Thursday, 27 September 2012

Catholic News in Tamil - 22/09/12


1. திருத்தந்தை : கிறிஸ்தவ அரசியல்வாதிகள் மனித வாழ்வு, குடும்பம் மற்றும்   பொதுநலனுக்காக உழைக்க வேண்டும்

2. 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் வல்லுனர்கள், பார்வையாளர்கள் அறிவிப்பு

3. நாசரேத்தூர் இயேசு புத்தகத்தின் மூன்றாவது பகுதி கிறிஸ்மஸ்க்குள் தயார்

4. திருப்பீடப் பேச்சாளர் : லெபனனிலிருந்து மீண்டும் தொடங்குவோம்

5. எந்த ஒரு நிலையிலும் கருக்கலைப்பு ஒருபோதும் தீர்வாக அமையாது- அர்ஜென்டினா பேராயர்

6. பாகிஸ்தானில் தெய்வநிந்தனைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்படுமாறு அழைப்பு

7. உலக அளவில் சமய சுதந்திரம் குறைந்து வருகிறது

8. இந்தியாவில் காடுகளுக்குள்  மக்கள் செல்வது தடைசெய்யப்படப் பரிந்துரை

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : கிறிஸ்தவ அரசியல்வாதிகள் மனித வாழ்வு, குடும்பம் மற்றும்   பொதுநலனுக்காக உழைக்க வேண்டும்

செப்.22,2012. விசுவாசத்தினால் வழிநடத்தப்படும் அரசியல்வாதிகள் மனித வாழ்வு மற்றும் குடும்பங்களைப் பாதுகாப்பதற்குத் தங்களை அர்ப்பணிக்க வேண்டுமென்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வலியுறுத்தினார்.
அரசியலிலும் பொதுமக்களின் நல்வாழ்வுக்காகவும் செய்யும் பணிகளில், ஓர் அடிப்படையான மற்றும் உறுதியான ஒழுக்கநெறிக் கூறுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறும் அரசியல்வாதிகளைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
அனைத்துலக கிறிஸ்தவ சனநாயக அமைப்பின் செயல்திட்டக்குழு  நடத்திவரும் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளை காஸ்தெல் கந்தோல்ஃபோவில் இச்சனிக்கிழமை சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, கிறிஸ்தவ அரசியல்வாதிகளின் கடமைகளை விளக்கினார்.
பொருளாதார மற்றும் நிதித் துறைகளில் அறநெறி விழுமியங்கள் குறைவுபட்டால் இப்போதைய நெருக்கடிதான் ஏற்படும் என்றும் கூறிய திருத்தந்தை, பொதுநலனுக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் மனிதன் மையப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.
அரசியலில் அறநெறி வாழ்வு முக்கியம், இதை மதிக்காதவர்கள் கடுமையாய்த் தண்டிக்கப்பட வேண்டிவர்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.
மனிதவாழ்வு தாயின் கருவிலிருந்து இயல்பான மரணம் அடையும்வரைப் பாதுக்காக்கப்பட வேண்டும் என்றும், சமூக இணக்க வாழ்வுக்கு உறுதியான குடும்பங்கள் முக்கியம் என்றும் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

2. 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் வல்லுனர்கள், பார்வையாளர்கள் அறிவிப்பு

செப்.22,2012. அக்டோபர் 7 முதல் 28 வரை வத்திக்கானில் நடைபெறவிருக்கும் 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்து கொள்ளும் 45 வல்லுனர்கள் மற்றும் 49 பார்வையாளர்களின் பெயர்களைத் திருத்தந்தையின் ஒப்புதலுடன் இச்சனிக்கிழமை வெளியிட்டுள்ளது இம்மாமன்றச் செயலகம்.
வடகிழக்கு இந்தியாவுக்கென ஷில்லாங்கிலுள்ள இறையியல் கல்லூரியின் விவிலியப் பேராசிரியர் அருள்பணி தாமஸ் மஞ்ஞலி உட்பட இந்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் வல்லுனர்களாகக் கலந்துகொள்ளும் பல துறவு சபைகளைச் சேர்ந்த அருள்தந்தையர்கள், அருள்சகோதரிகள் மற்றும் பொதுநிலையினரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், இந்த உலக ஆயர்கள் மாமன்றத்தில் பார்வையாளர்களாகக் கலந்து கொள்வோரில் அன்னைதெரேசா பிறரன்பு மறைப்பணியாளர் சபையின் தலைவர் அருள்சகோதரி மேரி பிரேமா பியெரிக், புனே பாப்பிறை மெய்யியல் மற்றும் இறையியல் கல்லூரியில் புதிய ஏற்பாட்டுப் பேராசிரியராகப் பணியாற்றும் அருள்சகோதரி ரேகா மேரி ஜோசப், "Jesus Youth" இயக்கத்தை ஆரம்பித்த பத்திரிகையாளர் மனோஜ் சன்னி உட்பட பல நாடுகளைச் சேர்ந்த பலரின் பெயர்களும் இச்சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.
நற்செய்தி அறிவிப்புப்பணியை புதிய வழிகளில் செய்வது குறித்து 13வது உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெறவுள்ளது.

3. நாசரேத்தூர் இயேசு புத்தகத்தின் மூன்றாவது பகுதி கிறிஸ்மஸ்க்குள் தயார்

செப்.22,2012. நாசரேத்தூர் இயேசு என்ற திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் புத்தகத்தின் மூன்றாவது பகுதி இவ்வாண்டு கிறிஸ்மஸ்க்குள் விற்பனைக்குத் தயாராகிவிடும் என இவ்வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
வத்திக்கான் புத்தக வெளியீட்டு நிறுவனமும், இப்புத்தகத்தின் இத்தாலிய வெளியீட்டாளர் Rizzoliம் இவ்வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டுள்ள உடன்பாட்டின்படி, கிறிஸ்துவின் குழந்தைப்பருவம் குறித்த நாசரேத்தூர் இயேசு புத்தகத்தின் மூன்றாவது பகுதியின் இத்தாலியப் பதிப்பு இவ்வாண்டு கிறிஸ்மஸ்க்குள் விற்பனைக்குத் தயாராகிவிடும் எனத் தெரிகிறது.
இவ்வுடன்பாட்டின்படி, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் இப்புத்தகத்தின் உலகளாவிய பதிப்புரிமை Rizzoliக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நூலின் ஜெர்மன் மொழிப் பதிப்பும் இவ்வாண்டு கிறிஸ்மஸ்க்குள் விற்பனைக்குத் தயாராகிவிடும் எனத் திருத்தந்தை 16ம் பெனடிக்டின் புத்தகங்களின் பதிப்பக உரிமையைக் கொண்டுள்ள ஜெர்மன் வெளியீட்டாளர் Herder அறிவித்துள்ளார்.
இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெற்றதிலிருந்து அவர் உருமாறியது வரையிலான நாசரேத்தூர் இயேசு என்ற திருத்தந்தை 16ம் பெனடிக்ட் புத்தகத்தின் முதல் பாகம் 2007ம் ஆண்டிலும், இயேசு எருசலேமில் நுழைந்தது முதல் அவரது உயிர்ப்பு வரையிலான இரண்டாவது பாகம் 2011ம் ஆண்டிலும், வெளியிடப்பட்டன.
இயேசுவின் குழந்தைப் பருவம் குறித்த மூன்றாவது பாகம் 2012ம் ஆண்டில் வெளியிடப்படவிருக்கிறது.

4. திருப்பீடப் பேச்சாளர் : லெபனனிலிருந்து மீண்டும் தொடங்குவோம்

செப்.22,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அண்மையில் மேற்கொண்ட லெபனன் திருப்பயணத்தின்போது கருத்துவேறுபாடுகளைக் கொண்ட செய்திகள் மிகக் குறைவாகவே வெளியானது, ஊடகத்துறையினர் பொறுப்புடன் நடந்து கொண்டதைக் காட்டுகின்றது என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
சில வேளைகளில் கடும் மோதல்களும் கிளர்ச்சிகளும் இடம்பெறும் ஒரு பகுதியில் தயக்கமின்றி உறுதியுடன் மேய்ப்புப்பணிப் பயணம் மேற்கொண்ட இறைவாக்கினரின் மறைப்பணி அப்பகுதியில் அமைதியைப் பற்றிப் பேசியது என்றுரைத்த அருள்தந்தை லொம்பார்தி, இந்த இறைவாக்கினரின் செய்தி வல்லமை கொண்டதாய் இருந்தது என்று கூறினார்.
லெபனனைச் சுற்றியுள்ள ஏறத்தாழ எல்லாப் பகுதிகளும் அதிகாரத்தையும் ஆயுதங்களையும் சார்ந்து வெறுப்புணர்வை இரக்கமற்று ஊக்குவித்து வரும்வேளை, திருத்தந்தையின் வார்த்தைகள், உரையாடல், ஒருவர் ஒருவரை மதித்தல், ஒப்புரவு ஆகியவற்றுக்கு அழைப்பு விடுப்பதாக இருந்தது என்றும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
வருங்கால அமைதியை ஒன்றிணைந்து கட்டியெழுப்புங்கள் என்று பல்வேறு சமயங்களைச் சார்ந்த இளையோரிடம் திருத்தந்தை வலியுறுத்தியதையும் குறிப்பிட்ட அவர், லெபனனில் முஸ்லீம் தலைவர்கள் அளித்த வரவேற்பு திருத்தந்தைக்கு ஊக்கமூட்டுவதாய் இருந்தது எனவும் தெரிவித்தார்.

5. எந்த ஒரு நிலையிலும் கருக்கலைப்பு ஒருபோதும் தீர்வாக அமையாது- அர்ஜென்டினா பேராயர்

செப்.22,2012. தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் கருவில் வளரும் குழந்தையின் வாழ்வதற்கான உரிமைகள் மதிக்கப்படுமாறு அந்நாட்டின் இரண்டு ஆயர்கள் கேட்டுள்ளனர்.
அர்ஜென்டினா நாட்டு Mendoza உயர்மறைமாவட்டப் பேராயர் José Maria Arancibiaவும் துணை ஆயர்  Sergio Buenanuevaம் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசியல்வாதிகள் சட்டம் இயற்றும்போது உலகளாவிய விழுமியங்கள் மற்றும் இலக்குகளின் அடிப்படையில் நியாயமான மற்றும் அறிவுக்கு ஒத்த சட்டங்களை உருவாக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
கருக்கலைப்பு என்பது, மனித உயிர் வாழத் தொடங்கும் நேரத்தில் அதனைத் திட்டமிட்டுக் கொலை செய்வதாகும், இது கடுமையான அநீதி என்றும் கூறும் ஆயர்கள், அர்ஜென்டினாவின் நாடாளுமன்ற விவாதத்தில் கருவில் வளரும் குழந்தையின் மாண்பு அங்கீகரிக்கப்படும் என்ற தங்கள் நம்பிக்கையையும் தெரிவித்துள்ளனர்.  
மேலும், உலகின் பணக்கார நாடாகிய அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் இலத்தீன் அமெரிக்கக் குழந்தைகளுள் மூன்றுக்கு ஒன்று வீதம் பசியால் வாடுகின்றது என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 16 விழுக்காட்டினர் இலத்தீன் அமெரிக்கர்கள்.

6. பாகிஸ்தானில் தெய்வநிந்தனைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்படுமாறு அழைப்பு

செப்.22,2012. பாகிஸ்தானின் தெய்வநிந்தனைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதால் சிறுபான்மை சமயத்தவரின் மனித உரிமைகள் பெருமளவில் மீறப்படுவதற்கு அது காரணமாக அமைகின்றது என்று சொல்லி தெய்வநிந்தனைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்படுமாறு WCC என்ற உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம் பாகிஸ்தான் அரசை வலியுறுத்தியுள்ளது.
தெய்வநிந்தனைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் கடும் விளைவுகள் குறித்து விசாரணை செய்வதற்கு திறமைமிகுந்த ஒரு விசாரணைக் குழுவை அரசு உடனடியாக உருவாக்கி, இந்த இன்னல்நிறைந்த சூழல்களிலிருந்து மக்கள் வெளிவருவதற்குப் பரிந்துரைகளை முன்வைக்குமாறும் கேட்டுள்ளது  WCC மன்றம்.
உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம் இவ்வாரத்தில் சுவிட்சர்லாந்து நாட்டு ஜெனீவாவில் நடத்திய மூன்று நாள் கூட்டத்தில் பலரிடமிருந்து கருத்துக்களைக் கேட்ட பின்னர் இவ்வாறு பாகிஸ்தான் அரசை விண்ணப்பித்துள்ளது.

7. உலக அளவில் சமய சுதந்திரம் குறைந்து வருகிறது

செப்.22,2012. உலக அளவில் சமய சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் மிகவும் பொதுவானதாக மாறி வருகின்றன என்று பியு என்ற அமைப்பு வெளியிட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
அரசின் நடவடிக்கையால் அல்லது ஒரு மதத்தின் மீதான பொதுப்படையான  வெறுப்பினால் சமய சுதந்திரம் கட்டுப்படுத்தப்படும் நாடுகளில் உலகின் 75 விழுக்காட்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்றும் அந்த ஆய்வு கூறுகின்றது.
உலகின் 37 விழுக்காட்டு நாடுகளில் சமய சுதந்திரம் மிகவும் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது என்று, இந்த பியு அமைப்பின் 2010ம் ஆண்டு ஆய்வு கூறுகிறது.
மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் சமய சுதந்திரம் கடும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்குகின்றது, எனவே கத்தோலிக்கர் இதற்கு உடனடியாகத் துணிவான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜமெய்க்காவில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
இதில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

8. இந்தியாவில் காடுகளுக்குள்  மக்கள் செல்வது தடைசெய்யப்படப் பரிந்துரை

செப்.22,2012. இந்தியாவில் அடர்ந்த காட்டுப் பகுதிகளை, மக்கள் செல்லக்கூடாதப் பகுதிகளாக அறிவிக்குமாறு உச்சநீதிமன்றம் நியமித்த குழு ஒன்று பரிந்துரைத்துள்ளது.
காடுகள் தொடர்புடைய வழக்குகளை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு உதவும் இக்குழு காடுகளின் பொருளையும் விளக்கி இவ்வாறு பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவிலுள்ள 1.89 விழுக்காட்டு அடர்ந்த காடுகளில் பெரும்பகுதி தேசியப் பூங்காவிலும் விலங்குகள் சரணாலயங்களிலும் உள்ளன எனக் கூறிய அக்குழு, மக்கள் இந்த அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்குச் செல்வது தடைசெய்யப்படுமாறு கேட்டுள்ளது.
1980ம் ஆண்டில் வனப் பாதுகாப்பு விதிமுறை கொண்டுவரப்பட்டபோது நாட்டில் அடர்ந்த காடுகள் 20 விழுக்காடு இருந்தன எனவும் அக்குழு கூறியது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...