Friday, 14 September 2012

Catholic News in TAmil - 14/09/12

1.       திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம் முதல் நாள் நிகழ்வுகள்
2.  திருமணத்தின் புனிதத்துவம் காக்கப்பட ஆஸ்திரேலியத் தலைவர்கள் அழைப்பு
3.  மெக்சிகோவின் கல்வி அமைப்புமுறை மறுசீரமைப்பிற்கு ஆயர்கள் அழைப்பு
4.  கந்தமால் பகுதி வன்முறைகளால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் இழப்பீட்டுத் தொகை கேட்டு   
   விண்ணப்பம்
5.  உலகில் மத விடுதலையை ஊக்குவிக்க அமெரிக்க ஐக்கிய நாட்டு அதிகாரிகளுக்கு
    வேண்டுகோள்
6.  இலங்கையில் அக்டோபர் 11, சிறுமிகள் தினம்
7.  இலங்கையில் இரண்டரை ஆண்டுகளுள் 9,412 தற்கொலைகள்! ஆண்களே அதிகம்

------------------------------------------------------------------------------------------------------

1.  திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம் முதல் நாள் நிகழ்வுகள்

செப்.14,2012. லெபனன் நாட்டுக்கும் அனைத்து மத்திய கிழக்குப் பகுதிக்கும் அமைதியையும் ஒப்புரவையும் ஒன்றிப்பையும் வழங்கும் நோக்கத்தில் லெபனன் நாட்டுக்கானத் தனது முதல் திருப்பயணத்தை இவ்வெள்ளிக்கிழமை உரோம் நேரம் காலை 9.38 மணிக்கு தொடங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். சிரியாவில் பல மாதங்களாக இடம்பெற்று வரும் உள்நாட்டுச் சண்டை நாளுக்கு நாள் கடுமையாகி அச்சண்டை அண்டை நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியதிலிருந்து, சிரியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான லெபனனுக்கானத் திருத்தந்தையின் திருப்பயணம் இடம்பெறுமா, இடம்பெறாதா என்று நிலவிய ஐயப்பாடுகளுக்கு முற்றாக முற்றுப் புள்ளி வைத்துவிட்டது 
லெபனன் தலைநகர் பெய்ரூட் “Rafiq Hariri” விமானநிலையத்தை உள்ளூர் நேரம் பகல் 12.45 மணிக்குச் சென்றடைந்தார் திருத்தந்தை. விமானம் தரையிறங்குவதைக் கண்ட மக்கள், குறிப்பாக இளையோர், வத்திக்கான் மற்றும் லெபனன் நாடுகளின் கொடிகளை ஆட்டிக் கொண்டு பெனதெத்தோ பெனதெத்தோ என்று ஆரவாரித்துக் கொண்டிருந்தனர்.
லெபனன் அரசுத்தலைவர் Michel Sleiman, பிரதமர் Nagib Miqati, நாடாளுமன்றத் தலைவர் Nabih Berri ஆகியோர் விமானப்படிகளில் இறங்கி வந்த திருத்தந்தையைக் கைகுலுக்கி வரவேற்றனர். இன்னும், அரசு பிரமுகர்களும், திருஅவைத் தலைவர்களும் அங்கு இருந்தனர். ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் மரபு உடைகளில் மலர்க் கொத்துக்களைத் திருத்தந்தைக்கு அளித்தனர். விமானநிலையத்தில் 21 துப்பாக்கிகள் வெடிக்க அனைத்து அரசு மரியாதைகளும் வழங்கப்பட்டன.
வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பின், காரில் ஹரிஸ்ஸா திருப்பீடத் தூதரகம் சென்று ஓய்வெடுத்தார் திருத்தந்தை. பின்னர் உள்ளூர் நேரம் மாலை 6 மணியளவில் ஹரிஸ்ஸா கிரேக்க மெல்கித்தே ரீதி புனித பவுல் பசிலிக்காவில் நடைபெறும் செப வழிபாட்டின்போது, மத்திய கிழக்குப் பகுதிக்கான சிறப்பு ஆயர் மாமன்றத்தின் தீர்மானங்கள் அடங்கிய அப்போஸ்தலிக்க ஏட்டில் கையெழுத்திடுவது இம்முதல்நாள் பயணத் திட்டத்தில இருந்தது.               
15 வருடங்களுக்குப் பின்னர் திருத்தந்தை ஒருவர் லெபனன் நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதன் முறையாகும். இந்த மூன்று நாள் திருப்பயணத்தில், லெபனனிலுள்ள 18 சமயக் குழுக்களின் தலைவர்களையும் அரசியல்வாதிகளையும் சந்திக்கிறார் திருத்தந்தை. 

2.  திருமணத்தின் புனிதத்துவம் காக்கப்பட ஆஸ்திரேலியத் தலைவர்கள் அழைப்பு

செப்.14, 2012.  ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான ஐக்கியமாகத் திருமணத்தை நோக்கி அதன் உன்னத தன்மையைக் காக்க ஆஸ்திரேலியத் தலைவர்கள் முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் அந்நாட்டுக் கிறிஸ்தவத் தலைவர்கள்.
ஆஸ்திரேலியப் பாராளுமன்றத்தை நோக்கி இந்த அழைப்பை முன்வைத்துள்ள கிறிஸ்தவத் தலைவர்கள், திருமணங்கள் பாதுகாக்கப்பட்டு ஊக்குவிக்கப்படவேண்டும் என்பதில் கிறிஸ்தவ சபைகளும் தங்கள் அர்ப்பணத்தை வெளியிட விரும்புகின்றன எனத் தெரிவித்துள்ளனர்.
ஒரே பாலினத் திருமணங்களும், திருமணமின்றியே சேர்ந்து வாழ்தலும் ஊக்குவிக்கப்படும் இன்றைய நவீன உலகில், குழந்தைகளின் நலனை மனதில் கொண்டு, திருமணங்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயானதாக வலியுறுத்தப்பட்டு அதன் புனிதத்துவம் காக்கப்படவேண்டும் என அழைப்பு விடுக்கும் இவ்வறிக்கையில், சிட்னி கர்தினால் ஜார்ஜ் பெல், 19 கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் மற்றும் 260 கிறிஸ்தவ குருக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

3.  மெக்சிகோவின் கல்வி அமைப்புமுறை மறுசீரமைப்பிற்கு ஆயர்கள் அழைப்பு

செப். 14, 2012.  மெக்சிகோவின் கல்வி அமைப்புமுறைகள், மறுசீரமைப்பிற்கு உள்ளாக்கப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
14 இலட்சம் அங்கத்தினர்களைக் கொண்டுள்ள மெக்சிகோ தேசியக் கல்வித் தொழிலாளர் சங்கம், சுரண்டலிலும், வளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதிலும் திளைத்துள்ளதால் கல்விப்பணி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்ற கவலையை வெளியிட்டு மேய்ப்புப்பணி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஆயர்கள், இன்றைய மெக்சிகோவில் கல்வியின் தரம் எவ்விதம் உள்ளது என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளனர்.
மெக்சிகோ ஆசிரியர்கள் கல்விப்பணிக்கான தங்கள் அழைப்பின் மகத்துவத்தையும் அதற்குரிய மாண்பையும் உணர்ந்துகொள்ளாமல் செயல்படுவது குறித்த கவலையையும் தங்கள் அறிக்கையில் வெளியிட்டுள்ளனர் மெக்சிகோ ஆயர்கள்.

4.  கந்தமால் பகுதி வன்முறைகளால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் இழப்பீட்டுத் தொகை கேட்டு விண்ணப்பம்

செப். 14, 2012.  2008ம் ஆண்டு ஒரிசாவின் கந்தமால் பகுதியில் கிறிஸ்தவ விரோத வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகைகள் வழங்கப்பட அரசு குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என அப்பகுதி கிறிஸ்தவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த விண்ணப்பம தாங்கிய அறிக்கையை, இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தியிடம் சமர்ப்பித்துள்ள கிறிஸ்தவக்குழு, தேசிய மனித உரிமைகள் அவையின் தலைவர் நீதியரசர் பாலகிருஷ்ணன், சிறுபான்மையினருக்கான தேசிய அவையின் தலைவர் வாஜாஹாட் ஹபிபுல்லா ஆகியோரையும் சந்தித்து விவரங்களைத் தெரிவித்தது.
வன்முறைகள் இடம்பெற்று நான்கு ஆண்டுகள் கடந்த பின்னரும், பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதியோ, இழப்பீட்டுத்தொகையோ, நிவாரணங்களோ வழங்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது இக்குழு.
2008ம் ஆண்டில் கந்தமாலில் இடம்பெற்ற வன்முறைகளில் 90 பேர் கொல்லப்பட்டனர், 55,000 கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளை இழந்தனர்.

5.  உலகில் மத விடுதலையை ஊக்குவிக்க அமெரிக்க ஐக்கிய நாட்டு அதிகாரிகளுக்கு வேண்டுகோள்

செப். 14, 2012.  உலகில் பிரச்சனைகள் இடம்பெறும் பகுதிகளில் பாதுகாப்பையும் நிலையான தன்மையையும் அதிகரிக்கும் நோக்கில் அனைத்து நாடுகளிலும் மத விடுதலையை ஊக்குவிக்க அமெரிக்க ஐக்கிய நாட்டு அதிகாரிகள் முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்தார் அந்நாட்டின் முன்னாள் அரசு அதிகாரியும் அரசியல் வல்லுனருமான Thomas Farr.
மத அமைதி மற்றும் உலக விவகாரங்கள் குறித்த Georgetown பல்கலைக்கழக மையத்தின் மத சுதந்திரப் பணிகளுக்கான திட்டத்தின் இயக்குனர் Farr உரைக்கையில், மத சுதந்திரம் என்பது, வழிபடுவதற்கான சுதந்திரத்தை மட்டுமன்றி, விசுவாசத்தின் அனைத்துக் கூறுகளையும் மற்றும் மனிதரின் மனச்சான்றுக் கூறுகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என விண்ணப்பித்தார்.
உலகின் பல நாடுகளில், குறிப்பாக மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மத விரோத எண்ணங்கள் அதிகரித்து வருகின்றன மற்றும் இசுலாமிய நாடுகளில் கிறிஸ்தவர்கள் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பவைகளை மனதிற்கொண்டு, அமெரிக்க ஐக்கிய ஐக்கிய நாடு தன் வெளிநாட்டுக் கொள்கைகளில் மத உரிமைகளூக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் அவர்.
மனித குல சமுதாய வளர்ச்சிக்கும் மனித மாண்புக்கும் மத சுதந்திரம் இன்றியமையாத ஒன்று என்ற மனப்போக்கு மக்களில் மாறி வருகிறது என்ற கவலையையும் வெளியிட்டார் முன்னாள் அதிகாரி Farr.

6.  இலங்கையில் அக்டோபர் 11, சிறுமிகள் தினம்

செப். 14, 2012.  ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 11ம் தேதியை அனைத்துலக சிறுமிகள் தினமாக அறிவிக்க இலங்கை தீர்மானித்துள்ளது.
இலங்கையின் பெண்கள், சிறுமிகள் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவின் கோரிக்கைக்கு இணங்க அமைச்சரவை, இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
சமூகப் பாதுகாப்பு, பெற்றோரின் அரவணைப்பு, சிறுமிகளின் கல்வி, நலவாழ்வு, விளையாட்டு போன்றவைகளை கருத்திற்கொண்டே இந்த அறிவிப்பிற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நாள்தோறும் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் உட்பட்ட பல்வேறு விடயங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பில் தெளிவூட்டும் வகையிலேயே அக்டோபர் 11ம் தேதியை சர்வதேச சிறுமிகள் தினமாக இலங்கை அரசு அறவிக்கவுள்ளது.
ஏற்கனவே இந்த அறிவிப்பிற்கு ஐக்கிய நாடுகள் சபை தமது 55 வது மாநாட்டில் அங்கீகாரம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

7.  இலங்கையில் இரண்டரை ஆண்டுகளுள் 9,412 தற்கொலைகள்! ஆண்களே அதிகம்

செப். 14, 2012.  இலங்கையில் பல காரணங்களுக்காகத் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையின்படி, 2010ம் ஆண்டு, 2914 ஆண்களும் 950 பெண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனவும், இது 2011ல்  2939 ஆண்கள், 831 பெண்கள், 2012ல் ஜுன் மாதம் வரையான காலப்பகுதிக்குள் 1381 ஆண்கள், 397 பெண்கள் என அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
ஆண்களே அதிகம் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனவும், 40 முதல் 55 வயதுக்கு இடைப்பட்டவர்களே அதிகம் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில், இரத்தினபுரி மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டில் 16 வயதிற்கு உட்பட்ட 41 சிறுவர்களும் 77 சிறுமியர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனக்கூறும் காவல்துறையின் அறிக்கை, குடும்பப் பிரச்சினை, காதல், தொழில் பிரச்சனை, மன உளைச்சல் உள்ளிட்ட காரணங்களால் அதிக தற்கொலைகள் இடம்பெற்றுள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...