அமெரிக்க விசா மோசடி
அமெரிக்காவில் வேலைப்பார்க்கும் வெளிநாட்டவர்கள் மூன்றாண்டுகள் வரை தங்கும் வகையில் ‘எச்-1பி’ என்ற விசா விதிமுறைகளை அமெரிக்க அரசுஆண்டுதோறும் 65 ஆயிரம் பேருக்கு அளிக்கின்றது. பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக, வெளிநாடுகளில் இருந்து மலிவான ஊதியத்திற்கு அமெரிக்காவிற்குப் பணிபுரிய வருபவர்களை அந்நாட்டு அரசு தடுக்க முயன்று கொண்டிருக்கின்றது.
அதுமட்டுமின்றி வெளிநாட்டவர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் அளிக்கப்படும் ஊதிய விகிதங்கள் குறித்தும் ஒரு தீர்வினைக் காண அமெரிக்க அரசு முயற்சித்துக் கொண்டிருக்கின்றது. ‘எச்-1பி’ விசாவிற்கான செலவினங்கள் அதிகரித்து தற்போது இந்த முறையில் தங்களுடைய ஊழியர்களை அமெரிக்கா அனுப்பும் நிறுவனங்கள் ஒவ்வொரு விசாவிற்கும் 5,000 டாலர் வரை செலவு செய்யகூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அவ்வாறு அங்கு செல்லும் ஊழியர்கள் அமெரிக்கப் பண மதிப்பில் தங்களுடைய சம்பளத்தைப் பெறுவார்கள்.
அதேபோல் அரசு விதிக்கும் மத்திய, மாநில மற்றும் சமூகப் பாதுகாப்பு வரிகள் அவர்களுக்காக செலுத்தப்படல் வேண்டும். இவர்கள் பத்து ஆண்டுகளுக்குள் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பினால் அவர்கள் செலுத்திய பாதுகாப்பு வரிகள் சேமிப்பு அவர்களுடைய நிறுவனத்திற்குத் திரும்ப அளிக்கப்படமாட்டாது.
ஆயினும், இந்த முறையில் செல்லும் ஊழியர்கள் அங்கு நீண்ட வருடங்கள் தங்கி நிரந்தர குடியேற்ற அனுமதியைப் பெற்றுவிடுகின்றனர் என்பதால் அந்நாட்டு மக்களின் வேலை வாய்ப்பும் பாதிக்கப்படுகின்றது என்ற ஒரு கருத்து அங்கு உள்ளது.
இதற்குப் பதிலாக எளிதாகக் கிடைக்கும் ‘பி-1′ விசாவில் தங்களுடைய ஊழியர்களை அனுப்பும் நிறுவனங்களுக்கு வரி செலுத்தும் அவசியம் ஏற்படுவதில்லை. மேலும், இந்த விசாவினைப் பெறுவதற்கு அந்நிறுவனம் ஒவ்வொரு ஊழியருக்கும் 160 டாலர் செலவழித்தால் போதுமானது.
இந்த ஊழியர்களுக்கும் அவர்கள் நாட்டுப் பண மதிப்பிலேயே சம்பளம் அளிக்கப்படுவதால் அவர்கள் வரிவிலக்கும் பெறுகின்றார்கள்.ஆயினும், இத்தகைய விசா விதிமுறைகள் வணிகத் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் கருத்தரங்குகளில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு மட்டுமே குறுகிய கால விசாவாக வழங்கப்பட்டு வருகின்றது.
குறுகிய கால விசா அனுமதியான ‘பி-1′ விசாவில் இந்தியாவின் இன்போசிஸ் நிறுவனம் தனது ஊழியர்களை அமெரிக்காவிற்கு அனுப்பியதாகக் கூறப்படுகின்றது. இந்த நிறுவனத்தின் அமெரிக்க கிளையில் பணிபுரிந்த முன்னாள் அமெரிக்க மேலாளர் ஒருவரால் இந்தத் தகவல் வெளிவந்துள்ளது.
முறையான ‘எச்-1பி’ விசாவிற்குப் பதிலாக எளிதான பி-1 விசாவைப் பயன்படுத்தி ஊழியர்களை அனுப்பி வரி மோசடி செய்ததாக இன்போசிஸ் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்கான அபராதத் தொகையாக இன்போசிஸ் நிறுவனம் 35 மில்லியன் டாலர் செலுத்த வேண்டும் என்ற தீர்ப்பு கிழக்கு டெக்சாஸ் அட்டர்னி அலுவலகத்தில் இருந்து இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்க வரலாற்றிலேயே இத்தகைய விதிமுறை மோசடியில் செலுத்தப்படும் மிகப்பெரிய அபராதத் தொகை இதுவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment