Tuesday, 11 September 2012

Catholic News in Tamil - 05/09/12

1. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் : ஆப்ரிக்க மக்களின் ஆன்மீக வளங்கள் இந்தக் காலத்திற்கு விலைமதிப்பற்றவை

2. புனித பூமியில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது குறித்து கிறிஸ்தவத் தலைவர்கள் கண்டனம்

3. இந்தியாவில் பெண்சிசுக்கொலைகளுக்கு எதிராகச் செயல்பட அன்னை தெரேசா தூண்டுகின்றார்

4. டிஜிட்டல் உலகில் ஆசியத் திருஅவையையும் பங்குகளையும் கட்டியெழுப்புதல்

5. பத்து இலட்சம் காங்கோ மக்கள் கையெழுத்திட்டுள்ள அமைதி கோரும் மனு ஐ.நா.வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

6. யூரோ நெருக்கடியால் வேலைவாய்ப்பற்ற இளையோரின் நிலை மேலும் மோசமடைந்து வருகிறது - ஐ.நா.

7. பாகிஸ்தானில் சிறார் தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

8. பணி உயர்வில் இட ஒதுக்கீடு - மத்திய அமைச்சரவை முடிவு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் : ஆப்ரிக்க மக்களின் ஆன்மீக வளங்கள் இந்தக் காலத்திற்கு விலைமதிப்பற்றவை

செப்.05,2012. நம்பிக்கையின் கண்டமாக நோக்கப்படும் இன்றைய ஆப்ரிக்காவில் பொதுநிலை விசுவாசிகளின் மறைப்பணி ஊக்குவிக்கப்பட வேண்டும் எனத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டார்.
இன்றைய ஆப்ரிக்காவில் இயேசு கிறிஸ்துவின் நற்செய்திக்குச் சாட்சிகள்: நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள், நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்” (மத்.5:13,14) என்ற தலைப்பில் ஆப்ரிக்காவின் காமரூன் நாட்டு யவுண்டேயில் திருப்பீடப் பொதுநிலையினர் அவை நடத்தும் கருத்தரங்கிற்கு இப்புதனன்று செய்தி அனுப்பிய திருத்தந்தை இவ்வாறு கேட்டுக் கொண்டார்.
ஆப்ரிக்கா, நம்பிக்கையின் கண்டமாக இருப்பதற்கு அழைக்கப்படுகிறது என்று அக்கண்டத்திற்குத் தான் திருப்பயணங்களை மேற்கொண்ட போதெல்லாம் உறுதிபடச் சொல்லியதை இச்செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை,  ஆப்ரிக்காவில் தற்போது நிலவும் பிரச்சனைகள் கடுமையானவை மற்றும் அவைகளுக்கு எளிதில் தீர்வு காண முடியாது என முதலில் அவற்றை நோக்கும் போது தோன்றுகின்றது, ஆயினும், ஆப்ரிக்க மக்களின் வாழ்வை மிக ஆழமாக நோக்கும்போது, அம்மக்களில் அளப்பரிய ஆன்மீக வளங்களைக் காண முடிகின்றது, அவை நமது இந்தக் காலத்திற்கு விலைமதிப்பற்றவை எனக் கூறினார்.
ஆப்ரிக்கப் புனிதை ஜோஸ்பின் பக்கித்தா பற்றியும் குறிப்பிட்ட அவர், கிறிஸ்துவோடு கொள்ளும் உறவு, தீர்க்க முடியாதவை எனத் தோன்றும் கடும் இன்னல்களையும் மேற்கொள்ள உதவுகின்றது எனவும் கூறினார்.
நற்செய்தி அறிவிப்புக்குப் புதிய முறைகளைக் கையாளுதல் குறித்த உலக ஆயர்கள் மாமன்றம் மற்றும் விசுவாச ஆண்டு தொடங்கவிருக்கும் தருணத்தில் யவுண்டேயில் இடம்பெற்றுவரும் இக்கருத்தரங்கு இவற்றுக்குத் தயாரிப்பாக இருக்கிறது என்று கூறியுள்ள திருத்தந்தை, இன்றைய ஆப்ரிக்க மக்கள் அனைவரும் நற்செய்தியின் தூதர்களாக வாழுமாறு கேட்டுள்ளார்.  
திருப்பீடப் பொதுநிலையினர் அவை நடத்தும் இக்கருத்தரங்கு வருகிற ஞாயிறன்று நிறைவடையும்.


2. புனித பூமியில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது குறித்து கிறிஸ்தவத் தலைவர்கள் கண்டனம்

செப்.04,2012. இஸ்ரேலின் Trappist துறவு சபை இல்லம் ஒன்று வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டிருப்பதற்குத் தங்களது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்  புனிதபூமிக் கிறிஸ்தவத் தலைவர்கள்.
இஸ்ரேலில் கிறிஸ்தவத்துக்கு எதிராக இடம்பெறும் போதனைகள் கிறிஸ்தவர்கள் மீதான வெறுப்புணர்வை ஊக்கப்படுத்துகின்றன என்றும் கிறிஸ்தவத் தலைவர்கள் குறை கூறினர்.
இச்செவ்வாய் காலை, எருசலேம் நகருக்கு வெளியே, Latrunலுள்ள Trappist துறவு சபை இல்லத்தின் முக்கிய கதவுக்கு நெருப்பு வைக்கப்பட்டு, அத்துறவு சபை இல்லச் சுவரில் கிறிஸ்தவத்துக்கு எதிரான சொற்றொடர்கள் எழுதப்பட்டிருந்தன.
கிறிஸ்தவத்தை அவமதிக்கும் இந்த நிகழ்வுக்கு எதிராகக் கண்டன அறிக்கை வெளியிட்ட கிறிஸ்தவத் தலைவர்கள், புனித பூமியில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது குறித்த கேள்வியை எழுப்பியுள்ளனர்.
இதற்கிடையே, இஸ்ரேலிலுள்ள நூற்றுக்கணக்கான யூதர்கள் இந்த Latrun துறவு சபை இல்லத்தை வாரந்தோறும் பார்வையிட்டு வருகின்றனர். இவர்கள் அந்த இல்லத் துறவிகளால் அன்போடு வரவேற்கப்படுகின்றனர். இந்தத் துறவிகள் யூதர்களுடன் உரையாடலை ஊக்குவித்தும் வருகின்றனர் என்று செய்திகள் கூறுகின்றன.


3. இந்தியாவில் பெண்சிசுக்கொலைகளுக்கு எதிராகச் செயல்பட அன்னை தெரேசா தூண்டுகின்றார்

செப்.05,2012. பாலியல்ரீதியாகப் பிரித்துப் பார்க்கப்பட்டு நடத்தப்படும் கருக்கலைப்புக்கள், பெண்சிசுக்கொலைகள், சிசுக்கொலைகள் ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அருளாளர் அன்னை தெரேசாவின் நல்லுணர்வுகள் நம்மைத் தூண்டுகின்றன என்று பாப்பிறை வாழ்வுக் கழகத்தின் உறுப்பினர் ஒருவர் கூறினார்.
செப்டம்பர் 5, இப்புதனன்று, அருளாளர் அன்னை தெரேசாவின் விழா சிறப்பிக்கப்பட்டதையொட்டி இவ்வாறு கூறிய பாப்பிறை வாழ்வுக் கழகத்தின் உறுப்பினர் டாக்டர் பாஸ்கால் கர்வாலோ, இந்தியச் சமுதாயத்தில் இடம்பெற்று வரும் பெண்சிசுக்கொலைகள் குறித்து சிந்திப்பதற்கு இவ்விழா அழைப்பு விடுக்கிறது என்று கூறினார்.
ஒவ்வொரு மனிதர் மீது அன்னை தெரேசா வைத்திருந்த அன்பு, மனித மாண்பு மதிக்கப்படுவதற்காக அவர் குரல் கொடுத்தது, மனித வாழ்வின் புனிதம் அதன் தொடக்கமுதல் இறுதிவரை காப்பாற்றப்படுவதற்கு அவர் எடுத்த முயற்சிகள் ஆகிய அனைத்திற்காகவும் அன்னை தெரேசா இந்தியாவிலும், உலகெங்கிலும் மதிக்கப்படுகிறார் என்றும் கர்வாலோ தெரிவித்தார்.
இதனாலே மரணக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் ஒவ்வொரு செயலுக்கு எதிரானப் போராட்டத்தை மீண்டும் நினைத்துப் பார்ப்பதற்கு அன்னை தெரேசா இறந்த நாளும் அவரது திருநாளும் நல்ல தருணங்களாக இருக்கின்றன எனவும் அவர் கூறினார்.


4. டிஜிட்டல் உலகில் ஆசியத் திருஅவையையும் பங்குகளையும் கட்டியெழுப்புதல்

செப்.05,2012. டிஜிட்டல் உலகத்தில் வாழும் இன்றைய இளையோரை ஊக்குவிக்கும் மேய்ப்புப்பணிகளில் ஆசியத் திருஅவை மிகுந்த அக்கறை காட்ட வேண்டுமென அருட்பணி முனைவர் செபஸ்தியான் பெரியண்ணன், ஆசியக் கூட்டமொன்றில் கூறினார்.
தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் நடைபெற்றுவரும் ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் BISCOM என்ற சமூகத்தொடர்பு ஆணையம் நடத்தி வரும் கூட்டத்தில் இச்செவ்வாய் மாலை உரையாற்றிய அருட்பணி செபஸ்தியான், டிஜிட்டல் உலகில் ஆசியத் திருஅவையையும் பங்குகளையும் கட்டியெழுப்புதல் குறித்துப் பேசினார்.
பங்குகளின் சமூக-மேய்ப்புப்பணி மற்றும் ஆன்மீகச் செயல்பாடுகள் குறித்த செய்திகளையும் தகவல்களையும் வழங்குவதற்கு இணையதளங்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட வேண்டுமென்பதையும் அவர் வலியுறுத்தினார்.  
அருட்பணி முனைவர் செபஸ்தியான் பெரியண்ணன் பங்களூரு புனித பேதுரு இறையியல் கல்லூரியின் முன்னாள் இயக்குனர் மற்றும் அக்கல்லூரியில் தற்போது சமூகத்தொடர்புத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர்.
மறைந்த இயேசு சபை கர்தினால் கார்லோ மரிய மர்த்தினி பற்றி அடிக்கடி தனது உரையில் அருட்பணி செபஸ்தியான் குறிப்பிட்டதாக, இக்கூட்டத்தில் பங்குகொள்ளும் வத்திக்கான் வானொலியின் இயேசு சபை அருள்தந்தை Joseph Paimpalli செய்தி அனுப்பியுள்ளார்.
வருகிற வெள்ளிக்கிழமைவரை நடைபெறும் இக்கூட்டத்தில் 12 தெற்கு ஆசிய நாடுகளிலிருந்து 14 ஆயர்கள் உட்பட 45 பேர் கலந்து கொள்கின்றனர்.


5. பத்து இலட்சம் காங்கோ மக்கள் கையெழுத்திட்டுள்ள அமைதி கோரும் மனு ஐ.நா.வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

செப்.05,2012. காங்கோ குடியரசின் கிழக்குப் பகுதியில் இடம்பெறும் போர் மற்றும் அந்நாட்டை வெளிநாட்டவர் ஆக்ரமிக்க முயற்சிப்பதற்கு எதிராய்ப் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட கையெழுத்துக்கள் கொண்ட மனுவை அந்நாட்டுச் சமயத் தலைவர்கள் ஐ.நா.தலைமையகத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
காங்கோ கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Nicolas Djomo தலைமையில் நியுயார்க் சென்ற கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் தலைவர்கள் அடங்கிய குழு இம்மனுவை ஐ.நா.வில் சமர்ப்பித்துள்ளது.
காங்கோவின் அமைதியைக் குலைக்க வேண்டும் என்ற யுக்தியில், M23 போன்ற கெரில்லா இயக்கங்கள் North Kivu மக்களைப் பல மாதங்களாக அச்சுறுத்தி வருவதை அமெரிக்க அரசியல், பொருளாதார மற்றும் மதத் தலைவர்களுக்கு எடுத்துச் சொல்லும் நோக்கத்தில் இக்குழு அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது என பீதெஸ் செய்தி நிறுவனம் கூறியது.
காங்கோவின் கிழக்குப் பகுதியிலுள்ள பெருமளவான கனிம வளங்களை அநியாயமாய் அனுபவிக்கும் எண்ணத்தில் வெளிநாட்டுச் சக்திகளின் ஆதரவுடன் இந்தக் கெரில்லா இயக்கங்கள் செயல்படுவதாகவும் இந்தப் பல்சமயக் குழு அமெரிக்கச் சமயத் தலைவர்களிடம் புகார் சொல்லியுள்ளது.


6. யூரோ நெருக்கடியால் வேலைவாய்ப்பற்ற இளையோரின் நிலை மேலும் மோசமடைந்து வருகிறது - ஐ.நா.

செப்.05,2012. யூரோப்பணப் புழக்கமுள்ள நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால்   உலகில் வேலைவாய்ப்பற்ற இளையோரின் நிலை மேலும் மோசமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக ஐ.நா வெளியிட்ட ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது.
உலகில் வேலைவாய்ப்பற்றவர்கள் குறித்த ஒரு கண்ணோட்டம் என்ற தலைப்பில் உலக தொழில் நிறுவன அலுவலகர் ஒருவர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், வயது வந்தோரைவிட இளையோரே மூன்று மடங்கு  வேலையின்றி இருக்கும் நிலை தெரிவதாகக் கூறப்பட்டுள்ளது.
உலகில் 7 கோடியே 50 இலட்சத்துக்கு மேற்பட்ட இளையோர் வேலை தேடுகின்றனர் எனக் கூறும் அவ்வறிக்கை, பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில் 2017ம் ஆண்டில் வேலைவாய்ப்பற்ற இளையோரின் எண்ணிக்கை 12.9 விழுக்காடாக இருக்கும் என்று அஞ்சப்படுவதாக கூறுகிறது.


7. பாகிஸ்தானில் சிறார் தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

செப்.05,2012. பாகிஸ்தானில் ஒரு கோடிக்கு மேற்பட்ட 10க்கும் 15 வயதுக்கும் உட்பட்ட சிறார் தெருக்களில் குப்பைகளைப் பொறுக்குகின்றனர் என்று சிறார் உரிமைகள் குழு ஒன்று கூறியது.
பாகிஸ்தான் சிறார் நிலைமை 2011 என்ற தலைப்பில் SPARC என்ற சிறார் உரிமை பாதுகாப்புக் கழகம் வெளியிட்ட ஆண்டறிக்கையில், அந்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடர்ந்து இடம்பெற்ற வெள்ளம் காரணமாக ஏறக்குறைய 18 இலட்சம் சிறார் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டனர் எனவும், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகிலுள்ள நகரங்களில் தெருச் சிறாரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. 
அதேசமயம், நாட்டின் வட பகுதியில் புரட்சியாளர்களால் படைக்கும், தற்கொலை குண்டுவெடிப்புக்கும் தேர்ந்தெடுக்கப்படும் சிறாரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக அவ்வறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.
Khyber Pakhtunkhwa மாநிலத்தில் புரட்சியாளர்கள் 710 பள்ளிகளை அழித்துள்ளனர் அல்லது சேதப்படுத்தியுள்ளனர் என்றும், இதனால் ஆறு இலட்சம் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என்றும் SPARC வெளியிட்ட ஆண்டறிக்கை கூறுகிறது.
புரட்சியாளர்களின் அச்சுறுத்தலால் 2010ம் ஆண்டில் பாகிஸ்தான் அரசு 956 பள்ளிகளை மூடியுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.


8. பணி உயர்வில் இட ஒதுக்கீடு - மத்திய அமைச்சரவை முடிவு

செப்.05,2012. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு அரசுப்பணி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்க இந்திய மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இந்தியாவில் மத்திய, மாநில அரசுப்பணி சேர்க்கையில் இட ஒதுக்கீடு பல ஆண்டுகளாக இருந்தாலும், பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முதல் முறையாக இப்போதுதான் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்குமுன் உத்திரப்பிரதேச அரசு இது போன்ற நடைமுறையைக் கொண்டு வந்தபோது, உச்ச நீதிமன்றம் பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை கொண்டு வர முடியாது என்று அதை நிராகரித்துவிட்டது.
இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றம் சென்றால் அதைச் சமாளிக்கும் வகையில் அரசியல் அமைப்பின் நான்கு எண்களைத் திருத்தவும் அரசு முடிவு செய்துள்ளது எனவும் ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
மத்திய அரசுப் பணிகளில் நிரப்பப்படாமல் இருக்கும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கானப் பணியிடங்களை நிரப்ப அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...