1. அனைத்துலக நோயாளர் தினம் : செபம் செய்வதற்கான நல்ல வாய்ப்பு
2. இவ்வாண்டின் புனித வெள்ளி சிலுவைப்பாதைத் தியானங்களைத் தயாரிக்கிறார் கர்தினால் ராய்
3. ஆசியாவில் கிறிஸ்தவர்கள் நசுக்கப்படுவது குறித்து கர்தினால் பஞ்ஞாஸ்கோ அதிர்ச்சி
4. பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிறுத்துவதற்குப் புதுடெல்லியில் கத்தோலிக்கக் குழுக்கள் ஊர்வலம்
5. புனித பூமியில் இரண்டு நாடுகள் தீர்வுக்கு அமெரிக்க ஐக்கிய நாடு ஆதரவு வழங்க அழைப்பு
6. நைஜீரியர்கள் மக்களாட்சி மீதான ஆர்வத்தை விட்டுவிடக் கூடாது, ஆயர் மத்யூ
7. குவாத்தமாலாவில் நிதி நெருக்கடியைவிட உணவு நெருக்கடி மிகவும் கடுமையாக இருக்கின்றது, ஆயர்கள் எச்சரிக்கை
8. இந்தோனேசியாவின் புதிய விதிமுறைகளுக்கு ஆயர்கள் ஆதரவு
9. ஜாம்பியாவில் மனித உரிமைகள் மதிக்கப்படுவது அதிர்ச்சியூட்டும் விதத்தில் மோசமடைந்து வருகின்றது, ஆயர்கள் கவலை
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. அனைத்துலக நோயாளர் தினம் : செபம் செய்வதற்கான நல்ல வாய்ப்பு
சன.29,2013.
லூர்து அன்னைத் திருவிழாவான வருகிற பிப்ரவரி 11ம் தேதியன்று
சிறப்பிக்கப்படும் 21வது அனைத்துலக நோயாளர் தினத்திற்கான கருப்பொருள்
மற்றும் அத்தினம் சிறப்பிக்கப்படும் விதம் குறித்து இச்செவ்வாயன்று நிருபர்
கூட்டத்தில் விளக்கினார், திருப்பீட நலவாழ்வு அவைத் தலைவர் பேராயர் Zygmunt Zimowski.
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் இந்த அனைத்துலக நோயாளர் தினத்தை ஏற்படுத்தியது குறித்து விளக்கிய பேராயர் Zimowski, ஒருவர் தனது துன்பங்களைத் திருஅவையின் நலனுக்காக ஒப்புக்கொடுக்கவும், செபிக்கவும், பிறரோடு பகிர்ந்து கொள்ளவும் இந்த அனைத்துலக நாள், நல்ல வாய்ப்பாக இருக்கின்றது என்று கூறினார்.
தனது வேதனகைள், மரணம் மற்றும் உயிர்ப்பினால் மனித சமுதாயத்துக்கு மீட்பைக் கொண்டுவந்த கிறிஸ்துவின் திருமுகத்தை, தங்களது துன்புறும் சகோதர சகோதரிகளில் காண்பதற்கும் இந்த அனைத்துலக நாள் நல்ல வாய்ப்பை வழங்குகின்றது என்றும் பேராயர் Zimowski தெரிவித்தார்.
இந்த
அனைத்துலக நோயாளர் தினத்திற்கான திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின்
செய்தி ஏற்கனவே இம்மாதம் 8ம் தேதியன்று வெளியிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள்
ஒவ்வொருவரும் நல்ல சமாரியர்களாகச் செயல்படுமாறு அச்செய்தியில்
வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, நோயாளிகள்மீது அக்கறை காட்டுவதற்குக் கிறிஸ்தவர்களுக்குக் கடமை உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
21வது அனைத்துலக நோயாளர் தினம், ஜெர்மனியின் Altötting அன்னைமரித் திருத்தலத்தில் சிறப்பிக்கப்படவுள்ளது.
2. இவ்வாண்டின் புனித வெள்ளி சிலுவைப்பாதைத் தியானங்களைத் தயாரிக்கிறார் கர்தினால் ராய்
சன.29,2013.
வருகிற மார்ச் 29ம் தேதி புனித வெள்ளியன்று உரோம் கொலோசேயத்தில்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் முன்னிலையில் இடம்பெறும் சிலுவைப்பாதைப் பக்தி
முயற்சிக்குரிய தியானங்களைத் தயாரிக்கவுள்ளார், அந்தியோக்கியாவின் மாரனைட்ரீதி முதுபெரும் தலைவர் கர்தினால் பெக்காரா ராய்.
திருத்தந்தை கடந்த ஆண்டில் லெபனனுக்கு மேற்கொண்ட திருப்பயணத்தின்போது, நிலையற்றதன்மையை தொடர்ந்து எதிர்கொண்டுவரும் மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி ஏற்பட அழைப்பு விடுத்து, அப்பகுதியின் அனைத்துக் கிறிஸ்தவர்களுக்காகவும் செபித்ததற்கு நன்றிகூறும்விதமாக, இவ்வாண்டு புனித வெள்ளி சிலுவைப்பாதைத் தியானச் சிந்தனைகளைத் தயாரிக்கிறார், கர்தினால் பெக்காரா ராய்.
இத்தயாரிப்புக்களில் இரு லெபனன் இளையோர் பங்கு கொள்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, இயேசு பிறந்த மத்திய கிழக்குப் பகுதியில் வருங்காலக் கிறிஸ்தவத்தின் அடையாளமாக இருக்கின்றது எனவும் கூறப்பட்டுள்ளது.
உரோமையப் பேரரசில் கி.பி.80ல் கட்டி முடிக்கப்பட்ட மிகப்பெரிய கேளிக்கை அரங்கான கொலோசேயத்தில், ஆதிக்கிறிஸ்தவர்கள் பெருமெண்ணிக்கையில் மிருகங்களுக்கு இரையாகப் போடப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
3. ஆசியாவில் கிறிஸ்தவர்கள் நசுக்கப்படுவது குறித்து கர்தினால் பஞ்ஞாஸ்கோ அதிர்ச்சி
சன.29,2013. ஆசியாவிலும், ஏன் உலகெங்கிலும் கிறிஸ்தவர்கள் நசுக்கப்படுவது, அகில உலகத் திருஅவையில் கலக்கத்தை உருவாக்கியுள்ளது என்று, இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவரான ஜெனோவா பேராயர் கர்தினால் ஆஞ்சலோ பஞ்ஞாஸ்கோ கூறினார்.
உரோம் நகரில் இடம்பெற்றுவரும் இத்தாலிய ஆயர் பேரவையின் நிலைத்த அவைக் கூட்டத்தில் இவ்வாறு கவலை தெரிவித்த கர்தினால் பஞ்ஞாஸ்கோ, உலகெங்கும்
பல கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள்
2012ம் ஆண்டில் கொல்லப்பட்டுள்ளனர் என்று வல்லுனர்கள் கூறுவதையும்
சுட்டிக்காட்டினார்.
இவ்வெண்ணிக்கைத் திகிலூட்டுவதாக இருக்கின்றது என்றும், பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்காகவும் கிறிஸ்தவர்கள் நசுக்கப்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இத்தாலிய ஆயர்கள் கூட்டத்தில், அந்நாட்டின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக வாழ்வின் நிலைமைகள் குறித்து வழக்கமாக எடுத்துரைக்கும் கர்தினால் பஞ்ஞாஸ்கோ, தற்போதைய கூட்டத்தில் ஆசியாவிலும் வட ஆப்ரிக்காவிலும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக இடம்பெறும் சகிப்பற்றதன்மை குறித்தும் பேசினார்.
4. பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிறுத்துவதற்குப் புதுடெல்லியில் கத்தோலிக்கக் குழுக்கள் ஊர்வலம்
சன.29,2013. இந்தியாவில் பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கத்தில், இப்புதனன்று கத்தோலிக்கக் குழுக்கள் புதுடெல்லியில் ஊர்வலம் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளன.
இந்திய ஆயர் பேரவையின் பெண்கள் பணிக்குழு, டெல்லி உயர்மறைமாவட்டம் மற்றும் பிற கிறிஸ்தவ நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், வட இந்திய ஆயர் பேரவை(RBCN), மகாத்மா காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட நினைவு நாளான சனவரி 30ம் தேதியன்று டெல்லி ராஜ்காட்டில் இந்த ஊர்வலத்தை நடத்தவுள்ளது.
இளையோர் மத்தியில் நேர்மறையான எண்ணங்களை விதைக்கும் செயல்திட்டங்களை வகுக்குமாறு, அனைத்துப் பங்குகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற கிறிஸ்தவ நிறுவனங்களுக்கும் கத்தோலிக்கக் குழுக்கள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்த ஊர்வலம் குறித்து பத்திரிகைகளில் அறிக்கை வெளியிட்டுள்ள டெல்லி துணை ஆயர் பிராங்கோ மூலக்கல், இந்தியாவின் 50 விழுக்காட்டு மக்களுக்குப் பாதுகாப்பான இடத்தை வழங்குவது நமது கடமையும் பொறுப்பும் ஆகும் என்று கூறியுள்ளார்.
5. புனித பூமியில் இரண்டு நாடுகள் தீர்வுக்கு அமெரிக்க ஐக்கிய நாடு ஆதரவு வழங்க அழைப்பு
சன.29,2013. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்கும் இடையே இடம்பெறும் மோதல்களுக்கானத் தீர்வில், “இரண்டு நாடுகள்”
என்ற அமைதி ஒப்பந்தம் கொண்டுவரப்படுவதற்காக உழைக்குமாறு அமெரிக்க ஐக்கிய
நாட்டு அரசுத்தலைவர் ஒபாமா நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர் அந்நாட்டின்
பல்சமயத் தலைவர்கள்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் கிறிஸ்தவ, முஸ்லீம் மற்றும் யூத மதங்களைச் சார்ந்த 30 குழுக்களின் தலைவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல்-பாலஸ்தீனிய அமைதி ஒப்பந்தத்திற்கானத் துணிச்சலான புதிய முயற்சிகளுக்கு, 2013ம் ஆண்டின் புதிய நிர்வாகத்தில் உடனடியாக முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனாவுக்கு இடையே அமைதிக்கான தீர்வுக்குரிய வாய்ப்பு நலிந்து வருவதாகவும், தற்போதைய தேக்கநிலை, இவ்விரு தரப்புகளும் புறக்கணிக்கப்படத் தூண்டப்படக்கூடும் எனவும் அமெரிக்கப் பல்சமயத் தலைவர்களின் அறிக்கை எச்சரிக்கின்றது.
இரண்டு நாடுகள் தீர்வே, அப்பகுதியில் இடம்பெறும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் உண்மையான ஒரே தீர்வு என்றும் அத்தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
6. நைஜீரியர்கள் மக்களாட்சி மீதான ஆர்வத்தை விட்டுவிடக் கூடாது, ஆயர் மத்யூ
சன.29,2013. நைஜீரியர்கள் மக்களாட்சி மீதான ஆர்வத்தை விட்டுவிடக் கூடாது என்று அந்நாட்டின் Sokoto ஆயர் Matthew Hassan Kukah கேட்டுக் கொண்டார்.
“தேசியக் கட்டமைப்பு : சவால்களும் உண்மைத்தன்மைகளும்” என்ற தலைப்பில் அபுஜாவில், “நம்பகமான தினத்தாள்கள் உரையாடல்” என்ற அமைப்பு நடத்திய கூட்டத்தில் உரையாற்றிய ஆயர் மத்யூ, தேசிய வரைபடத்தில் ஒரு நாடு இருந்தால் மட்டும் போதாது, மாறாக, அந்நாடு தேசிய அளவில் ஒன்றிணைந்த நாடாகக் கட்டி எழுப்பப்பட வேண்டும் என்று கூறினார்.
1960களின் தொடக்கத்தில் நைஜீரியாவை ஆட்சி செய்த பிரதமர் Alhaji Tafawa Balewa முதல், அந்நாட்டின் ஒவ்வொரு தலைவருமே ஏதோ ஒரு நிகழ்வினால் ஆட்சிக்கு வந்தவர்கள் எனவும், நாட்டின் வருங்காலத்துக்கு உறுதியளிக்கும் நல்ல தலைவர்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டுமெனவும் ஆயர் கேட்டுக் கொண்டார்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் ஏறக்குறைய சம அளவில் இருக்கின்றனர். ஆயினும், இசுலாமிய சட்டத்தைப் புகுத்த விரும்பும் தீவிரவாதிகளால் கிறிஸ்தவ ஆலயங்களும் நிறுவனங்களும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.
நைஜீரியாவில் எண்ணெய் போன்ற இயற்கை வளங்கள் அதிகமாக இருந்தும், அந்நாட்டின்
16 கோடியே 20 இலட்சம் மக்களில் ஏறக்குறைய 10 கோடிப் பேர் ஒரு நாளைக்கு ஒரு
டாலருக்குக் குறைவான வருவாயில் வாழ்வதாகச் சொல்லப்படுகின்றது.
7. குவாத்தமாலாவில் நிதி நெருக்கடியைவிட உணவு நெருக்கடி மிகவும் கடுமையாக இருக்கின்றது, ஆயர்கள் எச்சரிக்கை
சன.29,2013. குவாத்தமாலாவில் ஒருங்கிணைந்த வளர்ச்சி, ஒருமைப்பாட்டுணர்வு, நிலைகுலையாத்தன்மை ஆகியவற்றை அடைவதற்கு வளர்ச்சியில் புதிய யுக்தியும், பொருளாதாரத்தில் புதிய கண்ணோட்டமும் அவசியம் என்று அந்நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர்.
இவற்றை எட்டுவதற்கு அரசு தேசிய அளவில் நீண்ட மற்றும் குறுகிய காலத் திட்டங்களை, குறிப்பாக, இளையோருக்கும் சிறாருக்கும் பயனளிக்கும் திட்டங்களை அமைக்க வேண்டுமென்றும் ஆயர்கள் கேட்டுள்ளனர்.
மத்திய
அமெரிக்க நாடான குவாத்தமாலாவின் குவாத்தமாலா நகரத்தில் கடந்த வாரத்தில்
ஆண்டுக் கூட்டத்தை நிறைவு செய்து அறிக்கை வெளியிட்ட ஆயர்கள் இவ்வாறு
கூறியுள்ளனர்.
புதிய பொருளாதார, வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துவதற்கு, நாட்டின்
புதுப்பிக்க முடியாத இயற்கை வளங்களைச் சுரண்டுவதை நிர்வகிக்கும்
சட்டங்களில் மாற்றங்கள் தேவை என்றும் ஆயர்களின் அறிக்கை
பரிந்துரைக்கின்றது.
8. இந்தோனேசியாவின் புதிய விதிமுறைகளுக்கு ஆயர்கள் ஆதரவு
சன,29,2013.
இந்தோனேசியாவில் சமூக மற்றும் சமயக் கலவரங்களை நிறுத்துவதற்கு அந்நாட்டில்
கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிமுறைகளுக்கு ஆயர்கள் ஆதரவு
தெரிவித்துள்ளனர்.
18
ஆயிரத்துக்கு மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவின் உறுதியான
தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற சமூக மற்றும் சமயக் கலவரங்களை
நிறுத்துவதற்கும், தடை செய்வதற்குமென உருவாக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளில் அந்நாட்டின் அரசுத்தலைவர் Susilo Bambang Yudhoyono இத்திங்களன்று கையெழுத்திட்டார்.
மத்திய அரசு, உள்ளூர் அரசு அதிகாரிகள், காவல்துறை, இராணுவம் ஆகியவைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் விதத்தில் இந்தப் புதிய விதிமுறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
2012ம் ஆண்டில் இந்தோனேசியாவில் இடம்பெற்ற சமூக மற்றும் சமயக் கலவரங்களும், பயங்கரவாதத் தாக்குதல்களும், வன்முறைகளும், கிளர்ச்சிகளுமே இப்புதிய முயற்சிக்குக் காரணம் என்று அரசுத்தலைவர் Yudhoyono விளக்கியுள்ளார்.
9. ஜாம்பியாவில் மனித உரிமைகள் மதிக்கப்படுவது அதிர்ச்சியூட்டும் விதத்தில் மோசமடைந்து வருகின்றது, ஆயர்கள் கவலை
சன.29,2013. ஜாம்பியாவில் மனித உரிமைகள் மதிக்கப்படுவதும், அவை
பாதுகாக்கப்படுவதும் அதிர்ச்சியூட்டும் விதத்தில் மோசமடைந்து வருகின்றதென
அந்நாட்டு ஆயர்கள் தங்களது மேய்ப்புப்பணி அறிக்கையில் கூறியுள்ளனர்.
அரசு அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை, தங்களது விருப்பம்போல் பயன்படுத்துவதும், அரசுக்கு எதிராகப் பேசும் தலைவர்களும் தனிமனிதரும் கைது செய்யப்படும் அளவுக்கு அச்சுறுத்தப்படுவதும், கேள்விகளால் நச்சரிக்கப்படுவதுமே நாட்டின் இந்நிலைக்குக் காரணம் என ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.
மறையுரைகளில் அரசை விமர்சிக்கும் கத்தோலிக்கக் குருக்களும்கூட அச்சுறுத்தப்படுகின்றனர் எனவும் கூறும் ஆயர்களின் அறிக்கை, ஒவ்வொருவரும் தங்களின் கடவுளின் முன்பாக நீதியுடன் செயல்படுவதும், தாழ்மையுடன் நடந்து கொள்வதும் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லும் எனவும் பரிந்துரைக்கின்றது.
No comments:
Post a Comment