Saturday, 22 September 2012

Catholic News in Tamil - 21/09/12

1. திருத்தந்தை :  மனிதவாழ்வைப் பாதுகாப்பதில் இறைவாக்கினர்களாகச் செயல்பட ப்ரெஞ்ச் ஆயர்களுக்கு அழைப்பு

2. கர்தினால் பால்தெல்லியின் இறப்புக்குத் திருத்தந்தை இரங்கல்

3. திருத்தந்தை லொரேத்தோ திருத்தலத்துக்கு மேய்ப்புப்பணித் திருப்பயணம்

4. தெய்வநிந்தனைக்கு எதிராக அனைத்துலக அளவில் கொள்கை ஒன்று வகுக்கப்பட மாரனைட் முதுபெரும் தலைவர் பரிந்துரை

5. பிரான்சில் வெளியாகியுள்ள முகமது நபியின் கேலிச் சித்திரங்கள் பதட்டநிலைகளுக்கு உரம் போடுகின்றன : வத்திக்கான் தினத்தாள்

6. கென்யக் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் : பொதுத் தேர்தல்களுக்கு முன்னர் நாட்டின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும்

7. நேபாள அரசியலின் தற்போதைய உட்பூசல்கள் நிறுத்தப்பட சமயத் தலைவர்கள் வலியுறுத்தல்

8. இஸ்பெயினில் கருக்கலைப்புகள் முற்றிலும் நிறுத்தப்படுவதற்கு வாழ்வுக்கு ஆதரவான நிறுவனம் முயற்சி

9. செவ்வாய்க் கிரகத்தில் பிரமிடு கண்டுபிடிப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை :  மனிதவாழ்வைப் பாதுகாப்பதில் இறைவாக்கினர்களாகச் செயல்பட ப்ரெஞ்ச் ஆயர்களுக்கு அழைப்பு

செப்.21,2012. மனித வாழ்வு மற்றும் திருமணத்தின் உண்மையான இயல்பைத் திரித்துக் கூறுவதற்கு எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியிலிருந்தும் அவற்றைப் பாதுகாப்பதற்குத் திருஅவை அழைக்கப்பட்டுள்ளது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் அட் லிமினாவை முன்னிட்டு இவ்வெள்ளிக்கிழமையன்று 32 ப்ரெஞ்ச் ஆயர்களைக் காஸ்தெல் கந்தோல்ஃபோவில் சந்தித்த திருத்தந்தை, திருஅவையின் வாழ்வில்  பொதுநிலையினரின் பங்கு குறித்துப் பேசினார்.
அத்துடன் மறைமாவட்டப் பணிகள் அதன் தலைவரையே அதிகம் மையம் கொண்டிருப்பது குறித்தும் திருத்தந்தை குறிப்பிட்டார்.
மனித இயல்பு குறித்த தவறான கருத்துக்களால் இன்று குடும்ப வாழ்வு அச்சுறுத்தப்பட்டுள்ளது எனவும், சமுதாயத்தில் மனித வாழ்வையும் திருமணத்தையும் பாதுகாப்பது பிற்போக்கு மனப்பான்மை அல்ல, மாறாக அது ஓர் இறைவாக்குப்பணி எனவும் கூறினார் திருத்தந்தை.
கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்ட மனிதரின் முழு வளர்ச்சியையும் அனுமதிக்கும் விழுமியங்களை ஊக்கப்படுத்துமாறும் ப்ரெஞ்ச் ஆயர்களைக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

2. கர்தினால் பால்தெல்லியின் இறப்புக்குத் திருத்தந்தை இரங்கல்

செப்.21,2012. கர்தினால் Fortunato Baldelli இறந்ததையொட்டி தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கும் இரங்கல் தந்தியை அக்கர்தினாலின் சகோதரர்  Piero Baldelliக்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். 
இறந்த Fortunato Baldelliன் கிறிஸ்தவ மற்றும் குருத்துவ வாழ்வு எப்பொழுதும்  மற்றவருக்கு எடுத்துக்காட்டாக இருந்தது என்றும், திருப்பீடத்திலும் சிறப்பாக, பல்வேறு தூதரகங்களிலும் இவர் ஆற்றியுள்ள பணி குறிப்பிடும்படியானது என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இக்கர்தினாலின் ஆன்மா நிறைசாந்தி அடையத் தான் செபிப்பதாகவும் கூறியுள்ளார்.
இவ்வியாழன் மாலை உரோமையில் இறந்த 77 வயதாகும் இத்தாலியக் கர்தினால் Fortunato Baldelli, திருப்பீடப் பாவக்கழுவாய்த் துறையில் தலைவராகப் பணியாற்றியவர். கியூபா, எகிப்து போன்ற நாடுகளின் திருப்பீடத் தூதரகங்களில் பணியாற்றிய இவர், பிரான்ஸ், தொமினிக்கன் குடியரசு, பெரு போன்ற நாடுகளின் திருப்பீடத் தூதராகவும் பணியாற்றியுள்ளார்.
கர்தினால் Fortunato Baldelliவின் இறப்போடு திருஅவையில் மொத்தக் கர்தினால்களின் எண்ணிக்கை 205 ஆகவும், இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 117 ஆகவும் மாறியது. 
3. திருத்தந்தை லொரேத்தோ திருத்தலத்துக்கு மேய்ப்புப்பணித் திருப்பயணம்

செப்.21,2012. வருகிற அக்டோபர் 7ம் தேதி உலக ஆயர்கள் மாமன்றத்தை ஆரம்பித்து வைக்கும் திருப்பலியில் புனித அவிலா ஜான் மற்றும் புனித Bingen Hildegard ஐ திருமறையின் வல்லுனர்கள் எனத் திருத்தந்தை அறிவிப்பார் எனப் பாப்பிறைத் திருவழிபாடுகளின் தலைவர் பேரருட்திரு Guido Marini  அறிவித்துள்ளார்.
திருத்தந்தையின் அக்டோபர்-நவம்பர் நிகழ்வுகளை வெளியிட்ட பேரருட்திரு Marini, அருளாளர் திருத்தந்தை 23ம் ஜான் லொரேத்தோ திருத்தலத்துக்கு மேய்ப்புப்பணித் திருப்பயணம் மேற்கொண்டதன் 50ம் ஆண்டு நினைவாக, அத்திருத்தலத்துக்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்டும் வருகிற அக்டோபர் 4ம் தேதி திருப்பயணம் மேற்கொள்வார் என்றும் அறிவித்துள்ளார்.
அக்டோபர் 4ம் தேதி உள்ளூர் நேரம் காலை 10.30 மணிக்கு லொரேத்தோ திருத்தல வளாகத்தில் திருப்பலி நிகழ்த்திய பின்னர் மாலையில் உரோம் திரும்புவார் திருத்தந்தை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அக்டோபர் 21ம் தேதி ஏழு அருளாளர்களைப் புனிதர்கள் என அறிவிக்கும் திருத்தந்தை, அக்டோபர் 28ம் தேதி வத்திக்கான் பசிலிக்காவில் உலக ஆயர்கள் மாமன்ற நிறைவுத் திருப்பலியையும் நிகழ்த்துவார் என்றும் பேரருட்திரு Marini கூறியுள்ளார்.

4. தெய்வநிந்தனைக்கு எதிராக அனைத்துலக அளவில் கொள்கை ஒன்று வகுக்கப்பட மாரனைட் முதுபெரும் தலைவர் பரிந்துரை

செப்.21,2012. மதங்களை அவமதிக்கும் நடவடிக்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் நிறுவனம் கொள்கை ஒன்றை வகுக்குமாறு லெபனன் மாரனைட்ரீதி கத்தோலிக்க முதுபெரும் தலைவர் Bechara Rai பரிந்துரைத்துள்ளார்.
இசுலாமைக் கேலி செய்யும் “The Innocence of Muslims” என்ற திரைப்படத்துக்கு எதிராகப் பேசிய முதுபெரும் தலைவர் Rai, இந்தத் திரைப்படம் இசுலாமை மட்டுமல்ல, எல்லா மதத்தவருக்கும் எதிரான செயலாக இருக்கின்றது என்றும், மத நம்பிக்கைகள் கேலிசெய்யப்படுவதிலிருந்து காக்கப்பட வேணடும் என்றும் கூறினார்.
கிறிஸ்தவ நம்பிக்கைகளும் அடிக்கடிப் பொதுவில் தாக்கப்படுகின்றன என்றுரைத்த லெபனன் முதுபெரும் தலைவர் Rai, இத்தகைய தெய்வநிந்தனைத் தாக்குதல்களைத் தடைசெய்வதற்கு நடவடிக்கை எடுப்பதில் ஐ.நா. முன்னின்று செயல்படுமாறு கேட்டுக் கொண்டார்.
உலகின் அமைதி, கடவுளையும் அனைத்து மதங்களையும் மதிப்பதை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், இவ்விவகாரத்தில் ஐ.நா. நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார் முதுபெரும் தலைவர் Rai. 
மேலும், இறைவாக்கினர்கள் போன்ற மனிதர்கள், மதங்களின் அடையாளங்கள், புனித நூல்கள் போன்றவற்றைத் திட்டமிட்டு அவமதிக்கும் மற்றும் கேலிசெய்யும் நடவடிக்கைகளைத் தடைசெய்வதற்கு அனைத்துலக அளவில் ஒரு விதிமுறை தேவை என்பதை வலியுறுத்தி வட ஆப்ரிக்காவின் நான்கு ஆங்லிக்கன் ஆயர்கள் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூனுக்குத் திறந்த கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

5. பிரான்சில் வெளியாகியுள்ள முகமது நபியின் கேலிச் சித்திரங்கள் பதட்டநிலைகளுக்கு உரம் போடுகின்றன : வத்திக்கான் தினத்தாள்

செப்.21,2012. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Charlie Hebdo என்ற பத்திரிகை முகமது நபியின் கேலிச் சித்திரங்களை வெளியிட்டுள்ளது, ஏற்கனவே முஸ்லீம் உலகில் இடம்பெற்றுவரும் கொந்தளிப்புகளுக்கு இரை போடுகின்றது என்று  திருப்பீடச்சார்பு தினத்தாள் லொசர்வாத்தோரே ரொமானோ கூறியுள்ளது.
அமெரிக்காவில் வெளியிடப்பட்ட “The Innocence of Muslims” என்ற திரைப்படத்தினால் எழுந்துள்ள பதட்டநிலைகளைத் தணிப்பதற்கு மிகவும் கஷ்டப்படும்வேளை, Charlie Hebdo என்ற ப்ரெஞ்ச் வார இதழில் வெளியாகியுள்ள முகமது நபியின் கேலிச் சித்திரங்கள் புதிய போராட்டங்கள் வெடிக்கக் காரணமாகியுள்ளன என்று அத்தினத்தாள் எழுதியுள்ளது.
இவ்விவகாரம் குறித்துப் பேசிய ப்ரெஞ்ச் ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Andre' Vingt-Troisம் லொசர்வாத்தோரே ரொமானோ தினத்தாள் கூறும் கருத்தையே தெரிவித்துள்ளார்.
மேலும், The Innocence of Muslims” என்ற அமெரிக்கத் திரைப்படம் தொடர்பாக நடத்தப்படும் போராட்டங்களை நிறுத்துமாறு பாகிஸ்தான் பல்சமயத் தலைவர்கள் கேட்டுள்ளனர்.
இறைவாக்கினர் முகமதுவைக் கேலிசெய்யும் இத்திரைப்படம், சமயப் பதட்டநிலைகளைத் தீவிரப்படுத்தி, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றது என்றுரைத்த பாகிஸ்தான் முஸ்லீம் குரு Allama Shafaat Rasool, எனினும் முஸ்லீம்கள் தங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று கூறினார்.    

6. கென்யக் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் : பொதுத் தேர்தல்களுக்கு முன்னர் நாட்டின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும்

செப்.21,2012. வருகிற மார்ச் மாதத்தில் பொதுத் தேர்தல்களுக்குத் தயாரித்துவரும் கென்ய நாடு எதிர்கொள்ளும் பல பிரச்சனைகள் தீர்க்கப்படுமாறு அந்நாட்டுக் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.
கென்யாவின் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் இணைந்து இவ்வியாழனன்று வெளியிட்ட அறிக்கையில், நாட்டின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் அரசு உறுதியுடன் செயல்படும் என்று அறிவிக்கப்பட்ட நேரத்தில், அந்நாட்டின் Tana நதிப் பகுதியில் இடம்பெற்ற இன வன்முறையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் புலம் பெயர்ந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
அந்நாட்டில் ஆசிரியர்களும் மருத்துவர்களும் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்து வருவது குறித்த கவலையும் கென்ய ஆயர்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7. நேபாள அரசியலின் தற்போதைய உட்பூசல்கள் நிறுத்தப்பட சமயத் தலைவர்கள் வலியுறுத்தல்

செப்.21,2012. நேபாள அரசியல் கட்சிகள் மற்றும் அரசுத் தலைவர்கள் மத்தியில் அதிகரித்துவரும் ஒற்றுமையின்மை அகற்றப்படுமாறு அந்நாட்டுச் சமயத் தலைவர்கள் இவ்வெள்ளிக்கிழமையன்று வலியுறுத்தினர்.
செப்டம்பர் 21ம் தேதியான இவ்வெள்ளிக்கிழமையன்று 30வது அனைத்துலக அமைதி தினத்தை காட்மண்டிலுள்ள புத்தமடத்தின் கோவிலில் கடைப்பிடித்த நேபாளத்திலுள்ள மதங்களின் பிரதிநிதிகள், நேபாள அரசியலின் தற்போதைய உட்பூசல்கள் நிறுத்தப்படுமாறு வலியுறுத்தினர்.
செப்டம்பர் 21ம் தேதியான இவ்வெள்ளியன்று 30வது அனைத்துலக அமைதி தினம் உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டது.
மேலும், உலகெங்கும் இடம்பெறும் போர் நடவடிக்கைகள் முழுமையாய் நிறுத்தப்படுமாறு இவ்வெள்ளியன்று கேட்டுக் கொண்டார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.
உலகில் அமைதிகாக்கும் பணிகளின்போது இறந்தவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இவ்வெள்ளிக்கிழமை நண்பகல் வேளையில் ஒரு நிமிடம் மௌனம் காக்குமாறும் பான் கி மூன் கேட்டுக் கொண்டார்.
ஆயுதம் தாங்கிய மோதல்கள் உலகின் நிலையான வளர்ச்சியின் தூண்களைத் தாக்குகின்றன என்றும், இயற்கை வளங்கள் போர்களுக்காக அல்லாமல் சமுதாயத்தின் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்

8. இஸ்பெயினில் கருக்கலைப்புகள் முற்றிலும் நிறுத்தப்படுவதற்கு வாழ்வுக்கு ஆதரவான நிறுவனம் முயற்சி

செப்.21,2012. வருகிற அக்டோபரில் கடைப்பிடிக்கப்படும் வாழ்வுக்கு ஆதரவான மூன்றாவது அனைத்துலக நாளின்போது இஸ்பெயினில் கருக்கலைப்புகள் முற்றிலும் நிறுத்தப்படுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படும் என்று அந்நாட்டின் வாழ்வுக்கு ஆதரவான நிறுவனம் அறிவித்தது. 
இஸ்பெயின் தலைநகர் மத்ரித்திலும் அந்நாட்டின் 63 நகரங்களிலும், இன்னும் உலகின் ஏறத்தாழ 30 நாடுகளிலும் வருகிற அக்டோபர் 7ம் தேதியன்று வாழ்வுக்கு ஆதரவான மூன்றாவது அனைத்துலக நடைப்பயணம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருக்கலைப்புகள் முற்றிலும் நிறுத்தப்படுவதற்கு இவ்வுலகத் தினத்தன்று முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் இதனை நடத்துவோர் அறிவித்தனர்.

9. செவ்வாய்க் கிரகத்தில் பிரமிடு கண்டுபிடிப்பு

செப்.21,2012. செவ்வாய்க் கிரகத்தில் பிரமிடு வடிவப் பாறை ஒன்று இருப்பதை கியூரியாசிட்டி விண்கலம் கண்டுபிடித்துள்ளது.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பியுள்ள கியூரியாசிட்டி விண்கலம் ஒவ்வொரு நாளும் ஒரு புதுமையான அரிய தகவல்களைப் பூமிக்கு அனுப்பி வருகின்றது.
இந்நிலையில் செவ்வாய்க் கிரகத்தில் பிரமிடு வடிவப் பாறை ஒன்றை கியூரியாசிட்டி படமெடுத்து அனுப்பியுள்ளது.
செவ்வாயில் கிளன்லெக் என்ற இடத்தை நோக்கி கியூரியாசிட்டி செல்லும் பாதையில் இந்த பிரமிடு வடிவப் பாறை உள்ளது.
இந்தப் பாறையானது கியூரியாசிட்டி விண்கலத்திற்கு முன்பாக 2.5 மீட்டர் தூரத்தில் உள்ளது. மேலும் இந்தப் பிரமிடு வடிவப் பாறையின் உயரம் 25 சென்டிமீட்டராகவும், அகலம் 40 சென்டிமீட்டராகவும் உள்ளது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இப்பாறைக்கு ஜேக் மெடிஜெவிக் என்று நாசா பெயரிட்டுள்ளது.
ஜேக் மெடிஜெவிக் என்பவர், நாசாவின் செவ்வாய் அறிவியல் ஆய்வகத்தில் பணியாற்றிய முதன்மைப் பொறியாளர் ஆவார்.
கியூரியாசிட்டி விண்கலத்தின் முக்கியப் பணிகளில் இவரது பங்கும் உண்டு.
64 வயதான இந்தப் பொறியாளர், கியூரியாசிட்டி விண்கலம், செவ்வாய்க் கிரகத்தில் கால் பதித்த அடுத்த நாள் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாறைக்கு ஜேக் மெடிஜெவிக் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை

  வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை வத்திக்கான் அப்போஸ்தலிக்க ஆவணக் காப்பகத்தையும், அப்போஸ்தலிக்க நூல...