Saturday 22 September 2012

CAtholic News in Tamil - 20/09/12

1. புதிய ஆயர்களிடம் திருத்தந்தை : நற்செய்தியின் துணிச்சலான அறிவிப்பாளர்களாக இருங்கள் 

2. யூதர்களின் புத்தாண்டுக்குத் திருத்தந்தை நல்வாழ்த்து

3. பேராயர் மம்பர்த்தி : அணுத்தொழில்நுட்பம் பொதுமக்களின் நலவாழ்வுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும்

4. சிரியாவில் ஆயுத மோதல்கள் குறித்து திருப்பீடத்தூதர் கவலை

5. புதிய அமெரிக்கத் தூதுவருடன் யாழ் ஆயர் சந்திப்பு

6. இந்தியாவில் வீட்டுப்பணியாளர்களிடையே ஆற்றிய சேவைக்கென பெல்ஜியம் அருட்சகோதரிக்கு விருது

7. அரசு சாரா கிறிஸ்தவப் பிறரன்பு அமைப்பு நேபாளத்தில் மீண்டும் தன் பணிகளைத் துவக்கியுள்ளது

8. ஒரே பாலினத் திருமணச் சட்ட மசோதா ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தோல்வி

9. புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழிக் கல்வியை மேம்படுத்த முன்வந்துள்ளது தமிழ்நாடு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம்


------------------------------------------------------------------------------------------------------

1. புதிய ஆயர்களிடம் திருத்தந்தை : நற்செய்தியின் துணிச்சலான அறிவிப்பாளர்களாக இருங்கள் 

செப்.20,2012. நற்செய்தி அறிவிப்புப்பணியின் புதிய முறைகளுக்கு ஒவ்வொரு விசுவாசியும் சவாலாக வாழ்வதற்கு அழைக்கப்படுகின்றார் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
திருப்பீட ஆயர்கள் பேராயம் நடத்தும் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் புதிய ஆயர்களை இவ்வியாழனன்று காஸ்தெல் கந்தோல்ஃபோவில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் இருக்கின்ற மக்கள் கிறிஸ்துவோடு நல்லுறவு கொண்டு, விசுவாசத்தில் மிகவும் உறுதியுடன் வாழ்வதற்கு ஆயர்கள் துணிச்சலுடன் அம்மக்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டுமென்றும் ஊக்கப்படுத்தினார்.
கடந்த ஆண்டில் புதிதாக நியமனம் பெற்ற இந்த ஆயர்களிடம் பேசிய திருத்தந்தை, இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளும் இந்த ஆயர்கள் ஐந்து கண்டங்களிலிருந்தும் வந்துள்ளதைக் குறிப்பிட்டு இவர்கள் அகிலத் திருஅவையோடு சிறப்பான ஒன்றிப்பைக் கொண்டிருக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
விசுவாசத்தின் ஒன்றிப்பை முதலில் ஊக்குவித்துப் பாதுகாக்குமாறும் கூறிய திருத்தந்தை, இந்த விசுவாசத்திற்கு நம்பகமான சான்றுகள் தேவை என்றும், ஆயர்கள் விசுவாசத்தின் முதல் சாட்சிகளாக இருக்குமாறும் பரிந்துரைத்தார்.
ஆயர்கள் இறைவனின் முதல் ஊழியர்களாக இல்லாதவரை மக்களுக்கான சேவையில் அவர்கள் வெற்றியடைய முடியாது எனவும் அவர் கூறினார்.
நற்செய்தி அறிவிப்புப்பணியின் புதிய முறைகள் குறித்து தொடங்கவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றம் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை 16ம் பெனடிக்ட், நற்செய்தி அறிவிப்புப்பணியின் புதிய முறைகள் பற்றிய பணி சில வல்லுனர்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல, மாறாக, திருமுழுக்குப் பெற்ற அனைவருக்கும் உரியது என்றும் கூறினார். 

