செய்திகள் - 22.11.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. நாம் ஆலயத்துக்குச் செல்வது இறைவனைத் தொழுவதற்காகவே : திருத்தந்தை பிரான்சிஸ்
2. திருத்தந்தை பிரான்சிஸ்:ரக்பி கால்பந்து விளையாட்டு நம் வாழ்வு பற்றிச் சிந்திப்பதற்கு அழைக்கிறது
3. திருத்தந்தை பிரான்சிஸ், போஸ்னிய-எர்செகொவினா பிரதமர் சந்திப்பு
4. திருத்தந்தை பிரான்சிஸ் : இறையன்பில் நம்பிக்கை வைப்பவர்களுக்கே இறையாட்சி உரித்தாகும்
5. திருத்தந்தை பிரான்சிஸ் பிலிப்பீன்ஸ் சமூகத்திடம் : குழந்தையின் எளிமையில் செபிக்க வேண்டுகோள்
6. கிறிஸ்தவப் பற்றுறுதி இறைவனின் மறைபொருளான திட்டத்தில் நம்பிக்கை கொண்டுள்ளது, திருத்தந்தை பிரான்சிஸ்
7. திருஅவையின் சமூகக் கோட்பாட்டு விழாவுக்கு திருத்தந்தையின் காணொளிச் செய்தி
8. இலங்கையில் நம்பிக்கை ஆண்டுக்குப் பின்னர் மரியா ஆண்டு
9. உலகின் வெப்பநிலை மாற்றம் முன்வைக்கும் அறநெறி சார்ந்த பிரச்சனைகள் களையப்பட அழைப்பு, பேராயர் மிலியோரே
10. உலக மெய்யியல் நாள், நவம்பர் 21
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. நாம் ஆலயத்துக்குச் செல்வது இறைவனைத் தொழுவதற்காகவே : திருத்தந்தை பிரான்சிஸ்
நவ.22,2013. செபிக்கவும், இறைவனைப் புகழவும் அவருக்கு நன்றி கூறவும் நாம் செல்லும் ஒரு புனிதமான இடம் ஆலயம், அங்கு கொண்டாட்டங்களைவிட இறைவனை வழிபடுவதே மிக முக்கியம் என்று, இவ்வெள்ளிக்கிழமை
காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய
திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எருசலேமில்
போரினால் அழிக்கப்பட்ட பழமையான ஆலயத்தை யூதாவும் அவருடைய சகோதரர்களும்
மீண்டும் தூய்மைப்படுத்தியது பற்றிக் கூறும் இந்நாளைய முதல் வாசகத்தை
மையமாக வைத்து மறையுரையில் விளக்கிய திருத்தந்தை, இறைமக்கள் சமுதாயம் முழுவதற்கும் ஆலயம் மைய இடமாக உள்ளது எனத் தெரிவித்தார்.
நம் வழிபாடுகளில் இடம்பெறும் இசை, அழகு, வழிபாட்டுமுறைகள்... இவையனைத்தையும்விட,
பலிபீடத்தைச் சுற்றிக் கூடியுள்ள சமூகத்தின் முழுக்கவனமெல்லாம் இறைவனை
வழிபடுவதிலேயே இருக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், அன்று ஆலயத்தில் வணிகம் செய்தவர்களை இயேசு விரட்டியடித்ததைச் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஒவ்வொரு தனிமனிதரின் அகவாழ்வை ஆலயமாகப் பேசிய திருத்தந்தை, அங்கே நம் அன்றாட வாழ்வில் இறைவனை வழிபட்டு அவரின் கட்டளைகளைப் பின்தொடர முயற்சிக்கிறோம் என்றும் உரைத்தார்.
தூய ஆவியின் ஆலயமாக விளங்கும் மனிதர், இறைவன் தனக்குள் பேசுவதை உற்றுக்கேட்டு, அவரிடம் மன்னிப்புக் கேட்டு அவரைப் பின்தொடர வேண்டும் என்றும் இத்திருப்பலியில் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நாம் எல்லாரும் பாவிகள் என்பதால், இறைவனின் வார்த்தையைப் பின்செல்வதற்கு, ஒப்புரவு அருள்சாதனம், திருநற்கருணை திருவருள்சாதனங்கள், மனம்வருந்துதல் போன்றவை மூலம் தூய்மைப்படுத்துதல் தொடர்ச்சியாக இடம்பெற வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ்:ரக்பி கால்பந்து விளையாட்டு நம் வாழ்வு பற்றிச் சிந்திப்பதற்கு அழைக்கிறது
நவ.22,2013. ஓர் இலக்கை நோக்கி விளையாடப்படும் ரக்பி கால்பந்து விளையாட்டு, நம் வாழ்வு பற்றிச் சிந்திப்பதற்கு அழைக்கிறது, ஏனெனில் நமது வாழ்வு முழுவதும் ஓர் இலக்கை நோக்கியேச் செல்கின்றது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆயினும், இதற்கு கடும் உழைப்பு தேவைப்படுகின்றது, இந்த இலக்கைத் தனியாக அடைவதில்லை, பந்தானது ஒவ்வொருவர் கையிலும் சென்று இறுதி இலக்கை அடைவது போன்று, இந்த இலக்கை எட்டுவதற்குச் சேர்ந்து ஓடவேண்டியிருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலி மற்றும் அர்ஜென்டீனாவின் தேசிய கால்பந்து அணிகள், ரக்பி கால்பந்து விளையாட்டை இச்சனிக்கிழமையன்று உரோம் ஒலிம்பிக் அரங்கத்தில் விளையாடவிருப்பதை முன்னிட்டு, இவ்வெள்ளியன்று தன்னை திருப்பீடத்தில் சந்தித்த இவ்விரு குழுவினரிடமும் இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ரக்பி கால்பந்து விளையாட்டுக்குத் தேவைப்படும் மனஉறுதி, நேர்மை, குழு உணர்வு ஆகிய பண்புகளை இவ்விளையாட்டு வீரர்கள் தங்கள் சொந்த வாழ்வில் கொண்டிருக்குமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இது கடினமான விளையாட்டாக இருந்தாலும், மிகவும் அழகானது என்றும் கூறினார்.
ரக்பி கால்பந்து விளையாட்டில் உடல்ரீதியாக மோதல்கள் இருந்தாலும், வன்முறை இல்லை, மாறாக, மிகுந்த நேர்மையும் பிறரை மதித்தலும் உள்ளன என்றும் உரையாற்றிய திருத்தந்தை, இது, குணநலன்களை உருவாக்கவும், மனஉறுதியை வலுப்படுத்தவும் உதவுகின்றது என்றும் கூறினார்.
மேலும், இவ்வுரைக்கு முன்னர், அனைத்துலக கால்பந்து விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் Joseph S. Blatterயும் திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை பிரான்சிஸ், போஸ்னிய-எர்செகொவினா பிரதமர் சந்திப்பு
நவ.22,2013. போஸ்னிய-எர்செகொவினா குடியரசின் பிரதமர் Viekoslav Bevada, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை ஏறக்குறைய 25 நிமிடங்கள் இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் பேராயர் பியத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் பிரதமர் Bevada.
போஸ்னியாவின் தற்போதைய நிலை, தற்போதைய பொருளாதார நெருக்கடியால் அந்நாடு எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காண்பது, அனைத்துக்
குடிமக்களின் மனித உரிமைகள் மதிக்கப்படல் உட்பட பல விவகாரங்கள்
இச்சந்திப்பில் இடம்பெற்றன என திருப்பீட பத்திரிகை அலுவலகம் கூறியது.
திருப்பீடத்துக்கும், போஸ்னியாவுக்கும் இடையே 2006ம் ஆண்டில் இடம்பெற்ற ஒப்பந்தம் நன்முறையில் நடைமுறையில் இருப்பது குறித்த திருப்தியும் இச்சந்திப்பில்
தெரிவிக்கப்பட்டதென, அப்பத்திரிகை அலுவலகம் மேலும் கூறியது
இரு மகளிர் உட்பட எட்டுப் பேர் அடங்கிய குழுவுடன் திருப்பீடம் சென்றிருந்த போஸ்னியப் பிரதமர் Bevada, சிரில் என போஸ்னிய மொழியில் பொறிக்கப்பட்ட 1400ம் ஆண்டின் பழமைவாய்ந்த கல் ஒன்றை திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார்.
போஸ்னிய-எர்செகொவினா,
பால்கன் தீபகற்பத்தில் தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள குடியரசாகும். இது
சில சமயங்களில் போஸ்னியா என்றும் அழைக்கப்படுகிறது. இக்குடியரசு, 1992ம் ஆண்டு மார்ச் முதல் தேதியன்று, முன்னாள் யூக்கோஸ்லாவியாவிலிருந்து பிரிவதாக அறிவித்தது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. திருத்தந்தை பிரான்சிஸ் : இறையன்பில் நம்பிக்கை வைப்பவர்களுக்கே இறையாட்சி உரித்தாகும்
நவ.22,2013. உலகப் பொருள்களில் நம்பிக்கை வைப்பவர்களுக்கு அல்ல, ஆனால், இறையன்பில் நம்பிக்கை வைப்பவர்களுக்கே இறையாட்சி உரித்தாகும் என இவ்வெள்ளிக்கிழமையன்று, தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கத்தைப் பார்வையிடும் ஒரு கோடிப் பேரில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில், குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் பிலிப்பீன்ஸ் நாட்டவர் என, திருப்பீட சமூகத்தொடர்புத் துறையின் செயலர் பேரருள்திரு Paul Tighe கூறினார்.
சமய
சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நாடுகளில் பணிசெய்யும் பிலிப்பீன்ஸ்
நாட்டவர் தங்கள் விசுவாசத்தை வாழ்வதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்
டுவிட்டர் முக்கியமான கருவியாக இருப்பதாக, மனிலாவில் இவ்வியாழனன்று நிருபர்களிடம் கூறினார் பேரருள்திரு Tighe.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் @Pontifex டுவிட்டர் பக்கத்தை நிர்வகிக்கும் குழுவில் பேரருள்திரு Paul Tigheம் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது டுவிட்டர் செய்தியை இஸ்பானியம் அல்லது இத்தாலியத்தில் எழுதுகிறார், பிற மொழிகளில் இக்குழு மொழி பெயர்த்து வெளியிடுகின்றது என்றும் பேரருள்திரு Paul Tighe தெரிவித்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. திருத்தந்தை பிரான்சிஸ் பிலிப்பீன்ஸ் சமூகத்திடம் : குழந்தையின் எளிமையில் செபிக்க வேண்டுகோள்
நவ.22,2013. ஹையான் புயலின் கடும் பாதிப்பை எதிர்கொண்டிருக்கும் பிலிப்பீன்ஸ் மக்களின் செபம், குழந்தையின் செபம் போன்று இருந்தாலும்கூட, அவர்கள் சோர்வுறாமல் தொடர்ந்து செபிக்குமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம்வாழ் பிலிப்பீன்ஸ் மக்களை, மனிலா கர்தினால் லூயிஸ் அந்தோணியோ தாக்லே தலைமையில், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் இவ்வியாழன் மாலை சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், அண்மையில் அந்நாடு எதிர்கொண்ட ஹையான் கடும் புயல் பற்றியும் குறிப்பிட்டார்.
நாம் புரிந்துகொள்ள இயலாத பல காரியங்கள் உள்ளன, சிறார் வளரத் தொடங்கும்போது பல காரியங்களை அவர்கள் புரிந்துகொள்வதில்லை, அதனால் அவர்கள் தங்கள் பெற்றோரிடம் அடுத்தடுத்து கேள்வி கேட்கின்றனர், அவர்கள் பதிலுக்காகக் காத்திருப்பதில்லை என்றுரைத்த திருத்தந்தை, இறைவனின் குழந்தைகளாகிய நாம், ஏன் என்ற செபத்தை, சிறப்பாக, துன்ப நேரங்களில் இச்செபத்தைச் செபிக்க வேண்டும் எனக் கூறினார்.
பிலிப்பீன்ஸ் புனிதராகிய Pedro Calungsodவின்
திருவுருவத்தை வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் வைப்பதற்கென
இடம்பெற்ற நிகழ்வில் அந்நாட்டினைரச் சந்தித்து இவ்வாறு உரையாற்றினார்
திருத்தந்தை.
திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட மொசேய்க் வேலைப்பாடு நிறைந்த
இப்புனிதரின் திருவுருவம் வத்திக்கான் பசிலிக்காவுக்குக்கீழ், திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களின் கல்லறைக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.
புனித பேதுரு மொசேய்க் தொழிற்சாலையால் ஏறக்குறைய 600 விதமான கற்கள், அமைப்புகள் மற்றும் வண்ணங்களால் இத்திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. கிறிஸ்தவப் பற்றுறுதி இறைவனின் மறைபொருளான திட்டத்தில் நம்பிக்கை கொண்டுள்ளது, திருத்தந்தை பிரான்சிஸ்
நவ.22,2013. இறைவனின் மறைபொருளான திட்டம், மனிதரின் கனவுகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் எதிராக இருப்பதுபோல் சில வேளைகளில் தெரிந்தாலும், கிறிஸ்தவப் பற்றுறுதி, “இறைவனின் நாளைய தினத்தில்” நம்பிக்கை கொண்டுள்ளது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறைவனின் வாக்குறுதியில் உண்மை இல்லை, நான் ஏமாற்றப்பட்டுவிட்டேன் என்று அன்னை மரியா, சிலுவையில் தனது மகன் இறந்தநிலையில் நினைத்திருக்கலாம், ஆனால் அன்னை மரியா அப்படி நினைக்கவில்லை என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், நம்பியதால் நற்பேறுபெற்றிருந்த அன்னை மரியா, புதிய எதிர்காலம் மலருவதை தமது விசுவாசத்தால் பார்த்தார் எனவும், இறைவனின் நாளைய தினத்துக்காகக் நம்பிக்கையோடு காத்திருந்தார் எனவும் கூறினார்.
அன்னை
மரியா ஆலயத்தில் நேர்ந்தளிக்கப்பட்ட விழாவான இவ்வியாழன் மாலையில் உரோம்
அவென்ட்டைன் குன்றிலுள்ள புனித வனத்து அந்தோணியார் தியான யோக துறவு இல்லம்
சென்று, அங்கிருந்த 21 அருள்சகோதரிகளுடன் திருநற்கருணை ஆராதனையில் பங்குகொண்டபோது இவ்வாறு உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம்பிக்கையின் தாயாகிய அன்னை மரியா, தம் வாழ்வில் வியப்புகளையும் இன்னல்களையும், இறைவனின் திட்டத்தில் தடுமாற்றமில்லாத நம்பிக்கையுடன் எதிர்கொண்டார் எனவும் கூறினார் திருத்தந்தை.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. திருஅவையின் சமூகக் கோட்பாட்டு விழாவுக்கு திருத்தந்தையின் காணொளிச் செய்தி
நவ.22,2013.
திருஅவையின் சமூகக் கோட்பாடு குறித்த தேசிய விழாவுக்கு ஒலி-ஒளிச் செய்தி
ஒன்றை இவ்வியாழன் இரவு வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியின் வெரோனா நகரில் இடம்பெறும் திருஅவையின் சமூகக் கோட்பாடு குறித்த 3வது தேசிய விழாவுக்குத் திருத்தந்தை வழங்கிய செய்தியில், பொருளாதார
வளர்ச்சிக்கு முதியோரும் இளையோரும் நேரடியாகத் தங்கள் பங்களிப்பை
வழங்காவிட்டாலும் சமூகத்தின் நல்வாழ்வுக்கு இவர்களே மையமாக உள்ளனர்
என்று தான் நம்புவதாகக் கூறியுள்ளார்.
சில நாடுகளில் இளையோர்வேலைவாய்ப்பின்மை 40 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளதாகவும், இளையோரின் சக்தியையும், முதியோரின்
ஞானத்தையும் மதிக்கும் வழிகளை நாம் கண்டறியாவிட்டால் வருங்கால சமுதாயம்
ஆபத்தை எதிர்நோக்கும் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வேலைவாய்ப்பு இல்லாதவர்கள், நலிந்தவர்கள் போன்றோடு ஒருமைப்பாட்டுணர்வு கொள்வது, இலாபத்தை மையமாகக்கொண்ட இவ்வுலகின் சூளுரையாக அமைய வேண்டுமென்றும், இந்த ஒருமைப்பாட்டுணர்வு, திருஅவையின் சமூகப் போதனைகளின் மையம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
குறைந்த சமத்துவமின்மை, அதிகப் புறக்கணிப்பு என்ற தலைப்பில் இவ்வியாழனன்று தொடங்கியுள்ள இந்த விழா வருகிற ஞாயிறன்று நிறைவடையும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
8. இலங்கையில் நம்பிக்கை ஆண்டுக்குப் பின்னர் மரியா ஆண்டு
நவ.22,2013. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் அறிவிக்கப்பட்ட நம்பிக்கை ஆண்டு இம்மாதம் 24ம் தேதி நிறைவடையும்வேளை, இம்மாதம் 30ம் தேதி மரியா ஆண்டு தொடங்கும் என, கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் தனது உயர்மறைமாவட்ட விசுவாசிகளுக்கு அறிவித்துள்ளார்.
மரியா ஆண்டு தொடங்குவது குறித்து மேயப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள கர்தினால் இரஞ்சித், நம் விசுவாசத்தை எப்படி வாழ்வது என்பதற்கு அன்னை மரியா சிறந்த எடுத்துக்காட்டாய் இருக்கிறார் என்றும், மரியா ஆண்டு, நம்பிக்கை ஆண்டின் இயல்பான தொடர்ச்சி என்றும் சொல்லியுள்ளார்.
இந்த மரியா ஆண்டின் ஒரு கட்டமாக, வருகிற
ஆண்டு மே 14 முதல் 17 வரை இடம்பெறும் மடு திருத்தலத் திருப்பயணத்தில்
இலங்கை கத்தோலிக்கர் அனைவரும் கலந்து கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்
கர்தினால் இரஞ்சித்.
தனியாட்கள் மற்றும் குடும்பங்கள் மத்தியில் செபம், சிறப்பாக, செபமாலை
பக்தி முயற்சி மற்றும் மனிதர்மீது இறைவன் கொண்டுள்ள அன்பின் மறையுண்மை
குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே மரியா ஆண்டின் நோக்கம் எனவும்
கர்தினால் இரஞ்சித் தனது அறிக்கையில் விளக்கியுள்ளார்.
ஆதாரம் : AsiaNews
9. உலகின் வெப்பநிலை மாற்றம் முன்வைக்கும் அறநெறி சார்ந்த பிரச்சனைகள் களையப்பட அழைப்பு, பேராயர் மிலியோரே
நவ.22,2013.
உலகின் வெப்பநிலை மாற்றம் முன்வைக்கும் அறநெறி சார்ந்த பிரச்சனைகள்
களையப்பட நடவடிக்கை எடுக்கப்படுமாறு அழைப்புவிடுத்துள்ளார் திருப்பீட
உயர்மட்ட அதிகாரி ஒருவர்.
போலந்து
நாட்டுத் தலைநகர் வார்சாவில் வெப்பநிலை மாற்றம் குறித்து ஐ.நா. உலக
மாநாட்டை நடத்திய அதேநேரம் திருஅவை நடத்திய கருத்தரங்கில் பேசிய பேராயர்
செலஸ்தினோ மிலியோரே, வெப்பநிலை மாற்றம் குறித்த விவகாரத்தில் மனசாட்சியையும், ஒழுக்கநெறிக்கூறுகளையும் நெறிப்படுப்படுத்த வத்திக்கான் உதவும் எனத் தெரிவித்தார்.
வார்சாவில்
இம்மாதம் 11ம் தேதி தொடங்கிய வெப்பநிலை மாற்றம் குறித்த உலக மாநாடு
இவ்வெள்ளியன்று நிறைவடைந்தது. கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றத்தை 2020ம்
ஆண்டுக்குள் 18 விழுக்காடாகக் குறைப்பதற்கு இவ்வுலக மாநாட்டில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது. இதில் 190க்கும் மேற்பட்ட அரசுகளின் பிரதிநிதிகள்
கலந்து கொண்டனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
10. உலக மெய்யியல் நாள், நவம்பர் 21
நவ.22,2013.
நமக்கிடையே காணப்படும் சவால்களுக்குப் பொதுவான தீர்வுகளைக்
கண்டுகொள்வதற்கு உதவும் வகையில் அனைத்துலக சமுதாயம் பகுத்தறிவு வாதங்களை
மேற்கொள்ள வேண்டுமென உலக மெய்யியல் நாளுக்கான செய்தியில் யுனெஸ்கோ நிறுவனம்
அழைப்புவிடுத்துள்ளது.
உலக மெய்யியல் நாள், நவம்பர் 21, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்டுள்ள யுனெஸ்கோ நிறுவனம், அனைத்து அறிவாளிகளும் தர்க்கரீதியான சிந்தனைகளின் வல்லமையை வெளிப்படுத்துமாறு கேட்டுள்ளது.
சமூகத்தில் அனைவரையும் ஏற்றுக்கொள்ளவும், வாழ்வாதாரங்களை வழங்கவுமான சூழல்கள் குறித்து மீண்டும் நம் சிந்திக்க வேண்டுமென அழைப்புவிடுக்கும் யுனெஸ்கோ நிறுவனம், மனித மாண்பு மற்றும் இணக்கவாழ்வில் மெய்யியலின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளது.
அனைத்தையும் உள்ளடக்கிய சமூகங்கள், ஆதாரமுடைய பூமிகோள் என்பது இவ்வாண்டின் உலக மெய்யியல் நாளின் தலைப்பாகும்.
ஆதாரம் : UN
No comments:
Post a Comment