1. திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம்
2. திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம் மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்களின் இருப்பை வலுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது
3. லிபியாவில் அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தூதரகம் தாக்கப்பட்டதற்கு திருப்பீடம் கண்டனம்
4. இடிந்தகரை மாதா கோவிலில் காவல்துறையின் அத்துமீறல் நடவடிக்கைகளுக்கு கர்தினால் கண்டனம்.
5. பாகிஸ்தானில் பொய்க் குற்றச்சாட்டிற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி விடுவிக்கப்பட அந்நாட்டு ஆயர் அழைப்பு
6. ஒவ்வோர் ஆண்டும் 1,50,000 கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்திற்காககக் கொல்லப்படுகின்றனர்
7. குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை உலகில் குறைந்துள்ளது : யுனிசெப்
8. சென்னை நகரில் இவ்வாண்டு 962 பேர் வாகன விபத்தில் பலி
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம்
செப்.13,2012.
மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியையும் ஒப்புரவையும் ஊக்குவிக்கும்
நோக்கத்தில் லெபனன் நாட்டுக்கானத் தனது முதல் திருப்பயணத்தை
இவ்வெள்ளிக்கிழமை உரோம் நேரம் காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறார்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
உரோம் சம்ப்பினோ விமானநிலையத்திலிருந்து புறப்படும் திருத்தந்தை, 3 மணி 15 நிமிடங்கள் பயணம் செய்து லெபனன் தலைநகர் பெய்ரூட் “Rafiq Hariri” விமானநிலையத்தை அடைந்து அங்கு இடம்பெறும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்.
இவ்வெள்ளி உள்ளூர் நேரம் மாலை 6 மணியளவில் ஹரிஸ்ஸா புனித பவுல் பசிலிக்காவில் நடைபெறும் செப வழிபாட்டின்போது, மத்திய கிழக்குப் பகுதிக்கான சிறப்பு ஆயர் மாமன்றத்தின் தீர்மானங்கள் அடங்கிய அப்போஸ்தலிக்க ஏட்டில் கையெழுத்திடுவார்.
லெபனன் அரசுத்தலைவர் மற்றும் பிரதமரைத் தனித்தனியே சந்தித்தல், முஸ்லீம் மதத் தலைவர்களைச் சந்தித்தல், அரசு உறுப்பினர்கள், தூதரக அதிகாரிகள், சமயத் தலைவர்கள், கலாச்சாரப் பிரதிநிதிகள் எனப் பலதரப்பட்ட குழுவினர் எல்லாரையும் அரசுத்தலைவர் மாளிகையில் சந்தித்தல், அந்நாட்டு ஆயர்கள் மற்றும்பிற கிறிஸ்தவத் தலைவர்களைச் சந்தித்தல் என பல முக்கிய நிகழ்வுகள் செப்டம்பர் 15, இச்சனிக்கிழமை திருப்பயணத்திட்டத்தில் உள்ளன.
செப்டம்பர்
16 இஞ்ஞாயிறன்று பெய்ரூட் நகர வளாகத்தில் திருப்பலி நிகழ்த்தி அந்த
அப்போஸ்தலிக்க ஏட்டை அத்தலத்திருஅவைகளுக்கு வழங்கும் திருத்தந்தை அன்று
மாலை உரோம் திரும்பி காஸ்தெல் கந்தோல்ஃபோ செல்வார்.
லெபனன் நாட்டுக்கானத் திருத்தந்தையின் இத்திருப்பயணம் அவரது 24வது வெளிநாட்டுத் திருப்பயணமாக அமைகின்றது.
2. திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம் மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்களின் இருப்பை வலுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது
செப்13,2012.
திருத்தந்தையின் லெபனன் நாட்டுக்கான திருப்பயணம் மத்திய கிழக்குப்
பகுதியில் கிறிஸ்தவர்களின் இருப்பை வலுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது
என்று, புனித பூமியில் கீழைரீதி இறையியல் மற்றும் இசுலாமியம் குறித்தப் பாடங்களை நடத்தும் சலேசிய அருள்தந்தை Pier Giorgio Gianazza, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
இன்னும், இத்திருப்பயணம் குறித்துப் பேசிய, லெபனனில் தலைமையகத்தைக் கொண்டுள்ள சிரியன்ரீதி கத்தோலிக்கத் திருஅவையின் முதுபெரும் தலைவர் Ignace Youssef Joseph III Younan, மத்திய
கிழக்குப் பகுதியில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லீம்கள் போன்று
கிறிஸ்தவர்கள் முழுகுடியுரிமையை அனுபவிக்கவில்லை என்று தெரிவித்தார்.
சிரியாவில் ஆரம்பிக்கப்பட்ட சிரியன்ரீதி கத்தோலிக்கத் திருஅவையின் உறுப்பினர்கள், சிரியாவில் அமைதியில் வாழ்ந்தார்கள் என்றும் உரைத்த முதுபெரும் தலைவர் Ignace, தற்போது சிரியாவைப் பாதித்துள்ள அரபு வசந்தம் என்ற மக்கள் எழுச்சி, சிரியாவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு நெருக்கடிநிலைகளை உருவாக்கியிருப்பதாகக் கூறினார்.
3. லிபியாவில் அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தூதரகம் தாக்கப்பட்டதற்கு திருப்பீடம் கண்டனம்
செப்.13,2012.
லிபியாவில் அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தூதரகம் கடும் தாக்குதலுக்கு
உள்ளானது குறித்து திருப்பீடம் தனது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கின்றது
என்று இவ்வியாழனன்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ
லொம்பார்தி கூறினார்.
நியூயார்க் உலக வர்த்தக மையம், பயங்கரவாதிகளால்
தாக்கப்பட்டதை நினைவுகூர்ந்த இச்செவ்வாயன்று இசுலாமைக் கேலிசெய்யும்
திரைப்படம் ஒன்று வெளியானதையடுத்து லிபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம்
வன்முறைக் கும்பல்களால் தாக்கப்பட்டது. இதில் அமெரிக்க தூதர்
ஜே.கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸ், மூன்று தூதரகப் பணியாளர்கள் மற்றும் சில லிபிய மக்களும் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதக் குழுக்களின் இந்தக் கொலைவெறி வன்முறைகளை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்று கூறிய அருள்தந்தை லொம்பார்தி, அனைத்துலக சமுதாயம், இந்த வேதனையான தருணத்தைப் பயன்படுத்தி, சிரியாவிலும், மத்திய கிழக்குப் பகுதி முழுவதிலும் அமைதிக்கு ஆதரவாகத் தொடர்ந்து செயல்படுமாறு கேட்டுள்ளார்.
இசுலாமைக் கேலிசெய்யும் அமெரிக்கத் திரைப்படம் விவகாரம் தொடர்பாக, ஏமன்,
எகிப்து உட்பட மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வட ஆப்ரிக்காவிலுள்ள
அமெரிக்க தூதரகங்கள் கடுமையாய்த் தாக்கப்பட்டுள்ளன எனச் செய்திகள்
கூறுகின்றன.
4. இடிந்தகரை மாதா கோவிலில் காவல்துறையின் அத்துமீறல் நடவடிக்கைகளுக்கு கர்தினால் கண்டனம்
செப்.13,2012.
கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிரான போராட்டங்கள் இடம்பெறும்
இடிந்தகரை என்ற ஊரிலுள்ள லூர்து அன்னை ஆலயத்திற்குள் காவல்துறையினர்
புகுந்து மாதா திருஉருவங்களைச் சேதப்படுத்தியுள்ளது
வெட்கத்திற்குரியச் செயல் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது
என்று தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளார் இந்திய ஆயர் பேரவைத் தலைவர்
கர்தினால் Oswald Gracias.
பொது
இடங்களையும் வழிபாட்டுத்தலங்களையும் பாதுகாக்க வேண்டிய
காவல்துறையினரே கோவிலுக்குள் புகுந்து அன்னைமரி திருவுருவங்களை உடைத்து
அவைகளை அவமானப்படுத்தியுள்ளது, எவ்விதத்திலும் நியாயப்படுத்தப்பட முடியாத ஒரு செயல் மட்டுமல்ல, பாரத தேசிய மனச்சான்றுக்கே ஒரு சவாலாக உள்ளது என்றார் கர்தினால் Gracias.
உதவி தேவைப்படும் அனைத்து மக்களுடனும் ஒருமைப்பாட்டை அறிவித்து வரும் கத்தோலிக்கத் திருஅவை, உண்மை வளர்ச்சி என்பது மனித குல மாண்பை பாதுகாப்பதாக இருக்க வேண்டும் என்பதை உறுதிச் செய்யவும் உழைக்கிறது என்றார் கர்தினால் Gracias..
5. பாகிஸ்தானில் பொய்க் குற்றச்சாட்டிற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி விடுவிக்கப்பட அந்நாட்டு ஆயர் அழைப்பு
செப்.13,2012. பாகிஸ்தானில் தேவநிந்தனையின்பேரில் பொய்யாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, தற்போது பிணையலில் விடுதலை செய்யப்பட்டிருக்கும் 14 வயதுச் சிறுமி Rimsha Masih, வழக்குகளிலிருந்து விடுவிக்கப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் இஸ்லாமாபாத் ஆயர் Rufin Anthony.
எக்குற்றமும் செய்யாத, எக்குற்றமும்
நிரூபிக்கப்படாத 14 வயது கிறிஸ்தவச் சிறுமியை வழக்கிலிருந்து
விடுவிக்குமாறு நீதிபதிகளை நோக்கி கிறிஸ்தவர்கள் விண்ணப்பிப்பதாகக்
கூறினார் ஆயர்.
இவ்வியாழனன்று பாகிஸ்தான் நீதிமன்றத்தில் இடம்பெறுவதாக இருந்த வழக்கு விசாரணை, தேதி குறிப்பிடாமல் தள்ளிப்போடப்பட்டுள்ளதைக் குறித்து கருத்து தெரிவித்தபோது இவ்வாறு கூறினார் ஆயர் Rufin Anthony.
கிறிஸ்தவச்
சிறுமி மீது பொய்யானக் குற்றச்சாட்டை முன்வைத்த இஸ்லாமிய இம்மாம் ஒருவர்
தற்போது சிறையிலடைக்கப்பட்டு அவர் மீது தேவநிந்தனை குற்றச்சாட்டு
வைக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வழக்கின் இம்மாத 16ம் தேதி விசாரணையையும் அதன் முடிவுகளையும் பொறுத்து, இச்சிறுமியின் வழக்குத்தீர்ப்பு மாற வாய்ப்புள்ளது என சட்ட நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
6. ஒவ்வோர் ஆண்டும் 1,50,000 கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்திற்காகக் கொல்லப்படுகின்றனர்
செப்.13,2012.
ஒவ்வோர் ஆண்டும் உலகில் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் கிறிஸ்தவர்கள் தங்கள்
விசுவாசத்திற்காகத் துன்புறுத்தப்பட்டுக் கொல்லப்படுவதாக அண்மையில்
வெளியிடப்பட்ட புள்ளிவிவரக்கணக்கொன்று கூறுகிறது.
உலகின் மூன்றில் இரு பகுதி நாடுகளில், அதாவது 133 நாடுகளில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தல்களை எதிர்நோக்குவதாகக் கூறும் Pew ஆய்வு அமைப்பின் இவ்வறிக்கை, உலகில் பாகுபாட்டுடன் நடத்தப்படும் நிலைகளுள் 80 விழுக்காடு, கிறிஸ்தவர்களுக்கு எதிராகவேச் செயல்படுத்தப்படுகிறது எனவும் தெரிவிக்கிறது.
ஒவ்வோர் ஆண்டும் 1,50,000 கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்திற்காகக் கொல்லப்படுவதாக உரைக்கும் இப்புள்ளிவிவர அறிக்கை, கடந்த ஆண்டில் தங்கள் விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டவர்கள் குறித்த விவரங்களையும் வழங்கியுள்ளது.
7. குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை உலகில் குறைந்துள்ளது : யுனிசெப்
செப்.13,2012. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு கடந்த 20 ஆண்டுகளில் குறிப்பிடத்தகும் வகையில் குறைந்துள்ளதாக யுனிசெப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.
ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு 1990ம் ஆண்டில் 1 கோடியே 20 இலட்சமாக இருந்தது, கடந்த ஆண்டில் 69 இலட்சமாக்க் குறைந்துள்ளது.
சில ஏழை நாடுகள் பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளதும், பொருளுதவிகள் வழங்கப்பட்டுள்ளதும், சில நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதும், குழந்தை இறப்பு குறைவிற்கான காரணங்களாகக் கூறப்பட்டுள்ளன.
தட்டம்மை போன்ற நோய்களுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது மூலம், 2011ம் ஆண்டில் குழந்தை இறப்புகளை 4 இலட்சம் குறைக்க முடிந்தது எனவும் உரைத்தது குழந்தைகளுக்கான ஐநா அமைப்பான யுனிசெப்.
கடந்த ஆண்டு இடம்பெற்ற ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கையில் பாதி, இந்தியா, நைஜீரியா, கோங்கோ, பாகிஸ்தான், சீனா என்ற ஐந்து நாடுகளில் மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை கடந்த ஆண்டில் கோங்கோ, சாடு,சொமாலியா, மாலி, கம்ரூன் மற்றும் புர்கீனா ஃபாசோ ஆகிய நாடுகளில் அதிகரித்திருந்ததாகவும் யுனிசெப்பின் அறிக்கை கூறுகிறது.
பிறந்த 28 நாட்களுக்குள் கடந்த ஆண்டு உலகில் இறந்த குழந்தைகளின் என்ண்ணிக்கை ஏறத்தாழ 30 இலட்சம் எனக்கூறும் இவ்வறிக்கை, உலகில்
ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் மரணத்தில் மூன்றில் ஒரு பகுதிக்கும்
மேற்பட்டவைகளுக்குப் போதிய சத்துணவின்மையே காரணம் எனவும் கூறுகிறது.
8. சென்னை நகரில் இவ்வாண்டு 962 பேர் வாகன விபத்தில் பலி
செப்.13,2012 சென்னையில் இந்த ஆண்டு, 962 பேர் வாகன விபத்தில் இறந்துள்ளனர்; அவர்களில், 436 பேர், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் என சென்னை மாநகர காவல்துறை உயர் அதிகாரி திரிபாதி கூறினார்.
சென்னை நகரில், இந்த செப்டம்பர் வரையிலான ஓராண்டில், 962 பேர், வாகன விபத்தில் இறந்துள்ளனர், அதில் 446 பேர், இரு சக்கர வாகன விபத்தில் பலியானவர்கள் என்ற காவல்துறை உயர் அதிகாரி, தலைக்கவசம் அணியாமல் பயணிக்கும்போது, காவல்துறையினரைக் கண்டவுடன் மட்டும் அவசரமாக அதனை அணியும் பழக்கம் பல பேரிடம் உள்ளது என்பதை எடுத்துரைத்து, தலைக்கவசம் அணியாததால், இறப்பு விழுக்காடு அதிகரித்திருப்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார்.
காவல்துறை உயர் அதிகாரி திரிபாதி மேலும் கூறுகையில், சென்னை மாநகரில், கடந்த இரு மாதங்களில் நடந்த, 289 குற்றச் சம்பவங்களில், 262 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர் எனவும், அவர்களிடமிருந்து, 3 கோடியே 60 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,378 சவரன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் 16 இலட்சத்து85 ஆயிரம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment