1. கொலம்பியாவில் நற்செய்தியை விதைத்து ஒப்புரவை அறுவடை செய்ய திருத்தந்தை அழைப்பு
2. திருத்தந்தை : ஒரு சிறிய சொல் எல்லையற்ற பொருள் கொண்டது
3. திருத்தந்தை : லெபனன் திருப்பயணம் அமைதியின் அடையாளம்
4. திருத்தந்தை : வருங்காலம் ஒன்றிணைந்து வாழ்வதைச் சார்ந்துள்ளது
5. போஸ்னியச் சண்டையினால் ஏற்பட்ட அனைத்துக் காயங்களும் குணப்படுத்தப்படும்படியாக கர்தினால் Puljic செபம்
6. சீனாவின் தேசியக்கல்வித் திட்டத்திற்கு Hongkong கர்தினால் எதிர்ப்பு
7. சிரியா அகதிகளிடையே காரித்தாஸ் பணிகள் அதிகரிப்பு
8. புதுமைகளைப் புகுத்தும் உலக நிறுவனங்கள் பட்டியலில் புதிதாக ஐந்து இந்திய நிறுவனங்கள்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. கொலம்பியாவில் நற்செய்தியை விதைத்து ஒப்புரவை அறுவடை செய்ய திருத்தந்தை அழைப்பு
செப்.10,2012. வன்முறையின் தழும்புகள் பரவியுள்ள கொலம்பியாவில் ஊக்கமளிக்கும் சில அடையாளங்கள் தெரிகின்ற போதிலும், அந்நாட்டில் இன்னும் இடம்பெற்றுவரும் வன்முறைகள், பல மக்களுக்கு வேதனையையும், தனிமையையும் மரணத்தையும் அநீதியையும் தொடர்ந்து வருவித்துக் கொண்டிருக்கின்றன எனக் கவலை தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் இரண்டாவது குழு ஆயர்களை, அட் லிமினா சந்திப்பையொட்டி காஸ்தெல் கந்தோல்ஃபோவில் இத்திங்களன்று சந்தித்த திருத்தந்தை, பல
இன்னல்கள் மற்றும் ஆபத்துக்கள் மத்தியில் ஆயர்கள் ஆற்றிவரும்
மேய்ப்புப்பணிகளைப் பாராட்டிப் பேசியதோடு மனித வாழ்வுக்கு ஆதரவான பணிகளைத்
தொடர்ந்து செய்யுமாறும் பரிந்துரைத்தார்.
நம்
ஆண்டவராம் மீட்பரின் எடுத்துக்காட்டு மற்றும் அவரது அருளிலிருந்து திடம்
பெற்று அமைதிக் கலாச்சாரத்தையும் மனித வாழ்வையும் பாதுகாப்பதற்குத்
தொடர்ந்து செயல்படுமாறும் தான் சந்தித்த 37 ஆயர்களைக் கேட்டுக் கொண்டார்
திருத்தந்தை.
கிறிஸ்து
எங்கெல்லாம் வருகிறாரோ அங்கெல்லாம் அவர் இணக்க வாழ்வுக்கானப் பாதையைத்
திறக்கிறார் என்பதை அறிந்தவர்களாய் நற்செய்தியை விதைத்து ஒப்புரவை அறுவடை
செய்யுமாறும் ஆயர்களிடம் கூறினார் திருத்தந்தை.
வெறுப்பு
இருக்குமிடத்தில் மன்னிப்புக்கும் பகைமை இருக்குமிடத்தில்
சகோதரத்துவத்துக்கும் கிறிஸ்து பாதையைத் திறக்கிறார் என்ற திருத்தந்தை, நற்செய்திப்பணியில் புதிய முறைகளை ஊக்குவிக்குமாறும் கொலம்பிய ஆயர்களைக் கேட்டுக் கொண்டார்.
2. திருத்தந்தை : ஒரு சிறிய சொல் எல்லையற்ற பொருள் கொண்டது
செப்.10,2012 ஒரு மிகச் சிறிய சொல், இவ்வுலகில் கிறிஸ்துவின் மறைப்பணியைத் தொகுத்துத் தந்துள்ளது என்று இஞ்ஞாயிறன்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
காது கேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரை இயேசு குணமாக்கிய இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை(மாற்கு7:31-37) மையமாக வைத்து மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை, அந்த மனிதரிடம் இயேசு பேசிய “எப்பத்தா” அதாவது “திறக்கப்படு” என்ற சொல்லின் பொருளை விளக்கினார்.
எப்பத்தா என்று இயேசு சொன்னவுடன் அந்த மனிதரின் காதுகள் திறக்கப்பட்டன, நாவும் கட்டவிழ்ந்தது, இந்தக் குணப்படுத்தலால் அந்த மனிதர் உடனே பிறருக்கும் உலகினருக்கும் திறந்த உள்ளம் கொண்டவரானார், அவரால் புதிய வழியில் மற்றவரோடு தொடர்பு கொள்ள முடிந்தது என்றும் திருத்தந்தை கூறினார்.
காது கேளாமலும், வாய் பேச முடியாமலும் இருந்த நிலை அந்த மனிதரின் உடல் உறுப்புக்களை மட்டும் சார்ந்த்தாக இல்லாமல், அவரது அகவாழ்வையும் மூடியிருந்ததை நாம் அறிகிறோம் என்ற திருத்தந்தை, பாவத்தால் அகவாழ்வில் காது கேளாமலும், பேச முடியாமலும் இருக்கும் மனிதர் இறைவனின் குரலைக் கேட்குமாறுச் செய்வதற்கு இயேசு மனிதனானார் என்று கூறினார்.
மேலும், குணமடைந்த இந்த மனிதர் அன்பின் குரல் பேசுவதைத் தனது இதயத்தில் கேட்கவும், இறைவனோடும் மற்றவரோடும் தொடர்பு கொள்வதற்கு அன்பின் மொழியைப் பேசுவதற்குக் கற்றுக்கொள்ளவும் இயேசு மனிதனானார் என்றும் விளக்கினார் திருத்தந்தை.
இதனாலே திருமுழுக்குத் திருவருட்சாதனச் சடங்கில் எப்பத்தா என்ற அடையாளம் சேர்க்கப்பட்டுள்ளது என்றும், இவ்வருட்சாதனத்தின் மூலம் மனிதர் தூய ஆவியை சுவாசித்து பேசுவதற்குத் தொடங்குகிறார் என்றும் மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
3. திருத்தந்தை : லெபனன் திருப்பயணம் அமைதியின் அடையாளம்
செப்.10,2012. முடிவில்லாத மோதல்களால் நீண்டகாலமாக சின்னாபின்னமாக்கப்பட்டுள்ள மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியும் ஒப்புரவும் கிடைப்பதற்கு,
அம்மோதல்களில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் அனைத்துலக சமுதாயமும்
தங்களை அர்ப்பணிக்குமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வலியுறுத்தினார்.
வருகிற
வெள்ளிக்கிழமையன்று தான் மேற்கொள்ளவிருக்கும் லெபனன் திருப்பயணம் பற்றி
இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் ப்ரெஞ்ச் மொழியில் பேசிய
திருத்தந்தை, இந்த அப்போஸ்தலிக்கப் பயணம், லெபனனுக்கும் அனைத்து மத்திய கிழக்குப் பகுதிக்குமானது என்று கூறினார்.
2010ம்
ஆண்டு அக்டோபரில் இடம்பெற்ற மத்திய கிழக்குப் பகுதிக்கான சிறப்பு ஆயர்
மாமன்றத்தின் தீர்மானத் தொகுப்பான அப்போஸ்தலிக்க ஏட்டை இந்த லெபனன்
திருப்பயணத்தில் வெளியிடவிருக்கிறேன் என்றும் திருத்தந்தை கூறினார்.
இப்பகுதி
மக்கள் அன்றாட வாழ்வில் எல்லாவிதமான துன்பங்களையும் எதிர்கொண்டு
வருகின்றனர். தங்கள் குடும்பங்களையும் தொழில்களையும் விட்டுவிட்டு அமைதியான
இடத்தைத் தேடும் இவர்கள்மீது மிகுந்த கவலை கொண்டுள்ளேன். அப்பகுதியைப்
பாதித்துள்ள பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது கடினம் என்றாலும், வன்முறைகளையும் பதட்டநிலைகளையும் வளரவிட்டுக் கொண்டிருக்க முடியாது, அனைத்துலக
சமுதாயமும் அப்பகுதியில் சண்டையிட்டுவரும் குழுக்களும் இப்பிரச்சனைக்குத்
தீர்வு காண்பதற்குத் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இத்திருப்பயணம் மத்திய கிழக்குப் பகுதி முழுவதற்குமானது என்றும் உரைத்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், எனது அமைதியை உங்களுக்கு அளிக்கின்றேன் என்ற கிறிஸ்துவின் வார்த்தைகளைக் குறிப்பிட்டு, இத்திருப்பயணம் அமைதியின் அடையாளமாக இருக்கின்றது, லெபனனையும், மத்திய கிழக்குப் பகுதியையும் கடவுள் ஆசிர்வதிப்பாராக என்றார்.
இமமூவேளை செப உரையைக் கேட்பதற்காக அங்கு கூடியிருந்த அன்பு திருப்பயணிகளுக்கும், வானொலி அல்லது தொலைக்காட்சி வழியாக இதில் கலந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் இதனைத் தான் சொல்வதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை.
4. திருத்தந்தை : வருங்காலம் ஒன்றிணைந்து வாழ்வதைச் சார்ந்துள்ளது
செப்.10,2012. நாம் வாழும் இந்த உலகத்துக்கு உண்மையிலேயே அமைதி தேவைப்படுகின்றது, அமைதி
வரட்டும் என்ற ஓலம் நமது உலகத்தினின்று மிகவும் வலிமையாக எழும்பிக்கொண்டே
இருக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
போஸ்னிய நாட்டு Sarajevoவில்
இஞ்ஞாயிறன்று தொடங்கியுள்ள 26வது அனைத்துலக அமைதி மாநாட்டுக்குத்
திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ
பெர்த்தோனே Sarajevo கர்தினால் Vinko Puljicவுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Sarajevoவில்
கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய சண்டை எண்ணற்ற
உயிரிழப்புக்களையும் பொருள்சேதங்களையும் கொண்டு வந்ததை நினைவுகூர்ந்துள்ள
இச்செய்தி, முதல் உலகப்போர் தொடங்கிய இதே Sarajevoவில் மீண்டும் சண்டை இடம்பெற்றதால் துயரங்களை அனுபவித்த இந்நகரம், ஐரோப்பா முழுவதற்கும் துன்பத்தின் அடையாளமாக இருக்கின்றது என்று பாப்பிறை 2ம் ஜான் பால் கூறியதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
உலகின் வருங்காலம் ஒன்றிணைந்து வாழ்வதைச் சார்ந்துள்ளது என்றும், நாம் ஒருவர் ஒருவருக்குத் திறந்த மனம் கொண்டவர்களாய், ஒருவர் ஒருவருக்குத் தன்னையே வழங்கி வாழும் உணர்வில் அனைவரும் வளருமாறும் இச்செய்தியில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சான்
எஜிதியோ என்ற இத்தாலிய கத்தோலிக்கப் பொதுநிலையினர் பிறரன்பு அமைப்பினால்
நடத்தப்படும் இம்மாநாட்டில் ஏறக்குறைய 12 நாடுகளிலிருந்து சுமார் ஆயிரம்
சமய மற்றும் பிற பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். Sarajevo கைப்பற்றப்பட்டு போஸ்னியச் சண்டை தொடங்கியதன் 20ம் ஆண்டு நினைவாக இந்த அமைதி மாநாடு நடத்தப்படுகிறது.
5. போஸ்னியச் சண்டையினால் ஏற்பட்ட அனைத்துக் காயங்களும் குணப்படுத்தப்படும்படியாக கர்தினால் Puljic செபம்
செப்.10,2012. கடவுள் ஒருதலைச்சார்பாக இருந்து செயல்படுபவர் அல்ல என்று சரயேவோ அனைத்துலக அமைதி மாநாட்டில் கூறிய அந்நகர்ப் பேராயர் கர்தினால் Vinko Puljic, போஸ்னியச் சண்டையினால் ஏற்பட்ட அனைத்துக் காயங்களும் குணப்படுத்தப்படும்படியாகச் செபித்தார்.
போஸ்னிய-எர்செகொவினாக் குடியரசின் Sarajevoவில் இடம்பெற்றுவரும் மூன்று நாள் மாநாட்டில் செர்பிய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் Irinej Irinejவுடன் சேர்ந்து இவ்வாறு உரைத்த கர்தினால் புல்யிச், போரின் அனைத்துக் கொடுமைகளையும் தாங்கிக் கொள்வதற்கு செபமே உதவியது என்றும் கூறினார்.
இம்மாநாடு முடிகின்ற இச்செவ்வாயன்று இதில் பங்கு கொள்ளும் தலைவர்கள் இணைந்து உலகினருக்கெனச் செய்தி ஒன்றையும் வெளியிடவுள்ளனர்.
ஒன்றிணைந்து வாழும் கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நடந்துவரும் இம்மாநாட்டில் இரான் குடியரசின் Ayatollah Khameneiன் முக்கிய ஆலோசகர் உட்பட பல சமயத் தலைவர்களும், இத்தாலிய பிரதமர் Mario Monti, ஐரோப்பிய அவையின் தலைவர் Herman Van Rompuy உட்பட சில அரசியல் தலைவர்களும் மற்ற பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர்.
6. சீனாவின் தேசியக்கல்வித் திட்டத்திற்கு Hongkong கர்தினால் எதிர்ப்பு
செப். 10, 2012.
ஹாங்காங் மாணவர்களை மூளைச்சலவைச் செய்ய முயலும் சீன அரசின் தேசியக்
கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போராட்டத்தில் ஒரு
இலட்சத்து இருபது ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர்.
ஹாங்காங் கர்தினால் Joseph Zen உட்பட எண்ணற்ற முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்ட இப்போராட்டம், தேசியக்
கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் மேற்கொள்ளும்
உண்ணா நோன்பு போராட்டத்திற்கு ஆதரவாக ஹாங்காங்கில் இடம்பெற்றது.
சீனாவின் வரலாற்றில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மதசுதந்திரக்
கட்டுப்பாடுகள் போன்றவை குறித்த உண்மைகளை மறைத்து சீனாவின் வெற்றிகளை
மட்டுமே உள்ளடக்கிய வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும் என்ற சீன அரசின்
காட்டாயப் பாடத்திட்டத்திற்கு ஹாங்காங் பள்ளிகள் எதிர்ப்புத் தெரிவித்து
வருகின்றன.
சீன அரசின் இந்தக் கல்வித்திட்டம் இளையோரை மூளைச்சலவை செய்வதற்கான அரசின் முயற்சி என குறை கூறியுள்ள ஹாங்காங் கர்தினால் Zen, ஹாங்காக்கின் இலவசக் கல்வித்திட்டத்தை அகற்றி, தன்
கட்டுப்பாடின்கீழ் கொண்டுவருவதன் மூலம் கத்தோலிக்கக் கல்வி நிலையங்களைக்
கைப்பற்ற அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கவலையை வெளியிட்டார்.
7. சிரியா அகதிகளிடையே காரித்தாஸ் பணிகள் அதிகரிப்பு
செப். 10, 2012.
உள்நாட்டு மோதல்களால் குடிபெயர்ந்துள்ள சிரியா நாட்டு மக்களுக்குத் தன்
மனிதாபிமானப் பணிகளை அதிகரித்துள்ளது கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.
சிரியா நாட்டிற்குள் குடிபெயர்ந்துள்ள மக்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகித்து வருவதாகக் கூறும் இக்கத்தோலிக்க அமைப்பு, பல இடங்களில் மாணவச் சீரணிப்படையினர் உதவியுடன் இப்பணிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
அண்மை நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா மக்களுள் 13,000க்கும் மேற்பட்டோருக்கு நேரடி உதவிகளை ஆற்றி வருகின்றது இப்பிறரன்பு அமைப்பு.
சிரியாவிலிருந்து வெளியேறி அண்மை நாடுகளான ஜோர்டன், துருக்கி, லெபனன்
மற்றும் ஈராக்கில் வாழும் ஏறத்தாழ இரண்டு இலட்சத்து ஐம்பது ஆயிரம் சிரியா
அகதிகளிடையேயும் தன் பணிகளை ஆற்றி வருகின்றது காரித்தாஸ் அமைப்பு.
8. புதுமைகளைப் புகுத்தும் உலக நிறுவனங்கள் பட்டியலில் புதிதாக ஐந்து இந்திய நிறுவனங்கள்
செப். 10, 2012. புதுமைகளைப் புகுத்தும் உலக நிறுவனங்கள் பட்டியலில் புதிதாக ஐந்து இந்திய நிறுவனங்களை இணைத்துள்ளது அமெரிக்க ஐக்கிய நாட்டின் Forbes இதழ்.
ஒரு நிறுவனத்தின் ஆற்றல், அதன் செல்வாக்கு, தத்துவ நோக்கு, மக்களின்
முன்னேற்றத்தில் அது எந்த அளவுக்கு நெம்புகோலாகச் செயல்படுகிறது
என்பவைகளின் அடிப்படையில் உலக நிறுவனங்களைத் தர வரிசைப்படுத்தும் Forbes இதழின் பட்டியலில், இந்தியாவின் கட்டுமான நிறுவனம் Larsen & Toubro இப்பட்டியலில் 9வது இடத்தையும், நுகர்பொருள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள Hindustan Unilever நிறுவனம் 12வது இடத்தையும், கணனிப் பணிகள் தொடர்புடைய Infosys நிறுவனம் 19வது இடத்தையும், கணனிக்கான மென்பொருட்களைத் தயாரிக்கும் Tata Consultancy 29வது இடத்தையும், அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து இயங்கும் இந்திய மருந்து நிறுவனமான Sun Pharmaceutical 38வது இடத்தையும் பெற்றுள்ளன.
No comments:
Post a Comment