1. 2012ம் ஆண்டு 20 இலட்சம் திருப்பயணிகள் திருத்தந்தையைக் கண்டனர்
2. இலத்தீன் ரீதி முதுபெரும் தலைவர் Fouad Twal வழங்கிய புத்தாண்டு செய்தி
3. உலக இளையோர் நாளையொட்டி பிரேசில் நாட்டின் ஏற்பாடுகள்
4. இஸ்தான்புல் நகரில் Taize குழுமத்தின் நம்பிக்கை பயணம்
5. பாகிஸ்தானில் வன்முறைக் கலாச்சாரத்தை நீக்கும் முயற்சிகளை மேற்கொள்வதே நாட்டுக்கு நல்லது - கத்தோலிக்க அமைப்பு
6. மதம் தொடர்பான வழிபாடுகள் மீது வியட்நாம் அரசு விதித்துள்ள புதிய நிபந்தனைகள்
7. சிரியாவில் நிகழ்ந்துவரும் போராட்டங்களில் இதுவரை 60,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் - ஐ.நா. அறிக்கை
8. புத்தாண்டில் டாஸ்மாக் விற்பனை 2 நாளில் ரூ.185 கோடிக்கும் அதிகம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. 2012ம் ஆண்டு 20 இலட்சம் திருப்பயணிகள் திருத்தந்தையைக் கண்டனர்
சன.03,2013.
கடந்த 2012ம் ஆண்டு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கலந்துகொண்ட நிகழ்வுகளில்
20 இலட்சம் திருப்பயணிகள் அவரைக் கண்டனர் என்ற தகவலை திருத்தந்தையின் இல்ல
அலுவலகம் வெளியிட்டுள்ளது.
திருத்தந்தையின் நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்கள் 23,51,200 பேர் என்றும், இவர்களில் 12,56000 பேர் திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரைகளிலும் 4,47000 பேர் திருத்தந்தை வழங்கிய புதன் பொது மறைபோதகங்களிலும் கலந்து கொண்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
திருத்தந்தை தலைமையேற்று நடத்திய திருவழிபாடுகளில் கலந்துகொண்டோர் 5,01,000 என்றும், ஏனையக் கூட்டங்களில் கலந்துகொண்டோர் 1,46,800 பேர் என்றும் கூறப்படுகிறது.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தலைமைப் பொறுப்பேற்ற 2005ம் ஆண்டிலிருந்து எடுக்கப்பட்டுள்ள ஒரு கணக்கெடுப்பின்படி, அவரது நிகழ்வுகளில் கடந்த எட்டு ஆண்டுகள் பங்கேற்றோரின் எண்ணிக்கை 2 கோடியே, 5 இலட்சத்து 44,970 பேர் என்ற விவரம் வத்திக்கான் நாளிழதலான L'Osservatore Romanoவில் வெளியாகியுள்ளது.
2. இலத்தீன் ரீதி முதுபெரும் தலைவர் Fouad Twal வழங்கிய புத்தாண்டு செய்தி
சன.03,2013.
உலகில் அமைதியை வளர்ப்பதில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு என்று
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் உலக அமைதி நாள் செய்தியின் வழியாக நம்மை
அழைக்கிறார் என்று எருசலேம் இலத்தீன் ரீதி முதுபெரும் தலைவர் பேராயர் Fouad Twal கூறினார்.
சனவரி 1ம் தேதி கொண்டாடப்பட்ட உலக அமைதி நாளையொட்டி திருத்தந்தை வழங்கியச் செய்தியை ஆதாரமாகக் கொண்டு, பேராயர் Twal வழங்கிய புத்தாண்டு நாள் சிறப்புச் செய்தியில் இவ்வாறு கூறினார்.
உலகில் அமைதி குலைவதற்கு திருத்தந்தை சுட்டிக்காட்டும் காரணங்களான ஏழை, செல்வந்தர் பாகுபாடுகள், தன்னலப் போக்குகள் என்பனவற்றைத் தன் உரையில் வலியுறுத்திய பேராயர் Twal, கட்டுப்பாடற்ற முதலாளித்துவம் நம்மில் வளர்க்கக்கூடிய பேராசையின் ஆபத்துக்கள் குறித்து எச்சரிக்கை விடுத்தார்.
அண்மையில் பாலஸ்தீனம் தனி நாடாக உருவானபின்னர், அதன் தலைவர் Mahmoud Abbas திருத்தந்தையைச் சந்தித்தபோது, பாலஸ்தீனம் பெற்றுள்ள தனி நாடு என்ற நிலை குறித்து திருத்தந்தை மிகுந்த மகிழ்வு கொண்டார் என்பதையும் பேராயர் Twal தன் புத்தாண்டு செய்தியில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியை நிலைநிறுத்தும் முயற்சிகளை மேற்கொள்வது, அப்பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரின் தலையாயக் கடமை என்பதையும் எருசலேம் இலத்தீன் ரீதி முதுபெரும் தலைவர் Fouad Twal எடுத்துரைத்தார்.
3. உலக இளையோர் நாளையொட்டி பிரேசில் நாட்டின் ஏற்பாடுகள்
சன.03,2013. இவ்வாண்டு ஜூலை மாதம் 23ம் தேதி முதல் 28ம் தேதி முடிய பிரேசில் நாட்டின் Rio de Janeiro நகரில் நடைபெற உள்ள உலக இளையோர் நாளையொட்டி, அந்நாட்டின் மற்றொரு பெருநகரான Sao Paoloவில் 40,000க்கும் அதிகமான இளையோர் தங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
திருத்தந்தை
16ம் பெனடிக்ட் அவர்கள் கலந்து கொள்ளும் இந்த முக்கிய நிகழ்வுக்கென
பல்வேறு நாடுகளில் இருந்தும் வருகை தரும் இளையோரை வரவேற்க, அந்நாட்டின் பல குடும்பங்கள் தயாராக உள்ளன என்று இக்கூட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான அருள்தந்தை José Roberto do Prado கூறினார்.
ஏனைய
நாடுகளில் இருந்து வரும் இளையோருடன் தொடர்பு கொள்வதற்கென அடிப்படை தகவல்
பரிமாற்றங்கள் அடங்கிய பன்மொழி கையேடு ஒன்று தயாராகி வருவதாகவும்
அருள்தந்தை Roberto கூறினார்.
இளையோரைத்
தங்க வைப்பதற்கென்று முன்வரும் குடும்பங்கள் மிகக் கவனமாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டு வருவதாகவும் உலக இளையோர் நாளின் அமைப்பாளர்கள்
கூறியுள்ளனர்.
4. இஸ்தான்புல் நகரில் Taize குழுமத்தின் நம்பிக்கை பயணம்
சன.03,2013. Taize குழுமத்தின் நம்பிக்கை பயணம் சனவரி 3ம் தேதி இவ்வியாழன் முதல், 6ம் தேதி ஞாயிறன்று கொண்டாடப்படும் திருக்காட்சித் திருவிழா முடிய இஸ்தான்புல் நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர்
28ம் தேதி கடந்த வெள்ளிக் கிழமை முதல் சனவரி 2ம் தேதி இப்புதன் முடிய
உரோம் நகரில் நடைபெற்ற இந்த நம்பிக்கைத் திருப்பயணத்தின்போது, டிசம்பர் 29, சனிக்கிழமை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இப்பயணத்தில் கலந்துகொண்ட 40,000க்கும் அதிகமான இளையோருடன் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் ஒரு சிறப்பு செப வழிபாட்டை மேற்கொண்டார்.
Taize குழுமத்திற்கும், Constantinople கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையின் முதுபெரும் தலைவருக்கும் 1960களிலிருந்து நல்லுறவு விளங்குகிறது.
Taize குழுமத்தின் தற்போதையத் தலைவர் அருள்சகோதரர் Alois தலைமையில் மேற்கொள்ளப்படும் திருப்பயணம், இஸ்தான்புல் நகரின் Taksim வளாகத்தில் அமைந்துள்ள மூவொரு கடவுள் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் ஆலயத்தில் இவ்வியாழனன்று நடைபெற்ற மாலை வழிபாட்டுடன் ஆரம்பமானது.
இவ்வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இந்நகரின் பல்வேறு கிறிஸ்தவக் கோவில்களில் திருவிழிப்புச் சடங்குகள் நடைபெறும் என்றும், திருக்காட்சித் திருவிழாவான ஞாயிறன்று அனைத்து கிறிஸ்தவ சபைகளுடன் ஒன்றிப்பு கூட்டம் ஒன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
5. பாகிஸ்தானில் வன்முறைக் கலாச்சாரத்தை நீக்கும் முயற்சிகளை மேற்கொள்வதே நாட்டுக்கு நல்லது - கத்தோலிக்க அமைப்பு
சன.03,2013. சிறுபான்மையினரைக் காக்கும் முயற்சிகள் என்ற குறுகிய வட்டத்தைத் தாண்டி, அனைவருக்கும் சம உரிமை என்ற முயற்சிகளை, பாகிஸ்தான் அரசு மேற்கொள்வது மட்டுமே நாட்டைக் காக்கும் சிறந்த வழி என்று கத்தோலிக்க அமைப்பு ஒன்று கூறியது.
பாகிஸ்தான் கத்தோலிக்கத் திருஅவையின் நீதி அமைதிப் பணிக்குழு அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, 2012ம் ஆண்டு ஐந்து கிறிஸ்தவக் கோவில்கள், மூன்று இந்து கோவில்கள் மற்றும் Ahmadi எனப்படும் ஒரு சிறுபான்மை இஸ்லாமியப் பிரிவின் தொழுகைக் கூடம் என ஒன்பது வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்டுள்ளன.
இது மட்டுமல்லாமல், சிறுபான்மையினருக்குச் சொந்தமான நிலங்களை அபகரிப்பதும், சிறுபான்மை
வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவோர் கொல்லப்படுவதும் நாட்டில் அடிக்கடி
நடைபெறும் போக்கு என்றும் இவ்வறிக்கை எடுத்துரைக்கிறது.
சிறுபான்மையினரைக் காப்பதற்கு அரசு முயற்சிகள் மேற்கொள்வதற்கு மேலாக, நாட்டில் வன்முறைக் கலாச்சாரத்தை நீக்கும் முயற்சிகளை மேற்கொள்வதே நாட்டுக்கு நல்லது என்று இவ்வறிக்கை வலியுறுத்துகிறது.
6. மதம் தொடர்பான வழிபாடுகள் மீது வியட்நாம் அரசு விதித்துள்ள புதிய நிபந்தனைகள்
சன.03,2013. மத சுதந்திரம் குறித்து வியட்நாம் அரசு சனவரி முதல் தேதியன்று வெளியிட்டுள்ள ஒரு புதிய சட்டம் கவலையைத் தருகிறது என்று Christian Solidarity Worldwide (CSW) எனப்படும் அகில உலக கிறிஸ்தவ ஒன்றிப்பு அமைப்பு கூறியுள்ளது.
இப்புதிய சட்டத்தின் கீழ், மதம் தொடர்பான வழிபாடுகள், பக்தி முயற்சிகள் அனைத்தின் மீதும் புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அந்நிய நாடுகளிலிருந்து வியட்நாமுக்குச் சென்று, மதம் தொடர்பான கருத்தரங்குகளையும், கூட்டங்களையும் நடத்த விரும்புவோர் தனிப்பட்ட உத்தரவுகள் பெறவேண்டும் என்று இப்புதியச் சட்டம் கூறுகிறது.
மதக் கட்டுப்பாடுகள் நிறைந்த சீன அரசின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, வியட்நாம் அரசு விதித்துள்ள புதிய சட்டங்கள் மதச் செயல்பாடுகளை வெகுவாகப் பாதிக்கும் என்று புத்த மதத் தலைவர் Thich Quang Do கூறியுள்ளார்.
7. சிரியாவில் நிகழ்ந்துவரும் போராட்டங்களில் இதுவரை 60,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் - ஐ.நா. அறிக்கை
சன.03,2013. 2011ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சிரியாவில் நிகழ்ந்துவரும் போராட்டங்களில் இதுவரை 60,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகிறது.
ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ள இவ்வறிக்கையின்படி, கொல்லப்பட்டவர்களில் 76 விழுக்காட்டினர் ஆண்கள் என்றும், 7.5 விழுக்காட்டினர் பெண்கள் என்றும் தெரிகிறது.
Benetech என்ற ஆய்வு மையம் மேற்கொண்ட கணக்கின்படி, 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் முடிய சிரியாவில் 59,648 பேர் இறந்துள்ளனர். எனினும், அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, 45,000 பேரே இறந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது.
Damascus நகர் பகுதியிலும், Homs பகுதியிலும் தான் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்த மரணங்களுக்கு அரசும், புரட்சிக் குழுக்களும் பொறுப்பேற்கவேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் நவி பிள்ளை கூறினார்.
8. புத்தாண்டில் டாஸ்மாக் விற்பனை 2 நாளில் ரூ.185 கோடிக்கும் அதிகம்
சன.03,2013. புத்தாண்டு நாள் கொண்டாட்டத்தையொட்டி, தமிழ்நாட்டின் டாஸ்மாக் கடைகளில் டிசம்பர் 31, மற்றும் சனவரி 1 ஆகிய இரு நாட்களில் மட்டும், 185 கோடி ரூபாய்க்கு, மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டைவிட, 40 கோடி ரூபாய்க்கு அதிகமாக விற்பனை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில், 6,805 டாஸ்மாக் கடைகள் உள்ளன. டாஸ்மாக் கடைகளின் மூலம் ஆண்டுதோறும், 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. வரும் ஆண்டுகளில், 25 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாயை அதிகரிக்க, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில், தினமும் ஏறத்தாழ, 50 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகின்றன. தீபாவளி, புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாக்களின்போது விற்பனை அதிகரிக்கும். கடந்த தீபாவளியின்போது, 370 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை இருந்தது.
இந்நிலையில், டிசம்பர் 31ம் தேதி இரவு வரை, 95 கோடி ரூபாய்க்கும், புத்தாண்டு நாளன்று, 90 கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனையாயின. புத்தாண்டுக்கு, 200 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், 185 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே விற்பனையாகியுள்ளது.
வரும் பொங்கல் விழாவுக்கு டாஸ்மாக் விற்பனை, 370 கோடி ரூபாய் முதல், 400 கோடி ரூபாய் வரை, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்ட, மதுபான தொழிற்சாலைகளுக்கும் கூடுதலாக மூலப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment