1. கொலம்பியாவில் பழங்குடி மக்களுக்கு நற்செய்தி அறிவிப்பதில் கவனம் செலுத்த திருத்தந்தை வலியுறுத்தல்
2. விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத்தின் புதிய தலைவர் : திருஅவையில் ஒற்றுமை அவசியம்
3. கர்தினால் ரில்கோ : விசுவாச ஆண்டில் திருஅவை பக்த இயக்கங்களை நம்பிக்கையோடு நோக்குகின்றது
4. திருத்தந்தையின் ஆறுதல் வார்த்தைகள் அலெப்போ கிறிஸ்தவர்களைச் சென்றடைந்தன
5. இசுலாமைக் கேலி செய்யும் திரைப்படத்துக்கு எதிரானப் போராட்டங்களால் பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் பதட்டம்
6. ஆசியான் நாடுகளின் முன்னேற்றத்துக்குக் கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள் எடுத்துக்காட்டு
7. உலகில் அச்சுறுத்தும் போக்குடைய நாடுகள் , ஐ.நா.வின் பட்டியலில் இலங்கை
8. மூளையின் நரம்பிணைப்பு ஆராய்ச்சியில் சுவிஸ் அறிவியலாளர்கள்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. கொலம்பியாவில் பழங்குடி மக்களுக்கு நற்செய்தி அறிவிப்பதில் கவனம் செலுத்த திருத்தந்தை வலியுறுத்தல்
செப்.19,2012.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் பழங்குடி மக்களுக்கு நற்செய்தி
அறிவிப்பதில் மிகுந்த கவனம் செலுத்துமாறு அந்நாட்டுத் தலத்திருஅவையை
வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
“கொலம்பியாவில் பழங்குடி மக்களின் நிலைமை” என்ற தலைப்பில் கொலம்பியத் திருஅவையின் அருள்பணியாளர்கள் மற்றும் கத்தோலிக்க விசுவாசிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ள திருத்தந்தை, பழங்குடி மக்களை அணுகும் முறைகள் மறுபரிசீலனை செய்யப்படுமாறும் கேட்டுள்ளார்.
பழங்குடி
மக்களின் மரபுகள் மற்றும் அவர்கள் வாழும் சூழல்களில் அவர்களுக்கு
நற்செய்தி அறிவிக்கப்பட்டு அச்சூழல்களில் அவர்கள் நற்செய்தியைப்
புரிந்துகொள்ளுமாறு செய்ய வேண்டியது இன்றியமையாதது என்றும்
வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
ஆயர்கள்
ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் அட்லிமினா சந்திப்பை
இம்மாதம் முதல் தேதியன்று தொடங்கிய கொலம்பியா ஆயர்கள் இத்திங்களன்று அதனை
முடித்தனர்.
கொலம்பியாவிலுள்ள
85 பழங்குடி இனக் குழுக்களில் ஏறக்குறைய 14 இலட்சம் மக்கள் உள்ளனர்.
இவர்கள் அந்நாட்டின் மக்கள் தொகையில் 3.4 விழுக்காடு என்று 2005ம் ஆண்டின்
கணக்கெடுப்பு கூறுகிறது.
2. விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத்தின் புதிய தலைவர் : திருஅவையில் ஒற்றுமை அவசியம்
செப்.19,2012.
பழமைவிரும்பிகளுக்கும் முற்போக்குவாதிகளுக்கும் இடையே வளர்ந்துவரும்
கருத்து முரண்பாடு திருஅவையின் ஒன்றிப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது
மற்றும் இது திருஅவையின் உறுப்பினர்கள் மத்தியில் கடும் பதட்டநிலைகளை
உருவாக்கி வருகிறது என்று திருப்பீட விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத்தின்
புதிய தலைவர் பேராயர் Gerhard Ludwig Müller கூறினார்.
திருஅவை மேற்கொள்ளவேண்டிய மிக முக்கிய சவால்களில் ஒன்றாக இதனைத் தான் பார்ப்பதாக, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்ட பேராயர் Müller, திருப்பீட விசுவாசக்கோட்பாட்டுப் பேராயம் எதிர்கொள்ளும் இன்னல்நிறைந்த விவகாரங்கள் குறித்தும் குறிப்பிட்டார்.
திருப்பீட விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத்துக்கு எதிராகப் பல முற்சார்பு எண்ணங்கள் நிலவுகின்றன, ஆயினும் இவை உண்மைநிலையோடு மிகச் சிறிதளவே தொடர்புடையவை என்றுரைத்த பேராயர், இப்பேராயத்தில்
ஏற்கனவே ஐந்தாண்டுகள் உறுப்பினராக இருந்த அனுபவம் பிரச்சனைகளுக்குத்
தீர்வு காண உதவும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
வருகிற அக்டோபரில் உலக ஆயர் மாமன்றமும் விசுவாச ஆண்டும் தொடங்கவிருக்கின்றது, திருஅவையின் வாழ்வுக்குத் தொல்லைதரும் கூறுகளை அறிந்து அவை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறிய பேராயர், திருஅவைக்கும் தனிப்பட்ட நாடுகளுக்கும் இடையே புதிய மற்றும் அடிப்படையான ஒன்றிப்பு வளர்வதற்கு ஆவன செய்ய வேண்டுமென்றும் கூறினார்.
3. கர்தினால் ரில்கோ : விசுவாச ஆண்டில் திருஅவை பக்த இயக்கங்களை நம்பிக்கையோடு நோக்குகின்றது
செப்.19,2012.
வருகிற அக்டோபரில் தொடங்கும் விசுவாச ஆண்டில் திருஅவையின் பக்த இயக்கங்கள்
மற்றும் புதிய பக்தக் குழுக்களைத் திருஅவை மிகுந்த நம்பிக்கையோடு
நோக்குகின்றது என்று கர்தினால் ஸ்தனிஸ்லாவ் ரில்கோ கூறினார்.
லொசர்வாத்தோரே
ரொமானோ திருப்பீடச் சார்பு தினத்தாளில் இவ்வாறு கட்டுரை எழுதியுள்ள
திருப்பீட பொதுநிலையினர் அவைத் தலைவர் கர்தினால் ரில்கோ, இவ்வுலகின்
புதிய சமூக-கலாச்சார அமைப்புகளில் இந்தப் பக்த இயக்கங்கள் தங்களது
சிறப்புத் தனிவரங்களால் விசுவாசத்தைப் புதிய வழியில் வாழ்கின்றன என்று
கூறியுள்ளார்.
இந்தப்
பக்த இயக்கங்களும் குழுக்களும் ஒவ்வொரு நாளும் விசுவாசத்தின் அழகை
வாழ்ந்து கடவுள்மீது ஓர் இரசனையைக் கண்டுணர நமக்கு உதவுகின்றன என்றும்
கர்தினால் ரில்கோ கூறியுள்ளார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கியதன் 50ம் ஆண்டு நிறைவான வருகிற அக்டோபர் 11ம் தேதி தொடங்கும் விசுவாச ஆண்டு, 2013ம் ஆண்டு கிறிஸ்து அரசர் பெருவிழாவான நவம்பர் 24ம் தேதியன்று நிறைவடையும்.
4. திருத்தந்தையின் ஆறுதல் வார்த்தைகள் அலெப்போ கிறிஸ்தவர்களைச் சென்றடைந்தன
செப்.19,2012.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் லெபனன் நாட்டில் மேற்கொண்ட திருப்பயணம்
அலெப்போ நகரக் கிறிஸ்தவர்களுக்கு ஆறுதலைக் கொடுத்தது என்று அலெப்போ
கல்தேயரீதி ஆயரும் சிரியா நாட்டுக் காரித்தாஸ் நிறுவனத் தலைவருமான இயேசு
சபை ஆயர் Antoine Audo கூறினார்.
சிரியாவில்
இராணுவத்துக்கும் புரட்சியாளர்களுக்கும் இடையே நடைபெறும் கடும் சண்டைக்கு
மத்தியில் இரண்டு மாதங்களாகச் சிக்கியிருந்த அலெப்போ கிறிஸ்தவர்களுக்குத்
திருத்தந்தையின் வார்த்தைகள் ஆறுதல் அளித்தன என்று பிதெஸ் செய்தி
நிறுவனத்திடம் தெரிவித்தார் ஆயர் Audo.
சிரியாவிலிருந்து மத்திய கிழக்குப் பகுதிக்குப் புறப்படுவதற்கு முன்னர் திருத்தந்தைக்குச் செய்தி அனுப்பியதாகவும் கூறிய ஆயர், திருத்தந்தையின் லெபனன் திருப்பயணத்தில் அவரது வார்த்தைகள் எளிமையாகவும் தெளிவாகவும் இருந்தன என்றும் தெரிவித்தார்.
முஸ்லீம்கள்மீது
மிகுந்த அன்புகொண்டு அவர் பேசினார் மற்றும் இந்த வெற்றிகரமானத்
திருப்பயணத்துக்கு அவர்களுக்கு நன்றியும் தெரிவித்தார் என்றும் அலெப்போ
ஆயர் Audo கூறினார்.
இதற்கிடையே,
சிரியாவின் தலைநகர் தமாஸ்கஸ் மற்றும் அலெப்போ நகரங்களில் தாக்குதல்கள்
கடுமையாக இடம்பெற்று வருகின்றன என்று இப்புதன் செய்திகள் கூறுகின்றன.
5. இசுலாமைக் கேலி செய்யும் திரைப்படத்துக்கு எதிரானப் போராட்டங்களால் பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் பதட்டம்
செப்.19,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டில் வெளியான இசுலாமைக் கேலி செய்யும் 'The Innocence of Muslims' என்ற
திரைப்படத்துக்கு எதிராகப் பாகிஸ்தானில் இடம்பெற்றுவரும் முஸ்லீம்களின்
கோபம்பொங்கும் போராட்டங்கள் அந்நாட்டின் ஹைதராபாத்தில் கிறிஸ்தவர்கள்
மத்தியில் பதட்டநிலைகளையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்தியிருப்பதாக
ஹைதராபாத் மறைமாவட்ட முதன்மைக்குரு Samson Shukardin தெரிவித்தார்.
நபிகள்
நாயகத்தைக் கேலி செய்யும் இந்தத் திரைப்படம் பொதுவாகத் தடைசெய்யப்பட்டு
அப்படத்தின் ஆசிரியர்கள் தண்டிக்கப்படும்வரைத் தாங்கள் போராட்டத்தை
நிறுத்தப்போவதில்லை என்று முஸ்லீம்கள் கூறிவருவதாகவும் பிரான்சிஸ்கன் அருள்தந்தை Shukardin கூறினார்.
மேலும், இதே விவகாரம் தொடர்பாக, இந்தியாவின்
காஷ்மீரில் நடத்தப்படும் முஸ்லீம்களின் ஆர்ப்பாட்டங்களில் கிறிஸ்தவப்
பள்ளிகள் தாக்கப்படக்கூடும் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
காஷ்மீரிலுள்ள
சமயத் தலைவர்கள் மேலும் வன்முறைகள் இடம்பெறாதிருக்கும்வண்ணம் பார்த்துக்
கொள்ளுமாறு காஷ்மீர் வட இந்தியக் கிறிஸ்தவ சபையின் P. K. Samantaroy கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே, 'The Innocence of Muslims' என்ற இந்தத் திரைப்படத்தைத் தயாரித்த Sam Becile மற்றும் இதனைப் பொதுப்படையாக ஆதரித்த அமெரிக்கக் கிறிஸ்தவப் போதகர் Terry Jones ஆகிய இருவரையும் கைது செய்யுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
6. ஆசியான் நாடுகளின் முன்னேற்றத்துக்குக் கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள் எடுத்துக்காட்டு
செப்.19,2012.
எழுத்தறிவு பெற்றவர்களின்நிலை சராசரி விகிதத்துக்கும் குறைவாய் இருக்கின்ற
தாய்லாந்தின் வளர்ச்சிக்கு அந்நாட்டின் கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள்
முக்கிய பங்காற்றி வருகின்றன என்று ASEAN அமைப்பு கூறியது.
ASEAN அமைப்பின் வளர்ச்சித் திட்டங்களில் கல்வியும் ஒன்று என்றுரைத்த தாய்லாந்து நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சர் Chinnaworn Boonyakiat, ASEAN அமைப்பு நாடுகளுக்கு 2015ம் ஆண்டுக்குள் தாய்லாந்தின் கல்வி எடுத்துக்காட்டாய் இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
தாய்லாந்தில் பள்ளிகளைச் சீர்திருத்துவதற்கென அந்நாட்டு ஆயர் பேரவை நடத்திய கருத்தரங்கில் பேசிய Boonyakiat இவ்வாறு கூறினார்.
இக்கருத்தரங்கில் அந்நாட்டின் பல்வேறு கத்தோலிக்க கல்வி நிறுவனங்களின் 465 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ASEAN சமுதாய நாடுகள் சூழலில் கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள் என்ற தலைப்பில் தாய்லாந்து ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Louis Chamniern Santisukniranனின் அறிக்கை இக்கருத்தரங்கில் முதலில் வாசிக்கப்பட்டது.
ASEAN அமைப்பு, பத்து தென்கிழக்கு நாடுகளின் கூட்டமைப்பாகும்.
7. உலகில் அச்சுறுத்தும் போக்குடைய நாடுகள் , ஐ.நா.வின் பட்டியலில் இலங்கை
செப்.19,2012. உலகில் அச்சுறுத்தும் போக்குடைய நாடுகள் என ஐ.நா பட்டியலிட்டிருக்கும் பதினாறு நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றிருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
பழிவாங்கும்
நோக்குடன் செயல்பட்டுவரும் நாடுகளின் அரசுகள் தண்டிக்கப்படாத நிலையிலேயே
இருப்பதாக ஐ.நா.வின் அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
2011ம் ஆண்டு ஜூன் முதல், 2012ம் ஆண்டு ஜூலை வரையிலான நிலவரத்தின்படி ஐ.நா குறிப்பிட்டுள்ள 16 நாடுகளில், இலங்கை அல்ஜீரியா, பஹ்ரைன், பெலாருஸ், சீனா, கொலம்பியா, ஈரான், கஜகஸ்தான், கென்யா, லெபனன், மலாவி, ருவாண்டா, சவுதி அரேபியா, சூடான், உஸ்பெகிஸ்தான், வெனிசுலா போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், பழிவாங்கும் நோக்குடனான செயல்பாடுகளும் தனிநபர்க்கெதிரான அச்சுறுத்தல்களும் தொடர்ந்து பதிவாகி வருவதையும், அரசு அதிகாரிகளாலும் உயர்மட்ட அதிகாரிகளின் பொது அறிக்கைகளினாலும் அப்பாவி பொதுமக்கள், அச்சுறுத்தல்களுக்கும்
துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கப்படுவதையும் ஐ.நா மனித உரிமை அவையின் உயர்
இயக்குனர் நவிபிள்ளை ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் எடுத்துரைத்துள்ளார்.
8. மூளையின் நரம்பிணைப்பு ஆராய்ச்சியில் சுவிஸ் அறிவியலாளர்கள்
செப்.19,2012.
சுவிட்சர்லாந்து நாட்டு அறிவியலாளர்கள் ஓர் எலியின் மூளையின் மேற்பரப்பில்
உள்ள நரம்பணுக்களுக்கு இடையிலான நரம்பிணைப்புகளின் வரைபடத்தைத்
தயாரித்துள்ளனர். இதனைக் கொண்டு மனித மூளையையும் ஆராய முடியும் என்றும்
அவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த
2005ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆய்வுத்திட்டத்தின் மூலமாக
பாலூட்டியின் மூளை ஒன்றைச் செயற்கையாக உருவாக்க அறிவியலாளர்கள் திட்டமிட்டு
வருகின்றனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.
20 ஆண்டுகளாக
உயிருள்ள மூளைத் திசுவிலிருந்து நரம்பணுக்களை எடுத்து தொகுத்து
நரம்பிணைப்புகளை உருவாக்கி அதற்கிடையே தொடர்புபடுத்தப்படும் மின் மற்றும்
வேதிப்பண்புகளை அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
No comments:
Post a Comment