Thursday, 27 September 2012

Catholic News in Tamil - 25/09/12

1. முஸ்லீம் தலைவர்களிடம் மாரனைட்ரீதி தலைவர் : மதங்களுக்கு எதிரான அவமதிப்புகள் வேண்டாம்

2. பெரு கர்தினால் : விசுவாச ஆண்டு, அருள்பணியாளர்களுக்கு மனமாற்றத்தின் காலமாக இருக்க வேண்டும்

3. விசுவாச ஆண்டில் விசுவாசிகள் திருவருட்சாதனங்களில் பங்கேற்க அமெரிக்க ஆயர்கள் அழைப்பு

4. தேர்தலில் விசுவாசத்தின் அடிப்படையில் வாக்களிக்குமாறு லாஸ் ஆஞ்சலீஸ் பேராயர் வலியுறுத்தல்

5. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கியதன் 50ம் ஆண்டையொட்டி புதிய ஆவணப்படம்

6. இத்தாலியின் அசிசியில் புறவினத்தார் முற்றம்

7. ஆப்ரிக்காவில் முஸ்லீம்களைவிட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது

8. சிரியாவில் சிறார் எதிர்கொள்ளும் கொடுமைகள் திகைக்க வைக்கின்றன, பிரிட்டன் பிறரன்பு நிறுவனம்

9. சார்ஸ் நுண்கிருமியை ஒத்த புதிய கிருமி: மருத்துவர்கள் எச்சரிக்கை

10. யாழ்ப்பாணத்தில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. முஸ்லீம் தலைவர்களிடம் மாரனைட்ரீதி தலைவர் : மதங்களுக்கு எதிரான அவமதிப்புகள் வேண்டாம்

செப்.25,2012. மதங்களுக்கு எதிரான அனைத்து அவமதிப்பு நடவடிக்கைகளும் தடை செய்யப்படுவதற்குத் தீர்மானம் நிறைவேற்றப்படுமாறு லெபனன் மாரனைட்ரீதி கத்தோலிக்க முதுபெரும் தலைவர் Beshara Rai ஐக்கிய நாடுகள் நிறுவனத்துக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
லெபனனின் Bkerkeயிலுள்ள மாரனைட்ரீதி தலைமையகத்தில் நடைபெற்ற கிறிஸ்தவ-இசுலாம் கூட்டத்தில் இந்தத் தனது பரிந்துரையைப் பொதுப்படையாக முன்வைத்தார் முதுபெரும் தலைவர் Rai.
'The Innocence of Muslims' என்ற அமெரிக்கத் திரைப்படம் முஸ்லீம்களையும் இறைவாக்கினரையும் மட்டுமல்லாமல் கிறிஸ்தவர்களையும் மற்ற மதத்தினரையும் புண்படுத்துவதாய் இருக்கின்றது என்பதால், இந்தத் திரைப்படத்துக்கு எதிரான கண்டனங்களை மட்டும் ஏற்பதோடு நிறுத்திவிடாமல் மதங்களைக் கேலிசெய்யும் அனைத்தையும் தடைசெய்வதற்கு ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்படுமாறு அனைத்துலக சமுதாயத்தையும் விண்ணப்பிப்போம் என்றும் கூறினார் முதுபெரும் தலைவர் Rai.
மேலும், மதங்களை அவமதிக்கும் இத்தகைய செயல்களுக்கு எதிராக உறுதியான நிலைப்பாடு ஒன்றை ஐ.நாவும், அனைத்துலக சமுதாயமும் எடுக்குமாறு முதுபெரும் தலைவர் Rai, இம்மாதம் 13ம் தேதியன்று ஏற்கனவே விண்ணப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2. பெரு கர்தினால் : விசுவாச ஆண்டு, அருள்பணியாளர்களுக்கு மனமாற்றத்தின் காலமாக இருக்க வேண்டும்

செப்.25,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் அறிவிக்கப்பட்டிருக்கும் விசுவாச ஆண்டு, அருள்பணியாளர்களுக்கு உண்மையான மனமாற்றத்தின் காலமாக இருக்க வேண்டும், இதன்மூலம் மற்றவர்கள் அருள்பணியாளர்களில் கடவுளின் பிரசன்னத்தைக் காண முடியும் என்று பெரு நாட்டுக் கர்தினால் ஹூவான் லூயிஸ் சிப்பிரியானி கூறினார்.
உலகளாவியக் கத்தோலிக்கத் திருஅவையில் வருகிற அக்டோபர் 11ம் தேதி தொடங்கவிருக்கும் விசுவாச ஆண்டு குறித்து லீமா உயர்மறைமாவட்ட அருள்பணியாளர்களுக்கும் துறவிகளுக்கும் உரையாற்றிய கர்தினால் சிப்பிரியானி இவ்வாறு கூறினார்.
திருப்பலி நிகழ்த்துவது, மறையுரைகளுக்குத் தயார் செய்வது, மறையுரை ஆற்றுவது ஆகியவற்றில் அருள்பணியாளர்கள் தங்களது அகவாழ்வின் மாற்றத்தை வெளிப்படுத்த வேண்டுமெனவும் லீமா கர்தினால் சிப்பிரியானி வலியுறுத்தினார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கியதன் 50ம் ஆண்டு மற்றும் கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி ஏடு வெளியானதன் 20ம் ஆண்டு நிறைவுகளை முன்னிட்டு அறிவிக்கப்பட்டிருக்கும் விசுவாச ஆண்டு 2012ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி தொடங்கி 2013ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று நிறைவடையும்.

3. விசுவாச ஆண்டில் விசுவாசிகள் திருவருட்சாதனங்களில் பங்கேற்க அமெரிக்க ஆயர்கள் அழைப்பு

செப்.25,2012. திருவருட்சாதனங்களில் பங்கேற்பு, செபம், செயல்பாடு ஆகியவற்றின் வழியாக மலரவிருக்கும் விசுவாச ஆண்டில் விசுவாசிகள் பங்கெடுக்குமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் கேட்டுள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் நற்செய்தி அறிவிப்பு பணிக்குழுத் தலைவரான Green Bay ஆயர் David L. Ricken வெளியிட்டுள்ள அறிக்கையில், விசுவாசத்தையும் நற்செய்தி அறிவிப்புப்பணியையும் புதுப்பிப்பதற்கு திருஅவைக்கு விசுவாச ஆண்டு தக்க தருணமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
விசுவாசிகளின் ஆன்மீக வாழ்க்கையின் வளர்ச்சியில் ஒப்புரவு திருவருட்சாதனம் முக்கிய அங்கம் வகிக்கின்றது என்றும் ஆயர் Ricken கூறியுள்ளார்.

4. தேர்தலில் விசுவாசத்தின் அடிப்படையில் வாக்களிக்குமாறு லாஸ் ஆஞ்சலீஸ் பேராயர் வலியுறுத்தல்

செப்.25,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டில் வருகிற நவம்பரில் இடம்பெறவிருக்கும் தேர்தலில், கத்தோலிக்கர் தங்களது விசுவாசத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்த வாழ்வை அடையும் எண்ணத்தில் வாக்களிக்குமாறு வலியுறுத்தியுள்ளார் லாஸ் ஆஞ்சலீஸ் பேராயர் Jose Gomez .
குடிமக்கள் என்ற முறையில் தேர்தலில் பங்கெடுப்பதற்கு முக்கியமான கடமை உள்ளது, இதனை எப்பொழுதும் கடவுளுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையின் ஒளியில் நிறைவேற்ற வேண்டுமெனவும் பேராயர் Gomez, The Tidings என்ற இதழில் எழுதியுள்ளார்.
நாம் எப்பொழுதும் கிறிஸ்து மற்றும் திருஅவையின் மனநிலையோடு இணந்து சிந்தித்துச் செயல்பட வேண்டும் எனவும் பேராயர் கூறியுள்ளார்.

5. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கியதன் 50ம் ஆண்டையொட்டி புதிய ஆவணப்படம்

செப்.25,2012. வருகிற அக்டோபர் 11ம் தேதியன்று இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கியதன் 50ம் ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு அந்நாளில் இப்பொதுச்சங்கம் பற்றிய ஆவணப்படம் ஒன்றை வெளியிடுவதற்குத் திட்டமிட்டு வருகிறது திருப்பீட சமூகத்தொடர்பு அவை.
வத்திக்கான் ஒளிப்பட ஆவணக்காப்பகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 200மணி நேரங்களுக்கு அதிகமான படங்களிலிருந்து இந்தப் புதிய ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளது Micromegas சமூகத்தொடர்பு நிறுவனம்.
இப்பொதுச்சங்கம் குறித்து இதுவரை வெளியிடப்படாத படங்கள், குறிப்புகள், உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த திருஅவைத் தலைவர்களின் சொந்த அனுபவங்கள், பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் இப்பொதுச்சங்கம் குறித்த வரலாற்றுக் குறிப்புகள் போன்றவை இந்தப் புதிய ஆவணப்படத்தில் உள்ளன.
1959ம் ஆண்டு சனவரியில் திருத்தந்தை அருளாளர் 23ம் அருளப்பர் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைக் கூட்டுவது குறித்து அறிவித்தது, அதன் பின்னர் அதற்கென நடைபெற்ற மூன்றாண்டு தயாரிப்புகள், இப்போதைய கிறிஸ்தவ உலகத்திற்கு இப்பொதுச்சங்கம் முன்வைக்கும் புதிய தூண்டுதல்கள் போன்வற்றையும் இந்த ஆவணப்படம் உள்ளடக்கியுள்ளது. 

6. இத்தாலியின் அசிசியில் புறவினத்தார் முற்றம்

செப்.25,2012. இத்தாலியின் அசிசியில் வருகிற அக்டோபர் 5,6 தேதிகளில்  "அறியாத கடவுள்" என்ற தலைப்பில் புறவினத்தார் முற்றம் என்ற கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும் என இச்செவ்வாயன்று நிருபர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
திருப்பீடக் கலாச்சார அவையும் "Oicos Riflessioni" என்ற கழகமும் இணைந்து நடத்தும் இக்கூட்டத்தை இத்தாலிய அரசுத்தலைவர் ஜார்ஜோ நாப்பொலித்தானோ ஆரம்பித்து வைப்பார். இதில் நாற்பதுக்கும் மேற்பட்ட சொற்பொழிவாளர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.
கடவுளை நம்புவோர் மற்றும் கடவுளை நம்பாதவர்களுக்கு இடையே ஒரு நிலையான உரையாடலை ஏற்படுத்தும் புறவினத்தார் முற்றம் என்ற திட்டத்தின்கீழ் இத்தகைய கூட்டங்கள், திருப்பீடக் கலாச்சார அவைத் தலைவர் கர்தினால் ஜான்பிராங்கோ ரவாசியின் தலைமையில் ஏற்கனவே பல ஐரோப்பியத் தலைநகரங்களில் நடத்தப்பட்டுள்ளன 

7. ஆப்ரிக்காவில் முஸ்லீம்களைவிட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது

செப்.25,2012. ஆப்ரிக்கக் கண்டத்தில் முஸ்லீம்களைவிட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருப்பதாக புதிய மதங்கள் குறித்து ஆய்வு செய்யும் CESNUR மையம் அறிவித்தது.
மொரோக்கோவின் El Jadida  பல்கலைக்கழகத்தில் CESNUR மையம் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் பேசிய இம்மையத்தின் தலைவர் Massimo Introvigne, தற்போது ஆப்ரிக்க மக்களில் கிறிஸ்தவர்கள் 46.53 விழுக்காடும் முஸ்லீம்கள் 40.46 விழுக்காடும், ஆப்ரிக்க மரபு மதத்தினர் 11.8 விழுக்காடும் உள்ளனர் என அறிவித்தார்.
ஆப்ரிக்கக் கண்டத்தில் 31 நாடுகளில் கிறிஸ்தவர்களும், 21 நாடுகளில் முஸ்லீம்களும், 6 நாடுகளில் ஆப்ரிக்க மரபு மதத்தினரும் பெரும்பான்மையாக உள்ளனர் எனவும் அம்மையத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
1900மாம் ஆண்டில் ஒரு கோடிக் கிறிஸ்தவர்கள் இருந்த ஆப்ரிக்காவில் 2012ம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை 50 கோடியாக உயர்ந்திருக்கிறது.
ஆப்ரிக்காவில் கத்தோலிக்கத்தை அனுசரிக்கும் மக்களின் எண்ணிக்கை ஐரோப்பாவில் கத்தோலிக்கத்தை அனுசரிக்கும் மக்களைவிட அதிகம் என்றும் இத்தாலிய சமூகவியலாளரான Massimo Introvigne அறிவித்தார். இக்கூட்டத்தில் 18 நாடுகளிலிருந்து சுமார் 70 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

8. சிரியாவில் சிறார் எதிர்கொள்ளும் கொடுமைகள் திகைக்க வைக்கின்றன, பிரிட்டன் பிறரன்பு நிறுவனம்

செப்.25,2012. கடும் சண்டை இடம்பெற்றுவரும் சிரியாவில் திகைக்க வைக்கும் சித்ரவதைகள், கைதுகள், கடத்தல்கள் போன்றவற்றைச் சிறார் எதிர்கொள்கின்றனர் என்றும் இந்தக் கொடுமைகள் பதிவு செய்யப்பட வேண்டியது நல்லது என்றும் Save the Children என்ற பிரிட்டன் பிறரன்பு நிறுவனம் கூறுகிறது.
சிரியாவின் அகதிச் சிறாரிடமிருந்து கேட்டறிந்த தகவல்களை வைத்து இவ்வாறு கூறுவதாகத் தெரிவித்த Save the Children நிறுவனம், சிறார் வாழும் இடங்களில் ஐ.நா.வின் இருப்பு அதிகம் தேவை என்றும் வலியுறுத்துகிறது.
இத்திங்களன்று தொடங்கப்பட்டுள்ள ஐ.நா. பொது அவைக் கூட்டத்தில் சிரியா நாட்டுச் சிறார் குறித்து கவனம் செலுத்தப்படுமாறும் கேட்டுள்ளது Save the Children நிறுவனம்.
ஏறக்குறைய ஒவ்வொரு குழந்தையும் தனது குடும்பத்தில் ஒருவர் கொல்லப்பட்டதைப் பார்த்திருக்கின்றது என்றுரைக்கும் அந்நிறுவனம், சிரியாவில் கடந்த 18 மாதங்களாக இடம்பெற்றுவரும் சண்டைகள் குறித்த ஆவணங்களைத் தயாரித்திருப்பதாகவும் தெரிவித்தது.

9. சார்ஸ் நுண்கிருமியை ஒத்த புதிய கிருமி: மருத்துவர்கள் எச்சரிக்கை

செப்.25,2012. 2003ம் ஆண்டில் உலகின் பல பாகங்களிலும் பரவி நூற்றுக்கணக்கானவர்கள் இறப்பதற்குக் காரணமான சார்ஸ் நுண்கிருமி நோயை ஒத்த புதிய சுவாசநோய் ஒன்றை பிரிட்டன் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
கத்தாரிலிருந்து இலண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டுவரப்பட்ட 49 வயது ஆண் ஒருவரிடம் இந்த நோய்க் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய நுண்கிருமியால் எவ்வகையான ஆபத்து ஏற்படலாம் என்று நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள் என்றும் ஊடகச் செய்தி கூறுகிறது.
பொதுவாக, சுவாசப்பாதையைத் தாக்கி, சாதாரண தடிமனையும் சார்ஸ் எனப்படுகின்ற கடுமையான திடீர் சுவாசநோயையும் ஏற்படுத்துகின்ற ஒருவகை நுண்கிருமியை உள்ளடக்கிய பெரிய நுண்கிருமி குடும்பத்தை கொரோனா நுண்கிருமி என்று மருத்துவ உலகம் கூறுகிறது.
ஹாங்காங்கிலிருந்து முப்பதுக்கும் அதிகமான நாடுகளுக்குப் பரவி ஏறத்தாழ 800 பேரைக் காவுகொண்ட இந்தச் சார்ஸ் நோய் முழுமையாக ஒழிக்கப்படாவிட்டாலும் அது பரவுவது 2003ம ஆண்டில் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

10. யாழ்ப்பாணத்தில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

செப்.25,2012. இலங்கையின் யாழ்ப்பாணத்தில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், ஆண்டுதோறும் ஏறக்குறைய ஐயாயிரம் புற்றுநோயாளிகள் பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் புற்றுநோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்கும் நோக்கில் தெல்லிப்பளை மருத்துவமனைக்கு அருகில் 26 கோடி ரூபாய்ச் செலவில் புற்றுநோய் மருத்துவமனையொன்று அமைக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணப் புற்றுநோயாளிகள் தற்போது மஹரகம புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், இலங்கையில் ஆண்டுதோறும் இருபதாயிரம் பேர் புற்றுநோயினால் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...