Thursday, 27 September 2012

Catholic News in Tamil - 26/09/12


1. பேராயர் மம்பர்த்தி : அனைத்துலகச் சட்டமே மனித மாண்பு மதிக்கப்படுவதற்கு இன்றியமையாதது

2. நைஜீரியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நிறுத்துவதற்கு போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை : பேராயர் கைகாமா

3. மத்திய கிழக்கில் மேற்கத்திய நாடுகளின் தலையீட்டுக்குக் கண்டனம்

4. போதைப்பொருள் வியாபாரமும் பயங்கரவாதச் செயல்களும் அதிகரிப்பதற்கு பெரு பேராயர் கண்டனம்

5. திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம் கிறிஸ்தவத்தின்மீது ஆர்வத்தை எழுப்பியுள்ளது

6. இன்றைய உலகின் நெருக்கடிகளைக் களைவதற்கு உலகத் தலைவர்களுக்கு ஐ.நா. வேண்டுகோள்

7. உலகை வெப்பமாக்கிவரும் வாயுக்கள் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஓர் அனைத்துலக ஒப்பந்தம் அவசியம்

8. காது கேளாதோர் வாரம் செப்டம்பர் 24-30

------------------------------------------------------------------------------------------------------

1. பேராயர் மம்பர்த்தி : அனைத்துலகச் சட்டமே மனித மாண்பு மதிக்கப்படுவதற்கு இன்றியமையாதது

செப்.26,2012. சட்டத்தின்படி ஆட்சி நடைபெறுவதற்கு மனித மாண்பின் தலைசிறந்த விழுமியமே பாதுகாப்புமிக்க அடித்தளமாக அமைகின்றது, ஏனெனில் மனிதர் இறைவனின் படைப்பு என்ற உண்மையோடு  இது தொடர்புடையது, அதேசமயம் சட்டத்தின் ஆட்சி தனது உண்மையான நோக்கத்தை எட்டுவதற்கு இது அனுமதிக்கின்றது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா. உயர்மட்டக் கூட்டத்தில் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் பன்னாட்டு அளவில் உரிமைகளின் நிலைமை குறித்த ஐ.நா. பொது அவையின் 67வது அமர்வில் உரையாற்றிய, திருப்பீடத்தின் நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி, சட்டத்தின் ஆட்சி பொதுநலனை ஊக்குவிக்கும் என்றும்    கூறினார்.
அனைத்து அடிப்படை மனித உரிமைகளும் மனித மாண்புடன் தெளிவான விதத்தில் தொடர்பு கொண்டுள்ளன என்றும், தந்தையாக, தாயாக இருப்பதற்கான உரிமை, ஒரு குடும்பத்தை உருவாக்கி அதை வளர்ப்பதற்கான உரிமை, தங்கள் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்குப் பெற்றோருக்கு இருக்கும் உரிமை, வேலை செய்ய உரிமை, செல்வங்கள் சமமாகப் பங்கிடப்படும் உரிமை, கலாச்சார உரிமை, மனச்சான்றின் உரிமை, பேச்சுரிமை ஆகியவை உட்பட அனைத்து உரிமைகளும் சட்டத்தின் ஆட்சியைச் சார்ந்துள்ளன என்றும் பேராயர் கூறினார்.
இந்த உரிமைகள் எல்லாவற்றிலும் சமய சுதந்திரம் சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டும் என்றுரைத்த பேராயர் மம்பர்த்தி, மனிதரின் இருப்பு குறித்த பெரிய கேள்விக்கான பதிலும், மனிதர் தன்னை இறைவனுக்குத் திறந்தவர்களாய் வைப்பதும், மனிதரின் சமயக்கூறும் அவரின் சமய சுதந்திரத்தைப் பொருத்தது என்றும் கூறினார்.

2. நைஜீரியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நிறுத்துவதற்கு போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை : பேராயர் கைகாமா

செப்.26,2012. நைஜீரியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நிறுத்துவதற்குப் போதுமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசு தவறியுள்ளது எனக் கடுமையாய்க் குற்றம்சாட்டியுள்ளார் அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Ignatius Kaigama.
கடந்த ஞாயிறன்று Bauchi நகரில் புனித யோவான் பேராலயத்துக்கு வெளியே இடம்பெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதல் குறித்து Aid to the Church in Need என்ற பிறரன்பு நிறுவனத்துக்குப் பேட்டியளித்த பேராயர் கைகாமா, கிறிஸ்தவர்கள் தங்களது மத நம்பிக்கைகளை அனுசரிப்பதற்கு இத்தாக்குதல்கள் எவ்விதத்திலும் தடையாய் இல்லையெனத் தெரிவித்தார்.
குண்டுவெடிப்புத் தாக்குதல்களை நடத்தும் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்குத் தண்டனை கொடுப்பதில் அரசுத்தலைவர் Goodluck Jonathanனின் அரசு திறமையற்று இருக்கின்றது என்றும் பேராயர் குறை கூறினார்.
நைஜீரியாவில் ஆலயங்கள், சந்தைகள், அரசு மற்றும் பாதுகாப்புத்துறை கட்டிடங்கள் தாக்கப்பட்டதில் 2010ம் ஆண்டிலிருந்து இதுவரை 1400 பேர் இறந்துள்ளனர்.   

3. மத்திய கிழக்கில் மேற்கத்திய நாடுகளின் தலையீட்டுக்குக் கண்டனம்

செப்.26,2012. மேற்கத்திய நாடுகள், மத்திய கிழக்குப் பகுதி மக்களை மதிக்க வேண்டும் மற்றும் அவர்கள் தங்கள் பிரச்சனைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்வார்கள் என்பதில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று மத்திய கிழக்குப் பகுதியின் இரு கிறிஸ்தவத் தலைவர்கள் கூறினர்.
உரோமையில் திருப்பீடத்துக்கான ஈராக் தூதரகம் நடத்திய கூட்டத்தில் பேசிய மெல்கித்தேரீதி திருஅவையின் ஈராக் பேராயர் Jules Mikhael Jamil, வத்திக்கானுக்கான மெல்கித்தேரீதி திருஅவையின் பிரதிநிதி பேரருட்திரு Mtanios Haddad ஆகிய இருவரும் இவ்வாறு கூறினர்.
மத்திய கிழக்குப் பகுதியில் மேற்கத்திய நாடுகளின் இராணுவத் தலையீடும், பிற தலையீடுகளும் நிறுத்தப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்ட இவ்விரு தலைவர்கள், இந்தத் தலையீடுகள் கலவரங்களை மேலும் தூண்டி விடுகின்றன மற்றும் அமைதிக்கான அம்மக்களின் ஆசைக்கு இடையூறாய் இருக்கின்றன என்று தெரிவித்தனர்.
மேற்கத்திய நாடுகள், மத்திய கிழக்குப் பகுதி கிறிஸ்தவர்கள்மீது மிகச் சிறிதளவே அக்கறை கொண்டுள்ளன எனத் தான் உணர்வதாகத் தெரிவித்தார் பேராயர் Jamil.
மேலும், இக்கூட்டத்தை ஆரம்பித்து வைத்துப் பேசிய திருப்பீடத்துக்கான ஈராக் தூதர் Habeeb Mohammed Hadi Ali Sadr, அரபு நாடுகளிலும் வெளியிலும் வாழும் அரபுக் கிறிஸ்தவர்களுக்கு அந்நாடுகள் ஆதரவு வழங்குமாறு வலியுறுத்தினார்.
கிழக்கிலும் மேற்கிலும் கலாச்சாரங்களைப் பாதுகாப்பதில் கிறிஸ்தவர்கள் பெரும்பங்காற்றியுள்ளார்கள் என்றும் அவர் கூறினார்.

4. போதைப்பொருள் வியாபாரமும் பயங்கரவாதச் செயல்களும் அதிகரிப்பதற்கு பெரு பேராயர் கண்டனம்

செப்.26,2012. இலத்தீன் அமெரிக்கா முழுவதும் அதிகரித்துவரும் போதைப்பொருள் வியாபாரமும் பயங்கரவாதச் செயல்களும் ஒழிக்கப்படுவதற்கு மக்கள் செபிக்குமாறு கேட்டுள்ளார் பெரு நாட்டு Piura பேராயர் Jose Antonio Eguren.
இரக்கமுள்ள அன்னைமரியின் பெயரால் திருப்பலி நிகழ்த்திய பேராயர் Eguren, 1992ம் ஆண்டில் பெரு நாட்டு பயங்கரவாதக் குழுத் தலைவர் Abimael Guzman கைது செய்யப்பட்ட பின்னர் சிறிது குறைந்திருந்த பயங்கரவாதச் செயல்கள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளன என்று கூறினார்.
அண்மையில் பெரு நாட்டின் தென் பகுதியில் பல படைவீரர்களும் காவல்துறையினரும் போதைப்பொருள் வியாபாரிகளால் கொல்லப்பட்டதையும் மறையுரையில் குறிப்பிட்ட பேராயர்,  பயங்கரவாதம், மனிதமற்றது, நற்செய்திக்குப் புறம்பானது மற்றும் மனித மாண்புக்கும் சமூக அமைதிக்கும் புறம்பானது என்று கூறினார். 

5. திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம் கிறிஸ்தவத்தின்மீது ஆர்வத்தை எழுப்பியுள்ளது

செப்.26,2012. திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம் கிறிஸ்தவம் பற்றி அறிந்து கொள்வதற்குக் கடுமையாய் உழைக்கத் தூண்டியுள்ளது மற்றும் கிறிஸ்தவம் பற்றிய ஆவலையும் ஏற்படுத்தி உள்ளது என  லெபனனின் ஒரு முஸ்லீம் கழகத் தலைவர் கூறினார்.
இம்மாதம் 14 முதல் 16 வரை திருத்தந்தை மேற்கொண்ட லெபனன் திருப்பயணம் குறித்து ஒயாசிஸ் என்ற நிறுவனத்திடம் பேசிய Makassed என்ற முஸ்லீம் கழகத் தலைவர் Hicham Nachabé இவ்வாறு கூறினார்.
மேலும், திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம் அன்னைமரியாவின் அடையாளமாக இருப்பதாக அந்நாட்டினர் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

6. இன்றைய உலகின் நெருக்கடிகளைக் களைவதற்கு உலகத் தலைவர்களுக்கு ஐ.நா. வேண்டுகோள்

செப்.26,2012. குழப்பங்கள் நிறைந்த இக்காலத்தை அழுத்தும் நெருக்கடிகளைக் களைவதற்கு உலகத் தலைவர்கள் மேலும் அதிக அளவில் முயற்சிகள் எடுக்குமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்   ஐ.நா. பொது அவையில் கேட்டுக் கொண்டார்.
இன்றைய உலகில் பரவலாக நிலவும் பாதுகாப்பற்றநிலை, பெருமளவான நிதி பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படாமல் மரணத்தை வருவிக்கும் ஆயுதங்களை வாங்குவதற்குப் பயன்படுத்தப்படுவது,   வெப்பநிலை மாற்றத்தால் அதிகரித்துவரும் எதிர்மறைத் தாக்கங்கள் போன்றவற்றைக் குறிப்பிட்டுப் பேசிய பான் கி மூன், இன்றைய உலகு தன்னைக் காப்பாற்றுவதற்கு நேரம் காலம் பார்க்காது உடனடியாகச் செயல்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
ஐ.நா.வில் இத்திங்களன்று தொடங்கியுள்ள 67வது பொது அமர்வு ஆண்டுக் கூட்டத்தில் இவ்வாறு உரையாற்றிய ஐ.நா.பொதுச் செயலர், மனிதக் குடும்பத்தினராகிய நாம் எல்லாரும் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து இவ்வாண்டின் இக்கூட்டத்தில் தான் பேச விரும்புவதாகத் தெரிவித்தார்.
உலகில் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழ்வோரின் எண்ணிக்கை இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்து பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது, அரபு உலகம், மியான்மார், இன்னும் பிற நாடுகளில் இடம்பெற்றுவரும் மக்களாட்சியை நோக்கிய மாற்றங்கள், உலகில் வேகமாக வளர்ந்துவரும் ஆப்ரிக்கப் பொருளாதார முன்னேற்றம், ஆசியா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் வளர்ந்துவரும் பொருளாதாரம் போன்ற  முக்கியமான முன்னேற்றங்களைப் பாராட்டிப் பேசினார் பான் கி மூன்.
இந்த ஐ.நா.பொது அவையின் ஆண்டுக் கூட்டம் வருகிற அக்டோபர் முதல் தேதியன்று நிறைவடையும்

7. உலகை வெப்பமாக்கிவரும் வாயுக்கள் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஓர் அனைத்துலக ஒப்பந்தம் அவசியம்

செப்.26,2012. ஐ.நா. பொது அவையின் 67வது அமர்வில் உரையாற்றிய மார்ஷல் தீவுகளின் அரசுத் தலைவர் Christopher Loeak, உலகை அதிகம் வெப்பமாக்கிவரும் வாயுக்கள் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சட்டரீதியான ஒப்பந்தம் ஒன்று விரைவில் கொண்டுவரப்படுமாறு கேட்டுக் கொண்டார்.
பசிபிக் தீவு நாடாகிய மார்ஷலின் வேளாண்மை, பசிபிக் பெருங்கடல் மட்டத்தின் உயர்வால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும், இதற்கு அனைத்துலக சமுதாயத்தின் உதவி தேவை எனவும் ஐ.நா.வில் பேசினார் அரசுத் தலைவர் Loeak.
மேலும், மற்றொரு பசிபிக் தீவு நாடாகிய Nauru அரசுத் தலைவர் Sprent Dabwido ஐ.நா.வில் பேசிய போது, வெளிமண்டலத்தைப் பாதிக்கும்  வாயுக்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதாகவும், அதனால் தங்களைப் போன்ற சிறிய தீவு நாடுகள் கடல்மட்ட உயர்வால் கடும் பேரழிவை எதிர்நோக்குவதாகவும் விளக்கினார்.

8. காது கேளாதோர் வாரம் செப்டம்பர் 24-30

செப்.26,2012. சமூகத்தில், காதுகேளாதோர் சந்திக்கும் பிரச்சனைகளையும், அவர்களது கோரிக்கைகளையும் கருத்தில்கொண்டு அவர்களுக்கான வசதிகளை உருவாக்க, ஒவ்வோர் அரசும் பரிசீலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆண்டுதோறும் செப்டம்பர் இறுதி வாரம் காதுகேளாதோர் வாரம் எனக் கடைப்பிடிக்கப்படுகிறது.
இவ்வாண்டு இவ்வாரம் இத்திங்கள் முதல் வருகிற ஞாயிறுவரைக் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதிக சப்தத்தை கேட்பதால்கூட காது கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது. உலக மக்கள் தொகையில் 5 விழுக்காட்டினர் இந்த வகையில் பாதிக்கப்படுகின்றனர்.
பொதுவாக மனிதரது காது 20 ஹெர்ட்ஸில் இருந்து 20 கிலோ ஹெர்ட்ஸ்வரை கேட்கும் திறன் பெற்றது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...