1. திருத்தந்தையின் லெபனன் திருப்பயண நிறைவு
2. லெபனனின் அமைதியைக் குலைக்கும் அனைத்தையும் துணிச்சலுடன் எதிர்த்து நில்லுங்கள் –
லெபனன் மக்களுக்குத் திருத்தந்தை அழைப்பு
3. மத்திய கிழக்கில் ஒப்புரவு ஏற்படுவதற்கு கிறிஸ்தவ சபைகளிடையே ஒன்றிப்பு அவசியம்
4. திருத்தந்தையின் திருப்பயண விளைவுகள் குறித்து திருப்பீடப்பேச்சாளர்
5. சிரியாவில் வன்முறை களையப்பட உதவுமாறு ஐநா. வில் திருப்பீட அதிகாரி விண்ணப்பம்
6. ஒசோன் வாயுமண்டலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை அடுத்த 50 ஆண்டுகளில்
சரிசெய்துவிட முடியும் - ஐ.நா.பொதுச் செயலர்
7. இந்தியாவில் உலகத் தரம்வாய்ந்த பல்கலைக்கழகங்கள் இல்லை: குடியரசுத் தலைவர்
கவலை
8. விலங்குகளின் உணவுப் பற்றாக்குறைக்குத் தீர்வாக தமிழகக் காடுகளில் மரம் நடும் பணி
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தையின் லெபனன் திருப்பயண நிறைவு
செப்.17,2012.
லெபனன் நாட்டுக்கானத் தனது மூன்று நாள் மேய்ப்புப்பணித் திருப்பயணத்தை
நிறைவுசெய்து இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் இரவு 9.34 மணிக்கு உரோம் சம்ப்பினோ
இராணுவ விமானநிலையத்தை வந்தடைந்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
லெபனன்
திருப்பயணத்தை நிறைவுசெய்து இத்தாலி திரும்பியுள்ள திருத்தந்தைக்கு
இனியநல் வரவேற்பளித்து செய்தி அனுப்பியுள்ள இத்தாலிய அரசுத் தலைவர் ஜார்ஜோ
நாப்போலித்தானோ,
இப்பயணத்தில் திருத்தந்தை சந்தித்த லெபனன் மக்கள் மற்றும் மத்திய
கிழக்குப் பகுதி மக்கள் அனைவருக்கும் இப்பயணம் ஊக்கமூட்டுவதாக இருக்கின்றது
என்று கூறியுள்ளார்.
கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே உரையாடலைப் புதுப்பிக்கவும், மத்திய கிழக்குப் பகுதியில் சமய சுதந்திரத்துக்கும் திருத்தந்தை விடுத்துள்ள அழைப்பைப் பாராட்டியுள்ள நாப்போலித்தானோ, தான் திருத்தந்தையை மீண்டும் சந்திக்க விருப்பம் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
2. லெபனனின் அமைதியைக் குலைக்கும் அனைத்தையும் துணிச்சலுடன் எதிர்த்து நில்லுங்கள் – லெபனன் மக்களுக்குத் திருத்தந்தை அழைப்பு
செப்.17,2012. லெபனன் நாடு தனது பாரம்பரியச் சமயப் பன்மைத்தன்மையைத் தொடர்ந்து காத்து வருமாறும், அதனை எதிர்க்கும் சக்திகளின் தாக்கத்தை உறுதியுடன் எதிர்த்து நிற்குமாறும் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
லெபனனுக்கானத் தனது மூன்று நாள் மேய்ப்புப்பணித் திருப்பயணத்தை நிறைவுசெய்த பெய்ரூட் “Rafiq Hariri” பன்னாட்டு விமானநிலைய பிரியாவிடை நிகழ்ச்சியில் உரையாற்றியபோது இவ்வாறு கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
இந்த மூன்று நாள்களும் தனக்கு இனியநல் வரவேற்பளித்த அந்நாட்டு அரசுத் தலைவர் உட்பட அனைத்துக் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் என, எல்லாருக்கும் நன்றி தெரிவித்த திருத்தந்தை, இத்திருப்பயணம் மறக்க முடியாதது என்றும் கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்கு லெபனன் அரசுத் தலைவர் மிஷேல் ஸ்லைமான், அமைச்சர்கள், நாடாளுமன்ற சபாநாயகர், கத்தோலிக்க முதுபெரும் தலைவர்கள், ஆயர்கள்
எனப் பலர் வந்திருந்தனர். திருத்தந்தையின் செய்தியைக் கேட்பதற்காக
நூற்றுக்கணக்கான இளையோரும் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
லெபனன்
நாட்டில் ஆண்களும் பெண்களும் ஒருவர் ஒருவருடன் நல்லிணக்கத்துடனும்
அமைதியிலும் தொடர்ந்து வாழ்வார்களாக என்று சொல்லி இந்நாட்டுக்கானத் தனது
முதல் திருப்பயணத்தை நிறைவு செய்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இத்துடன் திருத்தந்தையின் 24வது வெளிநாட்டுத் திருப்பயணம் நிறைவுக்கு வந்தது.
3. மத்திய கிழக்கில் ஒப்புரவு ஏற்படுவதற்கு கிறிஸ்தவ சபைகளிடையே ஒன்றிப்பு அவசியம்
செப்.17,2012. மத்திய கிழக்கில் ஒப்புரவு ஏற்படுவதற்கு கிறிஸ்தவ சபைகளிடையே ஒன்றிப்பு அவசியம் என்பதை இஞ்ஞாயிறு மாலை Charfet சிரியன் கத்தோலிக்க நமதன்னை ஆலயத்தில் தான் சந்தித்த கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளிடம் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
மத்திய கிழக்குப் பகுதியில் வன்முறையும் நிலையற்றதன்மையும் காணப்படும் இந்நாள்களில்,
கிறிஸ்துவின் சீடர்கள் மத்தியில் நிலவும் ஒன்றிப்பு ஒரு நல்ல உறுதியான
சாட்சியமாக இருக்கவேண்டியது இன்றியமையாதது என்று உரைத்த திருத்தந்தை, இவ்வாறு வாழும்போது உலகமும் இவர்களின் அன்பு, அமைதி மற்றும் ஒப்புரவுச் செய்தியில் நம்பிக்கை வைக்கும் என்று கூறினார்.
கிறிஸ்துவின்
மீதான நமது அன்பு மெது மெதுவாக நம் மத்தியில் முழு ஒன்றிப்பைக் கொண்டு
வருவதற்கு இடைவிடாமல் உழைப்போம் என்றும் கேட்டுக்கொண்ட அவர், செபம் மற்றும் குழுவாகச் சேர்ந்து உழைப்பதன் மூலம், “அவர்கள் எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக”(யோவா.17,21) என்ற நமது மீட்பரின் விண்ணப்பத்திற்கு நம்மால் பதில் சொல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.
4. திருத்தந்தையின் திருப்பயண விளைவுகள் குறித்து திருப்பீடப்பேச்சாளர்
செப். 17, 2012. திருத்தந்தையின்
அண்மை லெபனன் திருப்பயணத்தின்போது அந்நாட்டு அரசுத்தலைவர் திருத்தந்தையின்
ஏறத்தாழ அனைத்துப் பொதுநிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டது, முக்கியமான ஓர் அடையாளம் மட்டுமல்ல, இத்திருப்பயணத்திற்கு
லெபனன் நாடு கொடுத்த முக்கியத்துவத்தின் வெளிப்பாடு என்றார்
திருப்பீடப்பேச்சாளர் அருட்தந்தை ஃபெதரிக்கோ லொம்பார்தி.
திருத்தந்தையின் திருப்பயணத் தாக்கம் குறித்துப் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்த இயேசு சபை குரு. லொம்பார்தி, இன்றைய
இளைஞர்கள் எதிர்நோக்கும் ஆபத்துக்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்து
அவ்விளைஞர்களிடம் திருத்தந்தை விளக்கியதைச் சுட்டிக்காட்டினார்.
பலமுறை அனைத்துலக சமுதாயத்திடம் மத்தியக் கிழக்குப் பகுதியின் அமைதிக்காக உழைக்குமாறு விண்ணப்பித்துள்ள திருத்தந்தை, அமைதியின்
பாதையைக் கண்டுகொள்ள அரபு நாடுகள் முழுவதும் ஒன்றிணைந்து உழைக்க
வேண்டியதன் அவசியத்தை இத்திருப்பயணத்தின்போது வலியுறுத்தினார் என்றார்
திருப்பீடப்பேச்சாளர்.
இத்திருப்பயணத்தின் நல்விளைவுகள் குறித்து திருத்தந்தை மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும், திருப்பயணத்தின்போது தனக்கு கிடைத்த வரவேற்பு குறித்து ஒவ்வொரு நாளும் வியந்து பாராட்டியதாகவும் கூறினார் குரு லொம்பார்தி.
5. சிரியாவில் வன்முறை களையப்பட உதவுமாறு ஐநா. வில் திருப்பீட அதிகாரி விண்ணப்பம்
செப். 17, 2012. பதட்ட நிலைகளும் வன்முறைகளும் தூண்டப்படும் சூழல்களில் நாம் மௌனம் காக்கமுடியாது, பேச்சுவார்த்தை
மற்றும் ஒப்புரவிற்கான அர்ப்பணத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்துச்
செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார் பேராயர் சில்வானோ தொமாசி.
ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அமைப்புகளுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப்பார்வையாளர் பேராயர் தொமாசி, ஐநா மனித உரிமைகள் அவைக் கூட்டத்தில் சிரியாவின் இன்றைய நிலைகள் குறித்து உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார்.
சிரியாவிற்குள் இடம்பெறும் வன்முறைகளில் இதுவரை ஏறத்தாழ 30,000 பேர் உயிரிழந்துள்ளது, 2இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாகியுள்ளது, 12 இலட்சம் பேர் நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்துள்ளது ஆகியவைகள் பற்றியும் தன் கவலையை வெளியிட்டார் பேராயர்.
அனைத்துலக நாடுகளும் தங்கள் சுயநலப்போக்குகளை புறந்தள்ளி, சிரியாவிற்கு ஆயுதம் வழங்குவதைக் கைவிட்டு, அதற்குப்
பதிலாக ஒப்புரவு குறித்த எண்ணங்களை அங்கு இறக்குமதி செய்ய வேண்டும் எனவும்
அழைப்பு விடுத்தார் ஐநா விற்கானத் திருப்பீட பிரதிநிதி பேராயர் தொம்மாசி.
6. ஒசோன் வாயுமண்டலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை அடுத்த 50 ஆண்டுகளில் சரிசெய்துவிட முடியும் - ஐ.நா.பொதுச் செயலர்
செப்.17,2012.
ஒசோன் வாயுமண்டலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை அடுத்த 50 ஆண்டுகளில்
சரிசெய்துவிட முடியும் என ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
ஒசோன் வாயுமண்டலத்தைப் பாதுகாப்பது குறித்த அனைத்துலக நாள் இஞ்ஞாயிறன்று(செப்.16) கடைப்பிடிக்கப்பட்டதையடுத்து செய்தி வெளியிட்ட பான் கி மூன், நாம் விரும்பும் எதிர்காலத்தைப் பெறுவதற்கு இப்போதுள்ள அதே ஆர்வத்தோடு தொடர்ந்து செயல்படுமாறு அனைத்து அரசுகளையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒசோன் வாயுமண்டலத்தைப் பாதுகாப்பது குறித்த Montreal ஒப்பந்தம் 1987ம் ஆண்டு, செப்டம்பர் 16ம் தேதி கையெழுத்திடப்பட்டது. அந்த நாள் ஒசோன் வாயுமண்டலத்தைப் பாதுகாப்பது குறித்த அனைத்துலக நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்வாண்டு இந்த நாளின் 25வது ஆண்டு நிறைவாகும்.
ஒசோன்
வாயுமண்டலத்தில் விழுந்துள்ள ஓட்டைகளால் சூரிய ஒளி நேரிடையாகப் பூமியைத்
தாக்குவதால் ஏற்பட்டுள்ள அல்ட்ராவைலட் கதிர்வீச்சுக்கள் தோல் புற்றுநோய்கள், கண்திரைப்படலம் போன்ற நோய்களுக்குக் காரணமாகின்றன, எனினும், உலகில்
எடுக்கப்பட்டுள்ள வாயுக்கள் வெளியேற்றக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால்
இந்நோய்களிலிருந்து ஏற்கனவே இலட்சக்கணக்கானோர் காப்பாற்றப்ப்ட்டுள்ளனர்
என்றும் ஐ.நா.பொதுச் செயலரின் செய்தி கூறுகின்றது.
7. இந்தியாவில் உலகத் தரம்வாய்ந்த பல்கலைக்கழகங்கள் இல்லை: குடியரசுத் தலைவர் கவலை
செப்.17,2012.
உலகின் முன்னணி கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய
பல்கலைக்கழகங்கள் ஒன்றுகூட முதல் இருநூறு இடங்களுக்குள் வரவில்லை என்பது
கவலையளிக்கிறது என இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
தெரிவித்துள்ளார்.
உலகத்
தரம் கொண்ட கல்வி நிறுவனங்களாக மலர்வதற்கு இந்தியாவின் முன்னணி உயர்கல்வி
நிறுவனங்கள் கூட்டாகச் சேர்ந்து முயற்சிகள் எடுக்க வேண்டும் என இந்திய
தொழில்நுட்ப மையங்களில் ஒன்றான கரக்பூர் ஐஐடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்
குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்தார்.
கரக்பூர்
ஐஐடி தொடங்கப்பட்டு அறுபது ஆண்டுகள் பூர்த்தியாவதைக் கொண்டாடும் நோக்கில்
நடந்த வைரவிழா நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பங்கேற்றபோது இதனைத்
தெரிவித்துள்ளார்.
இந்தியாவில்
மாணவர்களிடையே அறிவியல் தேடலையும் ஆராய்ச்சி மனநிலையையும் ஊக்குவித்து
வளர்க்க வேண்டிய உடனடித் தேவை இந்தியாவுக்கு உள்ளது என்றும் முகர்ஜி
குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின்
உயர்கல்வி நிறுவனங்கள் உலகத் தரம் வாய்ந்தவையாக இல்லாதிருப்பதன் காரணங்கள்
பற்றிக் கருத்து தெரிவித்த இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி
பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வி.சி.குழந்தைசாமி, "கல்வி
புகட்டும் அதேநேரத்தில் ஆராய்ச்சிகள் செய்து அறிவுப் பெருக்கத்துக்குப்
பங்காற்ற வேண்டிய இடங்களாக உயர்கல்வி நிறுவனங்கள் இருக்க வேண்டும். ஆனால்
இந்தியாவில் அந்த நிலை" என்று கூறினார்.
இந்தியாவில்
பெரும்பான்மையான உயர்கல்வி நிறுவனங்களில் பாடம் புகட்ட வேண்டியது மட்டுமே
ஆசிரியர்களுக்கு கடமையாக்கப்பட்டிருக்கிறதே ஒழிய அவர்கள் ஆராய்ச்சிகளில்
ஈடுபடுவதை அனுமதிப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் கல்விக் கட்டமைப்பில்
இடமில்லை என்று அவர் கவலை தெரிவித்தார்.
இந்த நிலை மாறினால்தான், உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை இந்தியாவால் உருவாக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
8. விலங்குகளின் உணவுப் பற்றாக்குறைக்குத் தீர்வாக தமிழகக் காடுகளில் மரம் நடும் பணி
செப். 17, 2012. விலங்குகளின் உணவுப் பற்றாக்குறையைத் தீர்க்க வனப்பகுதியில் ஒரு ஹெக்டேருக்கு, 100 மரக்கன்றுகள் வீதம் நடவு செய்ய வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதிலும், 22,877 சதுர கிலோ மீட்டர், வனப்பகுதியாக உள்ளது. வனத்தில் இருந்து, விலங்குகள் வெளியேறுவதைத் தடுக்க, மாநிலம் முழுவதும் தடுப்பணைகள், கசிவுநீர்க் குட்டைகள், தண்ணீர் தொட்டிகளை அமைக்க, அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக வனங்களில் வசிக்கும் விலங்குகள் மற்றும் பறவைகளின் உணவுப் பற்றாக்குறையைப் போக்க, வனப்பகுதியில் மரங்களை நடவு செய்யவும், அரசு தற்போது ஆணைப்பிறப்பித்துள்ளது.
வன விலங்குகளின் உணவுப் பற்றாக்குறையைப் போக்க, வனப்பகுதிக்குள் மரங்களை நடும் திட்டத்தின் கீழ், ஹெக்டேருக்கு, 100 மரக்கன்றுகள் என்ற வீதத்தில், மரக்கன்றுகள் நடப்படவுள்ளதால், வன விலங்குகளின் உணவுச் சங்கிலி மாறாமலும், உணவுப் பற்றாக்குறை ஏற்படாமலும் இருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment