Friday, 14 September 2012

Catholic News in Tamil -12/09/12

1. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் : மத்திய கிழக்குப் பகுதி முழுவதிலும் அமைதிக்காக அழைப்பு

2. திருத்தந்தை : சாலையோரப் பெண்கள், சிறார் மீது அக்கறை காட்டப்படுமாறு அழைப்பு

3. திருப்பீட அதிகாரி : வீடற்றநிலை உரிமைகள் இழப்புக்கானக் காரணத்தின் ஆரம்பம்

4. திருப்பீடப் பேச்சாளர் : திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம் ஒருபோதும் சந்தேகத்துக்கு உட்படவில்லை

5. மரணதண்டனை சட்டம் இரத்து செய்யப்படுமாறு பிலடெல்பியா பேராயர் வலியுறுத்தல்

6. பாகிஸ்தானில் சிறுமி Rimsha பிணையலில் விடுதலைசெய்யப்பட்டிருப்பது சிறுபான்மையினருக்கு ஒரு திருப்புமுனை

7. ஆயுதம் தாங்கிய மோதல்களில் சிறார்க்கு எதிரான கடும் உரிமை மீறல்கள் நிறுத்தப்படுவதற்குத் தீவிர முயற்சிகள் தேவை - ஐ.நா.

8. அழிவின் விளிம்பில் மேலும் நூறு விலங்கினங்கள்

9. பாகிஸ்தான் தொழிற்சாலையில் தீ விபத்து : 112 பேர் பலி

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் : மத்திய கிழக்குப் பகுதி முழுவதிலும் அமைதிக்காக அழைப்பு

செப்.12,2012. மத்திய கிழக்குப் பகுதி முழுவதிலும் அனைத்து உரிமைகளும்  மதிக்கப்பட்டு அப்பகுதியில் அமைதியும் ஒப்புரவும் ஏற்படுவதற்கு எல்லாரும் செபிக்குமாறு இப்புதனன்று கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இவ்வெள்ளிக்கிழமையன்று தான் தொடங்கவிருக்கும் லெபனன் நாட்டுத் திருப்பயணம் பற்றி இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் பேசிய திருத்தந்தை,  அப்பகுதியில் வாழும் பல்வேறு கத்தோலிக்க ரீதி மற்றும்பிற கிறிஸ்தவ விசுவாசிகளையும், முஸ்லீம் மற்றும் Druze மதத்தவரையும் தான் சந்திக்கவிருப்பதையும் குறிப்பிட்டார்.
அப்பகுதியில் நிலைத்த அமைதியும் ஒப்புரவும் தொடர்ந்து இருந்தால் மட்டுமே இந்த மதத்தவர் அனைவரும் ஒன்றிணைந்து வாழ முடியும் என்பதால், மத்திய கிழக்குப் பகுதியில் வாழும் அப்பகுதிக் கிறிஸ்தவர்கள் மற்றும் அங்குப் பணிபுரியும் எல்லாக் கிறிஸ்தவர்களும், அமைதி மற்றும் ஒப்புரவைக் கட்டியெழுப்புவர்களாகச் செயல்படுமாறு கேட்டுக் கொள்வதாகக் கூறினார் திருத்தந்தை.
பல்வேறு கிறிஸ்தவச் சமூகங்களால் நடத்தப்பட்டுள்ள பல்சமய மற்றும் பலகலாச்சார உரையாடல்கள் எவ்வளவு முக்கியம் என்பதை மத்திய கிழக்குப் பகுதியின் வரலாறு நமக்கு எடுத்துரைக்கின்றது என்று கூறிய திருத்தந்தை, இப்பகுதி மக்களின் நியாயமான உரிமைகள் மதிக்கப்படும் அமைதி அங்கு கிடைப்பதற்குத் தான் இறைவனிடம் செபிப்பதாகவும் இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
இந்த அமைதிக்கான விண்ணப்பத்தை ப்ரெஞ்ச் மற்றும் அரபு மொழிகளில் முன்வைத்தார் திருத்தந்தை.

2. திருத்தந்தை : சாலையோரப் பெண்கள், சிறார் மீது அக்கறை காட்டப்படுமாறு அழைப்பு

செப்.12,2012. ஆப்ரிக்காவில் சாலைகளிலும் தெருக்களிலும் ஆபத்தான வாழ்வை எதிர்நோக்குகின்ற, குறிப்பாக சாலையோரப் பெண்கள் மற்றும் சிறாரின் பாதுகாப்புக்குத் தலத்திருஅவைகள் மிகுந்த ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்த முயற்சிகளில் ஈடுபடுமாறு திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.
ஆப்ரிக்கா மற்றும் மடகாஸ்கர் முழுவதிலும் சாலையோரங்களில் வாழும் மக்களின் நல்வாழ்வு குறித்து, டான்சானிய நாட்டு Dar-Es-Salaamல் முதன்முறையாகத் திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்வோர் அவை நடத்தும் கூட்டத்திற்குத் திருத்தந்தையின் பெயரால் அனுப்பப்பட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Dar-Es-Salaam பேராயர் கர்தினால் Polycarp Pengoவுக்குத் திருத்தந்தையின் பெயரால் இச்செய்தியை அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே.
மக்கள் சாலைகளில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டதற்கான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கூறுகளையும் சுட்டிக்காட்டியுள்ள அச்செய்தியில், பாதுகாப்பற்ற சாலைகளால் ஆப்ரிக்காவில் இலட்சக்கணக்கான மக்கள் இறப்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Dar-Es-Salaamல் இச்செவ்வாயன்று தொடங்கியுள்ள இக்கூட்டம் வருகிற சனிக்கிழமையன்று நிறைவடையும். 

3. திருப்பீட அதிகாரி : வீடற்றநிலை உரிமைகள் இழப்புக்கானக் காரணத்தின் ஆரம்பம்

செப்.12,2012. பொதுவாக சாலைகளில் வாழும் மக்கள் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் நோக்கப்படுகின்றனர், இவர்கள் தங்களையே பாதுகாத்துக் கொள்ள முடியாத குரலற்ற மற்றும் முகவரியில்லாத மக்களாக இருக்கின்றனர் என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
டான்சானிய நாட்டு Dar-Es-Salaamல் இச்செவ்வாயன்று தொடங்கியுள்ள ஆப்ரிக்கச் சாலையோர மக்கள் குறித்த கூட்டத்தில் உரையாற்றிய, திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்வோர் அவையின் செயலர் ஆயர் Joseph Kalathiparambil, சாலையோர மக்கள் தங்களது எதிர்காலத்தை முன்னேற்றுவதற்கு வளங்களைக் காண முடியாமலும், தங்களைப் பாதுகாக்க முடியாத நிலையிலும் வாழ்கின்றனர் என்று கூறினார்.
குடியேற்றம், மனித வியாபாரம், மனித உரிமைகள் போன்ற தலைப்புக்களிலும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட ஆயர் Kalathiparambil, மனித வியாபாரம் மற்றும் சாலையோர மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்குத் திருஅவைகள் ஆற்றும் மேய்ப்புப்பணிகளையும் பாராட்டிப் பேசினார்.
உலகில் ஏறத்தாழ 15 கோடித் தெருச்சிறார் உள்ளனர். இவர்களில் 40 விழுக்காட்டினர் வீடற்றவர்கள். 60 விழுக்காட்டினர் தங்கள் குடும்பங்களைக் காப்பாற்றுவதற்காகச் சாலைகளில் வேலை செய்கின்றனர். மேலும், உலகில் 100 கோடிக்கு மேற்பட்டோருக்குப் போதுமான வீட்டுவசதி கிடையாது. 10 கோடிப் பேருக்கு வீடுகளே கிடையாது. போதுமான குடியிருப்பு வசதியில்லாததால் தினமும் 50 ஆயிரம் பேர் வீதம் இறக்கின்றனர் என ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது.

4. திருப்பீடப் பேச்சாளர் : திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம் ஒருபோதும் சந்தேகத்துக்கு உட்படவில்லை

செப்.12,2012. லெபனனின் அண்டை நாடான சிரியாவில் இடம்பெற்றுவரும் உள்நாட்டுச் சண்டை மத்திய கிழக்குப் பகுதியில் உறுதியற்றதன்மையை ஏற்படுத்தியிருக்கின்றபோதிலும், இம்மாதம் 14 முதல் 16 வரை  திருத்தந்தை மேற்கொள்ளவுள்ள லெபனன் நாட்டுத் திருப்பயணம் குறித்து ஒருபோதும் எவ்வித சந்தேகமும் ஏற்பட்டதில்லை என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
இத்திருப்பயணத்தை மேற்கொள்வது குறித்து ஒருபோதும் ஐயத்துக்குரிய கேள்வி எழுந்ததில்லை என்று நிருபர் கூட்டத்தில் விளக்கிய அருள்தந்தை லொம்பார்தி, அமைதியற்ற சூழலில் அப்பகுதி மக்களுக்கு ஊக்கத்தையும் ஆதரவையும் அளிப்பதன் அடையாளமாக இத்திருப்பயணம் நடைபெறவுள்ளது என்றும் கூறினார்.
2010ம் ஆண்டு அக்டோபரில் வத்திக்கானில் நடைபெற்ற மத்திய கிழக்குப் பகுதிக்கானச் சிறப்பு ஆயர் மாமன்றத்தின் தீர்மானத் தொகுப்பை வெளியிடுவது இத்திருப்பயணத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வெள்ளிக்கிழமையன்று லெபனன் தலைநகர் பெய்ரூட்டை அடையும் திருத்தந்தையை அந்நாட்டின் முஸ்லீம் தலைவர்களும் வரவேற்கவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

5. மரணதண்டனை சட்டம் இரத்து செய்யப்படுமாறு பிலடெல்பியா பேராயர் வலியுறுத்தல்

செப்.12,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டு பென்சில்வேனிய மாநிலத்தில் மூன்று குற்றவாளிகள் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்காகக் காத்திருக்கும்வேளை, அம்மாநிலத்தில் மரணதண்டனை சட்டத்தை இரத்து செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார் பிலடெல்பியா பேராயர் சார்லஸ் சாபுட்.
கடவுளின் குழந்தைகள் என்ற முறையில் மரணதண்டனைக்கு எதிராக நாம் செயல்பட வேண்டியுள்ளது என்று கூறியுள்ள பேராயர் சாபுட், வன்முறை, வன்முறைக்கே இட்டுச் செல்லும் என்பதால் மரணதண்டனை ஒருபோதும் குற்றங்களைக் களைய உதவாது என்றும் குறிப்பிட்டுள்ளார். 
பென்சில்வேனியாவில் கடந்த 13 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மரணதண்டனை நிறைவேற்றப்படவிருக்கின்றது.
மேலும், நியுயார்க் இரட்டைக் கோபுரம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளான நினைவு தினத்தை இச்செவ்வாயன்று அமெரிக்க ஐக்கிய நாட்டுக் சமய மற்றும் அரசு அதிகாரிகள் எளிமையாகக் கடைப்பிடித்தனர்.

6. பாகிஸ்தானில் சிறுமி Rimsha பிணையலில் விடுதலைசெய்யப்பட்டிருப்பது சிறுபான்மையினருக்கு ஒரு திருப்புமுனை

செப்.12,2012. பாகிஸ்தானில் தேவநிந்தனையின் பேரில் பொய்யாகக் குற்றச்சாட்டப்பட்ட மனநலம் குன்றிய 14 வயதுச் சிறுமி Rimsha Masih பிணையலில் விடுதலை செய்யப்பட்டிருப்பது அந்நாட்டில் சிறுபான்மையினருக்குத் திருப்புமுனையாக இருக்கின்றது என்று அருள்தந்தை Robert McCullock கூறினார்.
பாகிஸ்தானில் 34 ஆண்டுகள் பணிசெய்துள்ள கொம்போனிய சபையின் அருள்பணி McCullock, சிறுமி ரிம்ஷாவின் விவகாரம், தேவநிந்தனையின் பேரில் குற்றச்சாட்டப்படும் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கு அரசு அதிகாரிகளுக்கு வாய்ப்பளித்துள்ளது என்று கூறினார்.
சிறுமி ரிம்ஷா பிணையலில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் பாகிஸ்தான் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளைப் பார்க்கும் போது, அவர்கள் உள்நாட்டு ஊழல்களையும் பயங்கரவாத அச்சுறுத்தல்களையும் எதிர்த்து நின்று  போராடுவதற்கு விரும்புவதையே காட்டுகின்றது எனவும் அக்குரு கூறினார்.
அருள்தந்தை Robert McCullock, பாகிஸ்தானை விட்டு உரோம் வருவதற்கு முன்னர் அந்நாட்டு அரசுத்தலைவர் Asif Ali Zardariயிடம் விருது வாங்கியிருக்கிறார். அத்துடன் அந்நாட்டில் தேவநிந்தனை சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் அரசுத்தலைவரிடம் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

7. ஆயுதம் தாங்கிய மோதல்களில் சிறார்க்கு எதிரான கடும் உரிமை மீறல்கள் நிறுத்தப்படுவதற்குத் தீவிர முயற்சிகள் தேவை - ஐ.நா.

செப்.12,2012. சண்டை இடம்பெறும் இடங்களில் சிறார்க்கு எதிராகச் செய்யப்படும் கடும் மனித உரிமை மீறல்கள் தடை செய்யப்படுவதற்கு உலக அளவிலான முயற்சிகள் தீவிரப்படுத்தப்படுமாறு வலியுறுத்தியுள்ளார் ஐ.நா.உயர் அதிகாரி ஒருவர்.
சுவிட்சர்லாந்து நாட்டு ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் ஐ.நா.மனித உரிமைகள் அவையின் 21வது கூட்டத்தில் உரையாற்றிய, ஆயுதம் தாங்கிய மோதல்களில் சிறார் பாதுகாப்புக்கான ஐ.நா.பொதுச் செயலரின் சிறப்புப் பிரதிநிதி Leila Zerrougui இவ்வாறு கேட்டுக் கொண்டார்.
2011ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியான அறிக்கையில், சிறாரைப் படைகளுக்குச் சேர்க்கும் பட்டியலில் 52 போரிடும் குழுக்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்மாதம் 10ம் தேதி தொடங்கியுள்ள ஐ.நா.மனித உரிமைகள் அவையின் 21வது கூட்டம் 28ம் தேதி வரை இடம்பெறுகின்றது.    

8. அழிவின் விளிம்பில் மேலும் நூறு விலங்கினங்கள்

செப்.12,2012. தென் அமெரிக்கக் காடுகளில் வாழும் ஸ்லாத் எனப்படும் மந்தத்தி பாலூட்டிகள் உட்பட உலகளவில் அழியும் ஆபத்தை எதிர்கொள்ளும் நூறு உயிரனங்களின் பட்டியலை, பன்னாட்டு உயிரியல் பாதுகாப்பு நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.
அரசுகளின் மனநிலையில் மாறுதல் ஏற்பட்டால் மட்டுமே இந்த உயிரினங்களை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும் எனவும் அந்த வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இலண்டன் உயிரியல் பூங்கா, பன்னாட்டு உயிரினங்கள் பாதுகாப்புக்கான அமைப்பு ஆகிய இரண்டும் இணந்தே இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளன.
தென் கொரியாவின் ஜேஜூ தீவில் நடைபெற்ற உலக உயிரினங்கள் பாதுகாப்பு மாநாட்டிலேயே இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மடகாஸ்கர் நாட்டிலுள்ள டார்சான் பச்சோந்தி, பனாமா நாடு உட்பட தென் அமெரிக்க்க் நாடுகளில் மரக்கிளைகளில் வாழ்ந்து கொண்டு தரையில் மிகவும் மெதுவாகச் செல்லக் கூடிய, காலில் மூன்று விரல்களை மட்டுமே கொண்ட ஸ்லாத் எனப்படும் மந்தத்தி பாலூட்டி விலங்கினம் ஆகியவை அழிவின் விளிம்பில் உள்ளன என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இம்மாதிரியான விலங்குகள் மனிதனுக்கு எந்தப் பலனையும் அளிப்பதில்லை என்பதால் அவற்றின் மீது கவனம் செலுத்தப்படாமல் அவை அழிந்து போவதற்கு விடப்படுகின்றன என்றும் அந்த அமைப்புகள் கூறுகின்றன.
அந்த உயிரனங்களால் மனிதர்களுக்கு ஆதாயம் இருக்கிறதா இல்லையா என்பதற்கு அப்பாற்பட்டு, அவற்றை அழிவின் விளிம்புக்குத் தள்ள மனிதர்களுக்கு உரிமை உள்ளதா என்பதே கேள்வி எனவும் அந்த வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

9. பாகிஸ்தான் தொழிற்சாலையில் தீ விபத்து : 112 பேர் பலி

செப்.12,2012. பாகிஸ்தானின் கராச்சியில் பால்டியா நகரில் 3 மாடிக் கட்டடத்தில் இயங்கி வந்த துணி ஏற்றுமதி நிறுவனத்தில் இச்செவ்வாய் மாலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 112 பேர் பலியாகிவிட்டதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 35 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. தீ கட்டடம் முழுவதும் பரவியதாலும், துணிகள் நிறைந்திருந்ததால் தீ வேகமாகப் பரவியதாலும் அதிகமான உயிர்பலி ஏற்பட்டுள்ளது என்றும், கட்டடம் இடிந்து விழக்கூடிய அபாயமும் உள்ளது என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...