Tuesday 18 September 2012

Catholic News in Tamil - 18/09/12

1. திருத்தந்தை : உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர் பெயர்கள் 

2.    மும்பை கர்தினால் : முகமது குறித்த தெய்வநிந்தனை திரைப்படம் நியாயப்படுத்தப்பட முடியாத செயல் 

3. இசுலாமைக் கேலி செய்யும் திரைப்படத்துக்குப் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் கண்டனம்

4. யாழ்ப்பாண ஆயர், ஐ.நா.பிரதிநிதிகள் சந்திப்பு

5. அன்னை தெரேசா வாழ்வில் நடந்த பெரிய அற்புதம்

6. புனித சவேரியாரின் திருப்பண்டம் ஆஸ்திரேலியாவை அடைந்துள்ளது

7. மியான்மாரில் குறைந்தது  89 அரசியல் கைதிகள் விடுதலை

8. கடலுக்கடியில் கண்ணிவெடி: முப்பது நாடுகளின் கடற்படைகள் கூட்டுப் பயிற்சி

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர் பெயர்கள் 

செப்.18,2012. வருகிற அக்டோபர் 7 முதல் 28 வரை வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர்கள் பெயரை இச்செவ்வாயன்று அறிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
"கிறிஸ்தவ விசுவாசத்தைப் பரப்புவதற்கான நற்செய்திப்பணியில் புதிய முறைகள்" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு, மும்பை பேராயர் கர்தினால் Oswald GRACIAS, கேரளாவின் C.M.I துறவு சபை அதிபர் அருள்தந்தை Jose PANTHAPLAMTHOTTIYIL உட்பட, கர்தினால்கள் பேராயர்கள், ஆயர்கள் மற்றும் அருள்தந்தையர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கர்தினால்கள் அவைத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ சொதானோ, ஜெர்மனியின் Cologne பேராயர் கர்தினால் Joachim MEISNER, போஸ்னியா-எர்செகொவினா பேராயர் கர்தினால் Vinko PULJIČ, டான்சானிய நாட்டு Dar-es-Salaam பேராயர் கர்தினால் Polycarp PENGO, வியன்னா பேராயர் கர்தினால் Christoph SCHÖNBORN எனப் பல கர்தினால்கள், பேராயர்கள், ஆயர்கள் இன்னும் உட்பட சில அருள்தந்தையர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

2.    மும்பை கர்தினால் : முகமது குறித்த தெய்வநிந்தனை திரைப்படம் நியாயப்படுத்தப்பட முடியாத செயல் 

செப்.18,2012. முகமது குறித்த தெய்வநிந்தனை திரைப்படம் நியாயப்படுத்தப்பட முடியாத செயல் எனினும், அச்செயலுக்கு எதிரான எதிர்ப்பை வன்முறை மூலமாக அல்ல, மாறாக, உரையாடல் மற்றும் அமைதி மூலமாக காட்ட வேண்டும் என இந்திய ஆயர் பேரவைத் தலைவர் மும்பை பேராயர் கர்தினால் Oswald GRACIAS கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் வெளியான இசுலாமைக் கேலி செய்யும் திரைப்படத்துக்கு எதிராக பல முஸ்லீம் நாடுகளில் கடும் எதிர்ப்புகளும் வன்முறைகளும் இடம்பெற்றுவரும்வேளை, இந்த எதிர்ப்புக்களில் சில இடங்களில் அப்பாவி மக்கள் காயமடைந்துள்ளதையும் இறந்துள்ளதையும் குறித்து ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பேசிய கர்தினால் GRACIAS இவ்வாறு கூறினார்.
இந்தத் திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்த கர்தினால் GRACIAS, ஊடகத்துறைக்குச் சுதந்திரம் இருக்கின்றது மற்றும் ஊடகத்துறையின் சுதந்திரத்தை நாம் மதிக்க வேண்டும், எனினும், அனைத்துச் சுதந்திரமும் பொறுப்பான விதத்தில் பயன்படுத்தப்பட வேண்டும், அடுத்தவருக்குப் புனிதமாக இருப்பதைக் கேலி செய்வதற்கும் அவமதிப்பதற்கும் ஊடகத்தைப் பயன்படுத்தப்படுவது தவறானது என்றும் மும்பை கர்தினால் கூறினார்.
மற்றவர்களை, சிறப்பாக மற்றவர்களின் மத நம்பிக்கையை மதித்துப் போற்ற நாம் பழக வேண்டும் என்ற அவர், ஒருபோதும் கடந்து செல்லக்கூடாத எல்லைகள் சில உள்ளன என்றும் கூறினார்.
'The Innocence of Muslims' என்ற அமெரிக்கத் திரைப்படத்தின் முன்னோட்டம் முகம்மது நபிகளைப் பெண்பித்தராகவும், மோசடிக்காரராகவும் காண்பித்ததால் உலகமெங்கும் அமெரிக்கத் தூதரகங்கள் முஸ்லீம்களால் தாக்கப்படுகின்றன. 14 நிமிடம் ஓடும் இந்தத் திரைப்பட முன்னோட்டத்தை பாகிஸ்தான், பங்களாதேஷ் உட்பட சில நாடுகள் தங்கள் இணையதளங்களில் தடை செய்துவிட்டன என்று செய்திகள் கூறுகின்றன.

3. இசுலாமைக் கேலி செய்யும் திரைப்படத்துக்குப் பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் கண்டனம்

செப்.18,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டில் வெளியான இசுலாமைக் கேலி செய்யும் திரைப்படத்துக்கு எதிராக முஸ்லீம் உலகெங்கும் வன்முறைகள் இடம்பெற்றுவரும்வேளை, இந்தத் திரைப்படத்துக்கு எதிரானத் தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் பாகிஸ்தான் திருஅவைத் தலைவர்கள்.
பாகிஸ்தானின் Faisalabadல் இடம்பெற்ற கண்டனக் கூட்டத்தில், கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர்களின் அத்திரைப்படம் குறித்த கண்டன அறிக்கையை வாசித்தார் Faisalabad மறைமாவட்ட பல்சமயப் பணிக்குழு செயலர் அருள்பணி ஜேம்ஸ் பவுல்.
இந்தத் திரைப்படம், உலக அளவில் முஸ்லீம்களின் உணர்வுகளை மட்டுமல்லாமல் உலகளாவியக் கிறிஸ்தவர்களின் உணர்வுகளையும் பாதித்துள்ளது என்றுரைக்கும் அவ்வறிக்கை, பிற நாடுகளைப் போல வத்திக்கானும் இத்திரைப்படம் வெளியிடப்பட்டதைக் கண்டனம் செய்கின்றது என்று கூறுகிறது.
'The Innocence of Muslims' என்ற இந்தத் திரைப்படத்தைத் தயாரித்த Sam Becile மற்றும் இதனைப் பொதுப்படையாக ஆதரித்த அமெரிக்கக் கிறிஸ்தவப் போதகர் Terry Jones ஆகிய இருவரையும் கைது செய்யுமாறும் திருஅவைத் தலைவர்களின் அறிக்கை கேட்டுக் கொண்டுள்ளது.


4. யாழ்ப்பாண ஆயர், ஐ.நா.பிரதிநிதிகள் சந்திப்பு

செப்.18,2012. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதாக இலங்கை அரசு உறுதியளித்துள்ளபோதிலும், அப்பரிந்துரைகள் நிறைவேற்றப்படவில்லை என யாழ்ப்பாண ஆயர் தாமஸ் சௌந்தரநாயகம் ஐ.நா.அதிகாரிகளிடம் கூறியிருப்பதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
ஐ.நா. மனித உரிமைகள் அவையின் ஆசிய-பசிபிக், மத்திய கிழக்கு, வடக்கு ஆப்ரிக்கா ஆகிய பகுதிகளின் தலைவர் ஹன்னி மெகல்லியும், அந்த ஐ.நா.அவையின் சட்டம் மற்றும் சனநாயகம் சார்ந்த விவகாரங்கள் துறையின் ஆஸ்கர் செல்டர்ஸும் இத்திங்களன்று யாழ்ப்பாணம் சென்றபோது ஆயர் இல்லத்திற்கும் சென்று ஆயரோடும் கலந்துரையாடியுள்ளனர்.
இந்த ஐ.நா.பிரதிநிதிகளிடம் ஆயர் தாமஸ் இவ்வாறு புகார் சொன்னதாக அந்த ஊடகச் செய்தி மேலும் கூறுகிறது.
இலங்கையில் போர் முடிவடைந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், அந்தப் போர் மூண்டதற்கான காரணத்தை அறிந்து அதற்குரிய அரசியல் தீர்வை முன்வைக்கவும் இலங்கை அரசு தவறியிருப்பதாகவும் ஆயர் தாமஸ், ஐநா அதிகாரிகளிடம் தெரிவித்தார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
போரினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள வன்னிப்பகுதியில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் திருப்திகரமாக மேற்கொள்ளப்படவில்லை என்றும், மீள்குடியேறியுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகள் பல இடங்களில் உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை என்றும் யாழ் ஆயர் ஐநா அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
யாழ் ஆயரைச் சந்தித்த பின்னர், அப்பகுதியில் போரினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறியுள்ள ஒரு பகுதி மக்களையும் ஐநா அதிகாரிகள் நேரடியாகச் சந்தித்து அவர்களது வாழ்க்கை நிலைமைகள் மற்றும் குறைநிறைகளைக் கேட்டறிந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.

5. அன்னை தெரேசா வாழ்வில் நடந்த பெரிய அற்புதம்

செப்.18,2012. அருளாளர் அன்னை தெரேசா பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபையைத் தொடங்குவதற்கு முன்னர், அவர் சேர்ந்திருந்த லொரேட்டோ துறவு சபையை விட்டு விலகாமல், அதேசமயம் அச்சபையின் குழு வாழ்விலிருந்து மட்டும் விலகி இருப்பதற்கு வத்திக்கானிலிருந்து கிடைத்த அனுமதியே அவர் வாழ்வில் நடந்த உண்மையான புதுமை என்று Naveen Chawla தெரிவித்தார்.
அன்னை தெரேசாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய Naveen Chawla ஓர் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
சுதந்திர இந்தியா பிறந்து சிறிது காலமே ஆகி குழப்பத்தின் மத்தியில் இருந்த சமயம் பாதுகாப்பில்லாமல் இருந்த கொல்கட்டா நகரத்தில் தனியே பணி செய்வதற்கு அன்னை தெரேசா விரும்பினார் என்றும், அவரது விருப்பத்தை வத்திக்கான் நிராகரித்து இருந்திருந்தால் பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபை முளையிலேயே கிள்ளி எறியப்பட்டிருக்கும் என்றும் Chawla தெரிவித்தார்.
1950ம் ஆண்டில் அன்னை தெரேசா ஆரம்பித்த பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபையின் வெற்றி, அது கொல்கட்டாவில் தொடங்கப்பட்டதை அதிகம் சார்ந்துள்ளது என்றும் Chawla தெரிவித்தார்.

6. புனித சவேரியாரின் திருப்பண்டம் ஆஸ்திரேலியாவை அடைந்துள்ளது

செப்.18,2012. 16ம் நூற்றாண்டு இயேசு சபை புனிதராகிய பிரான்சிஸ் சவேரியாரின் திருப்பண்டம் ஆஸ்திரேலியாவைச் சென்றடைந்துள்ளது.
செப்டம்பர் 16ம் தேதி இஞ்ஞாயிறன்று ஆஸ்திரேலியாவின் சிட்னியைச் சென்றடைந்துள்ள இத்திருப்பண்டம் குறித்துப் பேசிய சிட்னி உயர்மறைமாவட்ட துணை ஆயர் Peter Comensoli, ஆஸ்திரேலியக் கத்தோலிக்கர்கள் புனித சவேரியாரிடம் மிகுந்த பக்தி கொண்டவர்கள் எனக் கூறினார்.
உரோம் ஜேசு ஆலயத்தில் வைக்கப்பட்டிருக்கும் புனித பிரான்சிஸ் சவேரியாரின் வலது கையை, அவ்வாலயத்தில் நடந்த சிறப்பு வழிபாட்டுக்குப் பின்னர் சிட்னிக்குக் கொண்டு சென்றுள்ளார் ஆயர் Comensoli.
ஆப்ரிக்கா, இந்தியா மற்றும் தூர கிழக்கு நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்த இந்த இஸ்பானியப் புனிதரின் வலது கை, ஏறக்குறைய 400 ஆண்டுகளாக இயேசு சபையினரின் தாய் ஆலயமான உரோம் ஜேசு ஆலயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாலயத்தில்தான் புனித இலெயோலா இஞ்ஞாசியாரின் கல்லறையும் உள்ளது.
ஆஸ்திரேலியா மறைபரப்பு நாடாக இருந்த போது புனித குழந்தை தெரேசாவுடன், புனித பிரான்சிஸ் சவேரியாரும் அந்நாட்டின் இணைப் பாதுகாவலராக இருந்தார் என்றும் ஆயர் Peter Comensoli கூறினார்.
புனித பிரான்சிஸ் சவேரியாரின் திருப்பண்டம் மூன்று மாதங்களுக்கு ஆஸ்திரேலியாவின் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் எனச் சொல்லப்பட்டுள்ளது. 

7. மியான்மாரில் குறைந்தது  89 அரசியல் கைதிகள் விடுதலை

செப்.18,2012. மியான்மார் எதிர்க்கட்சித் தலைவர் Aung San Suu Kyi  அமெரிக்க ஐக்கிய நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்னர் இத்திங்கள் மாலை குறைந்தது  89 அரசியல் கைதிகளை விடுதலை செய்துள்ளது மியான்மார் அரசு. 
மியான்மாரில் எஞ்சியுள்ள அரசியல் கைதிகளில் குறைந்தது 89 பேரும், வெளிநாட்டுக் கைதிகள் பலரும் என 514 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
மேலும், மியான்மார் அரசுத்தலைவர் Thein Sein நியுயார்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் நிறுவனத்துக்குப் பயணம் மேற்கொள்வதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் சில ஊடகங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன.
மியான்மாரில் இடம்பெற்றுவரும் சீர்திருத்தங்களின் ஒரு கட்டமாக கடந்த ஆண்டில் 600க்கு மேற்பட்ட அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

8. கடலுக்கடியில் கண்ணிவெடி: முப்பது நாடுகளின் கடற்படைகள் கூட்டுப் பயிற்சி

செப்.18,2012. கடலுக்கடியில் புதைக்கப்படும் கண்ணிவெடிகள் ஏற்படுத்தக்கூடிய ஆபத்தை எப்படி சமாளிப்பது என்று அமெரிக்கா தலைமையில் பயிற்சியெடுப்பதற்காக முப்பது நாடுகளைச் சேர்ந்த போர்க் கப்பல்கள் பாரசீக வளைகுடாவில் பஹ்ரைனை ஒட்டிய கடல்பரப்பில் சங்கமித்துள்ளன.
மத்திய கிழக்கில் இதுவரை இல்லாத அளவுக்குப் பெரிதாக நடத்தப்படும் இதுபோன்ற கடற்படைப் பயிற்சி இது என்று கூறப்படுகிறது.
கடலுக்கடியில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டால் அதனை எப்படிக் கண்டறிவது, எப்படி அகற்றுவது, மற்றவர்களை விழிப்புடன் இருக்கச் செய்வது என்பதையெல்லாம் கற்றுக்கொண்டு பயிற்சி செய்து பார்ப்பது இந்த நடவடிக்கையின் நோக்கம்.
இந்தக் கூட்டுப் பயிற்சி ஒரு புறமிருக்க, வழக்கத்துக்கு மாறாக தற்போது அமெரிக்காவின் மூன்று விமானதாங்கி போர்க் கப்பல்கள் வளைகுடாப் பகுதிக்குச் சென்றுகொண்டிருக்கின்றன என்று செய்திகள் கூறுகின்றன.
 

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...