1. கர்தினால் கார்லோ மரிய மர்த்தினியின் அடக்கச் சடங்கில் திருத்தந்தையின் இரங்கல் செய்தி
2. போலியான மத உணர்வுக்கு எதிராகத் திருத்தந்தை எச்சரிப்பு
3. நற்செய்திப்பணியின் புதிய முறைகளில் சமூகத்தொடர்பு சாதனங்களின் பங்கு குறித்த ஆசிய ஆயர்கள் கூட்டம்
4. உயிரை எடுப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை : பிரசில் கர்தினால்
5. மானுட விழுமியங்களைப் பாதுகாக்க வேண்டியது ஊடகங்களின் தார்மீகப் பொறுப்பாகும்: கர்தினால் மால்கம் இரஞ்சித்
6. இலங்கை அரசு மீது ஆம்னஸ்டி மனித உரிமைகள் கழகம் குற்றச்சாட்டு
7. சிறுமிக்கு எதிராகப் பொய்க் குற்றச்சாட்டு : பாகிஸ்தான் இமாம் கைது
8. ஆபத்தில் உதவுபவர்கள் ஏழைகளே: அமெரிக்க ஆய்வில் தகவல்
9. குழந்தை பிறப்புக்கால இறப்பில் தமிழகத்தில் நீலகிரி முதலிடம் : சென்னையில் குறைவு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. கர்தினால் கார்லோ மரிய மர்த்தினியின் அடக்கச் சடங்கில் திருத்தந்தையின் இரங்கல் செய்தி
செப். 03, 2012.
இத்தாலியின் மிலான் மாநகர முன்னாள் பேராயர் கர்தினால் கார்லோ மரிய
மர்த்தினியின் மறைவால் துன்புறும் அந்த உயர் மறைமாவட்ட விசுவாசிகள், அவர்
சார்ந்திருந்த இயேசு சபை அங்கத்தினர்கள் மற்றும் அவரின் உறவினர்களுக்கு
திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கற் செய்தி, இத்திங்கள்
மாலை 4 மணிக்குத் தொடங்கிய கர்தினாலின் அடக்கச்சடங்கு திருப்பலியின்போது
திருத்தந்தையின் பிரதிநிதி கர்தினால் ஆஞ்சலோ கொமாஸ்திரியால்
வாசித்தளிக்கப்பட்டது.
'என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே!' என்ற திருப்பாடல் வரிகள், கர்தினால் மரிய மர்த்தினியின் வாழ்வை எடுத்துக்காட்டுபவைகளாக உள்ளன என தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை, இந்தக் கர்தினால் விவிலியத்தில் மேற்படிப்பு படித்தவர் மட்டுமல்ல, அதையே தன் வாழ்வின் ஒளியாக்கியவர் எனப் பாராட்டியுள்ளார். ஏழைகள், துன்புறுவோர்
ஆகியவர்களை மேய்ப்புப்பணி அக்கறையுடனும் ஆழமான பிறரன்புடனும் அணுகியவர்
கர்தினால் மரிய மர்த்தினி என தன் இரங்கற் செய்தியில் மேலும்
குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
2. போலியான மத உணர்வுக்கு எதிராகத் திருத்தந்தை எச்சரிப்பு
செப்.03,2012. மதத்தை இரண்டாம்தர நிலைக்குக் குறைத்துப் பார்க்கும் ஆபத்து ஒவ்வொரு மதத்திலும், ஏன் கிறிஸ்தவத்திலும் பரவியிருப்பதைக் காண முடிகின்றது என்று இஞ்ஞாயிறன்று எச்சரித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
உரோமைக்குத்
தென்கிழக்கே 15 மைல் தூரத்தில் அல்பானோ ஏரிக்கு மேலேயுள்ள குன்றுகளில்
அமைந்துள்ள காஸ்தெல் கந்தோல்ஃபோவில் இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை
வழங்கிய திருத்தந்தை, நமது
மகிழ்ச்சியையும் பாதுகாப்பையும் இவ்வுலகப் பொருள்களிலும் அதிகாரத்திலும்
மற்ற கண்கவர்ப் பொருள்களிலும் வைக்கும் போலியான சமய உணர்வை எச்சரித்தார்.
கடவுளின்
திருச்சட்டத்தைத் தமது வாழ்வில் ஏற்று அதனை முழுமையாய் வாழும்
ஒவ்வொருவருக்கும் அச்சட்டம் விடுதலையைக் கொண்டு வருகிறது என்றும் கூறினார்
திருத்தந்தை.
இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, மனிதரை வாழ்வின் பாதையில் வழிநடத்தி, தன்னல அடிமைத்தனத்தினின்று விடுதலை செய்து, உண்மையான
சுதந்திரம் மற்றும் வாழ்வின் பூமியை அவருக்கு அறிமுகம் செய்யும் கடவுளின்
திருவார்த்தையே கடவுளது திருச்சட்டமாகும் என்றும் கூறினார்.
இதனாலே திருச்சட்டம் விவிலியத்தில், அதிகப்படியான வரையறையைக் கொண்டுள்ள சுமையாகப் பார்க்கப்படவில்லை, ஆனால் அது நம் ஆண்டவரது மிக விலையுயர்ந்த கொடையாகவும், அவரது தந்தைக்குரிய அன்புக்குச் சான்றாகவும், தமது மக்களோடு நெருங்கி இருந்து அன்பு வரலாறு எழுதுவதற்கான அவரது ஆவலாகவும் இருக்கின்றது என்றும் திருத்தந்தை தெரிவித்தார்.
அதேநேரம், கடவுளின் திருச்சட்டமும், மதமும் தங்களது உண்மையான அர்த்தத்தை இழப்பது குறித்த ஆபத்தைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, கடவுளின் திருச்சட்டத்தை வாழ்வதன் உண்மையான பொருள் கடவுளுக்குச் செவிமடுத்து வாழ்வதாகும் எனக் கூறினார்.
மேலும், இம்மூவேளை செபத்தின் இறுதியில் அங்குச் சென்றிருந்த லெபனன் திருப்பயணிகளைப் ப்ரெஞ்ச் மொழியில் வாழ்த்திய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இம்மாதம்
14 முதல் 16 வரை அந்நாட்டுக்குத் தான் திருப்பயணம் மேற்கொள்ளவிருப்பதைக்
குறிப்பிட்டு அந்நாட்டு அரசுத்தலைவருக்குத் தனது நல்வாழ்த்தையும்
தெரிவித்தார்.
3. நற்செய்திப்பணியின் புதிய முறைகளில் சமூகத்தொடர்பு சாதனங்களின் பங்கு குறித்த ஆசிய ஆயர்கள் கூட்டம்
செப்.03,2012. “நவீன ஊடகத்துறை : ஆசிய சமூகத்தொடர்புப் பணிக்கு முன்வைக்கும் சவால்களும் வாய்ப்புகளும்” என்ற தலைப்பில் தாய்லாந்து நாட்டு பாங்காக்கில் இத்திங்களன்று கூட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர் ஆசிய ஆயர்கள்.
FABC என்ற ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் சமூகத்தொடர்பு பணிக்குழுவான BISCOM ஏற்பாடு செய்துள்ள இக்கூட்டத்தில் திருப்பீட சமூகத்தொடர்பு அவைத் தலைவர் பேராயர் Claudio Maria Celli இச்செவ்வாயன்று உரை நிகழ்த்துவார்.
இம்மாதம் 9ம் தேதிவரை நடைபெறும் BISCOMன் இந்த 8வது கூட்டத்தில் நற்செய்திப்பணியின் புதிய முறைகளில், இணையத்தளம், Blogging, Twitter போன்ற நவீன சமூகத்தொடர்புச் சாதனங்களின் பங்கு குறித்து ஆசிய ஆயர்கள் கலந்துரையாடவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
FABC என்பது 16 ஆசிய நாடுகளின் 19 ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பாகும்.
4. உயிரை எடுப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை : பிரசில் கர்தினால்
செப்.03,2012. கருணைக்கொலை குறித்து பிரசில் மருத்துவக்கழகத்தால் முன்மொழியப்பட்ட தீர்மானம் புதிய சட்டமும் அல்ல, கருணைக் கொலைக்கான அனுமதியும் அல்ல என எடுத்துரைத்துள்ளார் அந்நாட்டு கர்தினால் ரெய்முந்தோ டமசேனோ அசிஸ்.
கருணைக்கொலை
குறித்த மருத்துவக்கழகத்தின் தீர்மானம் குறித்து
பத்திரிகையாளர்கள் கேட்டக் கேள்விக்கு பதிலளித்த கர்தினால், குணப்படுத்த முடியா நிலையில் இருக்கும் நோயாளிகள் நடத்தப்படவேண்டிய வழிமுறைகளை அது காட்டுகின்றதேயொழிய, கருணைக்
கொலையை அனுமதிக்கவில்லை என்றார். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில்
முதன்முதலாகப் பெறும் கொடையான உயிரை எடுப்பதற்கு எவருக்கும்
உரிமையில்லை என்ற கர்தினால், வாழ்வின்
துவக்கம் முதல் இயற்கையான மரணம் வரை அது பாதுகாக்கப்பட
வேண்டும் என்ற திருஅவை படிப்பினைகளையும் சுட்டிக்காட்டினார்.
ஒரு
நோயாளியின் விருப்பப்படியோ அல்லது அவரின் சட்டப் பிரதிநிதியின்
விண்ணப்பத்தின் பேரிலேயோ எந்த நோயாளியின் உயிரும்
பறிக்கப்படக்கூடாது என்பது மட்டுமல்ல, முடிந்த
அளவு அனைத்து வளங்களையும் பயன்படுத்தி ஒவ்வோர் உயிரும்
காப்பாற்றப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார்
கர்தினால் டமசேனோ அசிஸ்.
5. மானுட விழுமியங்களைப் பாதுகாக்க வேண்டியது ஊடகங்களின் தார்மீகப் பொறுப்பாகும்: கர்தினால் மால்கம் இரஞ்சித்
செப்.03,2012. கொழும்பில் நடைபெற்ற, உலகளாவிய கத்தோலிக்க சமூகத்தொடர்பு அமைப்பான Signis 36வது விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய கர்தினால் மால்கம் இரஞ்சித், மனித உரிமை மற்றும் மானுட விழுமியங்களுக்கு கொஞ்சமும் மதிப்பளிக்காது சில ஊடகவியலாளர்கள் செயற்படுகின்றனர் என கவலையை வெளியிட்டதோடு, ஊடகங்கள் இழிவான எண்ணங்களுக்கு அடிபணியக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.
மானுட விழுமியங்களை பாதுகாக்க வேண்டியது ஊடகங்களின் தார்மீகப் பொறுப்பாகும் எனவும் கர்தினால் இரஞ்சித் தெரிவித்தார்.
வர்த்தக நோக்கங்களினால், ஊடக விதிகள் ஒழுக்க முறைமைகளுக்கு முரணான செயற்படும் வாய்ப்புகளும் காணப்படுகின்றன என உரைத்த கர்தினால், இலங்கையில் ஊடகவியலாளர்களைக் கடத்தியுள்ள மற்றும் கொலை செய்த நபர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டதுடன், சில ஊடகவியலாளர்கள் காணாமல் போயுள்ளனர்.
6. இலங்கை அரசு மீது ஆம்னஸ்டி மனித உரிமைகள் கழகம் குற்றச்சாட்டு
செப்.03,2012. மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதால், அங்கு
குற்றவாளிகள் தண்டனை இன்றி தமது நடவடிக்கைகளைத் தொடருவதற்கான நிலையை
ஏற்படுத்தியுள்ளதாக ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமைகள் கழகம்
குற்றஞ்சாட்டியுள்ளது.
நூற்றுக்கணக்கான ஆட்களை குற்றம் எதுவும் சுமத்தாமல், அவர்களுக்கு எதிராக வழக்குகளை நடத்தாமல் தடுத்து வைப்பதற்கு அரசு இன்னமும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதாகவும், இதனைப் பயன்படுத்தி, மாற்றுக்கருத்தாளர்களை வாய் மூடச்செய்து, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கும் தடை விதிக்கப்படுவதாகவும் அது குற்றஞ்சாட்டியுள்ளது.
விடுதலைப்புலிகளுடனான
போர் முடிந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் இந்த மனித உரிமை
மீறல்கள் குறித்த முறைப்பாடுகள் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும்
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நல்லிணக்க
ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின்
செயற்திட்டத்திலும் பல குறைகள் காணப்படுவதாகவும் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்
மனித உரிமைகள் கழகம் கூறியுள்ளது.
7. சிறுமிக்கு எதிராகப் பொய்க் குற்றச்சாட்டு : பாகிஸ்தான் இமாம் கைது
செப்.03,2012. பாகிஸ்தானில் 14 வயது கிறிஸ்தவச் சிறுமி Rimsha Masih, குர்-ஆனின் பக்கங்களை எரித்ததன் மூலம் இஸ்லாத்தை இழிவுபடுத்திவிட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில், அச்சிறுமி
மீது குற்றச்சாட்டு எழக் காரணமாக இருந்த இசுலாமிய மதபோதகர் ஒருவர்
ஆதாரத்தைப் புனைந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தற்போது
கைதாகியுள்ளார்.
காலித் சிஷ்டி என்ற இந்த மதபோதகர், அந்தப்
பெண்ணிடம் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பையில் எரிந்த சில காகிதங்களுடன்
குர்ஆனின் பக்கங்களையும் வைத்ததாக சாட்சி ஒருவர் நீதிபதியிடம் கூறியதைத்
தொடர்ந்து இக்கைது இடம்பெற்றுள்ளது.
தனிப்பட்ட ரீதியில் தனக்குப் பிடிக்காதவர்களைப் பழிவாங்குவதற்கும், அடுத்தவர் சொத்தை அபகரிப்பதற்கும், பாகிஸ்தானின்
மத சிறுபான்மையினர் மீது தாக்குதல் தொடுப்பதற்கும் தேவநிந்தனைச் சட்டத்தை
தவறான முறையில் சிலர் பயன்படுத்துவதாகப் பலமுறை குற்றம்சாட்டுக்கள்
எழுந்துள்ள நிலையில், கிறிஸ்தவர்களைப்
பாகிஸ்தானின் ஹைதராபாத் பகுதியிலிருந்து வெளியேற்ற இந்த உத்தியை இசுலாமிய
இமாம் காலித் சிஷ்டி பயன்படுத்தியதாகச் சாட்சிகள் உரைத்துள்ளனர்.
மதநிந்தனைச் சட்ட வழக்குகள் பலவற்றில் சக முஸ்லிம்களும் குற்றம்சாட்டப்படுள்ளனர் என்றாலும், தங்களை
இலக்குவைத்துதான் இந்தச் சட்டம் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது
என்று கிறிஸ்தவர்கள் தொடர்ந்து குறை கூறி வருகின்றனர்.
8. ஆபத்தில் உதவுபவர்கள் ஏழைகளே: அமெரிக்க ஆய்வில் தகவல்
செப். 03, 2012. ஆபத்து காலத்தில் உடனடியாக உதவுவது ஏழைகளே என்பது, அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட பேரிடர் தொடர்பான ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இயற்கைப் பேரழிவு ஏற்பட்டால், ஏழைகளே ஒருவருக்கு ஒருவர் அதிகம் உதவி செய்து, பிறரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் வேளை, வசதி படைத்த பணக்காரர்களோ, தமது உடைமைகளைப் பாதுகாக்கும் முயற்சியில்தான் அதிகம் ஈடுபடுகின்றனர் எனக்கூறும் இவ்வாய்வு, பேரிடர் ஏற்படும் ஆபத்துக் காலத்தில், பணக்காரர்களோ, மேலும் மேலும் பணத்தைக் குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர், ஆனால் ஏழைகளோ, தமது நண்பர்களுடனும், மனதுக்குப் பிடித்தவர்களுடனும் பொழுதைக் கழிப்பதில் ஈடுபாடு காட்டுகின்றனர் எனவும் தெரிவிக்கின்றது.
கூடுதல் சம்பளம் கிடைத்தாலும், நாட்டின் பிற பகுதிகளுக்குச் சென்று வேலை செய்ய, ஏழைகள் விரும்புவதில்லை. ஆனால், "உறவுகள் போனாலும், நட்புப் போனாலும் கவலையில்லை; பணமே முக்கியம்; அதற்காக எங்கும் செல்லலாம்'' என்று, வசதி படைத்தோர் நினைக்கின்றனர் எனவும், கலிபோர்னியா மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட, பேரிடர் தொடர்பான ஆய்வு முடிவில் மேலும் கூறப்பட்டுள்ளது.
9. குழந்தை பிறப்புக்கால இறப்பில் தமிழகத்தில் நீலகிரி முதலிடம் : சென்னையில் குறைவு
செப்.03,2012. குழந்தை பிறப்புக்கால இறப்புகளில், நீலகிரி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது எனவும், இதைக் குறைக்க, மருத்துவத்துறை திட்டம் வகுத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை பிறப்புக்கால இறப்பு, 2007ல், ஒரு இலட்சத்திற்கு, 200 என்ற விகிதத்தில் இருந்ததை, வரும் 2015ல், 107 ஆக குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும், 2000ம் ஆண்டில், 5.29 இலட்சம் பெண்கள், குழந்தை பிறப்பின்போது இறந்துள்ளதில், 95 விழுக்காடு, ஆசியா, ஆப்பிரிக்க நாடுகளில் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், ஆண்டிற்கு ஒரு இலட்சம் பேர் குழந்தை பிறப்புக்காலத்தில் இறக்கின்றனர்; உலக அளவில், இந்தியாவில், 20 சதவீத இறப்பு உள்ளது. தமிழகத்தில் குழந்தை பிறப்புக்கால இறப்பு குறைந்து வருகின்றபோதிலும், ஆண்டிற்கு, 1,100 பெண்கள் குழந்தை பிறப்பின்போது பல்வேறு மருத்துவக் காரணங்களால் இறக்கின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.
குழந்தை பிறப்பின்போது இடம்பெறும் இறப்புகளைக் குறைக்க, தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் சார்பில், விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படவும், குழந்தை பிறப்புக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறை குறித்துப் பெண்களுக்கு பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment