Monday, 17 September 2012

Catholic News in Tamil - 15/09/12


1. திருத்தந்தையின் 24வது வெளிநாட்டுத் திருப்பயணம் பெய்ரூட்டில் முதல் நாள் மாலை நிகழ்வுகள்

2. திருத்தந்தை : மத்திய கிழக்குப் பகுதிக்கான அப்போஸ்தலிக்க ஏடு, திருச்சிலுவையின் வெற்றியில் ஒரு விசுவாச செயல்

3. திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம் பெய்ரூட்டில் இரண்டாவது நாள் காலை நிகழ்வுகள்

4. திருத்தந்தை: மத்திய கிழக்குப் பகுதியில் சமய சுதந்திரத்திற்கு அழைப்பு
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையின் 24வது வெளிநாட்டுத் திருப்பயணம் : பெய்ரூட்டில் முதல் நாள் மாலை நிகழ்வுகள்

செப்.15,2012. லெபனன் நாட்டுக்கும் அனைத்து மத்திய கிழக்குப் பகுதிக்கும் அமைதியின் திருப்பயணியாக, இறைவனின் நண்பராக, இப்பகுதி மக்களின் நண்பராக வந்துள்ளேன் என்று லெபனன் தலைநகர் பெய்ரூட் “Rafiq Hariri” விமானநிலைய வரவேற்பு நிகழ்ச்சியில் சொல்லி அந்நாட்டுக்கான மூன்று நாள் திருப்பயணத்தை இவ்வெள்ளிக்கிழமை தொடங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். அன்றைய தினம் உள்ளூர் நேரம் மாலை 6 மணிக்கு அதாவது இந்திய நேரம் இரவு 8.30 மணிக்கு ஹரிஸ்ஸா கிரேக்க மெல்கித்தேரீதி புனித பவுல் பசிலிக்கா சென்றார் திருத்தந்தை.

ஹரிஸ்ஸா, பெய்ரூட் நகரத்திற்கு வடக்கே 20 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஒரு மலைப்பகுதி கிராமமாகும். கடல்மட்டத்திற்கு 650 மீட்டர் உயரத்திலுள்ள ஹரிஸ்ஸாவில், அந்நாட்டுத் திருப்பயணிகளுக்கு முக்கியமான  லெபனன் அன்னைமரி திருத்தலம் அமைந்துள்ளது. மாரனைட்ரீதி கத்தோலிக்கரின் இத்திருத்தலத்தில் 15 டன் எடையுள்ள வெண்கல அன்னைமரி திருவுருவம் 1908ம் ஆண்டில் வைக்கப்பட்டது. அத்துடன் ஹரிஸ்ஸாவில் கிரேக்க மெல்கித்தேரீதி உட்பட பிற கிறிஸ்தவ சபைகளுக்கும் தலைமையிடங்கள் உள்ளன. இவ்வெள்ளிக்கிழமை மாலை திருத்தந்தை சென்ற புனித பவுல் பசிலிக்கா, கிரேக்க மெல்கித்தே ரீதித் திருஅவையின் முக்கிய இருப்பிடத்தில் அமைந்துள்ளது. ஹரிஸ்ஸாவிலுள்ள இந்த இருப்பிடம், 1909ம் ஆண்டில் எழுப்பப்பட்டது.

இந்தப் புனித பவுல் பசிலிக்காவில் நடைபெற்ற செப வழிபாட்டில் கலந்து கொண்டார் திருத்தந்தை. இந்தச் செப வழிபாட்டில் முதலில் பைஜான்டைன் ரீதியிலும் பின்னர் மாரனைட் ரீதியிலும் பாடல்கள் இசைக்கப்பட்டன. லெபனனில் மாரனைட் ரீதி, கிரேக்க ஆர்த்தடாக்ஸ், கிரேக்க மெல்கித்தே கத்தோலிக்கர், அர்மேனிய அப்போஸ்தலிக்கச் சபை, சிரியன் கத்தோலிக்கர், கல்தேய சபையினர், பிரிந்த கிறிஸ்தவ சபையினர், சிரியன் ஆர்த்தடாக்ஸ், இலத்தீன் ரீதி, கீழைரீதி அசீரியர்கள் என பல கிறிஸ்தவ சபைகளும், அவற்றில் ஏறத்தாழ 40 இலட்சம் கிறிஸ்தவர்களும் உள்ளனர். இச்சபைகளில் மாரனைட் ரீதி கத்தோலிக்கரே அதிகம். மேலும், ஷியைய்ட், சுன்னி, Druze ஆகிய இசுலாம் மதத்தவரும், நூற்றுக்கணக்கான யூதர்களும் வாழ்கின்றனர்.

ஹரிஸ்ஸா புனித பவுல் பசிலிக்காவில் நடைபெற்ற செப வழிபாட்டில், கத்தோலிக்கக் குருக்கள், அருள்சகோதரிகள், இன்னும் ஆர்த்தடாக்ஸ் மற்றும் இசுலாமிய மதங்களின் பிரதிநிதிகள், லெபனன் அரசுத்தலைவர், அரசியல்வாதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். கிரேக்க மெல்கித்தே ரீதி முதுபெரும் தலைவர் Gregory III Laham முதலில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். அந்நாட்டில் பல மரபுகளையும் பல மொழிகளையும் கொண்டவர்கள் வாழ்வதன் அடையாளமாக இவரின் உரை  அரபு, ஜெர்மானியம், இத்தாலியம், ப்ரெஞ்ச் ஆகிய மொழிகள் கலந்து இருந்தது. பின்னர் உலக ஆயர் மாமன்றப் பொதுச் செயலர் பேராயர் நிக்கோலா எத்ரோவிச் தொடக்கவுரையாற்றினார். அதன்பின்னர் மறையுரையாற்றிய திருத்தந்தை, அங்கு கூடியிருந்த அனைத்து மதத்தவருக்கும் அரசியல்வாதிகளுக்கும் இதயம்கனிந்த நன்றி சொல்லி, உங்கள் அனைவரின் இருப்பு, மத்திய கிழக்கில் திருஅவை என்ற, மத்திய கிழக்குப் பகுதிக்கான சிறப்பு ஆயர் மாமன்றத்தின் தீர்மானங்கள் அடங்கிய அப்போஸ்தலிக்க ஏட்டில் கையெழுத்திடும் நிகழ்வை இன்னும் அதிகச் சிறப்புடையதாக மாற்றியிருக்கின்றது என்று கூறினார்.

அரபு வசந்தம் என்ற மக்கள் எழுச்சிக்குப் பின்னர் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இன்னல்நிறைந்த சூழல், சிரியாவில் உள்நாட்டுச் சண்டை, இசுலாமைக் கேலி செய்வதாக வெளியான திரைப்படத்துக்குப் பின்னர் இடம்பெற்ற வன்முறை, கிறிஸ்தவர்களுக்கு எதிராகப் பரவலாக இடம்பெறும் வன்முறை, சமூக மற்றும் அரசியல் மோதல்களையடுத்து கிறிஸ்தவர்கள் பெருமளவில் வெளியேறுவது ஆகிய தற்போதைய அனைத்துச் சூழல்களுக்கு மத்தியில், திருத்தந்தை இந்த அப்போஸ்தலிக்க ஏட்டில் பரிந்துரைத்துள்ள கருத்துக்கள், கிறிஸ்துவின் கண்களோடு எதிர்காலத்தை நோக்குவதற்கு அங்கு கூடியிருந்தவர்களைச் சிந்திக்க அழைக்கின்றது.

இவ்வுரைக்குப் பின்னர் மத்திய கிழக்கில் திருஅவை என்ற அப்போஸ்தலிக்க ஏட்டில் கையெழுத்திட்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். லெபனன் திருப்பயணத்தின் முக்கிய நோக்கமே இவ்வேட்டில் கையெழுத்திட்டு அதனை வெளியிடுவதாகும். இச்செபவழிபாடு முடிந்து ஹரிஸ்ஸா திருப்பீடத் தூதரகம் சென்று இரவு உணவருந்தினார். இத்துடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் முற்றுப் பெற்றன.

2. திருத்தந்தை : மத்திய கிழக்குப் பகுதிக்கான அப்போஸ்தலிக்க ஏடு, திருச்சிலுவையின் வெற்றியில் ஒரு விசுவாச செயல்

செப்.15,2012. மத்திய கிழக்கில் திருஅவை என்ற, மத்திய கிழக்குப் பகுதிக்கான சிறப்பு ஆயர் மாமன்றத்தின் தீர்மானங்கள் அடங்கிய அப்போஸ்தலிக்க ஏட்டில் கையெழுத்திட்ட செபவழிபாட்டில் திருத்தந்தை ஆற்றிய மறையுரையின் சுருக்கம்....

செப்டம்பர் 14 திருச்சிலுவையின் மகிமை விழா. கொல்கொத்தா மற்றும் கிறிஸ்துவின் கல்லறை மீது Constantine பேரரசர் கட்டிய கிறிஸ்துவின் உயிர்ப்புப் பசிலிக்காவின் திருநிலைப்பாட்டைக் கொண்டாடும் விதமாக, கீழை நாடுகளில் 335ம் ஆண்டிலிருந்து திருச்சிலுவை திருவிழா சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த மத்திய கிழக்கில் திருஅவை என்ற அப்போஸ்தலிக்க ஏடு, இந்தத் திருச்சிலுவையின் மகிமை விழாவின், இன்னும் சிறப்பாக, 'Christos என்ற கிரேக்கச் சொல்லின் Chi-Rho ஆகிய முதல் இரண்டு எழுத்துக்களின் ஒளியில் வாசித்து புரிந்துகொள்ளப்பட வேண்டுமெனக் கருதுகிறேன். இம்முறையில் வாசிப்பதன் மூலம், திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொரு மனிதரது மற்றும் திருஅவையின் தனித்துவம் போற்றப்படும். அதேசமயம், கிறிஸ்தவர்களின் ஒன்றிணைந்த வாழ்வு வழியாகச் சாட்சியமும் பகர முடியும். கிறிஸ்தவ ஒன்றிப்பும் சாட்சியமும் கிறிஸ்துவின் சிலுவைமரணம் மற்றும் உயிர்ப்பில், பாஸ்காப் பேருண்மையில் அடித்தளத்தைக் கொண்டிருக்கவில்லையா? என்ற கேள்வியை எழுப்பினார் திருத்தந்தை.
இன்னல்கள் மற்றும் துன்பமான நேரங்களில் கிறிஸ்தவர்கள், திருச்சிலுவையின் மகிமையைப் புறக்கணிக்கவும் அல்லது மறக்கவும் சோதிக்கப்படக்கூடும். ஆனால் இந்நேரங்களில்தான் வெறுப்பை அன்பும், பழிவாங்குதலை மன்னிப்பும், அதிகாரத்தைத் தொண்டும், பெருமையை அடக்கமும், பிரிவினைகளை ஒன்றிப்பும் வெற்றிகொள்வதை நாம் கொண்டாட அழைக்கப்படுகிறோம். மத்திய கிழக்கில் திருஅவையின் தற்போதைய நிலைமையை ஆராய்ந்த மாமன்றத் தந்தையர்கள், அப்பகுதியின் இன்பங்களையும் போராட்டங்களையும், பயங்களையும் நம்பிக்கைகளையும் அலசினர். இதன்மூலம் அப்பகுதியில் மனித மற்றும் பொருளாதாரத் துன்பங்களை அனுபவிக்கும் பலரின் குரல்களை அகிலத் திருஅவையும் கேட்க முடிந்தது. எனவே, திருச்சிலுவையின் மகிமை விழாவின் ஒளியில், இந்த அப்போஸ்தலிக்க ஏட்டைப் பலனுள்ள விதத்தில் நடைமுறைப்படுத்துவதன் கண்ணோட்டத்தில், நான் மத்திய கிழக்குப் பகுதி மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். அஞ்சாதீர்கள். விசுவாசத்தின் தூய்மையிலும், உண்மையிலும் உறுதியாக இருங்கள். இதுவே மகிமைப்படுத்தப்பட்ட திருச்சிலுவையின் மொழி. இதுவே திருச்சிலுவையின் மடமை. இந்த மடமை, நமது துன்பங்களை இறைவன் மீதான அன்பாக மாற்றும். அயலார் மீது கருணையைக் காட்டச்செய்யும். மேலும், இந்த ஏடு ஒரே கடவுளின் மீதான விசுவாசத்தில் அடிப்படையைக் கொண்ட உண்மையான பல்சமய உரையாடலுக்குத் திறந்த மனத்தைக் காட்டுகின்றது. நற்செய்தி உண்மை மற்றும் அன்பில் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கும் வழி அமைத்துள்ளது. இந்த ஏடானது கிறிஸ்துவின் சீடர்கள் ஒவ்வொருவரும் தங்களது திருமுழுக்கு வாழ்வை முழுமையாக வாழ்ந்து அதைப் பிறருக்கு வழங்கவும் வழி சொல்கிறது. இந்தத் திருச்சிலுவை அடையாளத்தில் நீ வெற்றி பெறுவாய் என்று Constantine பேரரசருக்கு கிறிஸ்து கொடுத்த வாக்குறுதியை நினையுங்கள். மத்திய கிழக்குத் திருஅவைகளே, பயப்படாதீர்கள். சிறு மந்தையே பயப்பட வேண்டாம். உண்மையில் ஆண்டவர் உங்களோடு இருக்கிறார். உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறார். அகிலத் திருஅவையும் உங்களோடு நடந்து உங்களோடு இருக்கிறது. மத்திய கிழக்குப் பகுதி மக்கள் அனைவரும் அமைதி, சகோதரத்துவம், சமய சுதந்திரம் ஆகியவற்றில் வாழ இறைவன் அருள்பொழிவாராக. கடவுள் உங்கள் எல்லாரையும் ஆசிர்வதிப்பாராக என்று அரபு மொழியிலும் சொல்லி இவ்வுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

3. திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம் பெய்ரூட்டில் இரண்டாவது நாள் காலை நிகழ்வுகள்

செப்.15,2012. லெபனன் திருப்பயணத்தின் இரண்டாவது நாளாகிய இச்சனிக்கிழமை காலையில் ஹரிஸ்ஸா திருப்பீடத் தூதரகத்தில் தனியே திருப்பலி நிறைவேற்றிய பின்னர், அங்கிருந்து 30 கிலோ மீட்டரில் இருக்கின்ற Baabda லெபனன் அரசுத்தலைவர்  மாளிகைக்குச் சென்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். பெய்ரூட்டின் புறநகரில் 4 கிலோ மீட்டர் தூரத்தில் குன்றின்மீது அமைந்துள்ளது இந்த மாளிகை. திருத்தந்தை அங்கு காரில் சென்றபோது சாலையெங்கும் இருமருங்கிலும் பெருந்திரளாக மக்கள் கூடிநின்று வத்திக்கான் மற்றும் அந்நாட்டுக் கொடிகளை ஆட்டிக் கொண்டு திருத்தந்தையை வாழ்த்தினர். இப்பயணத்தை முன்னிட்டு இச்சனிக்கிழமை அரசு விடுமுறை என்பதால், காலை 8 மணிக்கெல்லாம் Baabda மாளிகைக்குச் செல்லும் வழிகளில் மக்களை அரசுத்தலைவர் நிற்கச் சொன்னதாக அவரது அலுவலக அறிக்கை கூறுகின்றது. அம்மாளிகைக்கு முன்பாக, சிறார் உட்பட மக்கள் மரபு உடைகளில் நடனம் ஆடி திருத்தந்தையை வரவேற்றனர். உள்ளூர் நேரம் காலை 9 மணிக்கு அதாவது இந்திய நேரம் காலை 11.30 மணிக்கு அரசுத்தலைவர் Michel Sleimanஐ சந்தித்தார் திருத்தந்தை.

மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்கள் அரசியலில் பங்கு கொள்ளாதவரை அப்பகுதியில் சனநாயகத்தைக் கொண்டு வருவது இயலாதது என்றும், இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்றும் இச்சந்திப்பில் அரசுத்தலைவர் Sleiman திருத்தந்தையிடம் கூறினார். மேலும், இளையோர் தீவிரவாத நடவடிக்கைகளில் இறங்க வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டார் ஸ்லைமான். இச்சந்திப்புக்குப் பின்னர் பிரதமர் Nagib Mikati சந்தித்தார் திருத்தந்தை. பின்னர் அதே மாளிகையில் லெபனன் முஸ்லீம் மதங்களின் தலைவர்களைச் சந்தித்து, மத்திய கிழக்கில் திருஅவை என்ற அப்போஸ்தலிக்க ஏட்டின் பிரதிகளையும் அளித்தார். சிறிதுநேர ஓய்வுக்குப் பின்னர், அம்மாளிகையின் 25 மே என்ற அறையில் அந்நாட்டின் அரசு, நிறுவன மற்றும் தூதரக அதிகாரிகள், சமயத் தலைவர்கள் மற்றும் கலாச்சார உலகின் பிரதிநிதிகளையும் சந்தித்தார். இச்சந்திப்பில், மனித மாண்பையும் சமய சுதந்திரத்தையும் மதிப்பதில் அமைதி என்பது பற்றித் திருத்தந்தை உரையாற்றினார்.
இவ்வரைக்குப் பின்னர் அர்மேனிய கத்தோலிக்க முதுபெரும் தலைவர் இல்லத்தில், முதுபெரும் தலைவர்கள், ஆயர்கள் மற்றும் பல பிரதிநிதிகளுடன் மதிய உணவருந்தினார் திருத்தந்தை. மாலையில் லெபனன் இளையோரைச் சந்தித்தல் இச்சனிக்கிழமையின் இறுதி நிகழ்வாக இருந்தது. மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம் இஞ்ஞாயிறன்று நிறைவடையும்.

4. திருத்தந்தை: மத்திய கிழக்குப் பகுதியில் சமய சுதந்திரத்திற்கு அழைப்பு

செப்.15,2012. லெபனன் அரசுத்தலைவர் மாளிகையின் 25 மே என்ற அறையில் அந்நாட்டின் அரசு, பல நிறுவனங்கள் மற்றும் தூதரக அதிகாரிகள், சமயத் தலைவர்கள் மற்றும் கலாச்சார உலகின் பிரதிநிதிகளுக்குத் திருத்தந்தை நிகழ்த்திய உரையின் சுருக்கம்.....
ஒவ்வொரு மனிதரின் மாண்பு மதிக்கப்படுதல், குறிப்பாக, ஒவ்வொருவரும் தங்களின் மத நம்பிக்கையை சுதந்திரமாக நடைமுறைப்படுத்த வழங்கப்படும் சுதந்திரம் அமைதிக்கு அடிப்படையானது. இந்த அடிப்படையான எண்ணத்திற்குப் புறம்பானதில் தீயவன் செயல்படுகிறான். இந்தப் பயணத்தில் நான் நட்ட கேதார் மரக்கன்று உங்களது அழகிய நாட்டின் அடையாளமாக இருக்கின்றது. இந்த மரக் கன்று வளர்வதைப் பார்க்கும்போது உங்கள் நாட்டையும், மத்திய கிழக்குப் பகுதி முழுவதையும் அதன் எதிர்காலத்தையும் பார்க்கிறேன். பெரிய மதங்கள் மற்றும் நேர்த்தியான கலாச்சாரங்களின் பிறப்பிடமாகிய இந்தப் பகுதியை கடவுள் ஏன் தேர்ந்து கொண்டார்? இப்பகுதி மக்களின் வாழ்வு ஏன் இவ்வளவு துன்பம்  நிறைந்ததாக இருக்கின்றது.  ஒவ்வொரு மனிதரும் அமைதி மற்றும் ஒப்புரவுக்கானத் தனது ஏக்கத்தை தெளிவான விதத்தில் அடைவதற்கு வாய்ப்பைக் கொண்டுள்ளார் என்பதை உலகின்முன் சான்று பகருவதற்காகவே. இந்தத் தூண்டுதல் கடவுளின் நித்திய திட்டத்தில் இருக்கின்றது. அமைதிக்கான நமது அர்ப்பணம் மனித வாழ்வைப் புரிந்து கொள்வதைச் சார்ந்து இருக்கின்றது.   நாம் அமைதியை விரும்பினால் வாழ்வைப் பாதுகாக்க வேண்டும். இந்த அணுகுமுறை, சண்டையையும் பயங்கரவாதத்தையும் மட்டும் நாம் புறக்கணிக்க இட்டுச் செல்லவில்லை, மாறாக, அப்பாவி மனித வாழ்வின்மீது நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலையும் புறக்கணிக்க நம்மை அழைக்கின்றது.
மனித இயல்பின் உண்மை எங்கெங்குப் புறக்கணிக்கப்படுகிறதோ அல்லது மறுக்கப்படுகிறதோ மனித இதயத்தில் எழுதப்பட்ட இயற்கைச் சட்டம் குறித்த இலக்கணம் அங்கு மதிக்கப்படுவது இயலாததாகிறது. ஒருங்கிணைந்த மனிதரை மதிக்காமல் உண்மையான அமைதியை உங்களால் கட்டியெழுப்ப முடியாது. ஆயுத மோதல்களை அனுபவிக்கும் நாடுகளில் இது அதிகத் தெளிவாகத் தெரிகின்றது. வேலைவாய்ப்பின்மை, வறுமை, ஊழல், சுரண்டல், பல்வேறு மனித வியாபாரங்கள், பயங்கரவாதம் போன்றவை ஏற்றுக்கொள்ள முடியாத மனிதத் துன்பங்களுக்கு மட்டும் காரணமாக இல்லை, அத்துடன், மனிதச் சக்திகளும் பெருமளவில் இழக்கப்படக் காரணமாகின்றன. இரத்தம் சிந்தும் இனப்பாகுபாட்டு மோதல்களால் நிறைந்துள்ள மத்திய கிழக்கில் உறுதியான தன்மை ஏற்படுவதற்கு சமய சுதந்திரம் அடிப்படையானது. இந்தச் சுதந்திரம் அடிப்படையான உரிமையாகும். உயிரோட்டமுள்ள விசுவாசம் அன்புக்கு இட்டுச் செல்லும். உண்மையான விசுவாசம் மரணத்துக்கு இட்டுச் செல்லாது. அமைதியை ஏற்படுத்துவோர் தாழ்மையும் நீதியும் கொண்டவராய் இருப்பார். எனவே இக்காலத்தின் விசுவாசிகள் அமைதியை ஏற்படுத்துவோராய் இருக்க வேண்டும்.
இவ்வாறு, லெபனன் நாட்டின் அரசு, பல நிறுவனங்கள் மற்றும் தூதரக அதிகாரிகள், சமயத்தலைவர்கள் மற்றும் கலாச்சார உலகின் பிரதிநிதிகளுக்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உரையாற்றினார். 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...