1. திருத்தந்தை - கடுமையான உழைப்பை மனிதர்கள் மீது சுமத்தும் சமுதாயம் நீதியான சமுதாயம் அல்ல
2. மேதினத்தையொட்டி இந்திய ஆயர்கள் பேரவை வெளியிட்டுள்ள செய்தி
3. அகில உலக உழைப்பாளர் நாளையொட்டி இஸ்பானிய ஆயர் பேரவை வெளியிட்டுள்ள செய்தி
4. பாரக் ஒபாமா வெளியிட்டுள்ள 'பட்ஜெட்'டைக் குறித்து, அமெரிக்க ஆயர்களின் கருத்துக்கள்
5. வன்முறையைக் கையாண்டுள்ள புத்த மத குழுவுக்கு எதிராக, இலங்கையில் பல்சமய ஊர்வலம்
6. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முக உருவம் பதிந்த நான்கு தபால் தலைகள் வெளியீடு
7. கிழக்கு திமோர் நாட்டில் சிறையில் இருப்போர் மத்தியில் பணியாற்றும் இயேசு சபையினருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் பெரும் உந்துதல்
8. புகை பிடிப்பவர்கள் மத்தியில், ஆண்களைக் காட்டிலும், பெண்களுக்கு புற்றுநோய் உண்டாகும் ஆபத்து அதிகம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை - கடுமையான உழைப்பை மனிதர்கள் மீது சுமத்தும் சமுதாயம் நீதியான சமுதாயம் அல்ல
மே,01,2013. உழைப்பே மனிதர்களுக்கு உண்மையான மாண்பைத் தரும், அதிகாரமோ, பணமோ இந்த மாண்பைத் தராது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
உழைப்பாளரான புனித யோசேப்பு திருநாளான மேமாதம் முதல் தேதியன்று பிறரன்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் "பாலம்" என்ற குழுவினருக்கு, புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலியாற்றியத் திருத்தந்தை, உழைப்பின் உயர்வு குறித்தும், உழைப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் மறையுரையாற்றினார்.
இப்புதன்
திருப்பலியில் வாசிக்கப்பட்ட தொடக்க நூல் மற்றும் மத்தேயு நற்செய்தி
பகுதிகளின் அடிப்படையில் தன் கருத்துக்களைப் பகிர்ந்த திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், படைப்பை உருவாக்க இறைவனும் உழைத்தார் என்பதை எடுத்துரைத்தார்.
அண்மையில் பங்களாதேஷில் இடம்பெற்ற கட்டிட இடிபாட்டில் இறந்தோரைக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, அத்தொழிலாளிகள் பெற்றுவந்த ஒரு மாத ஊதியம் 38 யூரோவுக்கும் குறைவு என்பதை அறிந்து தான் வேதனை அடைந்ததாகவும், இதுவே இன்றைய உலகில் அடிமைத்தனம் என்றும் குறிப்பிட்டார்.
உழைக்கும் தொழிலாளிகளைக் காட்டிலும், அவர்கள் உருவாக்கும் பொருள்கள் அதிக மதிப்பு பெறுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனிதர்கள் அனைவருக்கும் வேலை கொடுக்காமல் இருக்கும் சமுதாயமும், கடுமையான உழைப்பை மனிதர்கள் மீது சுமத்தும் சமுதாயமும் நீதியான சமுதாயம் அல்ல என்பதை வலியுறுத்திக் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. மேதினத்தையொட்டி இந்திய ஆயர்கள் பேரவை வெளியிட்டுள்ள செய்தி
மே,01,2013. இந்தியாவில் உள்ள கத்தோலிக்க நிறுவனங்கள், மற்றும் மறைமாவட்டங்கள் அனைத்தும், நீதியான ஊதியம் வழங்குவதிலும், முறைசாரா உழைப்பாளிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய ஆயர்கள் பேரவை விண்ணப்பித்துள்ளது.
இப்புதனன்று கொண்டாடப்படும் மேதினத்தையொட்டி செய்தி வெளியிட்டுள்ள இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் உழைப்பாளர் பணிக்குழு, உழைப்பாளர்களின் சமுதாயப் பாதுகாப்பில் அதிகம் கவனம் தேவை என்பதை வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் வேலை தேடி வெவ்வேறு மாநிலங்களிலிருந்து வரும் உழைப்பாளிகளின் தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவு செய்வதற்கு, ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் ஒரு தனிப்பட்ட பணிக்குழு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்ற அழைப்பும் இச்செய்தில் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில்
இன்னும் பரவலாகக் காணப்படும் குழந்தை உழைப்பாளர் பிரச்சனையைத் தீர்க்க
இந்தியத் தலத் திருஅவை தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய
கத்தோலிக்க ஆயர் பேரவையின் உழைப்பாளர் பணிக்குழுவின் செயலர் அருள்பணி Jaison Vadassery, UCAN செய்தியிடம் கூறினார்.
ஆதாரம் : UCAN
3. அகில உலக உழைப்பாளர் நாளையொட்டி இஸ்பானிய ஆயர் பேரவை வெளியிட்டுள்ள செய்தி
மே,01,2013. முழு ஈடுபாட்டுடனும், திறமையுடனும் செயலாற்றி, தங்கள் நேர்மையான உழைப்பாலும், வியர்வையாலும்
தங்கள் குடும்பங்களைக் காத்து வரும் அனைத்து உழைப்பாளிகளுக்கும் தங்கள்
மரியாதையை செலுத்துவதாக இஸ்பானிய ஆயர்கள் கூறியுள்ளனர்.
இப்புதனன்று கொண்டாடப்படும் அகில உலக உழைப்பாளர் நாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள இஸ்பானிய ஆயர் பேரவை, முத்திப்பேறு
பெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் ஸ்பெயின் நாட்டுக்கு வருகை தந்தை
25ம் ஆண்டு நினைவையும் குறித்து தன் மகிழ்வை வெளியிட்டுள்ளது.
தொழில் நிறுவனங்கள் நாளுக்கு நாள் உறுதிவாய்ந்த அமைப்புக்களாக மாறிவரும் சூழலில், அனைத்து உழைப்பாளிகளுக்கும் தகுந்த மதிப்பு, உழைப்பிற்கேற்ற ஊதியம் ஆகிய அடிப்படை உரிமைகளை நிலைநிறுத்த வேண்டும் என்ற அழைப்பையும் இஸ்பானிய ஆயர்கள் விடுத்துள்ளனர்.
தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் சமுதாய மேம்பாட்டை மனதில் கொள்ள வேண்டும் என்றும், உரிமைகளுக்காகப்
போராடும் உழைப்பாளிகள் அனைத்து மக்களின் நலன்களை மனதில் கொண்டு
போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆயர்கள் தங்கள் செய்தியில்
எடுத்துரைத்துள்ளனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. பாரக் ஒபாமா வெளியிட்டுள்ள 'பட்ஜெட்'டைக் குறித்து, அமெரிக்க ஆயர்களின் கருத்துக்கள்
மே,01,2013. பசியுற்றோர், வேலையற்றோர், வீடற்றோர், வறியோர் எவ்வகையில் பயன் பெறுகின்றனர் என்பதன் அடிப்படையில் நாட்டின் 'பட்ஜெட்' அதாவது நாட்டின் வரவு செலவு திட்டத்தின் வெற்றியும் தோல்வியும் அளக்கப்படும் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர்.
3.77 ட்ரில்லியன் டாலர்கள் அதாவது 37700 கோடி டாலர்கள் மதிப்புள்ள 'பட்ஜெட்'டை 2014ம் ஆண்டுக்கென அமெரிக்க அரசுத் தலைவர் பாரக் ஒபாமா வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்த பட்ஜெட்'டைக் குறித்து, அமெரிக்க ஆயர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டபோது, இவ்வாறு கூறினர்.
எவ்வகையிலும் தங்கள் குரல்களை எழுப்ப முடியாமல், வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ள மக்களின் தேவைகளை அரசு உணரும்போதே, இந்த 'பட்ஜெட்' மனசாட்சியுடன் திட்டமிடப்பட்டுள்ளது என்பதை உணரலாம் என்று அமெரிக்க ஆயர் பேரவையின் நீதி, மனித முன்னேற்றப் பணிக்குழுவின் தலைவர் ஆயர் Stephen Blaire, CNA செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
பொருளாதாரச்
சரிவிலிருந்து இன்னும் முழுமையாக மீள முடியாமல் தவிக்கும் உலகில் அனைவரும்
மேற்கொள்ளக்கூடிய தியாகங்களின் அடிப்படையில்தான் நீதியான சமுதாயம் உருவாக
முடியும் என்பதே அமெரிக்க ஆயர்களின் கருத்தாக அமைந்துள்ளது.
ஆதாரம் : CNA
5. வன்முறையைக் கையாண்டுள்ள புத்த மத குழுவுக்கு எதிராக, இலங்கையில் பல்சமய ஊர்வலம்
மே,01,2013. அடிப்படைவாத எண்ணங்களுடன் வன்முறையைக் கையாண்டுள்ள ஒரு புத்த மத குழுவின் செயல்பாடுகளை எதிர்த்து, இலங்கையின் தலைநகர் கொழும்புவில் இச்செவ்வாயன்று பல்சமய ஊர்வலம் நடைபெற்றது.
'புத்த அதிகாரத்தின் சக்தி' என்று பொருள்படும் "Bodu Bala Sana" என்ற புத்த மதக் குழு, வன்முறை வழியாக தங்கள் கொள்கைகளை நிலைநாட்ட முயல்வது வேதனையைத் தருகிறது என்று தென் இலங்கையின் Galle ஆயர் Raymond Wickramasinghe கூறினார்.
இஸ்லாமியர்கள் மத்தியில் உருவாகியுள்ள 'தாலிபான்' குழுக்களைப் போல "Bodu Bala Sana" குழு செயல்படுவதால், ஊடகங்கள் இக்குழுவினரை 'புத்த தாலிபான்கள்' என்று குறிப்பிட்டுள்ளன.
இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக வன்முறைகளை மேற்கொண்டுள்ள இக்குழுவின் செயல்பாடுகளைக் கண்டித்து, ஆயிரக்கணக்கான புத்தர்கள், கத்தோலிக்கர்கள், இஸ்லாமியர் இணைந்து கொழும்புவில் கண்டன ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
ஆதாரம் : AsiaNews / Fides
6. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முக உருவம் பதிந்த நான்கு தபால் தலைகள் வெளியீடு
மே,01,2013. கத்தோலிக்கத் திருஅவையின் புதியத் தலைவராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பணியேற்றதையொட்டி வத்திக்கான் நகர அரசும், அர்ஜென்டீனா நாடும் இணைந்து புதிய தபால் தலைகளை வெளியிட்டுள்ளன.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முக உருவம் பதிந்த நான்கு தபால் தலைகளின் சிறப்புப் பதிவு ஒன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, இச்செவ்வாய் பிற்பகல் அளிக்கப்பட்டது.
நான்கு வெவ்வேறு விலை மதிப்புள்ள 2,50,000 தபால் தலைகள் இந்த வரிசையில் வெளியிடப்பட்டுள்ளன.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உருவம் பதிந்த தபால் தலைகள், நாணயங்கள், அடங்கிய ஒரு வெளியீடு விரைவில் வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : VIS
7. கிழக்கு திமோர் நாட்டில் சிறையில் இருப்போர் மத்தியில் பணியாற்றும் இயேசு சபையினருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் பெரும் உந்துதல்
மே,01,2013. புனித வியாழன் மாலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வளர் இளம் கைதிகள் இல்லத்தில் திருப்பலியை நிகழ்த்தியது, சிறையில் இருப்போர் மத்தியில் தாங்கள் மேற்கொண்டுள்ள பணிக்கு பெரும் உந்துதலாக அமைந்தது என்று இயேசு சபை அருள் பணியாளர் Noel Oliver கூறினார்.
கிழக்கு திமோர் நாட்டில் சிறையில் இருப்போர் மத்தியில் பணியாற்றும் இயேசு சபையினர், தங்கள் பணியைக் குறித்தும், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிறன்று அங்கு தாங்கள் நிறைவேற்றும் திருப்பலியைக் குறித்தும், Fides செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளனர்.
சிறையில் நடைபெறும் திருப்பலியில் இளையோர் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடுவதையும், ஒப்புரவு அருட்சாதனத்திலும், நற்கருணைப் பந்தியிலும் அவர்கள் பங்கேற்பது தங்கள் பணிக்கு பெரும் ஆறுதலாக உள்ளதென்றும் அருள் பணியாளர் Oliver கூறினார்.
கிழக்கு திமோர் நாட்டின் மக்கள் தொகையில் 75 விழுக்காட்டினர் 30 வயதுக்கும் குறைந்த இளையோர் என்பதால், அங்குள்ள சிறைகளில் உள்ளோரில் அதிகமானோர் இளையோர் என்று கூறப்பட்டுள்ளது.
ஆதாரம் : Fides
8. புகை பிடிப்பவர்கள் மத்தியில், ஆண்களைக் காட்டிலும், பெண்களுக்கு புற்றுநோய் உண்டாகும் ஆபத்து அதிகம்
மே,01,2013. புகை பிடிப்பவர்கள் மத்தியில், ஆண்களைக் காட்டிலும், பெண்களுக்கு புற்றுநோய் உண்டாகும் ஆபத்து அதிகம் உள்ளதென்று, நார்வே நாட்டு அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
நோயுற்றோர் 600000 பேரின் மருத்துவப் பதிவுகளை ஆய்வு செய்தபோது, 9 விழுக்காடு ஆண்களுக்கும், 19 விழுக்காடு பெண்களுக்கும் புற்றுநோய் உருவாகும் ஆபத்து உள்ளதென்று கணிக்கப்பட்டுள்ளது.
Cancer Epidemiology என்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில், 16 அல்லது அதற்கும் குறைந்த வயதிலிருந்து புகைபிடிக்கும் பெண்களுக்கு புற்றுநோய் உருவாகும் ஆபத்து அதிகம் உள்ளதென்று தெரிகிறது.
ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் இளையோர் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து, உடலியல் ரீதியாக, பெண்கள் புகையிலையின் தாக்கங்களுக்கு எளிதில் பலியாகின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment