Tuesday, 11 September 2012

Catholic News in Tamil - 11/09/12

1. உலகின் அமைதிக்காக சரயேவோவிலிருந்து பல்சமயத் தலைவர்கள் அழைப்பு

2. இந்தியப்பெருங்கடல் தீவு நாடுகளின் திருஅவைகள் எதிர்நோக்கும் சவால்கள்

3. சட்டத்துக்குப் புறம்பே இடம்பெறும் பணப்பரிமாற்ற நடவடிக்கைக்கு எதிரான தனது செயல்பாட்டை வலுப்படுத்துவதற்குத் திருப்பீடத்துக்கு வல்லுனர் ஒருவர் உதவி 

4. இலங்கையில் இயேசு சபை மாநிலத்தின் 50ம் ஆண்டு விழா

5. போதிய சத்துணவின்மையால் குவாத்தமாலா நாட்டில் குழந்தைகள் இறப்பு அதிகரிப்பு

6. சிரியாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் சட்டப்படி தண்டிக்கப்படும்- ஐ.நா. அதிகாரி எச்சரிக்கை

7. நாட்டின் வருங்காலம் குறித்த நம்பிக்கைகள் இந்திய மக்களிடம் குறைத்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது

8. இந்தோனேசியாவில் மூன்றுக்கு இருவர் புகைப்பிடிப்பவர்களாக உள்ளன

------------------------------------------------------------------------------------------------------

1. உலகின் அமைதிக்காக சரயேவோவிலிருந்து பல்சமயத் தலைவர்கள் அழைப்பு

செப்.11,2012. உலகில் அமைதியும் ஒப்புரவும் இடம்பெறுமாறு போஸ்னியத் தலைநகர் சரயேவோ நகரிலிருந்து இச்செவ்வாயன்று அழைப்பு விடுத்தனர் பல்சமயத் தலைவர்கள்.
ஐரோப்பாவில் இரண்டாவது உலகப் போர் முடிந்த பின்னர், கடும் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ள சரயேவோ நகரில் இச்செவ்வாயன்று நிறைவடைந்துள்ள மூன்று நாள் அனைத்துலக அமைதி மாநாட்டில் கலந்து கொண்ட கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ், முஸ்லீம் மற்றும் யூதமதக் குழுக்களின் தலைவர்கள் உலகின் அமைதிக்காக அழைப்பு விடுத்தனர்.
செர்பிய ஆர்த்தடாக்ஸ், குரோவேஷியக் கத்தோலிக்கர், முஸ்லீம்கள் ஆகிய மூன்று முக்கிய இனங்களின் குழுக்களுக்கிடையே 1992ம் ஆண்டு முதல் 1995ம் ஆண்டுவரை இடம்பெற்ற கடும் சண்டையில் ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் இறந்தனர். கடந்த இருபது ஆண்டுகளாக இந்த மூன்று இனக் குழுக்களுக்கிடையே உறவுகளும் ஆழமாய்ப் பாதிக்கப்ப்ட்டுள்ளன.
இந்தப் போஸ்னியச் சண்டை தொடங்கியதன் 20ம் ஆண்டை நினைவுகூரும் விதமாக உரோம் சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பு இந்த அனைத்துலக அமைதி மாநாட்டை நடத்தியது.
சமயத் தலைவர்கள், அரசு அதிகாரிகள் என ஏறக்குறைய 300 பேர் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், வறுமை, குடியேற்றம், ஆசியாவிலும் அரபு உலகத்திலும் மதம், கிறிஸ்தவர்க்கும் முஸ்லீம்களுக்குமிடையே உரையாடல் போன்ற தலைப்புக்களில் சுமார் 30 கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. 
ஒன்றிணைந்து வாழ்வதே வருங்காலம் என்ற மையப் பொருளில் இம்மாநாடு நடத்தப்பட்டது.

2. இந்தியப்பெருங்கடல் தீவு நாடுகளின் திருஅவைகள் எதிர்நோக்கும் சவால்கள்

செப்.11,2012. இந்தியப்பெருங்கடலில் உள்ள தீவு நாடுகளின் கத்தோலிக்கர்கள் எதிர்நோக்கும் சவால்கள், அப்பகுதிகளின் குருக்கள் பற்றாக்குறை, சுற்றுச்சூழல் பிரச்னை ஆகியவை குறித்து அப்பகுதிகளின் 40 திருஅவை அதிகாரிகள் மொரீசியஸ் தீவில் ஒன்று கூடி விவாதித்தனர்.
கத்தோலிக்க விசுவாசிகளுக்கு ஆன்மீகப்பணிகளையும், அனைத்து மக்களுக்கும் கல்வி, நலஆதரவு மற்றும் சமூகப்பயிற்சிப் பணிகளையும் ஆற்றிவரும் தலத்திரு அவைகள் சில இஸ்லாமிய நாடுகளில் எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் ஆராயப்பட்டது.
குருக்கள் பற்றாக்குறையுடைய நாடுகளில் துறவறத்தார், தியாக்கோன்கள் மற்றும் பொதுநிலை விசுவாசிகள் ஏற்று நடத்திவரும் பொறுப்புகள் குறித்தும் பாராட்டியுள்ள தலத்திருஅவைப் பிரதிநிதிகள் நான்கு முக்கிய பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளனர்.
மனிதாபிமானமிக்க ஓர் உலகை உருவாக்கவும், விடுதலையின் ஆதாரமாகவும் திரு அவையின் வார்த்தைகள் எங்கனம் செயல்பட முடியும் என்பது குறித்து ஆரயப்பட வேண்டும் என்பதை முதல் பரிந்துரையாக முன்வைத்துள்ளனர் இந்தியப் பெருங்கடல் தீவு நாடுகளின் திருஅவைகளின் தலைவர்கள்.
மக்கள் தங்கள் மகிழ்வின் ஆதாரமாக நற்செய்தியைக் கண்டுகொள்ள உதவுதல், இறையழைத்தல்கள் அதிகரிக்கச் செபித்தல் மற்றும் உழைத்தல், அமைதியின் உலகை கட்டியெழுப்ப மதங்களிடையே உண்மையான பேச்சுவார்த்தைகளை ஊக்குவித்தல் போன்றவைகளையும் முன்வைத்துள்ளனர் திருஅவைத் தலைவர்கள்.

3. சட்டத்துக்குப் புறம்பே இடம்பெறும் பணப்பரிமாற்ற நடவடிக்கைக்கு எதிரான தனது செயல்பாட்டை வலுப்படுத்துவதற்குத் திருப்பீடத்துக்கு வல்லுனர் ஒருவர் உதவி 

செப்.11,2012. வத்திக்கான் மற்றும் திருப்பீடம் குறித்த MONEYVAL வல்லுனர் குழு அறிக்கையின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்கு உதவியாக, MONEYVAL நடவடிக்கையில் தேர்ந்த பன்னாட்டு வல்லுனர் ஒருவரைத் திருப்பீடம் நியிமித்துள்ளது என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி அறிவித்தார்.
சுவிட்சர்லாந்து நாட்டு ஃபிரைபூர்க் நகரைப் பூர்வீகமாகக் கொண்ட 40 வயது வழக்கறிஞர் Rene Bruelhartஐ இப்பணிக்கென நியமித்துள்ளது திருப்பீடம்.
FIU என்ற Liechtenstein’s Financial Intelligence பிரிவுக்கு எட்டு ஆண்டுகள் இயக்குனராகவும் பணியாற்றியுள்ள Bruelhart, AML/CFT என்ற சட்டத்துக்குப் புறம்பே இடம்பெறும் பணப்பரிமாற்ற நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்யும் செயல்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கையில்  வல்லுனரும் ஆவார்.
Bruelhart, AML/CFTடன் தொடர்புடைய எல்லா விவகாரங்களிலும் திருப்பீடத்தின் ஆலோசகராக இம்மாத்தில் பணியைத் தொடங்கியுள்ளார் என்றும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
பணப்பரிமாற்றம் சார்ந்த குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையை வலுப்படுத்துவதற்கு இவர் திருப்பீடத்துக்கு உதவி செய்து வருகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
தேசிய மற்றும் சர்வதேச அளவில் பணப்பரிமாற்றம் செய்யப்படுவது, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்வது போன்றவை குறித்து தனது உறுப்பு நாடுகளில் ஆய்வு செய்யும் MONEYVAL என்ற மதிப்பீட்டு வல்லுனர் குழு, ஐரோப்பிய அவையின் ஓர் அங்கமாகும். 1997ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தக் குழுவின் மதிப்பீட்டின்கீழ் 28 நாடுகள் உள்ளன. இந்த மதிப்பீட்டுக் குழுவில் இஸ்ரேலும் இணைவதாகக் கேட்டுக் கொண்டதன்பேரில் 2006ம் ஆண்டில் அந்நாடும் இணைக்கப்பட்டது.
இந்த MONEYVAL குழு, திருப்பீடம் மற்றும் வத்திக்கானின் பணப்பரிமாற்றம் குறித்து மதிப்பீடு செய்து அறிக்கையையும் கடந்த ஜூலையில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

4. இலங்கையில் இயேசு சபை மாநிலத்தின் 50ம் ஆண்டு விழா

செப்.11,2012. இலங்கையில் இயேசு சபை மாநிலம் உருவாக்கப்பட்டதன் 50ம் ஆண்டு, இஞ்ஞாயிறன்று கர்தினால் மால்கம் இரஞ்சித் தலைமையில் திருப்பலியுடன் சிறப்பிக்கப்பட்டது.
இலங்கையின் Dalugama புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் ஆலயத்தில் இடம்பெற்ற இக்கொண்டாட்டத்தில் இயேசு சபை மாநில அதிபர் குரு ஜெயராஜ் ராசயாவுடன் இயேசு சபை குருக்கள், பிற சபையினர் மற்றும் பெருமளவில் விசுவாசிகளும் கலந்து கொண்டனர்.
புனித பிரான்சிஸ் சேவியரின் காலத்திலேயே இலங்கைக்கு இயேசு சபையினர் வந்துள்ள போதிலும் 1962ம் ஆண்டுதான் இலங்கையில் இயேசு சபை மாநிலம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் இந்திய இயேசு சபை மாநிலத்தின் கீழும், பின்னர் ஃபிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் இயேசு சபை மாநிலங்களின் கீழும், இறுதியாக அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் இத்தாலி இயேசு சபை மாநிலங்களின் கீழும் இலங்கை இயேசு சபையினர் செயலாற்றியுள்ளனர்.
இலங்கையில் இயேசு சபை மாநிலம் துவக்கப்பட்டதன் 50ம் ஆண்டு கொண்டாட்ட்டங்களையொட்டி அச்சபை அதிபர் குரு அடோல்ஃபோ நிக்கோலஸ் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், இலங்கையில் இயேசுசபையினர் ஆற்றி வரும் சிறப்புப் பணிகளைப் பாராட்டியுள்ளார். இலங்கை இனமோதல்களின்போது இயேசு சபையினரின் வாழ்வும் பணிகளும் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும், அச்சவால்களை இலங்கை இயேசு சபையினர் ஏற்று நடத்திய விதத்தைப் பாராட்டியுள்ள அச்சபை அதிபர், அச்சபையின் துவக்க கால அங்கத்தினர்களின் அயரா உழைப்போடு அவைகளைத் தன் செய்தியில் ஒப்புமைப்படுத்தியுள்ளார்.

5. போதிய சத்துணவின்மையால் குவாத்தமாலா நாட்டில் குழந்தைகள் இறப்பு அதிகரிப்பு

செப்.11,2012. போதிய சத்துணவின்மையால் குவாத்தமாலா நாட்டில் இவ்வாண்டின் முதல் எட்டு மாதங்களில் ஐந்து வயதிற்குட்பட்ட 95 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக கத்தோலிக்கச் செய்தி நிறுவனமான ஃபிதெஸ் அறிவிக்கின்றது.
குவாத்தமாலா நாட்டில் இரண்டு குழந்தைகளுக்கு ஒருவர் வீதம் போதிய சத்துணவின்மையால் துன்புறுவதாக உரைக்கும் இச்செய்தி நிறுவனம், 2011ம் ஆண்டில் 125 குழந்தைகளும், 2010ம் ஆண்டில் 105 குழந்தைகளும் 2009ம் ஆண்டில் 160 குழந்தைகளும், போதிய சத்துணவின்மைக்குப் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கிறது.

6. சிரியாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் சட்டப்படி தண்டிக்கப்படும்- ஐ.நா. அதிகாரி எச்சரிக்கை

செப்.11,2012. சிரியா நாட்டில் இடம்பெறும் சண்டையில் அப்பாவி குடிமக்களுக்கு எதிராக நடத்தப்படும் மனித உரிமை மீறல்கள் சட்டப்படி தண்டிக்கப்படாமல் விடப்படாது என்று ஐ.நா.மனித உரிமைகள் நிறுவனத்தின் இயக்குனர் நவிபிள்ளை எச்சரித்துள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டு ஜெனீவாவில் இத்திங்களன்று தொடங்கியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 21வது கூட்டத்தில் இவ்வாறு எச்சரித்த நவிபிள்ளை, சிரியா விவகாரத்தை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்குமாறு ஐ.நா.பாதுகாப்பு அவையையும் வலியுறுத்தியுள்ளார்.
சிரியாவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் கடும் மனித உரிமை நீறல்கள் குறித்து கவலை தெரிவித்த அவர், மனிதாபிமான நிலைகளும் நாடு முழுவதும் வேகமாகம் மோசமடைந்து வருவதாகவும் கவலை தெரிவித்தார்.
சிரியாவில் போரிடும் தரப்புகள் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமை சட்டத்தை மதித்து நடக்குமாறும் கேட்டுள்ளார் நவிபிள்ளை.

7. நாட்டின் வருங்காலம் குறித்த நம்பிக்கைகள் இந்திய மக்களிடம் குறைத்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது

செப்.11,2012. இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதும், அரசியல் வாதிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும், அந்நாட்டின் வருங்காலம் குறித்த நம்பிக்கைகளை இந்திய மக்களிடம் குறைத்துள்ளதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
PEW ஆய்வு மையம் நடத்திய அண்மை ஆய்வுகளின்படி, இந்திய மக்கள்தொகையில் 38 விழுக்காட்டினரே இந்த நாட்டின் வளர்ச்சி நிலைப்பாடு குறித்து மனநிறைவு கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இது கடந்த ஆண்டைவிட 13 விழுக்காடு குறைவாகும். சீனாவில் 82 விழுக்காட்டினரும், பிரசில் நாட்டில் 53 விழுக்காட்டினரும் தங்கள் அரசுகளின் நடவடிக்கைகள் குறித்து மனநிறைவு கொண்டுள்ளதாகத் தெரிவித்திருக்க, இந்தியாவிலோ இது வெறும் 38 விழுக்காடாக உள்ளது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் 29 விழுக்காட்டினரே தங்கள் நாட்டு அரசின் நடவடிக்கைகள் குறித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அணமை ஆய்வில் கலந்துகொண்ட  இந்தியர்களுள் 10க்கு எட்டுபேர், இந்தியாவின் முக்கிய பிரச்னைகளாக, பொருளாதார சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, பொருட்கள் விலையேற்றம் ஆகியவைகளைக் குறிப்பிட்டுள்ளனர்.

8. இந்தோனேசியாவில் மூன்றுக்கு இருவர் புகைப்பிடிப்பவர்களாக உள்ளனர்

செப்.11,2012. இந்தோனேசியாவில் மூன்றுக்கு இருவர் புகைப்பிடிப்பவர்களாக இருப்பதாகவும், விகிதாசாரத்தில் உலகில் அது முன்னணியில் இருப்பதாகவும் அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்தோனேசியாவில் 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுள் 67 விழுக்காட்டினர் புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்களாக உள்ளனர்.
புகையிலைக் கட்டுப்பாடு குறித்த உலக நலவாழ்வு மையமான WHO  நிறுவனம் உருவாக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட தவறியுள்ள நாடுகளுள் இந்தோனேசியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியாவில் ஒவ்வோர் ஆண்டும் புகைப்பிடித்தல் தொடர்புடைய நோய்களால் குறைந்தபட்சம் இரண்டு இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...