Friday, 30 November 2012

Catholic News in Tamil - 29/11/12


1. சுதந்தரத்தின் நூறாவது ஆண்டைச் சிறப்பிக்கும் அல்பேனியா குடியரசுக்குத் திருத்தந்தையின் வாழ்த்துக்கள்

2. புலம்பெயரும் மக்கள் நம்பிக்கையை எதிர்நோக்கியே பயணம் செய்கின்றனர் - கர்தினால் Veglio

3. கத்தோலிக்க நலப்பணி அறக்கட்டளையின் நூற்றாண்டு விழா

4. இந்தியாவில் கத்தோலிக்க நலப்பணிகளால் 2 கோடியே 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயன்பெறுகின்றனர்

5. 2012ம் ஆண்டில் அமெரிக்க ஆயர்கள் பேரவை செய்துள்ள 28,05,442 டாலர்கள் நிதி உதவிகள்

6. மத்திய அமெரிக்கப் பகுதிகளில் நிறுவப்பட்ட முதல் மறைமாவட்டத்தின் ஐந்தாவது நூற்றாண்டு விழா

7. இஸ்ரேல் நாட்டுக்கு அமெரிக்க அரசு வழங்கும் நிபந்தனையற்ற ஆதரவுக்கு கிறிஸ்தவ, யூத அமைப்புக்கள் கண்டனம்

8. சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம்:வருமான வரித்துறை புது முடிவு

------------------------------------------------------------------------------------------------------

1. சுதந்தரத்தின் நூறாவது ஆண்டைச் சிறப்பிக்கும் அல்பேனியா குடியரசுக்குத் திருத்தந்தையின் வாழ்த்துக்கள்

நவ.29,2012. நவம்பர் 28, இப்புதனன்று, ஆல்பேனியா நாடு தன் சுதந்தரத்தின் நூறாவது ஆண்டைச் சிறப்பித்தையொட்டி, தன் வாழ்த்துக்களை அனுப்பிவைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தன் சார்பில் இந்நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் Bar உயர்மறைமாவட்டப் பேராயர் Zef Gashi வழியாக அல்பேனியா குடியரசின் தலைவர் Bujar Nishani அவர்களுக்கு, இந்த வாழ்த்துக்களை நேரடியாக அனுப்பிவைத்தார் திருத்தந்தை.
அமைதி, நீதி மற்றும் வளங்கள் பலவும் பெற்று அல்பேனியா சிறந்து விளங்க வேண்டுமென்ற தன் செபங்களையும் ஆசீரையும் இவ்வாழ்த்தின் மூலம் திருத்தந்தை அனுப்பிவைத்தார்.
28 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்டுள்ள ஆல்பேனியா நாடு, 1912ம்  ஆண்டு நவம்பர் 28ம் தேதி ஒரு குடியரசு நாடாக விடுதலை அடைந்தது.

2. புலம்பெயரும் மக்கள் நம்பிக்கையை எதிர்நோக்கியே பயணம் செய்கின்றனர் - கர்தினால் Veglio

நவ.29,2012. உலகமயமாக்கல் என்ற போக்கினால் நமது சமுதாயம் சந்தித்துவரும் உலகளாவிய ஒரு நிகழ்வு புலம்பெயர்தல் என்று, பயணிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மேய்ப்புப்பணி திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Antonio Maria Veglio கூறினார்.
உரோம் நகரில் உள்ள திருத்தந்தை உர்பான் பல்கலைக்கழகத்தில், புலம்பெயர்ந்தோர் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் SIMI என்ற ஒரு அமைப்பின் துவக்க விழாவில் இவ்வியாழனன்று உரையாற்றிய கர்தினால் Veglio, இவ்வாறு கூறினார்.
அண்மையில் நாம் கடந்து வந்த 20ம் நூற்றாண்டின் ஒரு மிகப்பெரும் மாற்றம் புலம்பெயர்தல் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறியச் சொற்களை, தன் உரையில் சுட்டிக்காட்டிய கர்தினால் Veglio, புலம்பெயர்தல் என்ற வரலாற்று நிகழ்வு, மனித சமுதாயத்தின் பல்வேறு அம்சங்களுடன் தொடர்பு கொண்டது என்று எடுத்துரைத்தார்.
புலம்பெயர்தல் ஒரு துயரமான நிகழ்வு என்றாலும், இந்தக் கட்டாயத்திற்கு உட்படுத்தப்படும் மக்கள் நம்பிக்கையை எதிர்நோக்கியே பயணம் செய்கின்றனர் என்று கூறிய கர்தினால் Veglio, இந்த ஒரு அம்சத்தால், நம்பிக்கை ஆண்டில் இப்பணி இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது என்று  வலியுறுத்தினார்.

3. கத்தோலிக்க நலப்பணி அறக்கட்டளையின் நூற்றாண்டு விழா

நவ.29,2012. கத்தோலிக்க நலப்பணி அறக்கட்டளை என்ற அமைப்பு கொண்டாடிவரும் நூற்றாண்டு நிறைவையொட்டி, இவ்வறக்கட்டளையின் நிர்வாகக் குழுவினரை நல்ல சமாரியர் அறக்கட்டளையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உரோம் நகரில் சந்தித்து, தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
நலவாழ்வுப் பணியாளர்கள் திருப்பீட அவையால் இப்புதனன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இச்சந்திப்பிற்கு, இவ்வவையின் தலைவர் பேராயர் Zygmunt Zimowski தலைமை தாங்கினார்.
Paluel J. Flagg என்ற மருத்துவரால் 1912ம் ஆண்டு நியூயார்க் நகரில் கத்தோலிக்க நலப்பணி அறக்கட்டளை துவக்கப்பட்டது. தேவையில் உள்ள வறியோர் மத்தியில் இவ்வறக்கட்டளையின் மூலம் மருத்துவப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நூற்றாண்டு விழாக் கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழங்கிய புதன் பொது மறைபோதகத்தில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

4. இந்தியாவில் கத்தோலிக்க நலப்பணிகளால் 2 கோடியே 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயன்பெறுகின்றனர்

நவ.29,2012. மாறிவரும் உலகச் சூழலில் நலமற்றோருக்குத் திருஅவை ஆற்றும் பணிகளிலும் மாற்றங்கள் தேவை என்று பெங்களூரு பேராயர் Bernard Moras கூறினார்.
உரோம் நகரில் அண்மையில் நடைபெற்ற நலப்பணியாளர்கள் அகில உலகக் கருத்தரங்கில் இந்தியத் திருஅவையின் சார்பில் பங்கேற்றப் பேராயர் Moras, இந்தியாவுக்குத் திரும்பியபின் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்விதம் கூறினார்.
"சவால்கள் நிறைந்த உலகில் கத்தோலிக்க மருத்துவமனைகளின் பணி" என்ற தலைப்பில் அகில உலகக் கருத்தரங்கில் உரையாற்றிய பேராயர் Moras, இந்தியாவில் கத்தோலிக்க மருத்துவமனைகள் ஆற்றிவரும் பணி போற்றுதற்குரியது என்று சுட்டிக் காட்டினார்.
இந்திய மக்கள்தொகையில் கத்தோலிக்கர்கள் 2 விழுக்காட்டினரே ஆயினும், இந்தியாவில் ஆற்றப்படும் நலப்பணிகளில் 20 விழுக்காடு, கத்தோலிக்கர்களால் செய்யப்படுகிறது என்று பேராயர் Moras சுட்டிக்காட்டினார்.
இந்திய கத்தோலிக்கத் திருஅவையால் நடத்தப்படும் நலவாழ்வு நிலையங்கள் 3300க்கும் அதிகமானது என்றும், இவற்றில் பணியாற்றும் 35,000க்கும் அதிகமான நலப்பணியாளர்கள் மூலம் 2 கோடியே 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஒவ்வோர் ஆண்டும் பயன்பெறுகின்றனர் என்றும் UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

5. 2012ம் ஆண்டில் அமெரிக்க ஆயர்கள் பேரவை செய்துள்ள 28,05,442 டாலர்கள் நிதி உதவிகள்

நவ.29,2012. ஆப்ரிக்க நாடுகளில் உள்ள 16 ஆயர் பேரவைகள் அனுப்பியிருந்த விண்ணப்பங்களில் 49 விண்ணப்பங்களுக்கு 12,26,500 டாலர்கள் நிதி உதவி செய்ய அமெரிக்க ஆயர் பேரவை முடிவு செய்துள்ளது.
அமெரிக்க ஆயர் பேரவையின் ஓர் அங்கமான ஆப்ரிக்கத் திருஅவைப் பணிகள் அவையின் இந்த முடிவினால் எத்தியோப்பியா, உகாண்டா, டான்சானியா ஆகிய நாடுகள் உதவிகள் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது முடிவான இத்தொகையுடன் சேர்த்து, 2012ம் ஆண்டில் அமெரிக்க ஆயர்கள் பேரவை 28,05,442 டாலர்கள் நிதி உதவிகளை 109 பணித்திட்டங்களுக்கு வழங்கியுள்ளது.
கடந்த முப்பது ஆண்டுகளில் ஆப்ரிக்கத் திருஅவை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்றும், அவர்களுக்குச் செய்யும் உதவிகள் நம்பிக்கை ஆண்டின் ஓர் அடையாள வெளிப்பாடு என்றும் அமெரிக்க ஆயர்கள் பேரவையின் சார்பில் பேசிய ஆயர் John Ricard கூறினார்.

6. மத்திய அமெரிக்கப் பகுதிகளில் நிறுவப்பட்ட முதல் மறைமாவட்டத்தின் ஐந்தாவது நூற்றாண்டு விழா

நவ.29,2012. மத்திய அமெரிக்கப் பகுதிகளில் நிறுவப்பட்ட முதல் மறைமாவட்டமான Santa Maria la Antigua தன் ஐந்தாவது நூற்றாண்டை இப்புதனன்று கொண்டாடியது.
மத்திய அமெரிக்கப் பகுதியில் உள்ள Guatemala, El Salvador, Honduras, Nicaragua, Costa Rica, Panama ஆகிய நாடுகளிலிருந்து வந்திருக்கும் ஆயர்கள் இந்த ஜுபிலி விழாவை ஒரு கூட்டுத் திருப்பலியுடன் துவக்கிவைத்தனர்.
நவம்பர் 30, இவ்வெள்ளி முடிய நடைபெறும் இந்த விழாவில் மத்திய அமெரிக்கப் பகுதியில் உள்ள நாடுகள் சந்திக்கும் பல பிரச்சனைகளும் பேசப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சிறப்பாக, இப்பகுதிகளில் சுரங்கத்தொழில் என்ற பெயரால் மண்ணின் வளங்கள் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களால் சுரண்டப்படுவதைக் குறித்து விவாதங்கள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

7. இஸ்ரேல் நாட்டுக்கு அமெரிக்க அரசு வழங்கும் நிபந்தனையற்ற ஆதரவுக்கு கிறிஸ்தவ, யூத அமைப்புக்கள் கண்டனம்

நவ.29,2012. இஸ்ரேல் நாட்டின் இராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசு நிபந்தனை ஏதுமற்ற வகையில் உதவிகள் செய்துவருவதைக் கண்டனம் செய்து, கிறிஸ்தவ மற்றும் யூத அமைப்புக்கள் வாஷிங்டன் நகரில் இவ்வியாழனன்று கண்டன கூட்டம் ஒன்றை நடத்தின.
அமெரிக்க அரசின் நிபந்தனையற்ற ஆதரவைக் குறித்து கேள்விகள் எழுப்பி, 15 கிறிஸ்தவத் தலைவர்கள் அரசுக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் கையொப்பங்களை இட்டுள்ளனர்.
பாலஸ்தீனா ஒரு தனி நாடாக இயங்கும் உரிமையை வழங்க, இவ்வியாழனன்று ஐ.நா.வின் பொது அவையில் ஓட்டெடுப்பு நடைபெறும் சூழலில், பாலஸ்தீனாவுக்கு எதிராக அடக்கு முறைகளைப் பயன்படுத்திவரும் இஸ்ரேல் அரசுக்கு அமெரிக்க அரசு நிபந்தனையற்ற ஆதரவு தருவது பெரும் கண்டனத்திற்குரியது என்று கிறிஸ்தவத் தலைவர்கள் இக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
வாஷிங்டனில் நடைபெறும் இந்த கண்டனக் கூட்டம் இணையத்தளங்கள் வழியே நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

8. சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம்:வருமான வரித்துறை புது முடிவு

நவ.29,2012. சுவிட்சர்லாந்து வங்கியில், கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள, இந்தியர்களுக்கு எதிராக, வழக்கு பதிந்து, சட்ட நடவடிக்கை எடுக்க, வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள சில வங்கிகளில், பெருமளவு கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ள இந்திய வி.ஐ.பி.,க்களின் பெயர்கள் அடங்கிய ஒரு பட்டியலை இந்திய அரசியல் தலைவர்களில் ஒருவரான அரவிந்த் கெஜ்ரிவால், அண்மையில் வெளியிட்டார்.
வங்கிக்கணக்கில் காட்டப்படாத பணத்தைப் பதுக்கி வைத்துள்ள, 700 இந்தியர்களின் பட்டியலை, பிரான்சு அரசு, இந்திய அதிகாரிகளிடம் ஏற்கனவே ஒப்படைத்திருந்தது.
இதன் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள், விசாரணையைத் துவக்கியிருந்தனர். சுவிட்சர்லாந்து வருவாய்த்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுவிட்சர்லாந்து வங்கியில், இரகசியக் கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்கள், வருமான வரித்துறையிடம் உள்ளன. இவர்களுக்கு எதிரான, சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும்இதுகுறித்த அதிகாரப்பூர்வ அனுமதி, நிதி அமைச்சகத்திடமிருந்து வரவேண்டும் என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment