3. பிலிப்பின்ஸ் அரசு வாரிசு அரசியலை உடனடியாக நிறுத்தவேண்டும் - பிலிப்பின்ஸ் ஆயர்கள் பேரவை
சன.30,2013. வாரிசு அரசியலையும், வளர்ந்துவரும் ஊழலையும் பிலிப்பின்ஸ் அரசு உடனடியாக நிறுத்தவேண்டும் என்று பிலிப்பின்ஸ் ஆயர்கள் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த
மூன்று நாட்களாக பிலிப்பின்ஸ் நாட்டின் மணிலா நகரில் பிலிப்பின்ஸ்
கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் ஆண்டு நிறைவு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் இறுதியில், மேய்ப்புப்பணி மடல் ஒன்றை, ஆயர்கள் சார்பில் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Jose Palma இச்செவ்வாயன்று வெளியிட்டார்.
மக்களின் கவலைகளை வெளியிடவும், அவர்களோடு இணைந்து நன்னெறியை உறுதிப்படுத்தும் போராட்டத்தில் துணை நிற்கவும் ஆயர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்று பேராயர் Palma செய்தியாளர்களிடம் கூறினார்.
வாரிசு அரசியலைத் தடை செய்யும் வகையில் சட்டமொன்றை உருவாக்க, பிலிப்பின்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காட்டும் தயக்கம் வருத்தத்தைத் தருகிறது என்றும், இவ்வகை சட்டம் இயற்றப்படுவதற்கு திருஅவை முழுமையான ஆதரவு அளிக்கும் என்றும் பேராயர் Palma கூறினார்.
மக்கள் நலனில் அக்கறை கொண்டு, ஊழலற்ற
வகையில் அரசாளும் தகுதி பெற்றோரையே நடைபெறவிருக்கும் தேர்தல்களில் மக்கள்
தெரிவு செய்யவேண்டும் என்றும் பிலிப்பின்ஸ் ஆயர்களின் மேய்ப்புப்பணி மடல்
அழைப்பு விடுக்கிறது.
4. மகாராஷ்டிரா மாநிலக் கிறிஸ்தவர்களுக்கு அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்கவேண்டும் - மதசார்பற்ற கத்தோலிக்க அமைப்பு வேண்டுகோள்
சன.30,2013. மகாராஷ்டிரா மாநிலத்தின் Sindhudurg பகுதியில் இந்து அடிப்படைவாத குழுக்களின் வன்முறைகள் பரவி வருவதால், அங்கு
வாழும் கிறிஸ்தவர்களுக்கு மாநில அரசு தகுந்த பாதுகாப்பு அளிக்கவேண்டும்
என்று மதசார்பற்ற கத்தோலிக்க அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இம்மாதத்தில் Sawantwadi என்ற இடத்தில் கிறிஸ்தவ வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 600க்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் மீது இந்து அடிப்படைவாதிகள் தாக்குதல் நடத்தி, வழிபாட்டை நிறுத்தினர்.
இந்நிகழ்வையடுத்து, மதசார்பற்ற கத்தோலிக்க அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஜோசப் டயஸ், மாநில முதல்வர் Prithviraj Chavanக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நடைபெற்ற வன்முறையைக் குறித்து அரசு தீர ஆய்வு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கிறிஸ்தவர்களுக்கு எதிராக, மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்றுள்ள பல வன்முறைகளில் காவல்துறையினர் செயலற்று நின்றதையும், ஒரு சில இடங்களில் வன்முறையாளர்களுக்கு உதவிகள் செய்ததையும் இம்மடல் சுட்டிக்காட்டியுள்ளது.
5. தேவநிந்தனை சட்டத்தின் கீழ் 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த Barkat Masih விடுதலை
சன.30,2013. பாகிஸ்தானில், தேவநிந்தனை சட்டத்தின் கீழ் தவறாக கைது செய்யப்பட்ட Rimsha Masih என்ற சிறுமி அண்மையில் விடுவிக்கப்பட்டதையடுத்து, இதே சட்டத்தின்கீழ் 18 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த Barkat Masih என்பவரும் இச்செவ்வாயன்று விடுவிக்கப்பட்டார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 56 வயதான Barkat Masih, ஓர் இந்துக் குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும், கிறிஸ்தவ மறைக்கு மாறியவர். இவர் 2011ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி தேவநிந்தனை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
2009ம் ஆண்டு ஜூன் மாதம் தேவநிந்தனை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆசியா பிபி என்ற 46 வயது பெண்ணும், Rimsha Masih, Barkat Masih ஆகிய இருவரின் விடுதலையை அடுத்து விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் கிறிஸ்தவ சமுதாயம் எதிர்பார்க்கிறது.
பாகிஸ்தானில்
வாழும் சிறுபான்மையினரை அச்சத்தில் வாழவைக்கும் தேவநிந்தனை சட்டத்தை அரசு
மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று பன்னாட்டு அரசுகளிடமிருந்து பாகிஸ்தான்
அரசுக்குத் தொடர்ந்து விண்ணப்பங்கள் எழுந்து வருகின்றன.
6. நைஜீரியாவில் Boko Haram குழுவின் ஒரு பகுதியினர் ஆயுதங்களைக் களைய முன்வந்துள்ளனர்
சன.30,2013. புனிதப் போர் என்ற பெயரில் ஆப்ரிக்காவின் நைஜீரியாவில், வன்முறைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் Boko Haram என்ற குழுவினரின் ஒரு பகுதியினர் ஆயுதங்களைக் களைய முன்வந்துள்ளதாக அந்நாட்டு செய்தித் தாள் ஒன்று கூறியுள்ளது.
Borno என்ற பகுதியில் உள்ள Boko Haram குழுவினரின் தலைவர் Sheikh Abu Mohammad இம்முடிவை இத்திங்களன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
பல கிறிஸ்தவ கோவில்களையும், நடுநிலையான இஸ்லாமிய அமைப்புக்களையும் தாக்கி வந்த Boko Haram, தங்கள் குழுவைச் சேர்ந்த கைதிகளை எவ்வித நிபந்தனையுமின்றி அரசு விடுவிக்க வேண்டும் என்றும் விண்ணப்பித்துள்ளது.
தங்கள் நடவடிக்கைகளால், கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி, இஸ்லாமியப் பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதே தங்கள் முடிவுக்குக் காரணம் என்று இக்குழ்வின் தலைவர் Abu Mohammad எடுத்துரைத்தார்.
7. பறவைக் காய்ச்சல் மீண்டும் பரவும் ஆபத்து உள்ளது - FAO எச்சரிக்கை
சன.30,2013. தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடில், 2006ம்
ஆண்டு உலகின் பல பாகங்களிலும் பரவிய பறவைக் காய்ச்சல் மீண்டும் பரவும்
ஆபத்து உள்ளது என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) கூறியுள்ளது.
உலகில் தொடர்ந்து வரும் பொருளாதாரச் சரிவின் ஒரு விளைவாக, H5N1 எனப்படும் பறவைக் காய்ச்சல் கிருமிகள் குறித்த ஆய்வுகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன என்று கூறும் FAO அமைப்பின் தலைவர் Juan Lubroth, அரசுகள் விரைவில் விழித்துக் கொள்வது அவசியம் என்றும் கூறினார்.
2003ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு முடிய இந்நோய் தொடர்ந்து நீடித்து வந்தாலும், 2006ம் ஆண்டு இந்நோயின் தாக்கம் தீவிரமடைந்து, 63 நாடுகள் பாதிக்கப்பட்டன என்று FAO வின் இவ்வறிக்கை கூறுகிறது.
தற்போது காங்கோ குடியரசு நாட்டில் பெருமளவு பரவிவரும் இந்நோயின் தாக்கம் நிறுத்தப்படவில்லை எனில், தென் ஆப்ரிக்காவும், விரைவில், உலகமும் இந்நோயின் தாக்கத்தை உணரக்கூடிய ஆபத்து உள்ளது என்று FAO தலைவர் Lubroth தெரிவித்தார்.
8. இந்திய வீட்டுத்திட்டத்தில் தமிழர்களுக்குப் பாரபட்சம்
சன.30,2013.
இந்திய வீட்டுத் திட்டத்தில் தமிழ்க் கிராமங்களுக்குப் பாரபட்சம்
காட்டப்படுவதைக் கண்டித்து வவுனியாவில் இப்புதனன்று கண்டனப் பேரணியொன்று
நடத்தப்பட்டது. மாவட்ட மீள்குடியமர்ந்தோர் நலன் பேணும் அமைப்பு இதற்கான
அழைப்பை விடுத்திருந்தது.
வவுனியா
அரசு செயலகத்தை அடைந்த பேரணியின் முக்கியப் பிரதிநிதிகள் அரசுத்தலைவருக்கு
எழுதப்பட்ட விண்ணப்பம் ஒன்றை வவுனியா ஆளுனரிடம் கையளித்தனர்.
இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டு வரும் 50,000
வீட்டுத் திட்டத்தால் பயனடைவோரைத் தெரிவு செய்வதில் அமைச்சர் ரிசாட்
பதியுதீனும் ஏனைய அரசு அதிகாரிகளும் பாரபட்சமாகச் செயற்பட்டு வருகின்றனர்
என்று அந்த விண்ணப்பத்தில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.
விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்ட ஆளுனர், தமிழர் தரப்பினருடைய குறைகள், கோரிக்கைகள் என்பவற்றை விரிவாகக் கேட்டறிந்ததுடன், அது
குறித்து விசாரணைகள் நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தம்மிடம்
உறுதியளித்துள்ளதாக மாவட்ட மீள்குடியமர்ந்தோர் நலன் பேணும் அமைப்பின்
தலைவர் பொன்னையா தனஞ்சயநாதன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment