1. காயப்பட்டிருக்கும் சிரியா, ஈராக் ஆகிய நாடுகளின் மக்கள், கிறிஸ்துவின் காயங்களுடன் ஒன்றிக்கப்பட்டுள்ளனர் - கர்தினால் Sandri
2. நம்பிக்கை ஆண்டையொட்டி, இங்கிலாந்து ஆயர்கள் பேரவை வெளியிட்டு வரும் வீடியோ குறும்படங்கள்
3. தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு இன்னமும் வழங்கப்படவில்லை - யாழ்ப்பாண ஆயர் சவுந்தரநாயகம்
4. TED.comன் கருத்தரங்கு ஏப்ரல் மாதம் 19ம் தேதி வத்திக்கானில் நடைபெறும்
5. இனக் கலவரங்களின்போது பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாவதையும் இந்திய அரசு கருத்தில் கொள்ளவேண்டும் - CSW
6. பெண்கள் மீது காட்டப்பட வேண்டிய மரியாதையை, தகுந்த பாலியல் கல்வி வழியாக புகட்ட வேண்டும் - இந்திய கத்தோலிக்கப் பொதுநிலையினர்
7. உலக மீட்பர் திரு உருவச் சிலையை ஹெலிகாப்டரில் இருந்தபடியே திருத்தந்தை பார்வையிடுவார்
8. அறிவியல் ஆய்வுகளிலும் பெண்களின் பங்கு அதிகரிக்கும் வழிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - ILO அதிகாரி
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. காயப்பட்டிருக்கும் சிரியா, ஈராக் ஆகிய நாடுகளின் மக்கள், கிறிஸ்துவின் காயங்களுடன் ஒன்றிக்கப்பட்டுள்ளனர் - கர்தினால் Sandri
சன.09,2013. மத்திய கிழக்கு நாடுகளின் வேதனைக் குரலை உலகம் கேட்டு வருகிறது, சிறப்பாக, நீண்ட காலமாகக் காயப்பட்டிருக்கும் சிரியா, ஈராக் ஆகிய நாடுகளின் மக்கள், கிறிஸ்துவின் காயங்களுடன் ஒன்றிக்கப்பட்டுள்ளனர் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
கீழைரீதி திருப்பீடப் பேராயத்தின் தலைவரான கர்தினால் Leonardo Sandri, சனவரி 6ம் தேதி முதல், 11ம் தேதி முடிய எகிப்தில் மேற்கொண்டுவரும் பயணத்தின் ஒரு பகுதியாக, முத்திப்பேறு பெற்ற Maria Caterina Troiani என்ற அருள் சகோதரியின் 200ம் ஆண்டு நிறைவு விழாவில் இப்புதனன்று கலந்து கொண்டார்.
இவ்விழாவில் திருப்பலி நிகழ்த்தி, மறையுரை வழங்கிய கர்தினால் Sandri, தண்ணீர் மீது இயேசு நடந்துவந்த நிகழ்வின்போது, "அஞ்சாதீர்கள், நான்தான்" என்று அவர் கூறிய வார்த்தைகளை முத்திப்பேறு பெற்ற Caterina தன் வாழ்வில் அடிக்கடி பயன்படுத்தியதைச் சுட்டிக்காட்டினார்.
'கிறிஸ்துவ வாழ்வை முழுமையாக வாழ்வதற்கு அஞ்சா நெஞ்சம் கொண்டிருக்க வேண்டும் என்பதை அருள்சகோதரி Caterina சொல்லித் தருகிறார்' என்று முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் கூறியதையும் தன் மறையுரையில் எடுத்துரைத்தார் கர்தினால் Sandri.
2. நம்பிக்கை ஆண்டையொட்டி, இங்கிலாந்து ஆயர்கள் பேரவை வெளியிட்டு வரும் வீடியோ குறும்படங்கள்
சன.09,2013. மக்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ள விசுவாசத்தின் வழியாக இறைவனின் இருப்பை என் வாழ்விலும் உணர்ந்துள்ளேன் என்று கர்தினால் Cormac Murphy O’Connor கூறினார்.
