Sunday, 6 January 2013

Catholic News in Tamil - 05/01/13

1. திருத்தந்தை நான்கு புதிய ஆயர்களுக்குத் திருநிலைப்பாடு

2. இசுலாமியத் தீவிரவாதிகளின் வன்முறைக்குத் திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கண்டனம்

3. கர்தினால் ஃபிலோனி : மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் நிலையான அமைதியை ஏற்படுத்த உரையாடலே சிறந்த வழி

4. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் சிறார் படைவீரர் குறித்து ஐ.நா. எச்சரிக்கை

5. 2012ம் ஆண்டில் பாப்பிறையின் பிறரன்பு நிறுவனத்தின் உதவிகள்

6. ஜெர்மனியில் வளர்ந்து வரும் ஆயுதத் தொழிற்சாலை குறித்து ஆயர்கள் கண்டனம்   

7. பேராயர் மச்சாடோ : குடும்பங்களில் வாழ்வை மதிப்பது குறித்த கல்வி அவசியம்  

8. 2015ம் ஆண்டின் ஐ.நா.வின் இலக்கை இந்தியா எட்டாது, சமூக ஆர்வலர்கள்

9. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இலங்கையர் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர், ஐ.நா.

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை நான்கு புதிய ஆயர்களுக்குத் திருநிலைப்பாடு

சன.05,2013. ஆண்டவரின் திருக்காட்சித் திருவிழாவான இஞ்ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நிகழ்த்தும் திருப்பலியில் நான்கு அருள்பணியாளர்களை ஆயர்களாக உயர்த்தும் திருச்சடங்கை நிறைவேற்றுவார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருப்பீடத் தலைமையகத்தில் தற்போது பணியாற்றும் இவர்கள் நால்வரில் ஒருவரான பேரருள்திரு Georg Gaenswein, திருத்தந்தையின் அந்தரங்கச் செயலராவார். 56 வயதாகும் Gaenswein, பாப்பிறை இல்ல நிர்வாகத்தின் தலைவராகவும் அண்மையில் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டார்.
மேலும், மற்ற மூவரில் ஒருவரான இத்தாலியர் பேரருள்திரு Vincenzo Zani(62) கத்தோலிக்கக் கல்விப் பேராயத்தின் செயலராகப் பணியாற்றி வருகிறார். இன்னும், நைஜீரிய நாட்டவர் பேரருள்திரு Fortunatus Nwachukwu(52), நிக்கராகுவா நாட்டுக்குத் திருப்பீடத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக, திருப்பீடச் செயலகத்தில் பணியாற்றி வருகிறவர். நான்காவது நபரான பேரருள்திரு Nicolas Thevenin(54), திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனேக்குச் செயலராகப் பணியாற்றியவர் மற்றும் திருப்பீடத் தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.  

2. இசுலாமியத் தீவிரவாதிகளின் வன்முறைக்குத் திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கண்டனம்
சன.05,2013. இசுலாம் மதத்தைப் பின்பற்றாத மக்கள்மீது சில அரசுகள் ஷாரியா என்ற இசுலாமியச் சட்டத்தைத் திணிப்பது குறித்தும், இசுலாமியத் தீவிரவாதிகளின் வன்முறை குறித்தும் கவலை தெரிவித்துள்ளார் திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran.
லொசர்வாத்தோரே ரொமானோ என்ற திருப்பீடச்சார்புத் தினத்தாளுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கவலை தெரிவித்துள்ளார் கர்தினால் Tauran.
இசுலாமியச் சட்டத்தை அனைவர்மீதும் வலுக்கட்டாயமாகத் திணிக்கும் வழிகளைத் தேடுவதற்கு அல்லது வன்முறையைப் பயன்படுத்துவதற்கு மதத்தைக் காரணம் காட்டித் தங்களது செயல்களைச் சில தடம்புரண்ட சிறுபான்மைக் குழுக்கள் நியாயப்படுத்துகின்றன, ஆனால் இச்செயல்கள்  அவர்களது சமூகங்களுக்கு மட்டுமல்லாமல் முழு உலகத்துக்கே ஆபத்தாக இருக்கின்றன என்றும் கூறினார் கர்தினால்.
மதங்களுக்கு இடையே உரையாடல் இடம்பெறுவதற்கும் இச்செயல்கள் தடைகளாக உள்ளன என்றுரைத்த கர்தினால் Tauran, பாகிஸ்தான், நைஜீரியா போன்ற நாடுகளில் பல கிறிஸ்தவ சமூகங்கள் எதிர்கொள்ளும் துன்பங்களையும் மேற்கோள் காட்டினார்.
இந்தச் செயல்கள் எந்தவிதத்திலும் நியாயப்படுத்தப்பட முடியாதவை மற்றும் இவை இசுலாத்தின் ஆன்மீக மற்றும் சமயக் கூறுகள் மறக்கப்படக் காரணமாகக்கூடும் என்றும் திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran எச்சரித்தார் 

3. கர்தினால் ஃபிலோனி : மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் நிலையான அமைதியை ஏற்படுத்த உரையாடலே சிறந்த வழி

சன.05,2013. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் அண்மை நாள்களில் இடம்பெற்றுவரும் வன்முறை குறித்த செய்திகள் கவலைதரும் அதேவேளை, உரையாடல் வழியாக மட்டுமே நாட்டில் நிலையான அமைதியை ஏற்படுத்த முடியும் என்பதை பொறுப்பில் இருப்பவர்கள் உணர வேண்டுமெனக் கேட்டுள்ளார் விசுவாசப்பரப்புப் பேராயத் தலைவர் கர்தினால் Fernando Filoni.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் ஆயர்களுக்கும் இறைமக்களுக்குமென செய்தி அனுப்பியுள்ள கர்தினால் Filoni, அந்நாட்டில் இடம்பெற்றுவரும் தொடர் வன்முறை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டால் மட்டுமே குடிமக்களின் துன்பங்கள் குறையும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அமைதி என்பது கனவு அல்ல, அதனை அடைய முடியும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வாண்டு உலக அமைதி தினச் செய்தியில் சொல்லியிருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ள கர்தினால் Filoni, அமைதியின் இளவரசர் இயேசு இந்த நாட்டு மக்களின் இதயங்களைத் திறந்து அமைதி எனும் கொடையைக் கொடுப்பாராக என்று கூறியுள்ளார்.

4. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் சிறார் படைவீரர் குறித்து ஐ.நா. எச்சரிக்கை

சன.05,2013. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் அரசுக்கு ஆதரவான குழுக்களும் எதிர்தரப்பும் சிறார்களைப் படைக்குச் சேர்த்து வருவது குறித்து எச்சரித்துள்ளது ஐக்கிய நாடுகள் நிறுவனம்.
18 வயதுக்குட்பட்ட சிறாரைப் போரிடுவதற்கும், போர்க்கருவிகளை விநியோகிப்பதற்கும், பாலியல் அடிமைகளாக வேலை செய்வதற்கும் ஆயுதம் தாங்கிய குழுக்கள் கட்டாயப்படுத்துகின்றன என்று அந்நாட்டுக்கான ஐ.நா. சிறார் அமைப்பின் பிரிதிநிதி Souleymane Diabate குற்றம் சாட்டினார்.
இந்நாட்டில் ஏறக்குறைய மூன்று இலட்சம் சிறார் புரட்சியாளர்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் கடந்த மாதத்தில் சண்டை தொடங்குவதற்கு முன்னர் 2,500 சிறார், ஆயுதம் தாங்கிய பல்வேறு குழுக்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என ஐ.நா. கூறியது.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசுத் தலைவர் Francois Bozize  பதவி விலக வேண்டுமெனக் கோரி, ஆயுதம் தாங்கிய புரட்சியாளர்கள் பல நகரங்களைக் கைப்பற்றியுள்ளனர் மற்றும் தலைநகரைக் கைப்பற்றப் போவதாக அச்சுறுத்தி வருகின்றனர்.  

5. 2012ம் ஆண்டில் பாப்பிறையின் பிறரன்பு நிறுவனத்தின் உதவிகள்
சன.05,2013. இருபது கடும் சண்டைகள் உட்பட 388 ஆயுதம் தாங்கிய மோதல்கள் மற்றும் 79 மனிதாபிமான நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உதவி உடனடியாகத் தேவைப்பட்ட 41 விண்ணப்பங்களுக்கும் 2012ம் ஆண்டில் “Cor Unum” என்ற பாப்பிறையின் பிறரன்பு நிறுவனம் உதவியுள்ளது.
“Cor Unum” பிறரன்பு நிறுவனத்தின் 2012ம் ஆண்டின் பணிகள் குறித்து  லொசர்வாத்தோரே ரொமானோ தினத்தாளுக்குப் பேட்டியளித்த அந்நிறுவனத்தின் செயலர் பேரருள்திரு Giampietro Dal Toso இவ்வாறு தெரிவித்தார்.
சிரியா, லிபியா, பங்களாதேஷ், தென் சூடான், பொலிவியா, பரகுவாய் ஆகிய நாடுகளுக்கு Cor Unum” பிறரன்பு நிறுவனத்தின் உதவிகள் கடந்த ஆண்டில் அதிகம் தேவைப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

6. ஜெர்மனியில் வளர்ந்து வரும் ஆயுதத் தொழிற்சாலை குறித்து ஆயர்கள் கண்டனம்   

சன.05,2013. ஜெர்மனியில் வளர்ந்து வரும் ஆயுதத் தொழிற்சாலை குறித்துக் குறைகூறியுள்ள அதேவேளை, உலகில் ஆயுதம் தாங்கிய சண்டைகள் இடம்பெறுவதை நிறுத்துவதற்குத் தங்களை மிகுதியாக அர்ப்பணிக்குமாறு அந்நாட்டினரை வலியுறுத்தியுள்ளனர் ஜெர்மன் கத்தோலிக்க ஆயர்கள்.
உலக அமைதி நாளுக்கென ஜெர்மன் ஆயர் பேரவையின் சார்பில் 24 பக்க செய்தி வெளியிட்டுள்ள Freiburg பேராயர் Robert Zollitsch, அமைதி என்பது அரசியல்வாதிகளின் வேலை மட்டுமல்ல, மாறாக, வளம்கொழிக்கும் தொழிலாக ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும்போது அமைதி குறித்த ஆர்வம் நம்மைத் தட்டி எழுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.
உலகில் ஆயுத ஏற்றுமதியில், அமெரிக்க ஐக்கிய நாடு, இரஷ்யாவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் ஜெர்மனி இருக்கின்றது என்று Der Spiegel வார இதழ் குறிப்பிட்டுள்ளது.
ஜெர்மனியில் ஆயுதத் தொழிற்சாலைகளில் எண்பதாயிரம் பேர் வேலை செய்கின்றனர். ஆயுத ஏற்றுமதியால் ஆண்டுக்கு 180 ஆயிரம் கோடி டாலர் இலாபம் கிடைக்கின்றது என்றும் Der Spiegel இதழ் கூறியுள்ளது.   
மேலும், ஜெர்மன் ஆயர் பேரவையின் இச்செய்தி குறித்துப் பேசிய Freiburg உயர்மறைமாவட்டப் பேச்சாளர் Robert Eberle, ஆயுத ஏற்றுமதி தொழில் செய்வோர் மத்தியில் திருஅவையின் குரல் கேட்கப்படும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.

7. பேராயர் மச்சாடோ : குடும்பங்களில் வாழ்வை மதிப்பது குறித்த கல்வி அவசியம்  

சன.05,2013. குடும்பங்களில் வாழ்வை மதிப்பது குறித்த கல்வி அவசியம் என்று வட இந்தியாவின் வசை ஆயர், பேராயர் ஃபீலிக்ஸ் அந்தோணி மச்சாடோ கூறினார்.
23 வயது மருத்துவக் கல்லூரி மாணவி டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பிறகும், புத்தாண்டுக்கு முந்தைய இரவு புதுடெல்லியில் 17 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருப்பதையொட்டி இவ்வாறு கூறினார் பேராயர் மச்சாடோ.
இந்தியக் குடும்பங்கள் உலகத் தாராளமயமாக்கல் கொள்கையின் தாக்கத்தைக் கொண்டுள்ளன எனவும், இளையோர்க்கு மதிப்பீட்டு மற்றும் நன்னெறிக்கல்வி வழங்கப்படுவதில்லை எனவும் பேராயர் மச்சாடோ குறை கூறினார்.
நுகர்வுத்தன்மை மற்றும் ஒழுக்கநெறிப் பிறழ்வை நோக்கி உலகம் அதிகம் சென்று கொண்டிருக்கின்றது, இந்த விவகாரத்தில் குற்றம் செய்பவர்கள் மட்டுமல்ல, பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்வைக் குறைத்து மதிப்படும் சமுதாயமும் குற்றம் புரிகின்றது என்று கூறினார் பேராயர் மச்சாடோ.

8. 2015ம் ஆண்டின் ஐ.நா.வின் இலக்கை இந்தியா எட்டாது, சமூக ஆர்வலர்கள்

சன.05,2013. உலகில் ஏழ்மை, பசி, குழந்தை இறப்பு போன்றவற்றை  2015ம் ஆண்டுக்குள் பாதியாகக் குறைப்பதாக ஐ.நா.வின் 191 உறுப்பு நாடுகள் இரண்டாயிரமாம் ஆண்டில் நிர்ணயித்த இலக்கை இந்தியா எட்டாது என பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஐ.நா.வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியா இந்த இலக்கை எட்டுவதற்கு அதன் ஏழ்மை நிலை 23.9 விழுக்காடாக இருக்க வேண்டும், ஆனால் அந்நிலை நிர்ணயித்ததைவிட 3 விழுக்காட்டுக்கு சற்று அதிகமாக இருக்கின்றது, அதேபோல் குழந்தை இறப்பும் ஆயிரத்துக்கு 27 ஆக இருக்க வேண்டும், ஆனால் அது 43 ஆக இருக்கின்றது எனத் தெரிகிறது.
ஆயினும், 2015ம் ஆண்டுக்குள் அனைத்து இந்தியச் சிறாருக்கும் ஆரம்பக்கல்வி வழங்கப்பட்டிருக்கும் என்ற உறுதியை இந்தியா கொடுத்திருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

9. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இலங்கையர் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர், ஐ.நா.

சன.05,2013. உலகில் வேறு நாடுகளில் புகலிடம் தேடும் மக்களில் அதிகமான எண்ணிக்கையைக் கொண்டுள்ள நாடுகளில் இலங்கை 12வது இடத்தை வகிக்கின்றது என ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகின்றது.
44 தொழிற்வளர்ச்சியடைந்த நாடுகளில் கடந்த ஆண்டில் 8,521 இலங்கை மக்கள் புகலிடம் தேடியதாகவும், இவ்வெண்ணிக்கை 2010ம் ஆண்டைவிட சற்றுக்குறைவு எனவும் அவ்வறிக்கை கூறுகின்றது.
மேலும், இலங்கையில், சிறார் துன்புறுத்தலுக்கு எதிரான தேசிய தினம் சனவரி 4ம் தேதியன்று ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் என, தேசிய சிறார்ப் பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளது.
 

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...