ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான கூட்டு யோசனை
அடுத்தாண்டு நடைபெறும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரின் போது, இலங்கைக்கு எதிராக கூட்டு யோசனை ஒன்றை கொண்டு வர கனடா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தீர்மானித்துள்ளன.
ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் அமெரிக்கா ஏற்கனவே இலங்கைக்கு எதிராக இரண்டு யோசனைகளை கொண்டு வந்துள்ளது.
இந்த நிலையில் மேற்படி மூன்று நாடுகள் இணைந்து கொண்டு வரும் யோசனை எதிர்வரும் மார்ச் மாதம் 21 ஆம் 23 ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட நாள் ஒன்றில் கொண்டு வரப்படவிருப்பதாக ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த யோசனையை கொண்டு வருவதற்காக பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையுடன் இணைந்து செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகிறது.
அதேவேளை இந்த யோசனைக்கு பின்னணியை உருவாக்கும் வகையில் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பான தமது எழுத்து மூலமான அறிக்கையை மார்ச் 20 ஆம் திகதி தாக்கல் செய்ய உள்ளார்.
அடுத்த வருடம் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் 14 புதிய அங்கத்துவ நாடுகள் இணையவுள்ளதுடன் இதில் பிரித்தானியாவும் அடங்குகிறது.
இலங்கைக்கு ஆதரவான சீனா, கியூபா, ரஷ்யா, சவூதி அரேபியா, வியட்நாம் ஆகிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இடம்பெறவிருப்பதால் இலங்கைக்கு எதிரான கூட்டு யோசனைக்கு இந்த நாடுகளின் தூதுவர்கள் பலத்த எதிர்ப்பை வெளியிடுவார்கள் என இலங்கை அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே கொண்டு வரப்பட உள்ள கூட்டு யோசனை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பிரித்தானியாவை சேர்ந்த 7 அமைப்புகள் பிரதமர் டேவிட் கமரூனை சந்திக்க உள்ளதாக தெரியவருகிறது.
இந்த கூட்டத்தொடர் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி தொடங்கி 23ம் திகதி நிறைவடையும்.
No comments:
Post a Comment