நடைபெற்றுவரும் நம்பிக்கை ஆண்டையொட்டி, இங்கிலாந்து, வேல்ஸ் ஆயர்கள் பேரவை வெளியிட்டு வரும் வீடியோ குறும்படங்களில் கர்தினால் O’Connor அளித்த பேட்டி இடம் பெற்றுள்ளது.
குழந்தைப் பேறு இல்லாமல் வாடிய ஒரு கத்தோலிக்கத் தம்பதியர் இடைவிடாமல் செபித்துவந்ததன் பலனாக, பத்தாண்டுகள் சென்று அவர்களுக்குக் குழந்தைச் செல்வம் கிடைத்தபோதும், மாற்றுத் திறன் கொண்ட தன் மகளுக்காகப் பணிகள் செய்துவரும் ஒரு தந்தையின் வாழ்வைக் கண்டபோதும் தனது நம்பிக்கை வளர்ந்ததாக கர்தினால் O’Connor விளக்கிக் கூறினார்.
இங்கிலாந்து ஆயர் பேரவை வெளியிட்டு வரும் இக்குறும்படங்கள் வரிசையில் இதுவரை Westminster பேராயர் Vincent Nichols, Middlesbrough ஆயர் Terence Drainey, Shrewsbury ஆயர் Mark Davies ஆகியோரின் பேட்டிகள் இதுவரை இடம்பெற்றுள்ளன.
இத்துடன், 2012ம்
ஆண்டு ஜூன் மாதம் அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற்ற அகில உலக திரு
நற்கருணை மாநாட்டில் பதிவான காட்சிகளும் இக்குறும்படங்கள் வழியே
வெளியிடப்பட்டுள்ளன.
3. தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு இன்னமும் வழங்கப்படவில்லை - யாழ்ப்பாண ஆயர் சவுந்தரநாயகம்
சன.09,2013.
இலங்கை அரசு உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்றுள்ளபோதும் தமிழ் மக்கள்
எதிர்பார்க்கும் தீர்வு இன்னமும் வழங்கப்படவில்லை என யாழ்ப்பாண ஆயர் தாமஸ்
சவுந்தரநாயகம் பிரான்ஸ் நாட்டின் தூதுவர் குழுவிடம் எடுத்துரைத்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் Christine Robichon தலைமையிலான குழுவினர் இப்புதனன்று யாழ்ப்பாண ஆயரையும், மாவட்டச் செயலரையும் சந்தித்து கலந்துரையாடியபோது, ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம் இவ்வாறு கூறினார்.
தொழில் பிரச்சனைகள், மற்றும் அரசியல் பிரச்சனைக்கான தீர்வு போன்றன இன்னமும் இழுபறி நிலையிலேயே இருப்பதாக சுட்டிக்காட்டிய ஆயர் சவுந்தரநாயகம், தமிழ் மக்கள் இன்று தமக்குள்ள பிரச்சனைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே தீர்வுகளைத் தேடாமல், தமக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்று கிடைப்பதையே அதிகம் எதிர்பார்க்கின்றனர் எனக் கூறினார்.
வடஇலங்கையில்
இனங்களுக்கிடையே நிலவும் நல்லுறவு முழுமையாக ஏற்படவில்லை எனவும் அதனை
ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் போதுமான அளவில் இல்லையெனவும் ஆயர்
சவுந்தரநாயகம் சுட்டிக்காட்டினார்.
4. TED.comன் கருத்தரங்கு ஏப்ரல் மாதம் 19ம் தேதி வத்திக்கானில் நடைபெறும்
சன.09,2013. இணையதளத்தில் மிக அதிக அளவில் காணப்படும் ஒரு வலைத்தளமாக விளங்கும் TED.com என்ற
அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்படும் ஒரு கருத்தரங்கு வருகிற ஏப்ரல் மாதம்
19ம் தேதி வத்திக்கானில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிநுட்பம், கேளிக்கை, சமுதாயப் பிரச்சனைகள் என்ற பல்வேறு அம்சங்களைப் பற்றிய தலைப்புக்களில் வழங்கப்படும் சிறப்பான சொற்பொழிவுகளைக் கொண்ட TED.com என்ற இணையதள அமைப்பாளர்கள் 'இன்றைய காலத்தில் மதச் சுதந்திரம்' என்ற தலைப்பில் இக்கருத்தரங்கை நடத்த உள்ளனர்.
கலாச்சாரத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi, மற்றும் பல்வேறு மதங்களின் சிந்தனையாளர்கள் கலந்துகொள்ளும் இக்கருத்தரங்கு இணையதளம் வழியாக பல கோடி மக்களை சென்றடையும் என்று, இக்கருத்தரங்கின் அமைப்பாளர் Giovanna Abbiati கூறினார்.
இன்றைய உலகில் மதசார்பற்ற நிலையும், மத அடிப்படைவாதமும் அமைதியை வெகுவாக குலைத்துவருவதால், மதச்சுதந்திரம் பற்றிய இக்கருத்தரங்கு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் என்று கருத்தரங்கின் அமைப்பாளர் Abbiati மேலும் கூறினார்.
5. இனக் கலவரங்களின்போது பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாவதையும் இந்திய அரசு கருத்தில் கொள்ளவேண்டும் - CSW
சன.09,2013. பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி சிந்தித்துவரும் இந்திய அரசு, இனக் கலவரங்களின்போது பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாவதையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்று CSW (Christian Solidarity Worldwide) என்ற உலகளாவிய கிறிஸ்தவ ஒருங்கிணைப்பு அமைப்பு கூறியுள்ளது.
23 வயது இளம்பெண் ஒருவர், புதுடில்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இறந்ததையடுத்து, பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
1990களில் மும்பையில் நடைபெற்ற கலவரங்களின்போதும், 2002ம்
ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கலவரங்களின்போதும் சிறுபான்மை சமுதாயத்தைச்
சேர்ந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்குப் பலியானதை இவ்வமைப்பு தனிப்பட்ட
விதத்தில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், 2008ம்
ஆண்டு கந்தமால் கலவரங்களின்போது பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட
அருள்சகோதரி ஒருவர் நான்காண்டுகளுக்குப் பிறகு இன்னும் நீதி கிடைக்காமல்
இருப்பதையும் இவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
6. பெண்கள் மீது காட்டப்பட வேண்டிய மரியாதையை, தகுந்த பாலியல் கல்வி வழியாக புகட்ட வேண்டும் - இந்திய கத்தோலிக்கப் பொதுநிலையினர்
சன.09,2013.
பாலியல் வன்கொடுமைகளைச் செய்யும் குற்றவாளிகளுக்கு அமிலங்கள் மூலம் ஆண்மை
இழக்கச் செய்தல் அல்லது மரணதண்டனை ஆகிய தண்டனைகள் வழங்குவது
இக்கொடுமைக்குத் தீர்வாகாது என்று "Catholic Secular Forum" (CSF) எனப்படும் இந்திய கத்தோலிக்கப் பொதுநிலையினர் அமைப்பொன்று கூறியது.
இதே எண்ணங்களை வலியுறுத்தி, இந்திய காரித்தாஸ் அமைப்பும் இந்திய அரசு நியமித்துள்ள Verma குழுவுக்கு பதினோரு அம்சங்கள் அடங்கிய அறிக்கையொன்றை அனுப்பியுள்ளது.
மரணதண்டனை என்பது எந்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நிலை என்பதே கத்தோலிக்கத் திருஅவையின் கொள்கை என்று கூறும் இவ்வமைப்புகள், பெண்கள்
மீது காட்டப்பட வேண்டிய மரியாதையை தகுந்த பாலியல் கல்வி வழியாக புகட்ட
முயற்சிகள் மேற்கொள்வது நீண்டகால தீர்வாக அமையும் என்று கூறியுள்ளன.
தற்போது கேரளாவில் உள்ள சீரோ மலபார் ரீதித் திருஅவை பயன்படுத்தும் கல்வி முறையை எடுத்துக்காட்டாகக் கூறி, இதையொத்த
பாடத் திட்டத்தை மறைகல்வியோடு இணைத்து வழங்க இந்திய ஆயர் பேரவை முயற்சிகள்
மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய கத்தோலிக்கப் பொதுநிலையினர் அமைப்பு
வேண்டுகோள் விடுத்துள்ளது.
7. உலக மீட்பர் திரு உருவச் சிலையை ஹெலிகாப்டரில் இருந்தபடியே திருத்தந்தை பார்வையிடுவார்
சன.09,2013. இவ்வாண்டு ஜூலை மாதம் பிரேசில் நாட்டில் உலக இளையோர் நாள் கொண்டாப்படும்போது, அந்நாட்டிற்குச் செல்லும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அங்குள்ள உலக மீட்பர் திரு உருவச் சிலையை ஹெலிகாப்டரில் இருந்தபடியே பார்வையிடுவார் என்று Rio de Janeiro பேராயர் Orani Tempesta கூறினார்.
உலக நவீன அதிசயங்களில் ஒன்று என அறிவிக்கப்பட்டுள்ள 100 அடி உயரமான உலக மீட்பர் உருவம் அமைந்துள்ள குன்று, நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களின்போது 24 மணி நேரமும் திறந்திருக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பல
நாடுகளின் இளையோர் அடங்கிய சிறு குழுக்கள் இந்தத் திரு உருவைச் சுற்றி
நின்று உலக அமைதிக்காகச் செபிக்கும் நிகழ்ச்சிகள் உலக இளையோர் நாட்களில்
நடைபெறும் என்றும் பேராயர் Tempesta தெரிவித்தார்.
20
இலட்சம் இளையோர் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படும் இந்த இளையோர்
நாள் "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்" என்ற
மையக்கருத்துடன் கொண்டாடப்படும்.
8. அறிவியல் ஆய்வுகளிலும் பெண்களின் பங்கு அதிகரிக்கும் வழிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - ILO அதிகாரி
சன.09,2013. சமூகவியல், மற்றும் கலைத் துறைகளில் பெண்களின் பங்கு அதிகம் இருப்பதுபோல், அறிவியல் துறைகளிலும், அறிவியல் ஆய்வுகளிலும் பெண்களின் பங்கு அதிகரிக்கும் வழிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐ.நா. அதிகாரி ஒருவர் கூறினார்.
பெண்களின் அறிவுத் திறன் பற்றிய பாரம்பரியக் கருத்துக்கள் ஆழமாக வேரூன்றியிருப்பதால், அறிவியல் துறைகளில் பெண்களின் பங்கு அதிகம் இல்லை என்று ஐ.நா.வின் அங்கமாகிய அகில உலக தொழிலாளர் அமைப்பின் (ILO) அதிகாரி Claude Akpokavie கூறியுள்ளார்.
பெண்கள் மென்மையான துறைகளுக்கு மட்டுமே தகுதியானவர்கள் என்ற தவறான கண்ணோட்டம் வளரும் நாடுகளில் மட்டுமல்ல, வளர்ச்சி அடைந்துள்ள நாடுகளிலும் காணப்படுகிறது என்று ILO வெளியிட்டுள்ள ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
அறிவியல் துறைகளில் பெண்கள் தகுதியான பட்டங்கள் பெற்றிருந்தாலும், அவர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்கும்போது வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்றனர் என்று ILO அதிகாரி Akpokavie எடுத்துரைத்தார்.
No comments:
Post a Comment