2. யூதர்களின் புத்தாண்டுக்குத் திருத்தந்தை நல்வாழ்த்து

செப்.20,2012. யூதர்களின் 5773ம் புத்தாண்டு தொடங்கியுள்ளதையொட்டி உலகின் யூதர்களுக்கு அமைதியும் நல்வாழ்வும் நிறைந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
யூதர்களின் 5773ம் புத்தாண்டுப் பெருவிழா, அதைத் தொடர்ந்து இடம்பெறும் பாவக்கழுவாய் நிறைவேற்றும் நாள், கூடாரப் பெருவிழா ஆகிய யூதர்களின் புனித நாள்களையொட்டி உரோம் எபிரேயச் சமுதாயத் தலைவர் யூதமதக் குரு ரிக்கார்தோ தி செஞிக்கு நல்வாழ்த்துக்கள் நிறைந்த தந்திச் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை.
உலகில் யூதர்களும் கிறிஸ்தவர்களும் நட்பிலும் ஒருவர் ஒருவரை மதிப்பதிலும் வளர்ந்து, ஒரே கடவுளை வணங்குவதிலிருந்து மலரும் விழுமியங்களுக்கு உலகில் சாட்சிகளாக வாழ வேண்டுமென்ற தனது ஆவலையும் அச்செய்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
Tishrei மாதத்தின் முதல் நாள் எபிரேயர்களின் புத்தாண்டு சிறப்பிக்கப்படுகிறது. Tishrei மாதத்தின் 15வது நாளில் கூடாரப் பெருவிழாவும், அதைத்தொடர்ந்து பாவக்கழுவாய் நிறைவேற்றும் நாளும் சிறப்பிக்கப்படுகின்றன. கூடாரப் பெருவிழா நாளில் யூதர்கள் எருசலேம் ஆலயத்துக்குத் திருப்பயணம் மேற்கொள்கின்றனர். 

3. பேராயர் மம்பர்த்தி : அணுத்தொழில்நுட்பம் பொதுமக்களின் நலவாழ்வுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும்

செப்.20,2012. உலகில் அணுஆயுதங்கள் ஒழிக்கப்பட வேண்டும் மற்றும் மனிதரின் ஒருங்கிணைந்த முன்னேற்றத்துக்கும் அமைதிக்கான நோக்கங்களுக்கும் அணுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதற்கு  பன்னாட்டு அளவில் ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என்று பேராயர் தொமினிக் மம்பர்த்தி கூறினார்.
ஆஸ்ட்ரியாவின் வியன்னாவில் நடைபெற்றுவரும் 56வது அனைத்துலக அணுசக்தி கருத்தரங்கில் உரையாற்றிய, நாடுகளுக்கிடையேயான உறவுகளின் செயலர் பேராயர் மம்பர்த்தி, புற்றுநோய்க்குக் கொடுக்கப்படும் கதிரியக்கச் சிகிச்சை வளரும் நாடுகளிலுள்ள பாதிக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு கிடைக்கவில்லை என்று கூறினார்.
புற்றுநோய்ச் சிகிச்சைகளில் கதிரியக்கச் சிகிச்சை முக்கியமான ஒன்றாக இருக்கின்றது என்றும், வளரும் நாடுகளில் தகுந்த மருத்துவக் கருவிகள் மற்றும் போதுமான பயிற்சி பெற்றவர்கள் இல்லாததால் இந்தக் கதிரியக்கச் சிகிச்சையைப் பாதிக்கும் மேற்பட்ட நோயாளிகள் பெற முடியவில்லை என்றும் பேராயர் கூறினார்.
வாழ்வைப் பாதுகாப்பதற்கு ஓர் அணுத் தொழில்நுட்பமும், மரணத்திற்கு ஓர் அணுத் தொழில்நுட்பமும் இருக்கின்றது என்றுரைத்த பேராயர், மனிதரின் நலவாழ்வுக்கு உதவும் அணுத்தொழில்நுட்பம் முதலில் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இன்று உலகில் ஒருபக்கம் அணுஆயுதக் களைவும், மற்றுமொருபக்கம்   அணுஆயுதங்களை நவீனப்படுத்துதலும் இடம்பெற்று வருகின்றது என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், அணுப் பரிசோதனை தடைசெய்யப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார். 

4. சிரியாவில் ஆயுத மோதல்கள் குறித்து திருப்பீடத்தூதர் கவலை

செப்.20, 2012. சிரியாவில் பதட்டநிலைகள் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கைகள் தற்போது கோபமாகவும் ஏமாற்றமாகவும் மக்களிடையே பெருகிவருவதாக கவலையை வெளியிட்டார் அந்நாட்டிற்கானத் திருப்பீடத்தூதுவர் பேராயர் Mario Zenari.
சிரியாவின் கத்தோலிக்க உயர்மறைமாவட்டமான Homsன் அலுவலகம் தாக்கப்பட்டத்தைத் தொடர்ந்து தற்போது சில கிறிஸ்தவர்கள் ஆயுதங்களைக் கைக்கொண்டுள்ளது குறித்தும் தன் கவலையை வெளியிட்டார் பேராயர்.
கிறிஸ்தவர்கள் எக்காரணம் கொண்டும் ஆயுதங்களைக் கைக்கொள்ளக்கூடாது என சிரியா ஆயர்கள் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

5. புதிய அமெரிக்கத் தூதுவருடன் யாழ் ஆயர் சந்திப்பு

செப்.20,2012. இலங்கையின் தேசியப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுமாறு அரசுக்குப் பல்வேறு சந்தர்ப்பங்களில் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்ற போதிலும் அதற்கானத் தீர்வுகள் இன்னமும் எட்டப்படவில்லை என்று இலங்கைக்கானப் புதிய அமெரிக்கத் தூதுவர் மைக்கேல் ஜே. சிசன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கானப் புதிய அமெரிக்கத் தூதுவர், யாழ்.ஆயர் இல்லத்தில் ஆயர் தாமஸ் சௌந்தரநாயகம் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடியபோது, கவலைக்கு மத்தியில் வாழும் யாழ். மாவட்ட மக்களுக்கு அதிகளவிலான தேவைகள் இருப்பதை உணர்ந்துள்ள யாம், அவற்றை நிறைவான விதத்தில் பெற்றுக்கொடுக்க உதவுவோம் என்றும் குறிப்பிட்டார்.
அரசியல் தீர்வை நோக்கி நகர அரசுக்கு அதிக அழுத்தங்கள் கொடுக்குமாறும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைச் செயற்படுத்த வலியுறுத்துமாறும் அமெரிக்கத் தூதரிடம் யாழ்.ஆயர் இச்சந்திப்பின்போது வேண்டுகோள் விடுத்தார்.
யாழ்ப்பாணத்திற்கு வந்து செல்லும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அரசுக்குப் பாரிய அழுத்தங்கள் எவற்றையும் வழங்குவதில்லை என யாழ்.ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம் புதிய அமெரிக்கத் தூதுவர் மைக்கேல் ஜே. சிசனிடம் மேலும் தெரிவித்தார்.
முன்னாள் போராளிகளுக்கு இராணுவத்தினராலும் புலனாய்வாளர்களாலும் அச்சுறுத்தல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளதால் அவர்கள் இயல்பு வாழ்க்கையில் இணைவது கடினமாக உள்ளது எனக் கவலையை வெளியிட்ட ஆயர், சிறைகளில் தடுத்து வைத்திருப்போரது பெயர் விபரங்கள்கூட இன்னமும் வெளியிடப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

6. இந்தியாவில் வீட்டுப்பணியாளர்களிடையே ஆற்றிய சேவைக்கென பெல்ஜியம் அருட்சகோதரிக்கு விருது

செப்.20, 2012. இந்தியாவில் வீட்டுப் ப‌ணியாளர்களிடையே ஆற்றிய‌ சிற‌ப்புச் சேவைக்கென‌ பெல்ஜிய‌ம் நாட்டு அருட்ச‌கோத‌ரி ஒருவ‌ருக்கு பார‌த‌த்தின் உய‌ரிய‌ விருதுக‌ளுள் ஒன்றான‌ இராம‌கிருஷண‌ ப‌ஜாஜ் நினைவு விருது வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டுள்ள‌து.
வீட்டுப் ப‌ணியாள‌ர்க‌ளின் உரிமைக‌ளைப் பாதுகாப்ப‌த‌ற்கான‌ அருட்சகோதரி Jeanne Devosன் சிற‌ப்புமிகு ப‌ங்க‌ளிப்பிற்கென‌ பிரிய‌த‌ர்சினி க‌ழ‌க‌ம் வ‌ழங்கிய‌ இவ்விருது இந்திய‌ ந‌ல‌த்துறை அமைச்ச‌ர் குலாம் ந‌பி ஆசாத்தால் மும்பை விழாவில் கொடுக்கப்பட்டது.
கடந்த 48 ஆண்டுகளாக இந்தியாவில் பணியாற்றி வரும் இந்த பெல்ஜியம் நாட்டு அருட்சகோதரி, துவக்க காலத்தில் தமிழ்நாடு திண்டுக்கல்லில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

7. அரசு சாரா கிறிஸ்தவப் பிறரன்பு அமைப்பு நேபாளத்தில் மீண்டும் தன் பணிகளைத் துவக்கியுள்ளது

செப்.20, 2012.  அமெரிக்க அமைதிச் சாரணர் திட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது நேபாளத்திற்குள் மீண்டும் பணிபுரியத் துவங்கியுள்ளனர் கிறிஸ்தவ சுயவிருப்பப் பணியாளர்கள்.
மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு அங்கிருந்து வெளியேறிய கிறிஸ்தவப் பிறரன்பு குழு, தற்போது அந்நாட்டில் மீண்டும் தன் நல ஆதரவு, நலவாழ்வு மற்றும் உணவு பாதுகாப்புத் தொடர்புடையப் பணிகளைத் துவக்கியுள்ளது.
நாட்டிற்குள் நுழைந்து பணிகளைத் துவக்கிய ஒருவாரத்திற்குள் 4,195 நேபாள கிராமத்தவர்களுக்கு உதவியுள்ளது இந்த கிறிஸ்தவப் பிறரன்பு குழு.
நேபாள இராணுவ வீரர்கள், மற்றும் சுய விருப்பப்பணியாளர்கள் உதவியுடன் அந்நாட்டிற்கான நல ஆதரவுப்பணிகளைத் துவக்கி ஆற்றிவருகின்றது இக்கிறிஸ்தவ குழு.

8. ஒரே பாலினத் திருமணச் சட்ட மசோதா ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தோல்வி

செப்.20, 2012. ஆஸ்திரேலியாவில் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்ள வழிசெய்யும் வகையில் முன்வைக்கப்பட்ட ஒரு மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றம் பெரும் வாக்கு வித்தியாசத்தில் நிராகரித்துள்ளது.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இந்த மசோதா 98-42 என்கிற வாக்குக் கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஒரே பாலினத் திருமணம் தொடர்பாக பல நாட்கள் நடைபெற்ற விவாதம் முடிவுக்கு வந்துள்ளது.
நாட்டின் பிரதமரும் எதிர்கட்சித் தலைவரும் இந்த மசோதாவுக்கு எதிராகவே வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

9. புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழிக் கல்வியை மேம்படுத்த முன்வந்துள்ளது தமிழ்நாடு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம்

செப்.20, 2012.  புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்களுக்குத் தமிழ் மொழிக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தோடு இணைந்து சேவையாற்ற தமிழ்நாடு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் முன்வந்துள்ளது.
புலம்பெயர்ந்து வாழும் தமிழ்க் குழந்தைகள் தமிழ் மொழியில் திறமை பெற வேண்டுமானால் அவர்களின் வீட்டு மொழி தமிழாக அமைய வேண்டும் மற்றும், பெற்றோர் தங்கள் பிள்ளைகளோடு தமிழ் மொழியிலேயே பேச வேண்டும், அப்போதுதான் குழந்தைகளும் தமிழ் மொழியை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள் என்றார், தமிழ்நாட்டின் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ.
மேலும், உலக நாடுகளில் தமிழ்க் கல்வியை வளர்க்க உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் கிளைகளோடு இணைந்து எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் செயலாற்றத் தயாராக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

1 comment:

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...