Thursday, 24 January 2013

CAtholic News in Tamil - 23/01/13


1. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தோனேசிய மக்களுக்கு உதவுமாறு திருத்தந்தை வேண்டுகோள்

2. திருஅவைச் சட்டங்களைச் சீர்திருத்தும்போது, திருஅவையைக் குறித்த எண்ணங்களும் சீர்திருத்தம் பெறும் - முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான்

3. இங்கிலாந்தில் வறியோர் மற்றும் வீடற்றோரை மரியாதையற்ற முறையில் நடத்துவதைத் தடுக்கும் ஒரு வார முயற்சி

4. துப்பாக்கிக் கலாச்சாரத்தைக் களைவதற்கு திருஅவை தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் - அமெரிக்க ஆயர்கள்

5. குணம் பெறுதல் மற்றும் புதுப்பித்தலை நோக்கி நடைபயில - கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக் கழக முயற்சியின் தொடர்ச்சி

6. அயல்நாடுகளுக்கு வேலைதேடிச் செல்லும் பெண்களுக்கு இலங்கை அரசு தகுந்த பாதுகாப்புத் தரவேண்டும் - Rizana Nafeekன் தாய்

7. பன்னாட்டு நிறுவனங்களின் தொழில் முயற்சிகள் சுற்றுச்சூழலுக்குப் பெரும் ஆபத்தாக அமைகின்றன - Greenpeace இயக்கத்தின் தலைவர்

8. இன்னும் ஐந்து ஆண்டுகளில் வேலையற்றோரின் எண்ணிக்கை 21 கோடியாக உயரும் - ILOவின் புதிய அறிக்கை

------------------------------------------------------------------------------------------------------

1. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தோனேசிய மக்களுக்கு உதவுமாறு திருத்தந்தை வேண்டுகோள்

சன.23,2012. இந்தோனேசியாவில் கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்குத் தனது செபத்தையும் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தலைநகர் ஜகார்த்தாவில், பெரும் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதம், பொருள்சேதம் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்திருப்பது குறித்த செய்திகளை மிகுந்த கவலையோடு கேட்டுவருவதாக, இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் கூறிய திருத்தந்தை, பாதிக்கப்பட்டுள்ள அம்மக்களில் யாரும் கைவிடப்படாதவாறு அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படுமாறு கேட்டுக்கொண்டார். அம்மக்களுக்காகச் செபிக்குமாறும் அனைவரையும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
கடைசியாக வந்த செய்திகளின்படி, ஜகார்த்தாவில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளத்தால் 26 பேர் இறந்துள்ளனர் மற்றும் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர் எனத் தெரிகிறது. இறந்துள்ளவர்களில் பலர் நீரில் மூழ்கி அல்லது மின்சாரம் தாக்கி இறந்துள்ளனர்.
ஜகார்த்தாவில் சில இடங்களில் இரண்டு மீட்டர் அளவுக்கு வெள்ளம் ஏற்ப்ட்டுள்ளநிலையில், ஏறக்குறைய 1,03,000 மக்கள் தற்போது தற்காலிகக் குடிசைகளில் வைக்கப்பட்டுள்ளனர். ஒரு கோடியே 40 இலட்சம் பேர் வாழும் இந்நகரின் 30 விழுக்காட்டுப் பகுதிகள் நீரால் சூழப்பட்டுள்ளன எனச் செய்திகள் கூறுகின்றன.

2. திருஅவைச் சட்டங்களைச் சீர்திருத்தும்போது, திருஅவையைக் குறித்த எண்ணங்களும் சீர்திருத்தம் பெறும் - முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான்

சன.23,2013. திருஅவைச் சட்டங்களைச் சீர்திருத்தும் பணியை மேற்கொள்ளும்போது, திருஅவையைக் குறித்த எண்ணங்களும் சீர்திருத்தம் பெறும் என்று முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் கூறியதை வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் நினைவு கூர்ந்தார்.
சனவரி 25ம் தேதி, வருகிற வெள்ளிக்கிழமையன்று திருஅவைச் சட்டங்களின் ஆய்வு நாளொன்று உரோம் நகரில் நடைபெறும் என்று திருஅவைச் சட்டங்களுக்கானத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Francis Coccopalmerio இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் அறிவித்தவேளையில், சட்டத் திருத்தங்களின் முயற்சிகளைத் துவக்கிவைத்த திருத்தந்தை 23ம் ஜானைக் குறித்துப் பேசினார்.
1983ம் ஆண்டு சனவரி 25ம் தேதி வெளியிடப்பட்ட திருஅவைச் சட்டத் தொகுப்பின் முப்பதாம் ஆண்டு நிறைவாக நடத்தப்படும் இந்த ஆய்வுக் கருத்தரங்கு, இரண்டாம் வத்திக்கான் சங்க 50ம் ஆண்டு நிறைவின்போது நடைபெறுவது மகிழ்வைத் தருகிறது என்று கர்தினால் Coccopalmerio எடுத்துரைத்தார்.
இவ்வெள்ளியன்று நடைபெறும் ஆய்வுக் கருத்தரங்கை Joseph Ratzinger அறக்கட்டளையும், இரண்டாம் ஜான்பால் அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருஅவைச் சட்டங்களுக்கானத் திருப்பீட அவையின் செயலர் ஆயர் Juan Ignacio Arrieta, மற்றும் Joseph Ratzinger அறக்கட்டளையின் தலைவர் பேராயர் Giuseppe Antonio Scotti ஆகியோரும் இச்செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


3. இங்கிலாந்தில் வறியோர் மற்றும் வீடற்றோரை மரியாதையற்ற முறையில் நடத்துவதைத் தடுக்கும் ஒரு வார முயற்சி

சன.23,2013. மனிதர்களை, முக்கியமாக, வறியோரை விசுவாசக் கண்கள் கொண்டு நோக்கும்போது, அவர்களில் இறைவனைக் காணமுடியும், எனவே, அவர்களைப்பற்றி அவசரத் தீர்ப்புகளைச் சொல்வது தவிர்க்கப்படும் என்று இங்கிலாந்து பேராயர் Bernard Longley கூறினார்.
வறியோர் மற்றும் வீடற்றோரை மரியாதையற்ற முறையில் நடத்துவதைத் தடுக்கும் விதமாக, இங்கிலாந்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ சபைகளும் இணைந்து பிப்ரவரி மாதம் 26ம் தேதி முதல் ஒரு வார முயற்சியொன்றை மேற்கொள்ளவிருக்கின்றன.
இந்த முயற்சி குறித்து பேசிய Birmingham பேராயர் Longley, ஒவ்வொரு மனிதருக்கும் உரிய அடிப்படை மாண்பை ஏற்றுக்கொள்வதே கிறிஸ்தவ வழிமுறை என்று எடுத்துரைத்தார்.
'முதல் கல்லை உன்னால் ஏறிய முடியுமா?' என்ற மையக் கருத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த ஒரு வார முயற்சியில், வறியோரை ஊடகங்கள் சித்தரிக்கும் தவறான போக்கிற்கு மாற்று வழிகள் தேடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் தற்போது வளர்ந்து வரும் பொருளாதாரச் சரிவுக்கு வறியோரும், வீடற்றோரும் காரணம் என்ற தவறான கருத்து பரவி வருவதாகவும், இக்கருத்தைச் சரிசெய்ய கிறிஸ்தவ சபைகள் இணைந்துவரும் என்றும், இம்முயற்சியின் ஒருங்கிணைப்பாளர் Alison Gelder கூறினார்.

4. துப்பாக்கிக் கலாச்சாரத்தைக் களைவதற்கு திருஅவை தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் - அமெரிக்க ஆயர்கள்

சன.23,2013. துப்பாக்கிகளைப் பயன்படுத்தும் வன்முறைக் கலாச்சாரத்திற்குப் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நமது செபங்களை எழுப்பும் அதே வேளையில், இவ்வன்முறையைக் களைவதற்கு தகுந்த நடவடிக்கைகளையும் திருஅவை மேற்கொள்வது அவசியம் என்று அமெரிக்க ஆயர்கள் கருதுகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 14ம் தேதி அமெரிக்காவின் கனெக்டிக்கட் மாநிலத்தின் நியூடவுன் நகரில் குழந்தைகள் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, துப்பாக்கி பயன்பாடு குறித்து அமெரிக்க ஆயர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
அமெரிக்க ஆயர் பேரவையின் மனித முன்னேற்றம், உள்நாட்டு நீதி பணிக்குழுவின் தலைவரான ஆயர Stephen Blaire, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அண்மையில் அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில், மீண்டும் ஒருமுறை தங்கள் நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
Newtown, Aurora, Tucson, Fort Hood, Virginia Tech, Columbine, Oak Creek, ஆகிய பல நகரங்களில் நடைபெற்றுள்ள வன்முறைகள் இனியும் தொடராமல் இருக்க, நாம் துரிதமாகச் செயல்பட வேண்டும் என்று ஆயரின் கடிதம் வலியுறுத்தியுள்ளது.
2011ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு முழுமையடையாத அறிக்கையின்படி, அமெரிக்காவில் அவ்வாண்டு 12,664 கொலைகள் நிகழ்ந்தன என்றும், இவற்றில் 68 விழுக்காடு அதாவது, 8,583 கொலைகள் துப்பாக்கிச் சூட்டினால் நடைபெற்றுள்ளன என்றும் தெரிகிறது.

5. குணம் பெறுதல் மற்றும் புதுப்பித்தலை நோக்கி நடைபயில - கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக் கழக முயற்சியின் தொடர்ச்சி

சன.23,2013. குருக்களால் பாலியல் வன்முறைகளுக்கு இலக்கானவர்கள் நலம் பெறும் வகையில் 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உரோம் நகரின் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கின் தொடர்ச்சியாக, இவ்வாண்டு பிப்ரவரி 5ம் தேதி ஒரு சில முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குணம் பெறுதல் மற்றும் புதுப்பித்தலை நோக்கி நடைபயில என்ற மையக் கருத்துடன் சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி முதல் 9ம் தேதி முடிய நடைபெற்ற கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எவ்விதம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன என்பதை ஆராய இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி கூட்டம் ஒன்று நடைபெறும்.
கடந்த ஆண்டு நடைபெற்ற கருத்தரங்கின் முடிவுகள் இத்தாலியம், ஆங்கிலம், ஜெர்மானியம், இஸ்பானியம், உட்பட எட்டு மொழிகளில் வெளியிடப்படும் என்றும், பிரெஞ்ச், போர்த்துகீசியம் உட்பட இன்னும் நான்கு மொழிகளில் விரைவில் இத்தொகுப்பு வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருஅவையில் பாலியல் குற்றங்கள் நிகழ்ந்தால், கணணித் தொழில்நுட்பம், மற்றும் இணையதள வசதிகளைப் பயன்படுத்தி, அவற்றை உடனுக்குடன் அடையாளம் கண்டு, களைவதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

6. அயல்நாடுகளுக்கு வேலைதேடிச் செல்லும் பெண்களுக்கு இலங்கை அரசு தகுந்த பாதுகாப்புத் தரவேண்டும் - Rizana Nafeekன் தாய்

சன.23,2013. என் மகளைப் போல அயல்நாடுகளுக்கு வேலைதேடிச் செல்லும் பெண்களுக்கு இலங்கை அரசு தகுந்த பாதுகாப்புத் தரவேண்டும் என்பது ஒன்றே என் விண்ணப்பம் என்று Rizana Nafeekன் தாய் கூறியுள்ளார்.
குழந்தை ஒன்றைக் கொன்றார் என்று Rizana Nafeek என்ற இளம்பெண் தீர்ப்பிடப்பட்டு, சவுதி அரேபியாவில் இம்மாதம் 9ம் தேதி தலைவெட்டப்பட்டு இறந்தார்.
இந்தக் கொடூரத் தண்டனையை அடுத்து, Rizana Nafeekன் தாய் Seeiadu Ahammaddu Rezeenaவுக்கு பண உதவிகள் அளிக்கப்பட்டபோது, அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்த Rezeena, அயல் நாடுகளில் பணிசெய்யும் இலங்கைப் பெண்களுக்கு அரசு தகுந்த உதவிகள் செய்யவேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்துள்ளார்.
Rezeena அரசுக்கு அனுப்பியுள்ள விண்ணப்பத்தை வடிவமைத்த கண்டி மறைமாவட்ட மனித உரிமைப் பணிக்குழுவின் தலைவர் அருள்தந்தை Nandana Mantunga, சவுதி அரேபியாவில் நிகழ்ந்தது மனித குலத்திற்கே இழைக்கப்பட்ட ஓர் அவமானம் என்று கூறினார்.
மற்றொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற காரணம் காட்டி, இலங்கை அரசு Rizana Nafeekன் வழக்கில் நீதியான முறையில் ஈடுபடவில்லை என்றும் அருள்தந்தை Mantunga சுட்டிக்காட்டினார்.

7. பன்னாட்டு நிறுவனங்களின் தொழில் முயற்சிகள் சுற்றுச்சூழலுக்குப் பெரும் ஆபத்தாக அமைகின்றன - Greenpeace இயக்கத்தின் தலைவர்

சன.23,2013. சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவேண்டும் என்று உலகின் வல்லரசுகள் வெளிப்படையாகக் கூறி வந்தாலும், அவ்வரசுகள் பன்னாட்டு நிறுவனங்களின்  பல பெரும் முயற்சிகளுக்கு அனுமதி அளிப்பது, சுற்றுச்சூழலுக்குப் பெரும் ஆபத்தாக அமைகின்றது என்று அகில உலக Greenpeace இயக்கத்தின் தலைவர் Kumi Naidoo கூறினார்.
கடந்த ஆண்டில் பன்னாட்டு நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளைப் பற்றிய அறிக்கையொன்று "Point of no return" அதாவது, 'மீளமுடியாத நிலை' என்ற தலைப்பில் Greenpeace அமைப்பால் வெளியிடப்பட்டது.
ஆஸ்திரேலியா, சீனா, அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா ஆகிய நாடுகள் அனுமதி தந்துள்ள 14 பெரும் தொழில் முயற்சிகளால் உலகின் சுற்றுச் சூழலுக்குப் பெரும் ஆபத்து உருவாகும் என்று இவ்வறிக்கை கூறுகிறது.
இந்த 14 தொழில் முயற்சிகளால் மட்டுமே, 2020ம் ஆண்டிற்குள், 634 கோடி டன் எடையுள்ள கரியமல வாயு (CO2) உலகில் அதிகரிக்கும் என்று இவ்வறிக்கை எச்சரிக்கிறது.

8. இன்னும் ஐந்து ஆண்டுகளில் வேலையற்றோரின் எண்ணிக்கை 21 கோடியாக உயரும் - ILOவின் புதிய அறிக்கை

சன.23,2013. 2012, மற்றும் 2013ம் ஆண்டுகளில் வேலையில்லா நிலை கூடுதலாகும் என்று ஐ.நா.வின் அகில உலகத் தொழில் அமைப்பான ILOவின் புதிய அறிக்கை கூறுகிறது.
வேலையற்றவர்களின் எண்ணிக்கை 2012ம் ஆண்டு 42 இலட்சமாக உயர்ந்துள்ளது என்றும், தற்போதைய நிலைப்படி, உலகெங்கும் 19 கோடியே 70 இலட்சம் பேர் வேலையின்றி உள்ளனர் என்றும் ILO இச்செவ்வாயன்று வெளியிட்ட இவ்வறிக்கை கூறுகிறது.
வேலையற்றோரில் 7 கோடியே 40 இலட்சம் பேர் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் இந்நிலை தொடர்ந்தால், இன்னும் ஐந்து ஆண்டுகளில் வேலையற்றோரின் எண்ணிக்கை 21 கோடியாக உயரும் என்றும், இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவைச் சரிசெய்ய உலக அரசுகள் சரியான முயற்சிகள் மேற்கொள்ளாததால், இந்த நிலை உருவாகியுள்ளது என்று இவ்வறிக்கையைச் சமர்ப்பித்த ILO தலைமை இயக்குனர் Guy Ryder கூறினார்.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...