Tuesday, 11 September 2012

Catholic News in Tamil - 06/09/12

1. இயற்கையைப் பாதுகாக்கும் வழிகளைத் தேடும் அனைவருக்கும் திருத்தந்தை வாழ்த்து

2. வத்திக்கான் அதிகாரி : அதிகாரம், பணிகளுக்கெனத் தரப்பட்டுள்ள ஒரு கருவி

3.  YOUCAT: லெபனான் திருப்பயணத்தில் திருத்தந்தை இளையோருக்கு வழங்கும் பரிசு

4. கொல்கத்தா பேராயர் : அன்னை தெரேசா தன் வாழ்வாலும், பணியாலும் உலகை ஒருங்கிணைத்தார்

5. நைரோபியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பல்சமயக் கருத்தரங்கு

6. ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பாகிஸ்தானிலிருந்து ஒரு கிறிஸ்தவரும் பங்குபெறுவது சிறுபான்மையினருக்கு நம்பிக்கையின் அடையாளம்

7. இல்லப்பணியாளர்கள் குறித்த சட்டங்கள் வருகிற ஆண்டிலிருந்து அமல்படுத்தப்படும் : ஐ.நா.

8. வேதியப் பொருட்களைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளால் உருவாகும் ஆபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பு : ஐ.நா.

------------------------------------------------------------------------------------------------------

1. இயற்கையைப் பாதுகாக்கும் வழிகளைத் தேடும் அனைவருக்கும் திருத்தந்தை வாழ்த்து

செப்.06,2012. இறைவனின் கொடையான இயற்கையைப் பாதுகாக்கும் வழிகளை ஒன்றிணைந்து தேடும் அனைவரையும் தான் வாழ்த்துவதாகத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இப்புதன் முதல் சனிக்கிழமை முடிய, இத்தாலியின் Bose எனுமிடத்தில் ஆர்த்தடாக்ஸ் ஆன்மீகம் பற்றிய அகில உலகக் கருத்தரங்கு நடைபெறுகிறது.
"படைப்பின் காவலர் மனிதன்" என்ற தலைப்பில் நடைபெறும் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்திருக்கும் அனைத்துப் பிரதிநிதிகளுக்கும் திருத்தந்தையின் பெயரால் வாழ்த்துத் தந்தியோன்றை திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே அனுப்பியுள்ளார்.
இறைவன் அளித்துள்ள உன்னத கொடையான இயற்கையைப் பேணும் வழிகளைத் தேடும் அனைத்து மக்களையும் தான் ஆசீர்வதிப்பதாகத் திருத்தந்தை இத்தந்திச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

2. வத்திக்கான் அதிகாரி : அதிகாரம், பணிகளுக்கெனத் தரப்பட்டுள்ள ஒரு கருவி

செப்.06,2012. அதிகாரம் என்பது பணிகளுக்கெனத் தரப்பட்டுள்ள ஒரு கருவி என்பதை இவ்வுலகமும், திருஅவையும் உணர்ந்தால், உலகிலும், திருஅவையிலும் அதிகாரம் தவறான வழிகளில் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்படும் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
இச்செவ்வாய், புதன் ஆகிய இருநாட்கள் பிரித்தானியாவின் Twickenham என்ற நகரில் கத்தோலிக்க இறையியலாளர்கள் இணைந்து நடத்திய ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்ட விசுவாசக் கோட்பாடு பேராயத்தின் அதிகாரி பேரருள்திரு Charles Scicluna, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
அதிகாரத்தைச் சரியான முறையில் நாம் புரிந்துகொள்ளாதபோது அதைத் தவறான முறையில் பயன்படுத்தத் துணிகிறோம் என்று கூறிய பேரருள்திரு Scicluna, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதன் ஓர் அங்கமாக, ஒரு சில குருக்கள் இளவயதுடையோரை பாலியல் ரீதியான வன்முறைகளுக்கு உட்படுத்தினர் என்று கூறினார்.
"அதிகாரத்தை மீட்பது: உலகிலும், திருஅவையிலும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதிலிருந்து மீள்வது" என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கு இப்புதனன்று நிறைவுபெற்றது.


3.  YOUCAT: லெபனான் திருப்பயணத்தில் திருத்தந்தை இளையோருக்கு வழங்கும் பரிசு

செப்.06,2012. கத்தோலிக்க மறைக்கல்வி நூலான YOUCATன் அரேபிய மொழிபெயர்ப்பை, இளையோருக்குத் தான் வழங்கும் ஒரு பரிசாக, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் லெபனான் நாட்டுத் மேய்ப்புப்பணி பயணத்தின்போது அளிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இஸ்பெயின் நாட்டு, மத்ரித் நகரில் நடைபெற்ற உலக இளையோர் நாளையொட்டி YOUCAT மறைகல்வி நூல், ஏழு மொழிகளில் 7 இலட்சம் பிரதிகள் வழங்கப்பட்டதுபோல், இம்முறை லெபனான் நாட்டில் 50,000 பிரதிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
300 பக்கங்கள் அடங்கிய இந்த அரேபிய மொழிபெயர்ப்பு நூல் இளையோரிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளதென்றும், இந்நூலை திருத்தந்தை செப்டம்பர் மாதம் 15ம் தேதி இளையோருக்குப் பரிசாக அளிப்பார் என்றும் இளையோர் கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்துவரும் அருள்தந்தை Toufic Bou Hadir கூறினார்.
கத்தோலிக்க மறையைக் குறித்து எழுப்பப்பட்டுள்ள 527 கேள்விகளுக்குப் பதில் சொல்லும் இந்நூலின் முன்னுரையில், "இந்நூல் உங்களை மகிழ்விக்கவோ, உங்கள் வாழ்வை எளிதாக்கவோ எழுதப்பட்ட நூல் அல்ல, மாறாக, புதியதோர் வாழ்வுக்கு உங்களை அழைக்கும் சவால்கள் நிறைந்த ஒரு நூல் இது" என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

4. கொல்கத்தா பேராயர் : அன்னை தெரேசா தன் வாழ்வாலும், பணியாலும் உலகை ஒருங்கிணைத்தார்

செப்.06,2012. மதம், இனம், மொழி, நிறம் என்ற அனைத்து குறுகியப் பிரிவுகளையும் தாண்டி, அன்னை தெரேசா தன் வாழ்வாலும், பணியாலும் உலகை ஒருங்கிணைத்தார் என்று கொல்கத்தா பேராயர் தாமஸ் டி'சூசா கூறினார்.
செப்டம்பர் 5 இப்புதனன்று கொண்டாடப்பட்ட அருளாளர் அன்னை தெரேசாவின் திருநாளன்று தன் மறையுரையை வழங்கிய பேராயர் டி'சூசா, அன்னையைத் தன் வாழ்வில் சந்தித்த நேரங்களையெல்லாம் நினைவு கூர்ந்து பேசினார்.
விசுவாச ஆண்டைத் துவங்கவிருக்கும் நாம், நற்செய்தியைப் பரப்புவதில் புதிய வழிகள் என்று எண்ணிவரும் இவ்வேளையில், அன்னை தெரேசாவின் வாழ்வும் பணிகளும் நமக்குப் புதிய வழிகளைக் காட்டுகின்றன என்று பேராயர் சுட்டிக்காட்டினார்.
1997ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி இறையடி சேர்ந்த அன்னை தெரேசாவை, 2003ம் ஆண்டு அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால், அருளாளர் நிலைக்கு உயர்த்தினார். அன்னையின் திருநாள் செப்டம்பர் மாதம் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது.


5. நைரோபியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பல்சமயக் கருத்தரங்கு

செப்.06,2012. கிறிஸ்தவ, இஸ்லாமிய, இந்து சமயங்களைச் சார்ந்த 26 குழுக்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்ற கருத்தில் ஒருங்கிணைந்து இம்மாதம் 18 முதல் 20 முடிய ஆப்ரிக்காவின் நைரோபியில் ஒரு கருத்தரங்கை நடத்தவுள்ளனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அனைத்து மதங்களும் என்ற ARC அமைப்பைச் சேர்ந்த இந்தக் குழுவில் உலகெங்கும் 18 கோடியே, 38 இலட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்கள் இணையதளத்தின் வழியாக இணைக்கப்பட்டுள்ளனர் என்று ICN கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இவ்வமைப்பைச் சார்ந்தவர்கள் உகாண்டாவில் 25 இலட்சம் மரக்கன்றுகளை இதுவரை நட்டுள்ளனர் என்றும், தொடர்ந்து 50 இலட்சம் கன்றுகளை நடும் திட்டத்தை மேற்கொண்டுள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.
அதேபோல், Ghana வில் உள்ள கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் 70 இலட்சம் மரங்களை அடுத்த ஏழு ஆண்டுகளில் நடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
சமயங்களைத் தாண்டி, சுற்றுச்சூழலைக் காக்க இவ்வமைப்பினர் எடுத்துவரும் முயற்சிகளை அனைத்து மதத் தலைவர்களும் பாராட்டி வருகின்றனர்.

6. ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பாகிஸ்தானிலிருந்து ஒரு கிறிஸ்தவரும் பங்குபெறுவது சிறுபான்மையினருக்கு நம்பிக்கையின் அடையாளம்

செப்.06,2012. இலண்டனில் நடைபெற்றுவரும் மாற்றுத் திறனுடையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பாகிஸ்தான் நாட்டிலிருந்து சென்றுள்ள வீரர்கள் மத்தியில் ஒரு கிறிஸ்தவரும் இடம்பெற்றிருப்பது அந்நாட்டைக் குறித்து நம்பிக்கையை உருவாக்குகிறது என்று லாத்தரன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் Mobeen Shahid, கூறினார்.
ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 9ம் தேதி முடிய இலண்டன் நகரில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பங்கேற்க பாகிஸ்தானிலிருந்து சென்றுள்ள வீரர்களில் Naeem Masih என்ற கிறிஸ்தவரும் பங்கேற்று வருகிறார்.
கிரிக்கெட் விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த Naeem Masih ஒரு விபத்தில் தன் கையை இழந்தபின், ஓட்டப்பந்தயங்களில் ஈடுபட்டார்.
இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 1500 மீட்டர் பந்தயத்தில் இவர் பதக்கத்தை வெல்லவில்லையெனினும், அடுத்த ஒலிம்பிக் விளையாட்டில் பதக்கம் வெல்லும் நம்பிக்கை இருப்பதாகக் கூறினார்.
தேவநிந்தனை குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சிறுமி Rimsha Masih,  உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்ததுபோல், Naeem Masihயின் பங்கேற்பு சரியான வழிகளில் உலகின் கவனத்தைப் பாகிஸ்தான் மீது திருப்பியுள்ளது என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

7. இல்லப்பணியாளர்கள் குறித்த சட்டங்கள் வருகிற ஆண்டிலிருந்து அமல்படுத்தப்படும் : ஐ.நா.

செப்.06,2012. இல்லங்களில் வேலைகள் செய்யும் பணியாளர்களின் உரிமைகளை உலகெங்கும் நிலைநாட்டும் சட்டங்கள் வருகிற ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று ஐ.நா. அறிவித்துள்ளது.
இல்லப் பணியாளர்களின் உரிமைகள் பற்றிய சட்டங்களை ஐ.நா.வின் அகில உலக தொழிலாளர் நிறுவனமான ILO சென்ற ஆண்டு ஜெனீவாவில் உருவாக்கியது.
இச்சட்டங்கள் நடைமுறைக்கு வருவதற்கு ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் இரண்டாகிலும் ஒப்புதல் தெரிவிக்க வேண்டும். இந்நிலையில் சென்ற ஆண்டு உருவாக்கப்பட்ட இச்சட்டங்களுக்கு இவ்வாண்டு ஜூன் மாதம் Uruguay நாடு ஒப்புதல் தெரிவித்தது.
இப்புதனன்று பிலிப்பின்ஸ் நாடு இச்சட்டங்களுக்கு ஒப்புதல் தெரிவித்ததால், தற்போது இச்சட்டம் அனைத்துலகிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என்று ILO தலைமை இயக்குனர் Juan Somavia செய்தியாளர்களிடம் கூறினார்.
அண்மைய ILO கணக்கெடுப்பின்படி 117 நாடுகளில் 5 கோடியே, 30 இலட்சம் இல்லப்பணியாளர்கள் இருக்கின்றனர் என்று தெரிகிறது. ஆயினும், உலகெங்கும் 10 கோடிக்கும் அதிகமானோர் பாதுகாப்பற்ற நிலையில் இல்லப்பணிகள் செய்து வருகின்றனர் என்று மனித உரிமை ஆர்வலர்கள் பலர் கூறி வருகின்றனர்.
ILOவின் இச்சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால், வேலை நேரங்கள், கொடுக்கப்படும் ஊதியம், விடுமுறைகள், உடல்நலத் தேவைகள் என்ற அனைத்து அம்சங்களிலும் இல்லப்பணியாளர்கள் பாதுகாக்கப்படுவர் என்று ILO செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


8. வேதியப் பொருட்களைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளால் உருவாகும் ஆபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பு : ஐ.நா.

செப்.06,2012. வேதியப் பொருட்களைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளால் உருவாகும் ஆபத்துக்கள் நாளுக்கு நாள் கூடிவருகிறது என்று ஐ.நா.அறிக்கை ஒன்று கூறுகிறது.
வேதியப் பொருட்களின் பயன்பாடும், அவைகளின் கழிவுகளைச் சுற்றுச் சூழலில் கலக்கும் வழிமுறைகளும் சரியான முறையில் கண்காணிக்கப்படுவதற்கு மிகக் கடுமையான வரைமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்று UNEP எனப்படும் ஐ.நா.சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிறுவனம் கூறியுள்ளது.
தொழிற் சாலைகள் உருவாக்கும் வேதியக் கழிவுகள் இயற்கையில் கலப்பதால், நிலத்தடி நீர், காற்று இவைகளின் நச்சுத்தன்மை, மற்றும் வேதியப் பொருள் மழை என்ற பல ஆபத்துக்களுக்கு அரசுகள் பதில் கூறவேண்டிய நிலை உருவாகியுள்ளது என்று WHO அதிகாரி Maria Neira கூறினார்.
ஏழை நாடுகளிலும், செல்வம் மிகுந்த நாடுகளிலும் இந்த ஆபத்துக்களை உருவாக்கும் தொழிலதிபர்கள் கேள்விகளுக்கு உள்ளவதில்லை, மாறாக, அரசுகள் கேள்விகளுக்குள்ளாகின்றன என்று ஐ.நா.வின் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...