Thursday, 27 September 2012

Catholic News in Tamil - 24/09/12


1. திருத்தந்தை: தாழ்மை இறைவனின் வழி

2. நைஜீரியாவில் க‌த்தோலிக்க‌ப் பேரால‌ய‌ம் தாக்க‌ப்ப‌ட்ட‌து, 5 பேர் பலி

3. கிறிஸ்தவக் கோவில் தாக்கப்பட்டதற்குப் பாகிஸ்தான் அரசுத்தலைவர் கண்டனம்

4. தேவ நிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்ட பாகிஸ்தான் சிறுமியை பாலர் நீதிமன்றத்தில் விசாரிக்க நீதிபதி உத்தரவு

5. 25ம் தேதியுடன் மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் மூடப்படுகிறது

6. சேலம் மாவட்டத்தில் காசநோயாளிகள் அதிகரிப்பு: மருத்துவர் அதிர்ச்சித் தகவல்

7. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில், பெண்களில் மூன்றில் ஒருவர் புகையிலைப் பொருட்களுக்கு அடிமை

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை: தாழ்மை இறைவனின் வழி

செப்.24,2012. அனைவருக்கும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் மாறுவதில் இயேசு கிறிஸ்துவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி நடக்குமாறு கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கடவுளும் மனிதரும் வேறுபடுவதில் தற்பெருமை முக்கியமானதாக இருக்கின்றது என்று காஸ்தெல் கந்தோல்ஃபோவில் இஞ்ஞாயிறன்று ஆற்றிய நண்பகல் மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை.
மிகவும் சிறியவர்களாக இருக்கும் நாம் முதலில் பெரியவர்களாக இருப்பதற்கு விரும்புகிறோம், ஆனால் உண்மையிலேயே உன்னதமான கடவுள் தம்மைத் தாழ்த்துவதற்குப் பயப்படவில்லை மற்றும் தம்மைக் கடையராகவும் ஆக்கினார் என்றும் கூறினார் திருத்தந்தை.
தமது மரணத்தையும் உயிர்ப்பையும் இயேசு தமது சீடர்களுக்கு அறிவித்தபோது அதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை மற்றும் அதைப் பற்றி அவரிடம் கேட்பதற்குப் பயந்தது குறித்து விளக்கும் இஞ்ஞாயிறு மாற்கு நற்செய்திப் பகுதியை விளக்கியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை. 
யார் பெரியவர் என்று தமது நெருங்கிய சீடர்கள் தங்களுக்குள் வாதாடிக்கொண்டிருந்ததற்குப் பதிலளித்த இயேசு, தங்களுள் முதல்வராக இருக்க விரும்புகிறவர் தங்களில் கடைசியானவராகவும் தொண்டராகவும் இருக்கட்டும் என்று கூறினார் எனவும், இயேசுவுக்கும் அவரது சீடர்களுக்கும் இடையே மிக அகலமான இடைவெளி இருந்தது, இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் இயேசுவும் அவரது சீடர்களும் இருவேறு சிந்தனை ஓட்டத்தில் இருந்தனர் எனவும் கூறினார் திருத்தந்தை.
கடவுளது மாறாத நியதி எப்பொழுதும் நம்முடையதைவிட வேறுபட்டது எனவும் கூறிய திருத்தந்தை, கடவுளது எண்ணங்கள் நம் எண்ணங்கள் அல்ல, கடவுளுடைய வழிகள் நம் வழிகள் அல்ல என்ற எசாயா இறைவாக்கினரின் வார்த்தைகளையும் திருப்பயணிகளுக்கு நினைவுபடுத்தினார். 
எனவே நம் ஆண்டவரைப் பின்செல்லுவதற்கு, ஒவ்வொரு மனிதரின் எண்ணங்களிலும் வாழும் முறையிலும் மாற்றம் கொண்டுவரும் ஓர் ஆழமான மனமாற்றம் தேவைப்படுகின்றது, இதற்கு நமது இதயங்கள் ஒளிபெற்று உள்ளூர மாற்றம் பெறுவதற்கு அவற்றைத் திறந்து வைக்க வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.
இதற்கு அன்னைமரியாவின் உதவியைக் கேட்போம் எனத் தனது மூவேளை செப உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
இவ்வுரையின் இறுதியில் மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியும், மதங்களிடையே அமைதிக்கான உரையாடலும் இடம்பெறவும், அப்பகுதி கிறிஸ்தவர்களுக்காகவும் செபிக்குமாறும் திருப்பயணிகளிடம் கேட்டுக் கொண்டார்  திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

2. நைஜீரியாவில் க‌த்தோலிக்க‌ப் பேரால‌ய‌ம் தாக்க‌ப்ப‌ட்ட‌து, 5 பேர் பலி

செப்.24, 2012. ‌‌நைஜீரியாவின் Bauchi எனுமிடத்திலுள்ள புனித யோவான் கத்தோலிக்கப் பேராலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் இறந்துள்ளனர் மற்றும் 48 பேர் காயமடைந்துள்ளனர்.
இஞ்ஞாயிறு காலை திருப்பலி முடிந்து விசுவாசிகள் திரும்பிக் கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் அவ்விடத்திலேயே இரு கிறிஸ்தவர்களும், தற்கொலைப்படைத் தாக்குதலை நடத்தியவரும் உயிரிழந்தனர். காயமடைந்த ஏறத்தாழ 50 பேரில் பின்னர் மருத்துவமனையில் ஒரு தாயும் குழந்தையும் உயிரிழந்தனர்.
இத்தாக்குதல் குறித்து நைஜீரியாவின் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

3. கிறிஸ்தவக் கோவில் தாக்கப்பட்டதற்குப் பாகிஸ்தான் அரசுத்தலைவர் கண்டனம்

செப்.24,2012. பாகிஸ்தானின் Sarhadi லூத்தரன் கோவில் தீக்கிரையாக்கப்பட்டது கண்டனத்துக்குரியது என்ற அந்நாட்டு அரசுத்தலைவர் Asif Ali Zardari, இசுலாமிய தீவிரவாத நடவடிக்கைகளிலிருந்து பாகிஸ்தான் கிறிஸ்தவக் கோவில்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
இறைவாக்கினர் முகமதுவைக் கேலிசெய்து அமெரிக்க ஐக்கிய நாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு எதிர்ப்புக்காட்டும் விதமாக, பாகிஸ்தானில் இடம்பெறும் வன்முறைகளின் ஒருபகுதியாக லூத்தரன் கோவில், அதன் அருகிலிருந்த கல்விக்கூடம் மற்றும் ஆயர் இல்லம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதைப்பற்றிக் குறிப்பிட்டபோது இவ்வாறு தெரிவித்தார் அரசுத்தலைவர்.
பொதுச்சொத்துக்களையோ, தனியார் சொத்துக்களையோ அதிலும் குறிப்பாக மதம் தொடர்புடையவைகளை அழிவுக்குள்ளாக்குவது இசுலாம் மதத்திற்கு எதிராகச் செல்வதாகும் என்றார் அரசுத்தலைவர்  Ali Zardari.
இதே Sarhadi லூத்தரன் கிறிஸ்தவக் கோவில் கடந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் வெடிகுண்டு மூலம் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

4. தேவ நிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்ட பாகிஸ்தான் சிறுமியை பாலர் நீதிமன்றத்தில் விசாரிக்க நீதிபதி உத்தரவு

செப்.24,2012. இசுலாமியர்களின் புனித நூலை எரித்தார் எனப் பொய்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள பாகிஸ்தான் கிறிஸ்தவச் சிறுமி பாலர் சீர்திருத்தச் சட்டங்களின்கீழ் விசாரிக்கப்பட ஆணை பிறப்பித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம்.
Rimsha Masih என்ற இந்தச் சிறுமியின் மீதான வழக்கு சிறையில் வைத்து விசாரிக்கப்படவேண்டும் என்ற மாவட்ட நிர்வாகத்தின் விண்ணப்பத்தை ஏற்க மறுத்த இஸ்லாமாபாத் நீதிமன்றம், 14 வயதே என நிரூபிக்கப்பட்டுள்ள அச்சிறுமியை சிறார்களுக்கான நீதிமனன்றத்தில் விசாரிக்க வேண்டும் எனப் பணித்துள்ளது. இதற்கிடையே, அக்கிறிஸ்தவச் சிறுமியின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது பாகிஸ்தான் காவல்துறை.
கல்வியறிவற்ற, அதேவேளை மனநிலை பாதிக்கப்பட்ட இந்த 14 வயதுச் சிறுமி மீது பொய்யானக் குற்றச்சாட்டை முன்வைத்த இசுலாமிய குரு ஒருவர் தற்போது தேவ நிந்தனைக் குற்றச்சாட்டுடன் சிறைவைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சிறுமியின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்காக, இந்த இசுலாமிய குருவே புனித நூலான குரானின் சில பக்கங்களை எரித்துள்ளது தற்போது அவர் மீதே தேவ நிந்தனைக் குற்றச்சாட்டிற்கு வழிவகுத்துள்ளது.

5. 25ம் தேதியுடன் மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் மூடப்படுகிறது

செப்.24,2012. இலங்கையில் இறுதிப் போரின்போது இடம்பெயர்ந்திருந்த 3 இலட்சம் மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த செட்டிகுளம் மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் செப்டம்பர் 25ம் தேதியுடன், அதாவது இச்செவ்வாய்க் கிழமையுடன் மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மனிக்பாம் முகாமில் மிஞ்சியிருந்த முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 361 குடும்பங்களையும் அவர்களது பகுதிகளுக்கு அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அம்மக்களிடம் ஏற்கனவே தெரிவித்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மனிக்பாம் முகாமை மூட வேண்டும் என்ற அதிகாரிகளின் முடிவினால் தாங்கள் விருப்பமில்லாத ஒரு நிலையிலேயே வேறிடத்தில் சென்று குடியேற நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாக அங்குள்ள மக்கள் ஏற்கனவே குற்றஞ்சாட்டியுள்ளனர்.
முல்லைத்தீவு, கேப்பாப்புலவுப் பகுதியில் இன்னமும் படைத்தளங்கள் அகற்றப்படாததுடன், கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கையும் பூர்த்தியாகாத நிலையிலேயே அந்தப் பகுதி மக்களை முகாமில் இருந்து வெளியேற்றி வேறு இடங்களில் அமைக்கப்பட்ட இடைத்தங்கல் முகாம்களில் மீள்குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

6. சேலம் மாவட்டத்தில் காசநோயாளிகள் அதிகரிப்பு: மருத்துவர் அதிர்ச்சித் தகவல்

செப்.24,2012. சேலம் மாவட்டத்தில், காசநோயாளிகளின் எண்ணிகை அதிகரித்து வருகிறது என  மாவட்ட காசநோய் அதிகாரி சுரேஷ் கூறினார்.
சேலம் அரசு மருத்துவமனை காசநோய் சிகிச்சை மையத்தில், காசநோய்த் தடுப்பு மன்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தபோது இத்தகவலை வெளியிட்ட மாவட்ட காசநோய் அதிகாரி சுரேஷ், சேலம் மாவட்டத்தில், தற்போது 800 காசநோயாளிகள் உள்ளதில், 375 பேர்  புதிய நோயாளிகள் என்றார்.
காலாண்டுக்கு ஒருமுறை, காசநோயாளிகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதன் மூலம், ஆண்டுதோறும், காசநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது என்றார் அவர்.
காசநோய்ப் பாதிப்புக்கு உள்ளானவர்கள், இருமும்போது, அது காற்றில் கலந்து, மற்றவர்களுக்குப் பரவுவதால், அவ்வாறு அது பரவாத வகையில், வாயில் துணி வைத்து இரும வேண்டும் என்ற அறிவுரையையும் முன்வைத்த மருத்துவ அதிகாரி சுரேஷ், இரு வாரங்களுக்குத் தொடர்ந்து சளி, இருமல் இருந்தால், காசநோய்ப் பரிசோதனை மேற்கொள்வது அவசியம் எனவும் கூறினார்.

7. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில், பெண்களில் மூன்றில் ஒருவர் புகையிலைப் பொருட்களுக்கு அடிமை

செப்.24,2012. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து மற்றும் மிசோரமில், ஆண்களில், இரண்டுக்கு ஒருவரும், பெண்களில், மூன்றுக்கு ஒருவரும், புகையிலைப் பொருட்களுக்கு அடிமையாக உள்ளனர் என நலவாழ்வுத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், மிக அதிகமாக உள்ளது, புகையிலைப் பழக்கத்தால், நாகாலாந்து, மிசோரம் மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும், நடுத்தர வயதினரும், வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டுள்ளனர் எனவும் கவலையை வெளியிட்டனர் இந்த அதிகாரிகள்.
மிசோரம் மக்களில் புகையிலைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 67 விழுக்காடு எனவும், நாகாலாந்தில், இது 57 விழுக்காடு எனவும் கூறும் அதிகாரிகள், புகையிலைத் தொடர்பான நோய்கள் அதிகம் பாதித்த மக்களைக் கொண்ட மாநிலமாக நாகாலாந்து உள்ளது என மேலும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...